வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , கவுதம் கார்த்திக், அஸ்ரிதா ஷெட்டி, சொனாரிகா படோரியா, சுதன்ஷு பாண்டே, சச்சின் கெடேகர் , எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் ,
தாணுவிண் மூத்த மகன் பரந்தாமன் இணை தயாரிப்பாளராக பணியாற்ற , அவரது இளைய மகன் கலா பிரபு இயக்கும் படம் இந்திரஜித் .
புராணப்படி இராவணனின் மகனான இந்திரஜித், ராமனையும் லக்ஷ்மணனையுமே போர்க்களத்தில் கதற வைத்தவன் .

(உடல் முழுவதும் இந்திரஜித்தின் கணைகளால் துளைக்கப்பட்ட ராமனும் லட்சுமணனும், ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனையும், சந்திரனையும் போலத் தரையில் விழுந்தனர் என்பார் கவிச்சக்கவர்த்தி கம்பர் )
சரி, ‘ சரியான பக்கத்தில் நிற்பவன் (on the right side) என்ற துணைப் பெயரோடு வந்து இருக்கும் இந்த இந்திரஜித் திரைக்களத்தில் எப்படி ? பார்க்கலாம் .
சூரியனின் மீச்சிறு பகுதி ஒன்று , சூரியனின் மைய ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு விலகி விண்வெளியில் பயணித்து எறி கல் ஒன்றின் மீது விழுந்து ,
ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு மேலும் பயணித்து பூமியில் ஓரிடத்தில் விழுகிறது .
பச்சை நிற மரகதக் கல் போல மாறும் அதன் மீது பட்டு வரும் நீர் சர்வரோக நிவாரணி என்பதை சித்தர்கள் கண்டு பிடித்து பலருக்கும் மருத்துவத்துக்கு பயன்படுத்துகிறார்கள் .
காலப் போக்கில் அது என்ன ஆனது என்று தெரியாத நிலையில் அதைக் கண்டு பிடிக்க தனிப்பட்ட வகையில் ஆராய்ச்சி செய்கிறார் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் முன்னாள் இயக்குனர் ஒருவர் (சச்சின் கெடேகர்).
அவரது முன்னாள் மாணவரான இந்நாள் துறை இயக்குனரின் (சுதன்ஷு பாண்டே) கையில் அது கிடைத்தால் அவர் அதை வெளிநாட்டுக்கு விற்று லாபம் பார்த்து விடுவார் என்பது முன்னாள் இயக்குனரின் கோபம் .
அந்த முன்னாள் இயக்குனரின் நண்பனான ஒருவரின் உறவினனும் எப்போதும் உற்சாகம் வழியும் மன நிலையும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஆல் இன் ஆல் அழகுராஜாவான இளைஞன் இந்திரஜித் (கவுதம் கார்த்திக்) ,
மேற்படி உறவினரின் சிபாரிசில் முன்னாள் இயக்குனரிடம் வேலைக்கு சேர்கிறான் .
தனது அறிவுக் கூர்மையால் அந்த மருத்துவக் கல் அருணாச்சலப் பிரதேச மாநிலக் காடு ஒன்றில் இருப்பதைக் கண்டு பிடிக்கிறான் .
அதை எடுக்கக் கிளம்பும் முன்னாள் இயக்குனரின் குழுவில் அவனும் இடம் பிடிக்கிறான் .
விசயத்தை மோப்பம் பிடிக்கும் தொல்லியல் துறை இந்நாள் இயக்குனரும் தனது குழுவோடு பின் தொடர்கிறார் .
நீண்ட தூர பயணம் , அடர்ந்த காடு , பயமுறுத்தும் பள்ளத் தாக்குகள் , ஆபத்தான மிருகங்கள், கொடிய விஷப்பாம்புகள் இவைகளோடு அந்த காட்டில் இருக்கும்,
பல்வேறு தீவிரவாத குழுக்கள்.. இவைகளை எல்லாம் மீறி அந்த மருத்துவக் கல்லை எடுக்க முடிந்ததா ? யாரால் எடுக்க முடிந்தது ?
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த இந்திரஜித் .
விண்கல்லின் வரலாறு சொல்லும் அந்த ஆரம்பக் காட்சிகள் அபாரம் .
இந்திரஜித்தின் குணாதிசய வடிவமைப்பு சிறப்பு . தொல்லியல் துறை இந்நாள் இயக்குனருடன் அவன் ஜஸ்ட் லைக் தட் நட்பாக பழகுவதும் சுவாரசியம் . உற்சாகமாக நடித்துள்ளார் கவுதம் . சிறப்பு !
கவர்ச்சிக்கு என்று சில காட்சிகளை நிறைத்து விட்டுப் போயிருக்கிறார் சொனாரிகா படோரியா. கிளுகிளுப்பு .
இந்திரஜித் இருக்கும் தேடுதல் குழுவில் ஒருவராக படம் முழுக்க வளைய வருகிறார் அஸ்ரிதா ஷெட்டி.
அழும்போது கூட அழகிப் போட்டியின் விதிகளுக்கு உட்பட்ட மாதிரி அழுகிறார் அழுகிறார் .
தொல்லியல் துறை இந்நாள் அதிகாரியாக வரும் சுதன்ஷு பாண்டே தோற்றப் பொருத்தத்தில் பிரம்மிக்க வைக்கிறார் .நடிப்பிலும் பாராட்டுப் பெறுகிறார் .
எம் எஸ் பாஸ்கர் …… இருக்கிறார்.
கே பி யின் பாடல்கள் இசை இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம் . எனினும் பின்னணி இசையில் பின்னிப் பெடல் எடுக்கிறார் .
ராசமதியின் ஒளிப்பதிவு விழிகளை வியப்பால் விரிய வைக்கிறது .
லொகேஷன்களும் அவை தொடர்பான கிராஃபிக்சும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக நம்மை பிரம்மிக்க வைக்கிறது .
காடு , விலங்குகள் , பயணம் , சாகசம், தொடர்பான காட்சிகள் குழந்தைகளைக் கவரும்.
சிறப்பாகத் துவங்கி , சுவாரஸ்யமாக நகர்ந்து, கொஞ்சம் டெம்போ ஏறி , அப்புறம் தொங்கி, காமெடியாக போகலாமா சீரியசாக போகலாமா என்று,
ஒரு நிலையில் குழம்பும் திரைக்கதை, கிளைமாக்சை நெருங்க நெருங்க விறுவிறுப்பாகிறது .
இந்திரஜித் மருத்துவக் கல்லை எடுக்கும் காட்சிகள் செம விறுவிறுப்பு . சூப்பர் .
அந்த காட்சிகளிலும் வில்லன் குறித்த கடைசி நேர டுவிஸ்டிலும் சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் கலாபிரபு .

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டி இருந்தால் இன்னும் கூட சிறப்பாக வந்திருக்கும் படம் .
இந்திர ஜித் …. இந்த வார வீரன் .

