கோவில்களில் உயிர்ப்பலி வழிபாட்டுக்கு தடை போட்ட காரணத்துக்காக ஒரு ஆட்சியே மாறிய இதே தங்கத் தமிழ்நாட்டில் அதே கருத்தை காட்சியில் சொல்லி வந்திருக்கும் படம்தான்….. நாசர், சாரா, மற்றும் பலரது நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சைவம்
செட்டிநாட்டு ஊர் ஒன்றைச் சேர்ந்த பெரியவரின் (நாசர்) மகன் மற்றும் மகள் எல்லாம் திருமணம் ஆகி சென்னை அண்ணா நகர் முதற்கொண்டு அமெரிக்கா வரை செட்டில் ஆகி இருக்க , கிராமத்திலேயே தங்கி விட்ட இரண்டாவது மகனின் மகளான தமிழ் (சாரா)தான் அந்த வீட்டின் பெரிய மனுஷத்தனமான குட்டி தேவதை .ஆடு மாடு கோழி உள்ளிட்ட பல்வேறு வீட்டு விலங்குகளையும் வளர்க்கும் அச்சு அசல் கிராமத்துக் குடும்பம் அது .
திருவிழாவுக்கு எல்லோரும் வீட்டை நோக்கி பல்வேறு திசைகளில் இருந்தும் படையெடுத்து வர , பல்வேறு குணாதிசயக் கற்கள் அந்த குடும்பக் குளத்தில் விழுந்து பல்வேறு அலைகளை எழுப்புகின்றன. எல்லா அலைகளையும் அரவணைத்துச் செல்லும் அலையாத்திக் காடாக இருக்கிறாள் தமிழ் .
குழந்தையில்லாத ஒரு தம்பதி, அமெரிக்க அக்கா ,அந்த அக்காவின் மகள் , மோதும் முறைப்பையன்கள், காதல் பெறும் ஒருவன், இதனால் வரும் பிரச்னைகள் ஒரு பக்கம் இருக்க, மூன்று வருடம் வீட்டில் ஒரு சக மனுஷனைப் போல செல்லமாக வளரும் கோழியை குல தெய்வத்துக்கு படைக்க குடும்பமே முடிவு செய்ய , கோழியின் மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் அதை தடுக்கும் சாரா எதிர்கொள்ளும் பிரச்னைகளும் முடிவு என்ன ஆனது என்பதுவுமே … இந்த சைவம்
ஊரில் காத்திருக்கும் பெரிய மனிதர், வந்து குவியும் புலம் பெயர்ந்த உறவுகள், அத்தை மகள் – மாமன் மகன் காதல், வில்லத்தனமான சில நபர்கள், கிராமம் என்று படத்தின் மொத்த வடிவத்தையும் உற்று நோக்கும்போது கார்த்திக் குஷ்பூ நடித்த வருஷம் பதினாறு திரைப்படம் ஆங்காங்கே ஞாபகம் வந்து போகிறது . ஆனாலும் சொல்ல வந்த விஷயத்தில் தனித் தன்மையோடு பயணிக்கிறது சைவம்
படம் முழுக்க ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் அவற்றில் சிறப்பான பொருத்தமான நடிக நடிகையர் (வேலைக்காரியாக நடித்து இருக்கும் அந்த யதார்த்த அழகிக்கு ஒரு ஜே!) இருந்தாலும், இது முழுக்க முழுக்க தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சாராவின் படம் இது .அடுத்த இடம் நாசருக்கு.
பல காட்சிகளில் அந்த கேரக்டர் மற்றும் நடிப்பில் வயதுக்கு மீறிய பெரியமனுஷத்தனம் தெரிந்தாலும் அதுதான் கதை என்னும்போது அதை குறை சொல்ல ஒன்றும் இல்லை .
மண் மணம் சொல்லும் களமும் சூழலும் படத்தின் பலமாக இருக்கிறது . பிரயத்தனம் இல்லாமல் இயல்பாக வரும் நகைச்சுவைகள் படத்தின் அழகு .
‘பாப்பாவின் இருப்பிடம் ‘ வெளிப்பட்டு விடுமோ என்ற சூழல் வரும்போது எல்லாம் திரைக்கதையில் அடுத்தடுத்து திருப்பங்களைக் கொண்டு வந்து ஈர்க்கிறார் விஜய் . அந்தக் கோழி தேடும் படலத்தை மட்டும் ரொம்ப நீட்டி நம்மை இறகு இறகாக பிய்த்து சோதிக்கிறார்கள் .
யார் தவறு செய்தாலும் தமிழ் தானே வந்து மன்னிப்பு கேட்பது , முசுடு வாண்டுவிடம் அவள்மாட்டிக் கொண்டு விழிப்பது , குழந்தை இல்லாத சின்னம்மாவை அம்மா என்று அழைத்து சபையில் காப்பாற்றுவது, கடைசியில் எல்லோரும் தோப்புக் கரணம் போடுவது என்று மனம் கவர பல காட்சிகள் !
முன்பே தெரிந்த முடிவுதான் என்றாலும் படத்தின் முடிவில் ஒரு நிறைவு இருக்கிறது . தொடங்கிய மாதிரியே படத்தை முடிக்கும் விதம் நேர்த்தி
சைவம் … அன்பே !
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
இயக்குனர் விஜய், சாரா, நாசர்,
