கர @ விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், 

தனுஷ்,  கே எஸ் ரவிக்குமார், மமிதா  பைஜு, கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிரிதிவி ராஜ் நடிப்பில்…
 
 இதற்கு முன்பு போர்த்தொழில் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி இருக்கும் படம் . 
 
உடன் எழுதி இருக்கிறார் ஆல்பிரட் பிரகாஷ்.
 
 கந்தசாமி,   முத்துசாமி, என்ற பெயர்களைப் போல,  தென்மாவட்டங்களில் வைக்கப்படும் ஒரு பெயர் கரசாமி. (கரைச்சாமி என்பதன் பேச்சு மொழி ) அந்தப் பெயரின்  சுருக்கம்தான் கர 

 
1991 ஆம் ஆண்டு திருச்சி திருவெறும்பூர் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கப் போகிறான் கர (தனுஷ்) . காதல் மனைவியோடு (மமிதா  பைஜு ) இனிமேல் நிம்மதியாக  வாழ , இது தான் கடைசி திருட்டு என்பது அவனது முடிவு 
 
கொள்ளையடிக்கும்போது  கைரேகை பதியாமல் இருக்க, கைகளில் கோந்து பசை  பூசிக் கொள்வது , மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க சென்ட் அடித்துக் கொள்வது , பட்டாசு வைத்து பூட்டை உடைப்பது என்று ‘தொழில்நுட்ப ரீதி’யாக இயங்கினாலும் போலீசிடம் சிக்குகிறான் . 
 
ரிட்டையர் ஆகும் நேரத்தில் எதையாவது செய்து,   பேப்பரில் பெயர் வந்து புகழ் பெற்று ரிட்டையர் ஆக ஆசைப்படும்  போலீஸ் அதிகாரி (சுராஜ் வெஞ்சரமூடு) ,  பிடிக்க முடியாத கேஸ்களை எல்லாம் கர மீது போட முயல, அவரை அடித்து நொறுக்கி விட்டு , மனைவியோடு  ஆந்திரா போய் சாப்பாட்டுக் கடையில் வேலை செய்கிறான் கர .
 
சம்பளம் போதாத  நிலையில் தனியே கடை வைக்க வங்கியிடம் லோன் கேட்டுப்போனால் …., சொத்து எதையும் ஈடு வைக்காமல் லோன் கிடைக்காது என்பது அவனுக்கு புரிய வருகிறது . 
 
ராமநாதபுரத்தில் வயலும் வறுமையுமாக  வாழும் அப்பாவை (கே எஸ் ரவிக்குமார்)  சந்தித்து , அவரை சம்மதிக்க வைத்து,  அந்த வயலை  விற்று கடை வைக்க முடிவு செய்து,  பல வருடங்களுக்கு பிறகு அப்பாவைப்  பார்க்க வருகிறான் . 
 
பதினெட்டு வயதில் அப்பாவிடம் சொந்தத் தொழில் வைக்க காசு கேட்க, சின்னப்பயல் என்று அவர் மறுக்க , பணத்தை திருடிக் கொண்டு வந்தவன்தான் இந்த கர. 
 
ஊரில் அம்மா அப்பாவிடம் மனைவியை அறிமுகம் செய்து விட்டு, அப்பாவிடம் நிலத்தை விற்றுக் கடை வைக்கும்  ஆசையை சொல்ல, அப்போதுதான் நிலம் முழுக்க வங்கியில் அடமானம் வைக்கப்பட்டு இருப்பது அவனுக்கு தெரியவருகிறது. 
 
 பிரபல வங்கி ஒன்று,டிராக்டர் வாங்க லோன் என்று ஆசை காட்டி, உண்மையான வட்டி மற்ற செலவுகள் எல்லாவற்றையும் மறைத்து லோன் கொடுக்க, 
 
 அந்த லோனை கட்ட முடியாமல் அப்பா மட்டுமல்ல ஊரே அல்லாடுவது புரிகிறது. வங்கி எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி இருக்கிறது என்பதை அறிகிறான் கர.
 
