வசந்தம் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி ஜவஹர் என்பவர் இயக்க,
சந்தோஷ், ரேஷ்மி மேனன் , கோவை சரளா, ஜகன், பரணி, நான் கடவுள் ராஜேந்திரன் , லொள்ளு சபா ஜீவா, ஆகியோர் நடித்துள்ள படம் பயமா இருக்கு .
நல்லா இருக்கா ? பார்க்கலாம்
நாகர்கோவில் மார்த்தாண்டம் பகுதியில் வாழும் இளம் தம்பதியில் , கர்ப்பமாக இருக்கும் மனைவி லேகாவின் (ரேஷ்மி மேனன்) ஆசைப்படி, 
யாழ்ப்பாணத்தில் உள்ள அவளது பெற்றோரை அழைத்து வரப் போகிறான் கணவன் ஜெய் (சந்தோஷ்)
அந்த சமயத்தில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் தமிழின அழிப்பு உச்சம் அடைந்து , அந்த அழிப்பில்,
லேகாவின் பெற்றோர்கள் கொல்லப் பட ஜெய்யும் சிங்கள ராணுவத்தான்களிடம் சிக்கிக் கொள்கிறான் . 
ஒரு இடத்தில் அவனையும் , தொழில் விசயமாக இலங்கை போயிருந்த வேறு சில தமிழ்நாட்டு தமிழர்களையும் ( ராஜேந்திரன், ஜீவா , பரணி, ஜெகன்),
கை கால்களை கட்டி மண்டியிட வைத்து சுட்டுக் கொல்ல முயல்கிறான்கள் சிங்கள ராணுவத்தான்கள் .
”நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து அண்மையில் வேலை விசயமாக வந்தவர்கள்; (உங்கள் சிங்கள இனம் உருவாவதற்கு முன்பிருந்தே),

இந்த மண்ணில் வாழ்ந்து வரும் பூர்வீக ஈழத் தமிழர்கள் அல்ல” என்று கூறியும் பயன் இல்லை .
எதிர்பாராத சமயத்தில் ஜெய் அவர்களோடு சண்டை போட்டு , நெருப்பில் சிலர் விழ , ஒரு வழியாக தோணி மூலம் ஐவரும் தமிழகம் வருகிறார்கள் .
கடல்புறத்து தண்ணீர் பரப்பில் உள்ள சிறு நிலத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு நண்பர்களோடு வருகிறான் ஜெய் . 
மனைவியும் பிறந்த குழந்தையும் அங்கு இருக்கிறார்கள் . ஆனால் லேகாவின் நடவடிக்கைகள் இயல்பாக இல்லை .
இந்த நிலையில் ஜெய் நண்பர்களோடு கடை வீதிக்குப் போக , அங்கு ஜெய்யை பார்க்கும் ஒருவர் பேய் பேய் என்று அலறுகிறார் .
சிங்கள ராணுவத்தான்களுடன் நடந்த சண்டையில் ஜெய்யும் இறந்ததாக வந்த பத்திரிகை செய்தி காட்டப்படுகிறது .
வேறு சிலர் ”லேகா பிரசவத்தில் இறந்து விட்டாள். அங்கே இருப்பது அவளது ஆவி” என்கின்றனர் . 
அதற்கேற்ப அங்கே புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்படும் ஒரு எலும்புக் கூட்டின் கையில் ஒரு மோதிரத்தை நண்பர்கள் பார்க்கின்றனர் .
அந்த மோதிரம் இப்பொது லேகாவின் விரலில் இருக்கிறது . லேகாதான் பேய் என்று நண்பர்கள் நம்ப , ஜெய் அதை மறுக்கிறான் .
பேய் ஓட்டும் மந்திரவாதி (கோவை சரளா ) சொன்ன முறையைப் பயன்படுத்திப் பார்த்தால் ஜெய் தான் பேய் என்று நண்பர்கள் நினைக்கின்றனர் . 
ஒரு நிலையில் நண்பர்களில் ஒருவரான பரணிதான் பேய் என்று மற்ற நண்பர்கள் நினைக்கின்றனர் .
சிங்கள ராணுவத்தான்களுடன் நடந்த சண்டையில் பரணியும் இறந்ததாக வந்த பத்திரிகை செய்தி காட்டப்படுகிறது .
உண்மையில் யார் பேய் ? உண்மை தெளிவாக தெரிய வரும்போது நடந்தது என்ன என்பதே, இந்த பயமா இருக்கு .
ஒரு பேய்க் கதையில் ஈழத்து இன அழிப்பை ஓரிரு காட்சியே ஆனாலும் சிறப்பாக காட்டிய இயக்குனர் ஜவஹருக்கு பாராட்டுகள் .
லேகாவின் வீடு …. ! வாவ் ! கேரளாவில் எங்கோ பிடித்துள்ளார்கள் அந்த அற்புதமான லொக்கேஷனை ! கடலுக்குள் இருக்கும் சிறு நிலம் .
படகில் மட்டுமே போகும் வசதி.. பின்பக்கம் அடர்ந்த காடு என்று, அந்த லோக்கேஷன் மயக்குகிறது என்றால் ..
அதில் நிறைய இரவு நேரக் காட்சிகளை அற்புதமாக ஒளியூட்டி சிறப்பாக ஷாட்கள் வைத்து படம் எடுத்து வாய் பிளக்க வைக்கிறார்கள் .
இந்த பாராட்டில் இயக்குனருக்கு மட்டுமல்லாமல் மகேந்திரனின் ஒளிப்பதிவுக்கும் முக்கியப் பங்கு உண்டு . சிறப்பு .
சத்யாவின் பாடல் மற்றும் பின்னணி இசையில் செண்டிமெண்ட். திகில் இரண்டும் சிறப்பாக வெளிப்படுகிறது .
காடுகளுக்குள் இரவில் சில காட்சிகளில் நிஜமாகவே மிரட்டுகிறார்கள் .
பேய் மேஜிக் விளையாட்டு அரங்குக்குள் நிஜ பேயும் போலி பேய்களுமான அந்த காட்சி நல்ல ஐடியா . ஆனால் அதை இன்னும் சிறப்பாக அமைத்து இருக்க வேண்டும்
ரேஷ்மி மேனன், சந்தோஷ் , பரணி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் . ஜெகன் , ஜீவா கூட சேதாரம் இல்லை .
ஆனால் கோவை சரளாவும் ராஜேந்திரனும்தான் காமெடி என்ற பெயரில் படுத்தி எடுக்கின்றனர் .
காஞ்சனா ஸ்டைல் கிளிஷே நடிப்பை விட்டுடுங்க சரளா … புண்ணியமா போகும் . 
ஈழப் பிரச்னை பற்றி காட்சி அமைத்தவர்கள் ஏதாவது ஒரு வகையில் கடைசியில் அந்த விசயத்தை மீண்டும் கொண்டு வந்து கனம் கூட்டி இருக்கலாம் .
இன்னும் கவனத்தை ஈர்த்து இருக்கலாம் . அநியாயமா மிஸ் பண்ணிட்டீங்களே !
எனினும் பேயானாலும் நிஜ காதல் போகாது என்று சொல்லும் அந்த கிளைமாக்ஸ் பாஸ் ஆகிறது . 
இன்னும் உழைத்து சிரத்தை மற்றும் செய் நேர்த்தியோடு திரைக்கதை அமைத்து, இருந்தால் பாக்ஸ் ஆபிசில் படம் இடம் பிடித்து இருக்கும் இந்தப் படம்.