யூ டிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்த்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்க ஆர்யா, கிருஷ்ணா, தீபா சந்நிதி, சுவாதி ரெட்டி நடிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கி இருக்கும் படம் யட்சன் . யட்சன் என்றால் இயக்குபவன் என்று பொருள் . படம் பார்க்க ரசிகர்கள் இயங்குவார்களா ? பார்க்கலாம் .
அநாதை இல்லத்தில் வளரும் ஸ்வேதா (தீபா சந்நிதி) என்ற பெண்ணுக்கு சிறுவயதில் நடந்த ஒரு விபத்துக்குப் பிறகு ஈ எஸ் பி பவர் வருகிறது .
லோக்கல் பிரபல ரவுடியிடம் வாங்கிய கடனை கொடுக்க முடியாத நிலையில், அதைக் கேட்க வந்த அடியாளை கொன்று விட்டு தூத்துக்குடியில் சென்னைக்கு வருகிறான், பெட்டி கேஸ் ரவுடி சின்னா (ஆர்யா) . கொலைக்கு காரணம் , அஜித் வெறியனான சின்னா , அஜித் படத்துக்கு வாங்கி வைத்திருந்த டிக்கெட்டை அந்த அடியாள் கிழித்துதான் .
ஆவேசக் காதலி தீபாவின் வழிகாட்டுதல்படி பழனியில் இருந்து சென்னைக்கு நடிப்பு வாய்ப்புத் தேடி வருகிறான் கார்த்திக் (கிருஷ்ணா)
சென்னையில் கூலிப்படை புரோக்கர் தங்கமணி, தான் சொல்லும் ஒரு நபரை கொலை செய்தால் ஐந்து லட்சம் பணம் தருவதாகவும் அதை வைத்து சின்ன வெளிநாடு போய் விட்டால் தூத்துக்குடி பிரச்னையில் இருந்து தப்பிவிடலாம் என்று சின்னாவிடம் கூறுகிறான். கொல்லப்பட வேண்டிய நபர் ஸ்வேதா. காரணம் அவளது ஈஸ் எஸ் பி பவர் காரணமாக ரவுடி கம் அரசியல்வாதி ஒருவனுக்கு ஏற்படும் பிரச்னை .
கார்த்திக்குக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது . முதல் நாள் ஷூட்டிங் போகும் அதே நாளில் சின்னா ஸ்வேதாவை கொல்ல முடிவாகிறது. இருவரையும் பிக்கப் பண்ண வரும் கார்கள் ஒரே இடத்தில் காத்திருக்க , இருவரும் கார் மாறி ஏறி , சின்னா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் கார்த்திக் மர்டர் ஸ்பாட்டுக்கும் போக, அப்புறம் என்ன என்பதே யட்சன் .
இந்த அப்புறம் என்ன ? வில் இருக்கிற சுவாரஸ்யம் படத்தில் இருக்கிறதா என்பதுதான் படத்தின் பட்ஜெட்டை விட பெரிய கேள்வி.
படத்தில் முதலில் கவர்வது ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு . எண்ணெய் ஈரத்தில் ஊறிய வண்ணக் குழைவு மாதிரி அவ்வளவு சிறப்பு.
நடிப்பில் முதலில் மனம் கவர்பவர் ஸ்வேதா ரெட்டி. ஸோ கியூட் . தீபா சந்நிதி அழகாக இருக்கிறார் . மூடி வைத்த கிளாமரில் சிறக்கிறார். . நடிப்பும் குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஆர்யா போகிற போக்கில் நடித்து இருக்கிறார். கிருஷ்ணா வழக்கம் போல சுறுசுறு துரு துரு ! தம்பி ராமையா படம் முழுக்க கடுகு போல பொறிகிறார்.
யட்சன் தொடர்கதையாக வந்த போது ஏற்படுத்திய எதிர்பார்ப்பைக்கூட படம் ஏற்படுத்தவில்லை . அதற்கான எந்த கட்டமைப்பையும் சுபாவும் விஷ்ணுவர்த்தனும் ஏற்படுத்தவில்லை. சொல்லப் போனால் திரை முயற்சியில் எழுத்தாளர்கள் சுபா செம்மையாக ஓபி அடித்து இருக்கிறார்கள்.
ஒரு நல்ல திரைக்கதையில் ஒரு லெவலுக்கு மேலே புது புது கேரக்டர்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கக் கூடாது . மீறி வந்தால் அது…. ஓர் அட்டகாசமான என்ட்ரியாக இருக்க வேண்டும் . ஆனால் இந்தப் படத்தில் உப்புப் பெறாத விசயத்துக்கு எல்லாம் புதுப்புது கேரக்டர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். எண்ட் கார்டு போடும்போது கூட யாராவது வந்து ஹாய் சொல்வார்களோ என்ற பயம் அடி வயத்துல வருது கண்ணுகளா !
நடிகர்கள் காட்டும் உற்சாகம் திரைக்கதையில் இல்லாததால் சுவாதி, கிருஷ்ணா இவர்களின் உற்சாக நடிப்புக் கூட ஒரு நிலையில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது .
ஈ எஸ் பி விவகாரத்தை எல்லாம் சினிமா மென்னு துப்பிவிட்டது . மீறி வைத்தால் இதுவரை வராத சிச்சுவேஷன்களை வைத்து இதுவரை பார்க்காத மாதிரி விஷுவலைஸ் பண்ண வேண்டும் . அதற்கான தம்பிடி முயற்சியும் படத்தில் இல்லை .
படத்தில் தீபா சந்நிதி நடித்திருக்கும் கேரக்டரின் பெயர் ஸ்வேதா. ஸ்வேதா ரெட்டி நடித்திருக்கும் கேரக்டரின் பெயர் தீபா . இந்த கிம்மிக்ஸ் ரசனையில் கொஞ்சமாவது திரைக்கதையில் போட்டு இருக்கலாம் .
யட்சன் … அப்ரெண்டிஸ்