நிலத்தை  விற்று கடன் அடைத்து மிச்ச காசில் கடை வைக்க கர நினைக்க, அப்பா நிலத்தை விற்க மறுக்கிறார் 
 
இந்த பிரச்னையில் அப்பா இறந்து போக, அப்பாவை சொந்த நிலத்தில் புதைக்கப் போனால், ஜப்தி நோட்டீஸோடு வரும் வங்கி ,  புதைக்க அனுமதி மறுக்கிறது. நிலத்தை  மீட்க, பணத்துக்கு அலைய, அவனுக்குப் பணம்  கிடைக்கவில்லை . 
 
வேறு வழியின்றி அப்பாவையும் ஊரையும் ஏமாற்றிய அதே வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்கிறான்.. ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை.  திருவெறும்பூரில் இவனால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி ராமநாதபுரம் பகுதிக்கு வருகிறார். வங்கி உயர் அதிகாரியின் இன்னோர் முகம் இன்னும் கொடூரமாக இருக்கிறது. 
 
 நிலத்தை கரசாமி மீட்க முடிந்ததா? அப்பாவின் பூத உடல் என்ன ஆனது? போலீஸ் மற்றும் கரசாமி மோதல் என்ன ஆனது?  வங்கியிடம் ஏமாந்த ஏழை மக்களின் கதி என்ன என்பதே,  இந்த கர . 
 
படத்தின் அடிப்படைக் கதை அபாரமானது.  ராமநாதபுரம் பூமி, அங்கே விவசாயம் செய்வதில் உள்ள சவால்கள், .அடுத்த தலைமுறை பிள்ளைகளின் மனநிலை. லோன் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி கசக்கிப் பிழியும் வங்கிகள்,  மக்களின் வாழ்க்கை நிலை, வாங்கி அதிகாரிகளின் கோர முகம்… என்று சொல்லப்பட வேண்டிய கதை. அதற்காக இயக்குனருக்கும் இணை எழுத்தாளருக்கும் பாராட்டுகள். 
 
திருடன் , அப்பாவை ஏமாற்றியவன், அப்பா அம்மாவுக்கு சொல்லாமல் காதல் கல்யாணம் செய்து விட்டு வாழ்பவன் , மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு தனது சுயநலத் தேவைக்காக அப்பாவிடம் வருபவன், கொள்ளை அடிக்கும் –திருடும் – முயற்சிகளில் நாயடி பேயடி  வாங்குபவன் .. இப்படி குறைவான ஹீரோயிசம் உள்ள கேரக்டரை தனுஷ் ஏற்று நடித்துள்ளார். வழக்கம் போல சிறப்பாக நடித்துள்ளார், 
 
சிறப்பான ஷாட்கள் வைத்து அழகான மேக்கிங்கில் படத்தை இயக்கி இருக்கிறார் . வழக்கமாக இல்லாமல் திரைக்கதையில் சில இடங்களில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் கவனிக்க வைக்கிறது. அப்பா மகன் சென்டிமென்ட் காட்சிகள் கனம். 
 
லாஜிக் மீறலுக்கும் அப்பாற்பட்டு ஆடுகளம் நரேன் வரும் அந்த ஒரு காட்சி எதிர்பாராத சிக்ஸர் . இப்படி சில இடங்கள்  சபாஷ் போட வைக்கினறன 
 
தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவில் ராமநாதபுரத்தின் வெக்கை,  படம் பார்க்கும் ஏ சி தியேட்டருக்குள் சுடுகிறது 
 
பாடல் இசை பின்னணி இசை இரண்டிலும் பலம் சேர்த்திருக்கிறது, ஜி வி பிரகாஷ்குமாரின் பங்களிப்பு. 
 
கரசாமியின் அப்பாவாக மிக யதார்த்தமாக ஒரு கெட்டப்பில் மிக சிறப்பாக நடித்துள்ளார் கே எஸ் ரவிக்குமார் .மகனின் நோக்கம் அறிந்து சமையல்கட்டில் சாப்பிட்டபடியே அழும் காட்சி கலங்கடிக்கிறது 
 
மமிதா பைஜு வேலை கம்மி. வந்தவரை நேர்த்தி. 
 
கரசாமியின் மாமனாக வரும் கருணாஸ், அம்மாவாக வரும் ஸ்ரீஜா, வாங்கி அதிகாரியாக வரும் ஜெயராம்,சக திருடனாக வரும் பிருத்விராஜ் ஆகியோர் நடிப்பில் குறை வைக்கவில்லை .
 
