ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி வெளியிட,, மாதவ் மீடியா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்க
அஸ்வின் , ஷிவதா, ஜே டி சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்க, பரத் பாலாவின் உதவியாளரான ஷிவ் மோஹா என்பவர் இயக்கி இருக்கும் படம் ஸீரோ. ஸீரோவுக்கு அப்புறம் எவ்வளவு ? பார்க்கலாம் .
கண்ட உடன் இரண்டு பக்கமும் காதல் பற்றிக் கொள்கிறது ஒரு காதல் ஜோடிக்கு (அஷ்வின்- ஷிவதா). ஆனால் இது கிண்டல் செய்ய வேண்டிய விஷயம் அல்ல, அவர்கள் பல ஜன்மங்களாக காதல் ஜோடியாக இருப்பவர்கள் .
அந்த பெண்ணின் அம்மா மன நோயாளியாக இருந்து இறந்து போனவர் . ஒரு மனநோயாளியாகவே பிள்ளையை பெற்றவர் .
ஒரு நிலையில் காதல் மனைவியின் கனவிலும் பின்னர் நினைவிலும் பின்னர் நேரிலும் வரும் அம்மா , ‘இந்த உலகம் நம்முடையது இல்லை என்று சொல்லி வேறொரு உலகத்துக்கு அழைத்துப் போகிறார்.
அங்கு பலர் தனித் தனியே ஒரு மோன நிலையில் வாழ்கிறார்கள் .
கணவனைப் பிரிந்து அங்கு இருக்க முடியாத காதல் மனைவி அம்மாவின் விருப்பத்தை மீறி இவ்வுலகு வந்து விடுகிறார் . ஆனால் அம்மா அங்கு வந்து விட தொடர்ந்து வற்புறுத்துகிறாள் .
ஒரு நிலையில் காதல் மனைவியின் மன நிலையும் பாதிக்கப்படுகிறது . அவளுக்குள் ஒரு தீய சக்தி குடியேறுகிறது .
ஆதாம் ஏவாள் காதலுக்கு இடையில் சாத்தான் என்ற பாம்பு வந்தது போல இங்கே வரும் ஒரு சாத்தான் போன்ற பாம்பு நாயகியை ஆட்டிப் படைக்கிறது .
நாயகிக்குள் வரும் தீய சக்தி யார் என்பதற்கு பலரும் அறியாத ஒரு கதை சொல்கிறார்கள் .
கடவுள் உலகைப் படைத்தார் . ஆதாமைப் படைத்தார் . அவனுக்கு துணையாக ஏவாளைப் படைத்தார் . தோட்டத்தில் ஒரு ஆப்பிள் இருந்தது . அதை சாப்பிட வேண்டாம் என்று கடவுள் சொன்னார் .
ஆனால் அங்கு இருந்த பாம்பு வடிவ சாத்தான் பழத்தின் ருசி பற்றி சொல்லி சாப்பிட வைத்தது .
அதன் பிறகே ஆதாம் ஏவாளுக்கு பசி, வேட்கை, காமம், குழந்தை , துன்பம் , சிக்கல்கள் எல்லாம் வந்தது என்பது அனைவரும் அறிந்த பைபிள் கதை .
இதற்கிடையே இருக்கும் இன்னொரு கதைதான் லில்லித் கதை .
கடவுள் அதாமைப் படைத்ததும் அடுத்துப் படைத்த முதல் பெண் லில்லித் . அவள் ஆதாமால் கர்ப்பம் ஆனாள். ஆனால் ஆதாமோடு சண்டை போட்டாள். அவன் பேச்சைக் கேட்கவில்லை .
கடவுளையும் எதிர்த்தாள் . அவளுக்கு துணையாக இருந்ததுதான் சாத்தான் பாம்பு .
‘ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டால் தன் சக்தி பல மடங்கு பெருகி கடவுளை எதிர்க்கலாம்’ என்று லில்லித் முடிவு செய்கிறாள் .இதை அறிந்த கடவுள் அவளது கருவை இறந்தே பிறக்க வைக்கிறார். .
மனம் வெறுத்த லில்லித் எங்கேயோ போய் விட, அதன் பிறகே கடவுள் ஆதாமுக்காக ஏவாளைப் படைத்தார் . அப்புறம் வந்ததுதான் அனைவரும் அறிந்த ஆப்பிள் சமாச்சாரம் .
அந்த லில்லித் என்ன ஆனாள் என்பதை சொல்லித் தொடர்கிறது இந்தப் படம் .
