பல்டி @ விமர்சனம்

சந்தோஷ் டி குருவில்லா, பின்னு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிப்பில் ஷெரின்  ரேச்சல் சந்தோஷ் இணை தயாரிப்பில் , ஷேன் நிகம், சாந்தனு , செல்வராகவன் , அல்போன்ஸ் புத்திரன், பிரீத்தி அஸ்ராணி நடிப்பில் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கிய மலையாளப்  படத்தின் மொழி மாற்று வடிவம்.  தமிழ் வசனம் டி டி ராமகிருஷ்ணன் . 

சரியான தமிழும் சரியான ஆங்கிலமும் இன்றி ரெண்டையும் ஏதோ கலந்து என்னவோ என்று போடப்படும் டைட்டில்களே மொழி பற்றிய படக் குழுவின் அலட்சியத்தை முன்கூட்டியே சொல்லி விடுகின்றன . 

தமிழ் நாடு கேரளா பார்டரில் உள்ள ஊர் . தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கபடி டீம் ஒன்று . அதில் முக்கிய நபர்களாக இரண்டு இளைஞர்கள் ( ஷேன் நிகம், சாந்தனு) ஆதிக்க சாதி இளைஞர்கள் கபடி டீம் ஒன்று . 

ஆதிக்க சாதி  கிரிக்கெட் டீமின் உரிமையாளர் கந்து வட்டி , மீட்டர் வட்டி, ஜம்போ வட்டி என்று வாங்கி மக்களை கசக்கிப் பிழிந்து கொடுமை செய்து சம்பாதிப்பவர் .(செல்வராகவன்) அவர் சொன்ன காசை தர முடியாமல் போனால்

மனைவி பிள்ளைகள் முன்பே கணவனை அடித்து அம்மணமாக்கி அவர்கள் பார்க்க வைப்பார் . 
அப்போதும்  அவர் யாரிடமும் அன்பாகப் பேசுவது போலவே பேசுவார் . ஆனால் அவர் பேசவும் செய்யவும் நினைப்பதை அவனது பிரதான கையாளும் அடியாள் கூட்டமும்  செய்யும். எப்போதாவதுதான் அவரது நிஜ முகம் வெளிப்படும். 

கந்துவட்டி தாதாவை எதிர்க்கும் இன்னொரு தாதாவான சோடா பாபுவிடமும் (அல்போன்ஸ் புத்திரன்)  ஒரு கபடி டீம் இருக்கிறது . 

ஆதிக்க சாதி  டீமை,  நாயகர்கள் டீம் ஒரு முறை ஜெயிக்க, சோடா பாபு தன் டீமுக்கு இவர்கள் ஆட வேண்டும் என்று விரும்ப,  அதற்கு சம்மத்தித்து  நாயகனுக்கு தெரியாமல்; பணமும் வாங்கிக் கொண்டு வந்து விடுகிரான் இரண்டாம் நாயகன் குமார் (சாந்தனு)

அதே சமயம் கந்துவட்டி தாதாவும் தங்கள் ஆதிக்க சாதி டீமில் ஆட அழைக்கிறான். இவன் பெரும்பணம் தருவதால் அதற்கு சம்மதிக்கும் குமார்  , முதல் நாயகனை சம்மதிக்க வைக்கிறான் . விருப்பம் இல்லை என்ற போதும் நண்பனுக்காக ஏற்கிறான் நாயகன் . 

சோடா பாபு டீம் தோற்க , கோபப்படும் அவன் கந்து வட்டி தாதாவுக்கு பிரச்னை செய்கிறான் . ”காரணமான நீங்கள்தான் அதை தீர்க்க வேண்டும்”  என்று கந்து வட்டி தாதா சொல்ல, அவரே எதிர்பாராத வகையில் நாயக நண்பர்கள்  அதை தீர்க்கின்றனர் . 

கபடி டீமுக்கு வேறு ஆள் போட்டுக் கொள்ளலாம் என்று இந்த  நண்பர்களை கந்து வட்டி வசூலிக்கும் வேலைக்கு பயன்படுத்துகிறான் . அதில் ஆர்வமாக இறங்கி பணம் தராத ஆட்களை அடிப்பது என்று ஓவராகப் போகிறான் குமார் . 
இதற்கிடையில் ஒரு காலத்தில் கன்னியாகுமரியில் விபச்சாரம் செய்து  காசு சம்பாதித்து கவுரி பைனான்ஸ் என்ற பெயரில் பைனான் நடத்தும் ஜி மா என்ற பெண் கந்து வட்டி தாதா , சோடா பாபு இருவருக்குமான பகையில்,  தான் பலன் அடைய சதி செய்கிறாள். 

நாயகன் காதலிக்கும் பெண்ணின் ( பிரீத்தி அஸ்ராணி) அண்ணனும் நாயகனோடு பகை கொண்ட நபருமான ஒருவனை , பணத்துக்காக  கந்து வட்டி தாதா நிர்வாணக் கொடுமை செய்கிறான் . அதை நாயக நண்பர்கள் பார்த்து விட்ட அவமானத்தில்  சாலையில் பாய்ந்து வாகனம் மோதி காலை இழக்கிறான் அவன் .

