ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தயாரிக்க ஜீவா- துளசி இணை நடிப்பில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் யான் .
படம் ‘நாண்’ என்று பாராட்டும்படி வெற்றி அம்பு விடுகிறதா இல்லை ஏன் என்று கேட்கும்படி வம்பு விடுகிறதா? பார்க்கலாம் .
மும்பையில் சர்வதேச தீவிரவாதி சலீமை (நவாப் ஸா) அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனர் அன்வர் (ஜெயப்பிரகாஷ்) நடுரோட்டில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லும் அதே சமயம், கமிஷனரின் குடும்ப நண்பரான கேப்டன் ராஜனின் (நாசர்) மகள் ஸ்ரீலா (துளசி நாயர்), ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்து, அந்தக் களேபரத்தில் சிக்கிக் கொள்கிறாள் . அதே ஏ டி எம்முக்கு பணம் எடுக்க வரும் வெட்டி ஆபீசர் சந்துரு (ஜீவா) தன்னைக் காப்பாற்றிக் கொள்வதோடு அவளையும் காப்பாற்றுகிறான் .
முதலில் சந்துருவுக்கு காதல் வருகிறது . கொஞ்சம் சண்டைக்கு பிறகு ஸ்ரீலாவுக்கும் காதல் வருகிறது . ஆனால் கேப்டன் ராஜனோ வேலை வெட்டி இல்லாதவனுக்கு பெண் தர முடியாது என்று சொல்ல, மும்பை முழுக்க அலைந்தும் சந்துருவின் எம் பி ஏ படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை.
எனவே பசிலிஸ்தான் என்ற வறண்ட நாட்டுக்கு வேலைக்கு போகிறான் சந்து ரு . அவனை அனுப்பி வைக்கும் டிராவல் ஏஜண்டு ஹரிதாஸ் (போஸ் வெங்கட்) சந்துருவின் லக்கேஜோடும் உடன் பயணிக்கும் மன நலம் குன்றிய இக்பால் என்ற இளைஞனின் லக்கேஜோடும் ஏழு கிலோ போதை மருந்தை, இவர்களுக்கு தெரியாமலே வைத்து விடுகிறான் .
நூறு கிராம் போதை மருந்து கடத்தினாலே கடும் தண்டனை உள்ள அந்த நாட்டில் சந்துருவுக்கும் இக்பாலுக்கும் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்படும் தண்டனை கிடைக்கிறது . அந்த ஜெயிலில் இருந்து விடுதலையாகும் லிங்கா (தம்பி ராமையா) மூலம் இந்த விசயம் சந்துருவின் பாட்டிக்கும் ஸ்ரீலாவின் குடும்பத்தாருக்கும் தெரிய வருகிறது.
காதலனை காக்க பசிலிஸ்தான் வரும் ஸ்ரீலா , அங்குள்ள சென்னைக்கார டிரைவர் சாஜி (கருணாகரன்) உதவியுடன் காதலனை காப்பாற்ற போராடுகிறாள். இடையில் முதல் காட்சியில் செத்துப் போன தீவிரவாதி சலீம் பற்றிய ஒரு டுவிஸ்ட்டும் வருகிறது. கடைசியில் சந்துருவும் ஸ்ரீலாவும் பத்திரமாக மீண்டார்களா இல்லையா என்பதே யான் .
இயக்குனர் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளர் மனுஸ் நந்தன் கூட்டணியில் …….பசுமையாகட்டும் பாலைவனமாகட்டும் வண்ண வண்ண உலகம் ஆகட்டும் படம் முழுக்க அட்டகாசமான தொழில் நுட்ப சாகசம் வாய்ந்த ஷாட்டுகள், துவக்கம் முதல் கடைசி வரை தொய்வில்லாமல் அணிவகுக்கின்றன. திகட்ட திகட்ட ஸ்லோமோஷன் , பிரீஸ் ஷாட்ஸ் , ரேம்பிங் என்று டெக்னிகல் அசத்தல் அசத்துகிறார்கள்
அதே மாதிரி மொராக்கோ நாட்டின் சாலைகள், கல் ஜெயில் , நைஸ் மணல் கொட்டிக் கிடக்கும் பாலைவனம் , அந்த டூயட் பாட்டின் இளம் பச்சை பூமி என்று…. லொக்கேஷன்கள் வாய் பிளக்க வைக்கின்றன . சண்டைக் காட்சிகள் மிரட்டலாக இருக்கின்றன . பாடல்கள் பரவாயில்லை . ஆனால் பின்னணி இசையில் பல காட்சிகளில் சிறப்பாக செய்து இருக்கிறார் ஹாரீஸ் ஜெயராஜ் .
எடுத்த உடன் தீவிரவாதி சலீமை சுட்டுக் கொல்லும் ஆக்ஷன் விஷயத்தை மட்டும் காட்டி விட்டு, அடுத்து சந்துரு தான் அங்கே இருந்த விஷயத்தை சொல்லும்போது, அந்த ஆக்ஷன் காட்சியின் ஷாட்களுக்கு இடையே சந்துருவும் ஸ்ரீலாவும், காதுத் தோட்டில் துப்பாக்கிக் குண்டு உரச தப்பிப்பதை காட்டும் விதத்தில், திரைக்கதையாளர் மற்றும் இயக்குனர் ரவி கே சந்திரன் அட்டெண்டன்ஸ் போடுகிறார் . அதோடு சரி
சண்டைக் காட்சிகளில் விழுந்து விழுந்து நடித்திருக்கிறார் ஜீவா. கேரக்டருக்கு நியாயம் செய்ய முயன்று இருக்கிறார் .
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் என்று ஒரு மாகாணம் இருப்பது நமக்கு தெரியும் . அந்த பலுசிஸ்தானையும் பசலைக்கீரையையும் ஒன்று சேர்த்து பசிலிஸ்தான் என்று ஒரு நாட்டின் பெயரை சொல்வது செம காமெடி.
பதினெட்டு வயதாகாத மைனர் பெண்களை கதாநாயகியாக நடிக்க வைக்கக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கு போடப்பட்ட போது, அதில் முதல் பெயராக இருந்தது இந்த துளசி நாயரின் பெயர் . ஆனால் மதமதர்க்கும் உடம்பு விசயத்தில் அடுத்த நமீதா இவர்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லும் அளவுக்கு, உடம்பெல்லாம் கறியேறிக் கிடக்கிறார் இந்த மைனர் நாயர்.
ஸ்ரீலா கொடுத்த விசிட்டிங் கார்டு காற்றில் பறக்க, அதை துரத்தியபடி மும்பை தெருக்களில் சந்துரு ஓடும் காட்சியின் நீநீநீநீநீநீளம் திரைக்கதையின் வறட்சியையே காட்டுகிறது.
அந்த சிறைக் காட்சிகளின் ஆரம்பம் அறியாத நாட்டில் இருக்கும் ஒரு திகிலை தருகிறது என்றால், தம்பி ராமையாவை அங்கே காட்டியதும் அந்த பதட்டமும் போய் விடுகிறது .
படத்தில் லாஜிக் என்பது மருத்துக்குக் கூட இல்லை.
சென்னைக்கு வந்து திருமணம் செய்து கொள்ள கிளம்பும் நேரத்தில், ஸ்ரீலாவுக்கு உதவப் போய் டாக்சி டிரைவர் சாஜி ஆபத்தில் முடிவது மட்டும் ஒரு மென் சோகக் கவிதையாக இருக்கிறது.
யான் .. ஞே!