இப்போதெல்லாம் ஒரு பாமர மனிதரை கோடம்பாக்கம் வந்து படம் எடுக்க சொன்னாலும் கூட , “கிராபிக்ஸ் காட்சிக்கு இவ்ளோ பட்ஜெட்டு சார்” என்று பந்தாவாக சொல்லும் அளவுக்கு, கிராபிக்ஸ் என்பது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சமாச்சாரமாகி விட்டது .
நிலைமை இப்படி இருக்க, ஐ டி துறையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் ஒரு படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளே இல்லை என்றால் அது ஒரு புதுமைதானே .
அதுவும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வாய்ப்பு இருந்தும் அதை கிராபிக்ஸ் மூலம் எடுக்காமல், முழுக்க முழுக்க கேமரா டிரிக் மட்டும் ஒப்பனை மூலம் மட்டுமே, கிராபிக்ஸ் செய்த ரிசல்ட்டைக் கொண்டு வருவது நிஜமாகவே புதுமைதானே ?
யாஷ்மித், சித்து , ஷியாம், சாக்ஷி , ஆயிஷா , தருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்க , ஜி கமல்குமார் என்பவர் தயாரித்து படத்தொகுப்பு செய்து இயக்கும் யூகன் படத்தில்தான் இந்த சாதனை.
ஐ டி துறையில் பணியாற்றும் ஐந்து பேரின் எண்ணங்களை நகைச்சுவை கலந்து பிரதிபலிக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை திகிலும் திருப்பங்களும் கொண்டது என்கிறார் இயக்குனர் .
இந்த திகில் காட்சிகளுக்குத்தான் கிராபிக்ஸ் செய்ய வாய்ப்பிருந்தும் செய்யாமல், அதை முழுக்க முழுக்க கேமரா டிரிக் மட்டும் ஒப்பனை மூலம் மட்டுமே கொண்டு வந்துள்ளார்களாம் .
ரவி ஆறுமுகம் ஒளிப்பதிவில் ரஷாந்த் அரவின் மற்றும் அலெக்ஸ் பிரேம்நாத் இசையில் சென்னை, சிவகாசி, கொடைக்கானல், திருநெல்வேலி , கோவில்பட்டி, சேலம் ஆகிய ஊர்களில் உருவாகி இருக்கிறது யூகன்
யூகன் , யோகன் ஆகட்டும் !