எய்தவன் @ விமர்சனம்

ei 5
ஃபிரண்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் சுதாகரன் தயாரிக்க, கலையரசன், சாதனா டைட்டஸ், ஆடுகளம் நரேன், வேல. ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்க,
சக்தி சவுந்திரராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் எய்தவன் வெற்றிக்குக் குறி வைக்கப்படுகிறதா ? பார்க்கலாம்

ஊசி போட்டுக் கொள்ளப்  பயப்படும் பக்கத்து வீட்டு நோயாளிப் பாட்டிக்கு, பனிரெண்டாவது படிக்கும் போதே பக்காவாக வலிக்காமல் ஊசி போடும், 

ஒரு மாணவியின் லட்சியமே மருத்துவம் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான்

பணம் எண்ணும்  மிஷின் விற்பனை மற்றும் பழுது நீக்கப் பணி செய்யும் அண்ணன் கிருஷ்ணா ( கலையரசன்) நகரில் வாழ்ந்தாலும் ,

கிராமிய குணம் மாறாத அப்பா துளசி ராமன் ( வேல. ராம மூர்த்தி) மற்றும் அம்மா இதுதான் அந்த மாணவியின் குடும்பம்

கிருஷ்ணாவுக்கும் பெண் போலீஸ் இளம் அதிகாரி ஜனனிக்கும் ( சாதனா டைட்டஸ்) காதல் . கிருஷ்ணாவின் நண்பன் சகா (சரித்திரன்)

ei 6

பனிரெண்டாவது முடிக்கும் தங்கைக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை . ” நான் பயாலஜியில் இன்னும் நாலு மார்க் எடுத்து இருக்கணும்”என்று அவளே வருந்துகிறாள் .

எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பணம் கொடுத்து சீட் வாங்க முயல்கிறது குடும்பம். கல்லூரியின் தரத்துக்கு (?) ஏற்றபடி ஒரு கோடியில் துவங்குகிறது சீட்டின் விலை .

 அது முடியாத நிலையில் தங்களால் முடிந்த ஐம்பது லட்ச ரூபாய் தொகைக்கு ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடிவு செய்து , அதற்கான புரோக்கரிடம் பணம் கொடுத்து சீட்டு பெறுகிறார்கள் .

கல்லூரியில் சேர்ந்த சில நாட்களில், மேற்படி கல்லூரிக்கான அங்கீகாரத்தை  இந்திய மருத்துவக் கவுன்சில், தரக்குறைவு காரணமாக ரத்து செய்து விட்ட விஷயம் வெளியே வருகிறது .

மேற்கொண்டு அங்கே படிப்பதில் பயன் இல்லை என்ற நிலையில் கொடுத்த காசை புரோக்கரிடம் கிருஷ்ணா கேட்க , புரோக்கர்  தர மறுக்க,

கிருஷ்ணா கோபப்படுகிறான்

ei 7

அதன் விளைவாக , சில  தாதாக்கள் , சம்மந்தப்பட்ட கல்லூரியின் முக்கியப் புள்ளி கர்ணா ( ஆடு களம்  நரேன்) கல்லூரியின் அதிபரின் மகன் கவுதம்(கவுதம்) ஆகியோரின் கோபத்துக்கு ஆளாகிறான் கிருஷ்ணா .

கிருஷ்ணா தொடர்ந்து பணத்துக்காக போராட ஒரு நிலையில் கிருஷ்ணாவின் தங்கை கார் ஏற்றிக் கொல்லப்படுகிறாள் .

தங்கை இறந்த நிலையில் தன்னிடம் பணம் தர மறுத்து அடாவடி செய்த ஒரு தாதா ( கிள்ளி வளவன்) மற்றும் கவுதம் இருவரையும் கொல்ல முடிவு செய்கிறான் கிருஷ்ணா .

அதற்கான முயற்சியில்,  கவுதம் குழுவுக்கு எதிரியான இன்னொரு தாதா தர்மனின் ( கிருஷ்ணா) நட்பு கிருஷ்ணாவுக்கு கிடைக்கிறது .