சுராஜ் வெஞ்சரமூடு மலையாளம் பேசியே நடிக்கிறார். 
 
எம் எஸ் பாஸ்கர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அது எம் எஸ் பாஸ்கர் என்பது குரலை வைத்துதான் கண்டுபிடிக்க முடிகிறது கொஞ்சம் முடியை குறைத்து ரெண்டு குளோசப் வைத்திருக்கக் கூடாதா இயக்குனரே ?
 
ஒரு காட்சியில் உதயசூரியன் சின்னத்தில் மு. கருணாநிதி போட்டியிடுகிறார் என்று ஒரு சுவர்  விளம்பரம் வருகிறது . ராமநாதபுரம் பகுதியில் கருணாநிதி போட்டியிட்டாரா என்ன? தஞ்சாவூருக்கு தெற்கே கலைஞர் எந்த தொகுதியிலும் போட்டியிடவே  இல்லையே 
 
படத்தின் நீளம் ஒரு பிரச்னை 
 
அதை விட பிரச்னை லாஜிக்  ஏனெனில் மக்கள் பிரச்னைகளை பேசும் கதைகளில் லாஜிக்குக்கும் ராவணன் போல பத்துத் தலைகள் உண்டு . 
 
இதுதான் கடைசி திருட்டு என்கிற அளவுக்கு பழகிய கர, அதுவரை சம்பாதித்த பணத்தை என்ன செய்தான்? ஆந்திரா போய் சாதாரண சாப்பாட்டுக்கடையில் வேலை செய்யும் அளவுக்கு  எப்படி ஏழையானான் . 
 
அப்பா அம்மாவை பார்க்க மனைவியோட வரும் கரசாமி, மனைவியை ராமநாதபுரம் லாட்ஜில் பல  நாட்களில் தனியே விட்டுவிட்டு வருவானா?
 
அப்பாவை வயலில் புதைக்க முடியாவிட்டால், இடுகாட்டில் புதைக்கலாம். அப்பாவின் பிணத்தை நடு ரோட்டில் போட்டு அனாதைப்பிணமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு போக வைப்பானா?
 
ஜெயராம் கேரக்டர் யதார்த்தகம் மீறிய சினிமாத்தனம் 
 
இவை கூடப் பரவாயில்லை. படத்தின் மிக முக்கியமான அடிப்படை விஷயத்திலேயே லாஜிக் கோட்டை விடப்பட்டுள்ளது. 
 
மக்களைக் காக்க கரசாமி செய்தது தப்பே இல்லை என்று படம் பார்ப்பவர்களை உணர வைக்க தவறி இருக்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய தவறு 
 
படம் 1991 ஆம் ஆணு நடக்கிறது. அதிக பட்சம் 2000 ஆண்டுக்குள் இந்தப் படம் முடிவதாக அர்த்தம். 
 
அந்தக் கதை இப்போது எதற்கு என்று என்ற கேள்வி எழுகிறது. வரலாறு, காதல் , பக்தி,பேய் என்றால் ஓகே. ஒரு சமூகப் பிரசினை பற்றிப்   பேசும் ஒரு படத்தில் பீரியட் கதை சொன்னால், அந்தப் பிரச்னை இப்போது அங்கே என்னவாக இருக்கிறது? அப்போது நடந்த அந்த விஷயங்களால் என்ன பலன் ? இப்போது அந்தப் பிரச்னை இருக்கிறதா இல்லையா?  என்று சொல்ல வேண்டும். அது இந்தப் படத்தில் இல்லை. 
 
சுசீந்திரன் போன்றவர்கள் ஜீவா போன்ற படங்களில் செய்த அதே பிழையை இந்தப் படத்திலும் செய்து இருக்கிறார்கள் . 
 
இப்படி சில போதாமைகள் இருந்தாலும்…
 
 படத்தின் அடிப்படைக் கதை, அட்டகாசமான மேக்கிங், தனுஷ் , கே எஸ் ரவிக்குமார் இவர்களின் நடிப்பு, ஜி வி பிரகாஷ்குமாரின் இசை, தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு….  இவற்றால்,  மனதைக்  கரைக்கிறது கர. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *