பக்கத்துப பக்கத்து ஊர் நாட்டமைகளுக்குள் பகை .
பகைக்கான காரணம் இங்கே எழுதவோ நீங்கள் படிக்க உகந்தது அல்ல .
அதற்காக அது ஏதொ கிளுகிளுப்பான விவகாரம் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளக் கூடாது .
அது ஒரு நாற்றம் பிடித்த உவ்வே சமாச்சாரம்..
அந்த இரண்டு ஊர்களில் ஓர் ஊரைச் சேர்ந்த பெண்ணும் இன்னொரு ஊரைச் சேர்ந்த பையனும் ..
வேறென்ன? காதல்தான் .
அவர்களின் காதலுக்கு நட்டாமைகளின் பகை பிரச்னையாக இருக்கிறது .
இரண்டு ஊருக்கும் பொதுவான இடத்தில் தனது வீட்டை வைத்து இருக்கிற —எந்த வீட்டுக்கு போனாலும் சொம்பு திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள – ஊர்ப் பெரிய மனுஷன் ஒருவன் ( சிங்கம் புலி),
இரண்டு நாட்டாமைகளின் குடும்ப ரகசியம் ஒன்றைக் கண்டு பிடித்து (அந்த ரகசியம் மகா கேவலம் ) ,
அதன் மூலம் நாட்டாமைகளை சம்மதிக்க வைத்து, காதல் ஜோடிகளின் திருமணத்தை உறுதி செய்கிறான் .
அந்த நேரம் பார்த்து மிலிட்டரியில் இருந்து வரும் பெண்ணின் தாய்மாமன் , அந்தக் கல்யாணத்தை எதிர்க்க ,
அப்புறம் என்ன நடந்தது ? அது என்ன மிலிட்டரி ? என்பதே இந்தப் படம் .
சினிமா எடுக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல கதை தயார் செய்ய வேண்டும் .
அந்தக் கதைக்கு ஒரு சுவையான அழுத்தமான திரைக்கதை தயார் செய்ய வேண்டும் .
வசனம் என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் .
காமெடி வசனம் உண்மையிலேயே காமெடியாக இருக்க வேண்டும் . சத்தம் போட்டு வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பதும் கோண சேட்டை செய்வதும்,
அசிங்கமான அருவருப்பான விசயங்களை சொல்வதும், வாயு வெளியேறுவதை திரும்ப திரும்ப சொல்வதும் காமெடி ஆகாது .
சிறப்பாக உருவான கதை திரைக்கதை வசனத்தை படமாக்க டைரக்ஷன் தெரிந்து இருக்க வேண்டும் .
எங்கே குளோசப் வைக்க வைக்க வேண்டும் . எங்கே லாங் ஷாட் வைக்க வேண்டும் என்பது எல்லாம் தெரியவேண்டும் .
நடிக நடிகையர் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்.
இயல்பாக நடிக்க வேண்டும் . அல்லது நடிக்க வைக்கப்பட வேண்டும்
பாடல் இசை என்றால் அது ஒரு ஒழுங்குக்குள் கட்டுப்பட்டு இனிமையாக இருக்க வேண்டும் .
நடனம் என்றால் கும்பலாக குதிப்பது அல்ல .
மேக்கப் எவ்வளவு போட வேண்டும் . அதற்கேற்ப எப்படி லைட்டிங் வைக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும் .
கதை ஓட்டத்தில் லாஜிக் மாதிரி ஒரு பிரம்மையாவது இருக்க வேண்டும்
குப்பைப் படம் என்றாலும் கோமேதகப் படம் என்றாலும் தனது பணியை ஒழுங்காக அக்கறையோடு ஓபி அடிக்காமல் செய்ததால்தான், இசைஞானி ஆனார் இளையராஜா .
அந்த அளவுக்கு எல்லாம் சிங்கம்புலியிடம் நாம் எதிர்பார்த்தால், சிங்கம் புலியே குபீர் என்று சிரித்து விடுவார் .
ஆனால் ஒரு இயக்குனராக இருந்தவர் ,
குறைந்தபட்சம் தான் நடிக்கும் காட்சிகளிலாவது, விஷயம் இருக்கா? காமெடி என்று நாம் பேசுவது காமெடியா இருக்கா? என்று பார்க்க வேண்டும் .
பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு தயாரிப்பு என்றால் என்னவென்று தெரிய வேண்டும்.
இப்படி எவ்வளவோ சொல்லலாம் . ஆனால் யார் கேட்கிறார்கள் ?
கேட்காதபோது,
என்னதான் உள்ள தூக்கி வைத்தாலும், சொம்புகள் நசுங்குவதையோ களவு போவதையோ தவிர்க்க முடியாது .