தர்மன் கவுதம் குழுவுக்கு இடையிலான பகை என்ன ? கிருஷ்ணாவின் தங்கை கொல்லப்பட்டதன் பின்னணியில் உண்மையில் இருப்பவர்கள் யார் ?

பாதிக்கப்பட்ட மற்ற மருத்துவ மாணவர்களின் கதி என்ன ? என்பதே இந்த எய்தவன் .

ei 2

மருத்துவப் பின்னணியே இல்லாத குடும்பத்தில் பிறந்தும் பள்ளிப் படிப்பின் போதே ஒரு டாக்டர் அளவுக்கு நேர்த்தியாக ஊசி போடத் தெரிந்தவள் என்று,

 அந்த மாணவியை சித்தரிகும்போதே, சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் சக்தி சவுந்திரராஜன் . இதுக்கு பேருதாங்க கேரக்டர் எஸ்டாபிளிஷ்மென்ட். அருமை .

தகுதியான மாணவி விபத்தில் கொல்லப்பட,  தெறிக்கும் அவளது ரத்தம் கல்விக் கண் திறந்த நிஜமான கல்வி வள்ளல் காமராஜரின் பிறந்த நாள் போஸ்டரில் பட்டுத் தெறிப்பது அருமையான டைரக்டோரியல் டச் .

தங்கை இறந்த பிறகு மாடிப்படியில் உட்கார்ந்து இருக்கும் கிருஷ்ணாவின் மீது தங்கையின் ஆவி உடல்,  நிஜ உடலாக மாறி உரசி விட்டுப் போவது போல உணர வைப்பது ,

போராடும் மாணவர்களை கிருஷ்ணா பார்க்கும் போது , அந்தக் கும்பலில் இருந்து தங்கை  எழுந்து வருவது போன்ற உணர்வுப் படிமம் ….

சும்மா சொல்லக் கூடாது இயக்குனருக்கு செண்டிமெண்ட் பிரம்மாதமாக கை வரப் பெறுகிறது.  அதேபோல சின்னச் சின்ன காட்சிகளைக் கூட மேக்கிங்கில் சிறப்பாகக் கொண்டு வருகிறார் இயக்குனர் .
ei 8
வேல ராம மூர்த்தியை பாசமுள்ள அப்பாவாக காட்டியக் விதமும் அருமை . மாணவிக்கான நடிகை தேர்வு அருமை . அது போலவே மற்ற நடிகர் தேர்வும் சிறப்பு

படத்தின் காட்சிகள் ஒரு முக்கியமான பல்கலைக் கழக அதிபர், அவரது மகன், அதிபருக்கு முக்கிய நபராக இருந்து சிக்கலில் மாட்டிய ஒரு நபர் ஆகியோரை ஞாபகப் படுத்துகின்றன .

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டை புரோக்கர்கள் மூலம் விற்பதை , தியேட்டர்காரர்களே பிளாக் டிக்கெட் விற்பதோடு ஒப்பிடுவது நேர்மையான குறும்பு .

ஒரு புதுமுக நடிகரைக் கொண்டு ஆரம்ப சீன்களில் அசத்தலாக காமெடி பண்ணி இருப்பது சூப்பர் . அந்த கேரக்டரை இன்னும் சில காட்சிகளில் இழுத்து விட்டிருக்கலாமே . மிஸ் பண்ணிட்டீங்களே

கலையரசன் மிக இயல்பாக நடித்துள்ளார் . சாதனா டைட்டஸ் ஜஸ்ட் ஒகே

மற்றபடி ஆடுகளம் நரேன் , வேல. ராமமூர்த்தி, கிருஷ்ணா, கவுதம், சரித்திரன், வினோத் , வளவன் எல்லோருமே நன்றாக நடித்துள்ளான்

பிரேம்குமாரின் ஒளிப்பதிவு காட்சிக்கான உணர்வுக்கு ஏற்ப இசைந்து செயல்படுகிறது

ei 9

இயக்குனர் சக்தி சவுந்திரராஜன் , சக்தி சவுந்தர் என்று இருவர் எழுதியும் வசனங்கள்  பாஸ்  மார்க் மட்டுமே வாங்குகின்றன .