தன் அண்ணனுக்காக களம் இறங்கும் நாயகி  கந்து வட்டி தாதாவை நேரடியாகப் பகைக்கிறாள் . அவளை ஒழிக்க கந்து வட்டி தாதா முயல, காதல் நாயகன் அவளைக் காப்பாற்ற கந்து வட்டி தாதாவை எதிர்க்க , 
அப்போதும் குமார் கந்து வட்டி தாதாவுக்கு ஆதரவாக பேச, குமாரின் நோக்கம் நாயகனுக்கு புரிய,  அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த பல்டி. 

படத்தில் மலையாளப் படங்களுக்கே உரிய சிறப்பான மேக்கிங், சீன் டீடைல்ஸ் அருமையாக இருக்கிறது . சில காட்சிகளை ஆரம்பித்து முடிக்கும் விதம் கிளாஸ் . 

சண்டை இயக்கம் அருமை 

லொக்கேஷன்,  சூழல் , எமோஷன் இவற்றை சரியாக உணர்த்தும் அலெக்ஸ் புலிக்கல்லின் ஒளிப்பதிவு சிறப்பு. 
சாய் அபயன்கரின் பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது . 

வரிகள் சரி இல்லாததால் தமிழ்ப் பாடல்கள் சரி இல்லை. வார்த்தைகள் புரிவது பற்றி கவலைப்படாமல் சாய் அபயங்கரும் சாய்ந்து விட்டார் போல. ஒருவேளை மலையாளத்தில் பாடல்கள் நன்றாக இருக்கலாம் . 

ஆனால் என்ன கதைக்கு இவர்கள் இப்படி மல்லுக்கட்டி இருக்கிறார்கள் என்பதைத்தான் சகிக்க முடியவில்லை. 
அந்தக் காலம் முதலே தமிழ் சினிமாவும் இந்தக் காலத்தில் நீலம் புரடக்ஷனும் அவ்வளவு ஏன் ஒரு காலத்தில் மலையாள சினிமாவும் மென்று துப்பிக் காய்ந்து கலகலத்துப்  போன அதே கதைதான் .  உருப்படியாக புதிதாக ஒரு விஷயம் கூட இல்லை.

தமிழ் வசனங்களும் மலையாளத்தின் மொழி பெயர்ப்பாக இருக்கிறதே தவிர தனித்தன்மை இல்லை 
ஐ சி யூ என்பதை ஆய் சி யூ  என்று சொல்கிறார் ஷேன் நிகம் அல்லது அவருக்கு டப்பிங் பேசியவர் . 
ஆனால் படம் முழுக்க தமிழர் விரோதப் போக்கு கொட்டிக் கிடக்கிறது . படத்தில் வரும் கெட்டவர்கள் எல்லாம் தமிழ் நடிகர்கள் .

நல்லவர்கள் எல்லாம் பொய் சொல்ல மாட்டார்கள் என்பது போல வெள்ளையாக இருக்கும் அவர்கள்  எல்லோரும் மலையாளிகள் . நாயகர்களில் ஒருவரான சாந்தனு தமிழ் நடிகர்தானே என்று கேட்கலாம் . 

அவர்தான் பணத்துக்கு அலைவார் . நண்பனை சிக்கலில் மாட்டி விடுவார் . நண்பனை விட தாதா முக்கியம் என்று சதிகளுக்கு துணை போவார் . கடைசியில் அவர் மேல் மீட்டருக்கு மேல் மலையாள நாயகன் கோபப்படுவார் . 

ஒரு சால்ஜாப்புக்கு ஹீரோ பக்கம் தமிழர் போன்ற தோற்றம் கொண்ட  கொண்ட ஒரு நண்பனும்,  சாந்தனு பக்கம் மலையாளி போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபரும் இருப்பார்கள் . பேலன்ஸ் பண்றாங்களாமாம் . இது போல இன்டல்லக்சுவல்அரகன்ஸ் வேலைகளால் நம்மை ஏமாற்ற முடியும் என்று இன்னும்  நம்புகிறார்கள் மலையாளப் படைப்பாளிகள் . ஐயோ பாவம் . 

ஆனால் சாந்தனு உடன் இருக்கும் நண்பர் கேரக்டரின் மலையாள நடிகர் ஒரு நிலையில் போடா என்று சந்தனுவை விட்டுப் போவார் . அவரு நல்லவராம் . திருந்திட்டாராம் . 

தன்னை எதற்குக் கூப்பிட்டு இருக்கிறார்கள் என்பது பற்றி கவலையே இல்லாமல் ” தமிழாவது  ஒண்ணாவது.. எனக்கு ஒரு கேரக்டர். காசு  அது தமிழரை தப்பா காட்டினா எனக்கு என்ன?”  என்று நடித்து விட்டு வந்திருக்கிறார் சாந்தனு . ஆனால் அவரை இந்தப் படக் குழு தமிழர் என்பதற்காகவே அழைத்து இருக்கிறார்கள். 