லில்லித் ஒரு தனி உலகத்தை சிருஷ்டிக்கிறாள் . கடவுளையும் காதல் ஜோடிகளையும் பழிவாங்குவதற்காக காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் கர்ப்பத்தில் நுழைந்து,
பிள்ளைகளின் மன நிலையை பாதித்து தன வயப்படுத்துகிறாள் லில்லித் .
அப்படி தன்வயமானவர்கள் பிறந்து காதலித்து வாழும்போது அவர்களை பிரித்து தன் உலகுக்கு கொண்டு வந்து அதன் மூலம் காதல் ஜோடிகளையும் அழித்து,
ஒரு நிலையில் கடவுளையும் பழிவாங்க சமயம் பார்த்துக் காத்திருக்கிறாள் லில்லித் .
நாயகியின் அம்மா ஒரு குழந்தையாக கருவில் இருக்கும்போதே ஆக்கிரமித்து , அவள் வளர்ந்து திருமணம் செய்து கர்ப்பம் ஆன போது அவளை மன நோயாளியாக்கி ,
தனது உலகத்துக்கு கொண்டு போனவள் இதே லில்லித்.
இப்போது காதல் மனைவியான நாயகியையும் அவள் அம்மா அழைப்பது லில்லித்தின் உலகுக்குத்தான் . அதில் அவளது அம்மா வெற்றியும் பெறுகிறாள் . காதல் மாணவி அம்மாவுடன் போய் விட ,
அவள் இல்லாமல் காதலில் தவிக்கிறான் நாயகன்
இங்கே லில்லித் பலரையும் கொன்று குவித்து விட்டு கடவுளுக்கு சவால்விட திட்டமிடுகிறாள் லில்லித் .
இறந்து போன தன் மனைவியிடம் தொடர்ந்து பேசிவரும் ஆவி ஆராய்ச்சியாளர் (ஜே டி சக்கரவர்த்தி) ஒருவர் நாயகனுக்கு உதவ வருகிறார் .
வென்றது லில்லித்தா ? இல்லை காதல் ஜோடியா ? என்பதே இந்த ஸீரோ.
கதை புரியலன்னா இன்னொரு முறை படிங்க (வேற வழியே இல்லை )
புதிய சொல்லப் படாத கதை .
காதல் காட்சிகளை ரசித்து எடுத்துள்ளார் இயக்குனர் . பாபு குமாரின் ஒளிப்பதிவு வண்ணங்களில் திருவிழா .
படத்தின் மிகப்பெரிய பலம் நிவாஸ் பிரசன்னாவின் அற்புதமான பாடல்களும் பாராட்டுக்குரிய பின்னணி இசையும் !
உயிரே உன் உயிரென பாடலும் எங்கே போனாய் என்னை விட்டு பாடலும் இதயத்தை சுகமாக உருக்ட வைக்கிறது
அஸ்வின் வழக்கம்போல சைலன்ட் ஹீரோ .
கதாநாயகியாக நெடுஞ்சாலை ஷிவதா ! வாவ் ! என்ன அழகு ! பார்த்த உடன் காதல் பற்றிக் கொள்கிறது என்று சொல்வதற்கு பொருத்தமான முகம் . ஆனால் அதை விட சிறப்பு, அவர் கொடுத்திருக்கும் அழுத்தமான நடிப்பு .
அம்மாவின் அமானுஷ்ய அழைப்பு, காதல் கணவனை பிரிய முடியாத நிலை , சாத்தான் பாம்பை பார்கும்போது முகத்தில் காட்டும் பயம் , லில்லித் பண்ணும் அடாவடியில் நடுங்கி நொறுங்கும் விதம் .
பிறகு லில்லித்தாக மாறி மிரட்டும் விதம் , எல்லாவற்றுக்கும் மேலாக சட்டென்று கொடுக்கும் முத்தத்தில் பட்டென்று அதிர்ந்து கிறங்கும் விதம் … கிளாஸ் ஷிவதா…. கிளாஸ் !
காட்சிகளின் நீளம் அதிகம் . மெதுவாக நகர்கிறது திரைக்கதை.
படத்தின் முக்கிய விசயமே லில்லித் விஷயம்தான் . ஆனால் அதை சும்மா சாதரணமாக சொல்கிறார்கள் .
லில்லித் பற்றி படத்தின் இறுதிக் கட்டங்களில் அவசரம் அவசரமாக சொல்வதற்குப் பதில் , இன்னும் முன்னரே விலாவரியாக அழுத்தமாக சொல்லி , இடைவேளையில் அவளை ஒரு சூப்பர் பவராக சொல்லி விட்டு ,
இரண்டாம் பகுதியை அவளுக்கும் மற்ற நல்ல சக்திகளுக்குமான போராட்டமாக சிறப்பாக ஸ்கிரிப்ட் எழுதி அட்டகாசமாக சொல்லி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்