ஃபிரண்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் சுதாகரன் தயாரிக்க, கலையரசன், சாதனா டைட்டஸ், ஆடு களம் நரேன், வேல ராமமூர்த்தி, ஆகியோர் நடிக்க,
சக்தி ராஜசேகரன் எழுதி இயக்கி இருக்கும் படம் எய்தவன் . தயாரிப்பாளர் இயக்குனர் இருவருக்குமே இது முதல் படம் .
” சக்தி ராஜசேகரன் எனது பல்லாண்டு நண்பர் . அவர் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது . நாட்டுக்கு அவசியமானதாக இருந்தது . எனவே படத்தை ஆரம்பித்தேன் .
எடுத்து முடித்து விட்டேன். வரும் மே 5 அன்று படம் ரிலீஸ் ஆகிறது . மற்ற விவரங்களை இயக்குனர் கூறுவார் ” என்று தயாரிப்பாளர் சுதாகரன் கூற,
படத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் இயக்குனர் சக்தி ராஜசேகரன்
” நான் விக்ரம் சுகுமாரனிடம் மத யானைக் கூட்டம் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவன் .
நாம் இயக்கும் படம் மக்களுக்கு தேவையான விசயத்தை சொல்வதாகவும் பொழுது போக்கான கமர்ஷியல் படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் . அப்படியே இந்தப் படத்தை எடுத்து முடித்துள்ளேன் .
நாட்டில் கல்வி எப்படி இருக்கிறது . அது மாணவர்களை பெற்றோர்களை என்ன பாடு படுத்துகிறது . அதனால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் என்பதுதான் இதன் களம்.
ஒரு சம்பவம் நடக்கிறது . அந்த சம்பவத்தால் பதினாறு கேரக்டர்கள் பாதிக்கப்படுகின்றன . அவற்றில் இருந்து அந்த கேரக்டர்கள் மீண்டனவா ? இல்லையா ? மீண்டது என்றால் எப்படி ? என்பதுதான் தளம்
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞன் கிருஷ்ணா..அவரின் ஒட்டுமொத்த குடும்பமும் தங்கையின் மேற்படிப்பிற்காக சென்னைக்குப் புலம் பெயர்கிறது.
அப்படிப்பட்ட சூழலில் தங்கையின் உயர்படிப்புக் கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களும் அதனால் உருவாகும் பிரச்சனைகளும்
கிருஷ்ணா சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளும் , அதை எதிர்கொள்ள கிருஷ்ணா எடுக்கும் முடிவுகளுமே எய்தவன் படம்
படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் . சாதனா டைட்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் அவருக்கு .
கல்வியின் பெயரால் நடக்கும் பல சீர்கேடுகளை படத்தில் சொல்கிறோம் .
அண்மையில் கல்வியை மையப்படுத்தி அச்சமின்றி, பைரவா உட்பட பல படங்கள் வந்து இருந்தாலும் அதில் இருந்து எய்தவன் படம் வித்தியாசப்பட்டு இருக்கும் .
கிளைமாக்சில் எல்லோருக்கும் தேவையான ஒரு விசயத்தை சொல்லி இருக்கிறோம்.
இதுவரை வேல ராம மூர்த்தியை வில்லனாகவே பார்த்து இருக்கிறோம் . ஆனால் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான பாசிட்டிவான கேரக்டரில் நடித்து உள்ளார் . அது எல்லோருக்கும் பிடிக்கும் .
பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராமின் தம்பி பார்த்தவ் பார்கோ இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் .
இதுவரை கலையரசன் பல படங்களில் கேரக்டராக மட்டும் வருவார் . இதில் ஹீரோவாக உயர்ந்து உள்ளார் . இந்தப் படத்துக்குப் பிறகு அவர் மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வருவார்
படம் பார்ப்பவர்கள் எல்லோரும் பாராட்டும் படமாக எய்தவன் வந்துள்ளது ” என்றார் .
கல்வி சம்மந்தப்பட்ட படம் என்பதால் படத்தில் நடிக்கும் யாரவது எந்தக் காட்சியிலாவது தங்கள் சொந்த அனுபவத்தோடு பொருத்திக் கொண்டு நடித்த சம்பவம் நிகழ்ந்ததா ?” என்று நான் கேட்டேன் .
பதில் சொன்ன இயக்குனர் ” ஒரு காட்சியில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்க மாணவர்கள் டிரான்ஸ்ஃபார்மில் ஏறி போராடுவது போல ஒரு காட்சி . அதில் சில நிஜ மாணவர்களை நடிக்க வைத்தேன் .
ஆரம்பத்தில் அதில் ஏற அவர்கள் தயங்கினார்கள் . ஆனால் காட்சியை சொன்ன உடன் ஏதோ உத்வேகம் வந்தது போல,
விறு விறு என்று டிரான்ஸ்ஃபார்மில் ஏறி உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் நடித்தது மறக்க முடியாத அனுபவம் ” என்றார் .
சிறப்பு !