
ஒரு படம் வித்தியாசமான படம் என்பதை அதன் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டத்தையும் பாடல்களையும் பார்கும்போதே அறிந்து உணர்ந்து வியந்து,
படத்தைப் பார்க்கக் காத்திருப்பது என்பது ஒரு சுகானுபவம் !அப்படி ஒரு லயிப்பான எதிர்பார்ப்பைத் தருகிறது ஸீரோ படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் !
ஸீரோ ?
மாதவ் மீடியா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்க
அஸ்வின் காக்குமனு, ஷிவதா, ஜே டி சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்க, பரத் பாலாவின் உதவியாளரான ஷிவ் மோஹா என்பவர் இயக்கி இருக்கும் படம் ஸீரோ.
இந்தப் படததின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் நமக்கு அப்படி ஒரு எதிர்ப்பார்ப்பைத் தரும் அனுபவம் !
அதி அழகான வண்ணக் குழைவில் பாபு குமார் என்பவரின் சிறப்பான ஒளிப்பதிவில், கண்களை மயங்க வைத்து விரியும் முன்னோட்டத்தில், ஒரு அழகான காதல் , திகில் , வியப்பு….
இன்னொரு உலகம் பற்றிய விவரிப்பு, பரபரப்பு, படபடப்பு , தொழில் நுட்ப நேர்த்தி மற்றும் வியப்பு, இத்தனையையும் கொண்டிருந்தது முன்னோட்டம் .
உலகில் முதலில் கடவுள் ஆதாமை படைத்தான் . பின்னர் அவனுக்கு துணையாக ஏவாளை படைத்தான் . ஆப்பிள் இருந்தது . பாம்பு பார்த்தது . உறவு பிறந்தது . கூடவே பாவம் பிறந்தது என்பது பொதுவில் பலரும் அறிந்த கதை .
அதில் இருந்து பலரும் அறியாத ஒரு அட்டகாசாமான கதை எடுத்து இந்தப் படத்தை செய்து இருக்கிறார்கள். ஆதாம் ஏவாள் காலத்து சாத்தான் பாம்பு இந்தப் படத்தில் நவீன ரூபததில் வருகிறது .
மேற் சொன்ன கதை பற்றி இதுவரை பலரும் அறியாத ஒரு பார்வையை படம் இந்தப் படம் எடுத்து வைக்கும் என்பது முன்னோட்டத்தில் புரிகிறது . அசத்தலான முன்னோட்டம் .
படத்தின் இசை தெகிடி , சேதுபதி படங்களுக்கு இசை அமைத்த நிவாஸ் கே பிரசன்னா . திரையிட்ட இரண்டு பாடல்களும் காதலின் சுகத்தை, பிரம்மிப்பை, வலியை, நெருக்கத்தை, நொறுங்குதலை சொல்லும் பாடல்களாக இருந்தன .
மெட்டுகள், இசைக் கருவிகள் பயன்பாடு, படமாக்கப்பட்ட விதம் என்று அனைத்து வகையிலும் சிறப்பாக இருந்தன .
தவிர இரண்டு பாடல்களையும் மேடையில் பாடினார் நிவாஸ் கே பிரசன்னா . உடனடியாக இரண்டாவது முறை கேட்டபோதும் இனித்தன அந்தப் பாடல்கள் . .
இவ்வளவு சிறப்புகளை எல்லோருக்கும் முன்பாகவே பார்த்து லயித்த காரணத்தால், யூ டிவி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்தப் படத்தை வாங்கி,
ப்ளூ ஓஷன் என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தைத் துவங்கி தனது முதல் வெளியீடாக வெளியிடுகிறார் .
நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ் தாணு தலைமையில் இயக்குனர் மகேந்திரன் பாடல்களை வெளியிட இயக்குனர் வெற்றி மாறன் பெற்றுக் கொண்டார் .
விழாவில் வரவேற்புரை ஆற்றிய தனஞ்செயன் “நண்பர்களின் அழைப்பு காரணமாகவே இந்தப் படம் பார்த்தேன் . எனது பாஃப்டா (ப்ளூ ஓஷன் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமி ) திரைப்படக் கல்வி நிறுவனததின் மாணவர்களும் என்னோடு பார்த்தார்கள்.
படம் முடிந்ததும் நான் அப்படியே வியந்து போய். ‘எப்படி இந்த டைரக்டர் ஷிவ் மோஹா இப்படி ஓர் அட்டகாசமான கதையை யோசித்தார் ‘ என்று வியந்து போய் இருந்தேன் .
என்னை விட என் மாணவர்கள் பிரம்மிப்பின் உச்சிக்குப் போனதோடு , ‘இந்தப் படத்துக்கு நாம் எதாவது செய்ய வேண்டும்’ என்று சொன்னார்கள். உடனே நானே இந்தப் படத்தை வாங்கி ,
ப்ளூ ஓஷன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தைத் துவங்கி வெளியிடுகிறேன்” என்றார் , கடல் அளவு நம்பிக்கையோடு .
கலைப்புலி எஸ் தாணு பேசும்போது ” தனஞ்செயன் ஹெச் எம் வி ஆடியோ நிறுவனத்தில் பணியாற்றியபோது நான் தயாரித்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படததின் ஆடியோ ரைட்ஸ் பேச என்னிடம் வந்தார் .
அப்போதே அவர் சினிமாவில் மிகப்பெரிய இடத்துக்கு வருவார் என்று கண்டு கொண்டேன் நான் கண்டு கொண்டேன் . படத்தின் முன்னோட்டத்தையும் பாடல்களையும் பார்த்த நிலையில் நான் சொல்கிறேன் .