இது போன்ற படங்களின் வசனங்களுக்கு தேவைப்படும் வீச்சும் கூர்மையும் இந்தப் படத்தில் குறைவே

படத்துக்கு ஃபைனல் மிக்சிங் செய்தவரை தூக்கி வெயிலில் போட! ஆங்காங்கே வசனத்தின் மீது இசையை வைத்து அழுத்துகிறார் . கூர்ந்து கேட்க வேண்டி இருக்கிறது .

மருத்துவக் கல்வியின் அவலங்கள் என்ற, சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு பொதுப் பிரச்னையை மையப்படுத்தும் திரைக்கதை, 

இரண்டாம் பகுதியில் சில நபர்களுக்கு இடையேயான  கோபங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து  பாதை மாறுவது ஒரு பின்னடைவே .

இரண்டாம் பாதியில் கதையின் நோக்கத்துக்கு அவசியமான காட்சிகள் மிக குறைவாகவும் குறைவாக இருக்க வேண்டிய காட்சிகள் அதிகமாகவும் உள்ளன

கர்ணா போன்ற அயோக்கியக் கதாபாத்திரங்களின் செண்டிமெண்ட் ரசிகனுக்கு எதுக்கு ?

ei 4

தர்மன் , கிருஷ்ணா இருவருக்குமான சம்பவங்களில் ஒரு நாவலடி இருப்பது உண்மைதான் . ஆனால் திரைக்கதையின் பயணத்துக்கு  அது எந்த வகையில் உதவி?

அதே போல தங்கையின் மரணத்துக்கு காரணமான இருவரில் , ஒருவரை வைத்து இன்னொருவரை பழிவாங்க முயல்வது எல்லாம் குயுக்தியாக தெரிகிறதே தவிர,

அநியாயமாக அடைந்த பாதிப்புக்கு நியாயம் கேட்கும் ஆவேசமோ  நேர்மையோ அதில்  இல்லை .

தங்கையின் மரணத்துக்குப் பிறகு , அவளைப் போல பாதிக்கப்பட்ட மற்ற மாணவ மாணவியருக்காவது நியாயம் கிடைக்கட்டும் என்று, 

அதற்கான போராட்டத்துக்கு கிருஷ்ணா தலைமை ஏற்றான் என்று சொல்லி, அதன் வழியே மற்ற விசயங்களை கொண்டு வந்து இருந்தால் எய்தல் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும்

தங்கை நாலு மார்க் குறைவாக வாங்கினாள் என்று அவள் வாயாலேயே சொல்ல வைப்பதற்குப் பதில் தேர்வு சமயத்தில் ஏற்பட்ட உடல் நலக் கோளாறு காரணமாக மார்க் குறைந்தது என்ற ரீதியில் விளக்கி இருக்கலாம் .

இப்படி சில குறைகள் இல்லாமல் இல்லை .

ei 99

ஆனால் மருத்துவப் படிப்பின் குளறுபடிகளை சொல்லும் வகையில் இது முக்கியமான படம் .

மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்ட மாணவ மாணவியர் , அவர்தம் பெற்றோர் , உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்தப் படத்தை பார்த்தால் ,

கல்லூரிகளை தேர்வு செய்வதில் இருக்க வேண்டிய விழிப்புணர்ச்சி பற்றிய உணர்வுப் பூர்வமான புரிதல் கிடைக்கும் . அது நிஜத்தில் மிக உதவியாக இருக்கும் .

அந்த வகையில் டார்கெட் பாய்ண்டை குறி பார்த்து அடிக்கிறான் எய்தவன்

எய்தவன் .. சமூக அக்கறையால் ரசிகர் மனங்களைக் கொய்தவன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *