யூடிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் படம் யட்சன். இந்த ‘யட்சன்’ என்ற சொல்லுக்கு குபேரன்,இயக்குபவன் என்று பொருள் சொல்கிறார்கள் .
முழுக்க முழுக்க படம் சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இந்தப் படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நடந்தது .
பாடல்களை எழுத்தாளர்கள் சுபா வெளியிட யுவன் சங்கர்ராஜா பெற்றுக் கொண்டார்.
சுபா ?
அதற்கான காரணம் தயாரிப்பாளர் தனஞ்சயனின் அறிமுக உரையில் இருந்தது ” ஆனந்த விகடனில் வந்த ஒரு சிறுகதை யட்சன் . எழுதியது இரட்டை எழுத்தாளரான சுபா . அதில் ரொம்பவும் கவரப்பட்ட விஷ்ணுவர்த்தன் அதில் இன்னும் பல விஷயங்கள் சேர்த்து அருமையான திரைக்கதை அமைத்து இருக்கார்.
ஒரு சிறுகதையை வெற்றிகரமான திரைக்கதை ஆக்குவதற்கான வழிகாட்டியா அது இருக்கும் .
அந்த சிறுகதை திரைக்கதை இரண்டையும் புத்தகமா வெளியிடப் போறோம் ” என்றார் .
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பேசும்போது “ஆர்யாவுடன் இது எனக்கு 5 வது படம். ஆர்யா என் ஹீரோ.அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம். கதை சொல்ல வேண்டாம். ‘எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம்?’ என்பார் நேரடியாக. அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார்.
நான் எப்போ படம் தொடங்கினாலும் என் அம்மா ‘உன் தம்பியையும் நடிக்க வைப்பா’ என்பார்கள் . அவருக்கு ஏற்ற மாதிரி கதை இதுவரை அமையவில்லை. இப்போது அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன். தீபா சன்னதி நடித்திருக்கும் பாத்திரம்தான் இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரம். ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ் என்னுடன் இணைந்துள்ள 2 வது படம் இது.
எழுத்தாளர்கள் சுபா ..
அவர்கள் கொடுத்திருக்கும் கதை ரொம்ப வித்தியாசமானது
யுவன் என் ஆரம்பகாலம் முதல் என்னுடன் பெரிய பலமாக தொடர்பவர்.எத்தனை படங்களுக்கு பாட்டு எழுதினாலும் எனக்கு என்று மிக சிரத்தையாக வேலை செய்வார் . படப்பிடிப்பே ஜாலியாக கலாட்டாவாக போனது.” என்றார்.
பாடலாசிரியர் பா. விஜய் பேசும் போது ” நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து பணியாற்றும் எட்டாவது படம் இது. அதிலும் இந்த எட்டு படங்களிலும் எல்லாப் பாடல்களையும் நானே எழுதியுள்ளேன். எங்கள் மூவருக்கும் இடையில் அப்படி ஒரு நட்பு, புரிதல் உள்ளது. இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நல்ல மனிதனின் நட்பும் கிடைத்தது.
ஆர்யாவை ஏன் எல்லா கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை தெரியாது,இப்போது புரிகிறது. நட்புக்கு அவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர்.” என்றார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா பேசும்போது ” விஷ்ணுவர்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் பழகினாலே நமக்கும் வந்து விடும் .அவரை பள்ளி நாட்களிலிருந்தே தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர். அதனால் அவருடன் இயல்பாக பணியாற்ற முடிகிறது ”என்றார்.
கிருஷ்ணா பேசும் போது ”என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாரும், ‘ஏன் உங்கள் அண்ணன் இயக்கத்தில் நடிக்கவில்லை?’ என்பார்கள். இனி இதைக் கேட்க மாட்டார்கள் .என் முதல் இரண்டு படமும் தோல்வி அடைந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன்.
அப்போது அண்ணன் ‘நேரம் வரும்போது நாம் இணையலாம் ‘என்று கூறினார். என் படங்களுக்கு யுவனின் இசை அடையாள அட்டையாக இருந்து வெற்றி பெற்றுத்தந்தது. ‘கழுகு’ படவெற்றிக்கு100 சதவிகித காரணம் யுவன் இசைதான். ” என்றார்.
ஆர்யா பேசும்போது “என்னை நடிக்க வைத்து யூடிவியில் பல படங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள். விஷ்ணுவர்தனிடம் நான் கதை கேட்பதில்லை. அவர் எதையும் பொறுப்புடன் செய்வார். எனவே நான் கதை கேட்பதில்லை.
நான் இதுவரை நடித்தவை 25 படங்கள், என் எல்லாப் படங்களுக்கும் யுவன்தான் இசை என்கிற அளவுக்கு நிறைய செய்துள்ளார் .என் சினிமா பயணம் ‘தீப்பிடிக்க’ பாடலில் தொடங்கியது அதுமுதல் ‘தீப்பிடிக்க’ பாட்டில் நடித்த பையன் என்று அடையாளம் வந்தது. அது இன்னும் தொடர்கிறது காரணம் யுவன்..
‘சர்வம்’ படத்துக்கு பிறகு ‘யட்சன்’ படமும் பேசப்படும் . பெங்களூரிலிருந்து வந்துள்ள தீபா சன்னதி அழகான நடிகை.இந்தப் பட அனுபவம் ஜாலியாக இருந்தது.” என்றார்.
முன்னோட்டம் திரில்லாக இருந்தது . பாடல்கள் இனிமை.
படத்தில் அஜித்தின் ரசிகராக வருகிறார் ஆர்யா .