இந்தப் படம் உறுதியான வெற்றிப் படம் ” என்றார் .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.சிவா தனது பேச்சில் “தனஞ்செயன் நினைத்து இருந்தால் மிகப் பெரிய நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை வைத்து படம் எடுத்து இருக்கலாம் .
ஆனால் புதியவர்களின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அவரது குணம் பாராட்டுக்குரியது ” என்றார்
நாயகி ஷிவதா பேசும்போது “நெடுஞ்சாலை படத்தில் காதாநாயகியாக நடித்த என் நடிப்பை எல்லோரும் பாரட்டினார்கள் . ஆனால் எனக்கு அடுத்து படம் வரவில்லை . கல்யாணம் பண்ணிக் கொண்டேன் .
அதற்குப் பிறகு இந்தப் படம் வந்தது . இப்போது மலையாளத்தில் இரண்டு படம் நடித்துள்ளேன் . இந்தப் படம் வெற்றி பெறும். தொடர்ந்து நடிக்க என் கணவன் அனுமதி கொடுத்துள்ளார் ” என்றார் .
நாயகன் அஷ்வின் தனது பேச்சில் ” இந்தப் படம் என்னால் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் . மிகவும் விரும்பி நடித்தோம் ,
நாயகி ஷிவதா மிக ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் நடித்து உள்ளார் .
படம் மீது நம்பிக்கை அதிகம் உள்ளது ” என்றார் .
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசும்போது ” இந்தப் படததின் கதை மிக வித்தியாசமானது என்பதால் எனக்கு மிகவும் சவாலான பணியாக இருந்தது.
இதுவரை நான் இசையமைத்துள்ள மூன்று படங்களிலும் இதுதான் எனக்கு மிகவும் பிடித்த படம் ” என்றார்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் ஆரி ” நெடுஞ்சாலை படம் பார்த்து என்னை பாராட்டினாலும் எனக்கு அடுத்து உடனே படம் வரவில்லை. என்னை யாரோ காட்டான் என்று நினைத்து விட்டார்கள்.
அதை உடைத்து நான் வெளியே வர வெகு நாள் ஆனது . ஷிவதாவுக்கும் அப்படியே . இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எப்போது அவருக்கு நான் போன் பேசினாலும் ‘கயித்துல தொங்கிக்கிட்டு இருக்கேன் .
கூரை மேல நடந்துக்கிட்டு இருக்கேன்’னு சொல்வாங்க . படம் நல்லா வந்திருக்கறது இப்பவே புரியுது . ” என்றார்.
இயக்குனர் ஷிவ்மோஹா தனது பேச்சில் ” வேறு உலகம் , ஆதாம் , ஏவாள் , புராணம் என்பது போன்ற ஒரு கதை பார்க்க சிறப்பாக இருக்கும் .
ஆ னால் சொல்லும்போது அதை ஒத்துக் கொண்டு படம் தயாரிக்க முன்வருவது பெரிய விசயம் . அதை எனக்கு செய்து கொடுத்த பாலாஜி கப்பாவுக்கு நன்றி.
படத்துக்கு பலம் கொடுத்துள்ள தனஞ்செயனுக்கு நன்றி ” என்றார் .
வெற்றி மாறன் பேசும்போது ” படம் விஷுவலாக நல்லா இருக்கு .பாட்டு நல்லா இருக்கு. ரீ ரிக்கார்டிங் சிறப்பா இருப்பதை இப்பவே உணர முடியுது . படம் பார்க்க இப்பவே ஆசையா இருக்கு.
ஆகறதுக்கு முன்னாடியே எனக்கு ஒரு ஷோ போட்டுக் காட்டினா பாக்க ஆவலா இருக்கேன் ” என்றார் .
சிறப்புரையாற்றிய மகேந்திரன் “தனஞ்செயன் எதையும் சரியா செய்பவர் . அவர் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்றாலே படம் சிறப்பாதான் இருக்கும் .
படத்தின் டைரக்டர் தன் பேச்சில் தன் அப்பா அம்மாவுக்கு நன்றி சொன்னார் . அப்பா அம்மாவை மதிக்கும் அவரது பண்பே அவரை உயர்த்தும் . படத்துல இசை நல்லா இருக்கு . ஒளிப்பதிவு பிரம்மாதமா இருக்கு .
இப்ப எல்லாம் ஒளிப்பதிவு பற்றியும் ஒளிப்பதிவாளர் பற்றியும் யாரும் பேசுவதே இல்லை . ஒளிப்பதிவையும் இயக்கத்தையும் பிரிச்சுப் பார்க்கவே முடியாது .
இப்ப வர்ற பல படங்களை நான் தியேட்டருக்குப் போய் பார்க்கறதே இல்லை . காரணம் எதிலும் ஸ்கிரிப்ட் நல்லா இல்ல. எல்லாரும் டெக்னிகலா நல்லா பண்றாங்க . ஆனா ஸ்கிரிப்டுல கோட்டை விடறாங்க .
நல்லா டைம் எடுத்து உழைச்சு ஸ்கிரிப்ட் பண்ணுங்க . அப்புறம் ஷூட்டிங் போங்க . அது முக்கியம் .
இந்தப் படத்தில் எல்லாமே நல்லா இருக்கு . படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் .
அந்த மாபெரும் இயக்குனரே சொன்ன பிறகு வேறு என்ன சொல்ல இருக்கு ?
நூற்றுக்கு நூறு வெற்றி பெறட்டும் ஸீரோ .
TRAILER OF THE MOVIE ZERO
—————————————
ps://www.youtube.com/watch?v=pP0y7lvswdA