தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் தயாரித்து, எழுதி, ரெஜிஷ் மிதிலா இயக்க, யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஹரீஷ் பெராடி நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம்.
சென்னையில் பேச்சிலராகத் தங்கியபடி ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் கணேசன் (ரமேஷ் திலக்) பிள்ளையார் பக்தன் . நினைத்தது நடக்காத போது பிள்ளையாரிடம் பேசியபடி பிரார்த்திப்பவன் .
அதே நேரம் கடன் வாங்கி விட்டு திட்டம் போட்டு இழுத்தடிப்பது, தன் மீது பாசமாக இருக்கும் வீட்டு ஓனர் அக்காவையே ( ஊர்வசி) வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது, பொய் சொல்லி கடன் வாங்குவது, அப்பாவி வயதான பயணிகள் ஆட்டோவில் ஏறினால் வேண்டுமென்றே சுற்றிக் கொண்டு போய் இறக்கி விட்டு அதிகக் காசு கேட்பது , மீதி காசு கொடுப்பதைத் தவிர்க்க சில்லறை இல்லை என்று பொய் சொல்வது என்று தவறுகள் செய்யக் கூடியவன் .
ஒரு நிலையில் இவன் வீட்டு விக்கிரகம் முதல் , காலண்டர் படங்கள், ஸ்டிக்கர்கள், கோவில் சிலைகள் என்று எல்லாவற்றிலும் இவன் கண்ணுக்கு மட்டும் பிள்ளையார் தெரியாமல் போய் விடுகிறார் . அது அவனை மிகவும் பாதிக்கிறது . பிள்ளையாரிடம் புலம்புகிறான் .
பிள்ளையார் மனித ரூபத்தில் வருகிறார் (யோகிபாபு) . தான் கடவுள் என்பதை நம்ப வைத்து அவனது தீய குணங்களை மாற்ற முயல , என்ன நடக்கிறது என்பதே படம்.
நல்ல கதை. ஒழுக்கம் பற்றி பேசும் படம் என்பது இன்னொரு மரியாதைக்குரிய விஷயம். அதில் சமூக , மத , மொழி நல்லிணக்கம் பேசும் இடங்கள் மிக அருமை . சில காட்சிகள் உணர்வுப் பூர்வமாக இருக்கின்றன
படத்தின் நாயகனான ரமேஷ் திலக், கணேசன் கதாபாத்திரத்தில் உணர்ந்து நடித்து இருக்கிறார்.
யோகி பாபு பிள்ளையாராக அருமை . இன்னொரு வேடத்தில் இந்த கதையை ஒரு சிறுவனுக்கு சொல்லும் நபராகவும் வருகிறார் , இரண்டு கதாபாத்திரத்துக்கும் மேக்கப்பும் காஸ்ட்டியூமும்தான் வித்தியாசம்
ஊர்வசி வழக்கம் போல இயல்பான சிறந்த நடிப்பு . கருணாகரன் யதார்த்தம் . வழக்கத்துக்கு மாறாக மிக நல்லவராக நடித்து இருக்கிறார் ஹரிஷ் பெராடி.
பரத் சங்கரின் இசை அவ்வப்போது பக்திப் பரவசம் தருகிறது . கார்த்திக்கின் ஒளிப்பதிவு ஜஸ்ட் ஒகே.
ஆனால் திரைக்கதை , வசனம் , இயக்கத்தில் கோட்டை விட்டு இருக்கிறார்கள் . மொத்தப் படமும் தகவலாக இருக்கிறதே தவிர கொடுக்க வேண்டிய உணர்வுக் கூட்டலைத் தரவில்லை .
அதுவரை படத்தில் இல்லாத ஒரு பெரியவரின் கதை ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமிக்கிறது. அந்த அளவு இருக்கும்போது அவர் படத்தின் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட கதாபாத்திரமாக இருக்க வேண்டும் .
படமாக்கல் வெகு சாதாரணம் .
இப்படி ஒரு கதை கிடைத்தும் ஊர்வசி சம்மந்தப்பட்ட ஒரு காட்சியைத் தவிர மற்ற காட்சிகளில் வசனம் ஈர்க்கவில்லை .
‘ஊர்வசியும் ஒரு சில ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களும்’ தவிர படத்தில் பெண்களே இல்லை என்பது பேரதிர்ச்சி . நாயகன் பிள்ளையார் பக்தன் என்பதால் அவனுக்கு ஜோடி இல்லாமல் இருக்கணுமா என்ன ? அப்படிதான் வேண்டும் என்றால் படத்தில் வேறு இளம்பெண்கள் கதாபாத்திரமே வரக் கூடாதா என்ன ? அப்படித்தான் வேண்டும் என்றால் அப்போ ஊர்வசி கதாபாத்திரம் மட்டும் எதற்கு?
இப்படி சிரத்தை எல்லாத எழுத்தும் இயக்கமும் ஒரு நல்ல கதை கொண்ட படத்தை சாதாரண படமாக மாற்றி விட்டன.
யானை முகத்தான்… பூனை முகத்தான்