பேட்லர்ஸ் சினிமா என்ற நிறுவனம் சார்பில் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் யானை மேல குதிரை சவாரி .இந்த கருப்பையா முருகன் பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் .
முயற்சியே செய்யாமல் முடியாது என்று முடிவு பண்றது முட்டாள்தனம்தான் .
ஆனா இன்னொரு குரூப் முடியவே முடியாத காரியத்துக்காக முயற்சி செய்வதை காமெடியும் சென்ட்டிமென்ட்டும் கலந்து சொல்வதுதான் இந்தப் படமாம்
கதாநாயகியாக அர்ச்சனா சிங் . பாடல்கள் இசை இமாலயன், பிண்ணனி இசை தாஜ்நூர், ஒளிப்பதிவு மோகன், எடிட்டிங் கணேஷ் குமார். நடனம் பாபி ஆன்டனி,
சென்னை, மற்றும் அரக்கோணம், திருச்சி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பாடல்களை வெளியிட இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பல பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர் .
இயக்குனர் அற .கே செல்வமணி மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் பாராட்டிப் பேசினார்கள்.
கே.பாக்யராஜ் சிஷ்யனை வாழ்த்திப் பேசினார் .
நிகழ்ச்சியில் பல சின்னத்திரை இயக்குநர்களைப் பார்க்க முடிந்தது .
அவர்களில் சினத்திரையில் வெற்றிக் கொடி நாட்டியத்தோடு , ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் மூலம் பெரிய திரையிலும் வெற்றிக் கொடி நாட்டிய எஸ் என் சக்திவேலுவும் ஒருவர் .
பொதுவாக படத்தின் ஹீரோ என்று இளைஞனை அல்லது முக்கிய நடிகரை காட்டுவார்கள் .
ஆனால் இந்தப் படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளுசபா சாமிநாதன், வழக்குஎண் முத்துராமன், , மிப்பு இந்த நால்வரையும் காட்டி இவர்கள்தான் படத்தின் ஹீரோ என்று சொல்லி ,
“என்னது ஒத்துக்க முடியலையா ? அப்போ படம் பார்க்கும் நீங்கள்தான் படத்தின் ஹீரோ” என்று முடித்து ரசிகர்களை ஜில் தட்ட வைக்கிறது டிரைலர் .
இயக்குனர் கருப்பையா முருகன் தன் பெற்றோரை மேடையில் உட்கார வைத்து அழகு பார்த்தது சிறப்பான விஷயம் . அவர்களுக்கு பாக்யராஜ் மரியாதை செய்தது பாராட்டுக்குரிய விஷயம் .
கருப்பையா முருகன் பேசும்போது ” பாக்யராஜ் சார்தான் இங்க சென்னையில எனக்கு அப்பா அம்மாவுக்கு மேல.. அவர் கிட்ட அசிஸ்டண்டா சேர்ந்தத வச்சுதான் என் வாழ்க்கையே ஓடுது .
அவர் கிட்ட வேலை செய்யும்போது ஒரு தடவை கோவிச்சுக்கிட்டு போயிட்டேன் . மறுபடியும் வேற வழி இல்லாம அவர்கிட்டயே போய் நின்னேன் . வஞ்சம் வைக்காம சேர்த்துக்கிட்டார் .
அது மட்டும் இல்ல. ” என்ன நம்பித்தான் உங்க அம்மா அப்பா உன்னை இங்க விட்டு வச்சுருக்காங்க. ஆனா நீ உருப்படுறதுக்குள்ள இப்படி ஓடிப் போனா என்ன அர்த்தம் ?
நீ படம் கிடைச்ச பிறகுதான் என்னை விட்டு போகணும்’னு சொன்னார் . ஆனா அவரு வார்த்தையை நான் கேட்கல . அப்புறமும் கோவிச்சுகிட்டு வந்துட்டேன் .
ஆனாலும் இப்ப இந்த விழாவுக்கு கூப்பிட்டப்போ வந்து இருக்கார். அதனால்தான் அவர் எனக்கு அப்பா அம்மாவுக்கு மேல ” என்றார் .
நிகழ்ச்சியில் மூன்று பாடல்களை திரையிட்டனர் . கடற்கரையில் காதல் ஜோடிகள் ஆட்டம் , மற்றும் ரோட்டோரக் கடையில் கும்மாங்குத்து ஆட்டம் என்று அந்தப் பாடல்கள் இருந்தன .
மூன்றாவதாக படத்தின் பெயரில் துவங்கும் யானை மேல குதிரை சவாரி என்ற பாடலில் பல அர்த்த புஷ்டியான விஷயங்கள் ..
அதில் ஒன்று தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அருகில் பவ்யமான இருக்கும் கருணா, பின்னர் ராஜா பக்சே அருகில் கோழையாய் இருப்பது !
யானை மேல் குதிரை சவாரி என்றால் இதுதானா ?