புது யுகம் தொலைக்காட்சி, மரம் வளர்க்கும் பணியில் ஆர்வம் காட்டும் கிரீன் ட்ரீ சொல்யூஷன்ஸ் என்ற அமைப்புடன் சேர்ந்து , யு 1 மியூசிக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் மே ஒன்பதாம் தேதி திருநெல்வேலி பெல்பின் மைதானத்தில் நடத்துகிறது .
கோலிவுட் மற்றும் பாலிவுட் இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ள யுவன் சங்கர ராஜா இசைக்கும் இந்த ஐந்து மணி நேர இசை நிகழ்ச்சியில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு சில பாடல்களை பாடுகிறார் .
“ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை படைத்திருக்கும் இசைஞானியை கவுரவிக்கும் நிகழ்ச்சியாகவும் இது அமையும்”என்கிறார் , புதுயுகம் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷியாம்.
இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வசூல் தொகையை வைத்து திருநெல்வேலியில் நிறைய மரங்களை நடும் பணியை செய்ய இருக்கிறது கிரீன் ட்ரீ சொல்யூஷன்ஸ் அமைப்பு.
திருநெல்வேலியைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் இப்படி மரம் நாடும் வேலையை செய்ய இருக்கிறதாம் இந்த அமைப்பு .
மரங்கள் அதிகரித்தால்தான் மழை பொழிவு அதிகரிக்கும் . அதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு பொழியட்டும் வசூல் மழை.