இன்னொரு பக்கம் ரஜினி போட்டோவைக் காட்டினால் படம் ஓடும் என்று இன்னும் நம்பும் அப்பாவிகளாகவும் இந்தப் படக் குழுவினர் இருக்கிறார்கள் . ரஜினி படமே  கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி நாக்குத் தள்ள ஆரம்பிச்சிருச்சி . போவியா ? 

அந்தப் பெண் வில்லி கேரக்டருக்கு சேலை வைத்து தோடு காசு மாலை போட்டு தமிழ்ப் பெண்ணாக காட்டுகிறார்கள் . அதுவும் ஒரு காலத்தில் கன்னியாகுமரியில் விபச்சாரம் செய்தவராம் . இப்போதும் சிகரெட்டை ஊதித் தள்ளுவாராம் . 

கன்யாகுமரியில் யார் காலகாலமாக விபச்சாரம் செய்கிறார்கள் . அங்கே தண்ணி அடித்து தம் அடித்து குவிக்கும் பெண்கள் எல்லாம் யார் என்பது எல்லோருக்கும் தெரியுமா? அதற்கு அந்த கேரக்டரின் சொந்த மாநிலத்தின் பெயரையே ஓப்பனா  சொல்லி இருக்கலாமே . எதற்கு இந்த பூடகம்  நாடகம் எல்லாம் ?

ஆனால் நம் தமிழ் சினிமா?

இதே படத்தோடு வந்திருக்கும் ரைட் படத்தில் கூட மலையாள நர்ஸ் என்றால் நேரமையானவர்கள்,  சேவகிகள் , தியாகிகள் அப்பாவிகள் என்று இன்னமும் உளறிக் கொண்டு இருக்கிறோம்.

கதாநாயகியாக நடிக்கும் பிரீத்தி அஸ்ரானி,  தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பெண் என்பதால் முகத்தில் டல் மேக்கப் போட்டு கொடுமை செய்து இருக்கிறாகள் . முன்பே பஞ்சத்தில் அடிப்பட்டவர் போல இருக்கும் அவர் இந்த டல் மேக்கப்பில் அடையாளம் தெரியாத அளவுக்கு டல்லோ டல்லடிக்கிறார். 

தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பெண் என்றால் அவள் முகத்தில் காய்ந்த சேறு போல மேக்கப் போடவேண்டும் என்று உங்களுக்கு எல்லாம் யார் சொல்கிறார்கள்?

அதாவது ஒரு காலத்தில் எல்லா மலையாளப் படங்களிலும் எல்லாம் ஹீரோக்களும் அவர்கள் பிள்ளைகள் ஹீரோவான பிறகும்  தமிழர்கள் திருடர்கள் அயோக்கியர்கள் வஞ்சகர்கள் என்றும் , தமிழ்ப் பெண்கள் மோசமானவர்கள் கேவலமானவர்கள் அவுசாரிகள் என்றும்,   உணமைக்குப் புறம்பாக –  அவர்கள் இங்கே செய்வதை எல்லாம் தமிழர்கள் செய்வது போல, கூசாமல் பொய் சொல்வதை பைத்தியகாரன் போல செய்து கொண்டே இருந்தார்கள் .  . 

ஆனால் இப்போது தமிழ் நாட்டில் இருந்தும் காசு வருவதால் காசுக்காக அப்படி நேரடியாக சொல்வதை தவிர்த்த இந்த யோக்கியர்கள் , இப்போது பேலன்ஸ் செய்து சமாதானப்படுத்துவது  போல காட்டிக் கொண்டு,  சக மலையாளிகளுக்கு மட்டும் புரியும்படி தமிழர்களை கேவலப்படுத்துகிறார்களாம் . நாமும் அதை நம்பிடுவோமாம்.  உங்க ரீல் எல்லாம் அந்து ரொம்ப நாள் ஆச்சுப்பா.  . 

படம் துவங்கி ஒரு மணிநேரம் ஆன பிறகு , கொஞ்ச நேரத்தில் இடைவேளை வரும் நிலையில் ஒரு மெலடி பாட்டை தேவை இல்லாமல் சொருகி நாயகனும் நாயகியும் ”எங்களுக்கு வேற வேலை இல்லை ; அப்ப உங்களுக்கு?” என்று ரசிகர்களைக் கேட்பது போல ஆடிக் கொண்டு இருக்கிறார்கள் . அப்படி இருக்கு ஷிவ்குமார் பணிக்கரின் படத் தொகுப்பு  . 

இந்தக் கதைக்கு எதுக்கு சாரே இரண்டரை மணி நேரம்? 

சண்டைக்காட்சிகள் நன்றாக இருக்கிறதுதான் . ஆனால் எல்லா சண்டையும் ஓவர் நீளம் . அதுவும் கிளைமாக்ஸ் சண்டை எல்லாம் எப்படா முடியும் என்று ஏங்குகிறது மனசு . 

கடைசியில் ஒரு நல்ல கிளைமாக்ஸ் இருக்கிறது . ஆனால் அதை செய்தால் சாந்தனு என்ற தமிழ் சினிமா  நடிகனுக்கு வெயிட் ஏறி விடும்  என்று ஒரு கேடு கேட்ட மொக்கைக் கிளைமாக்சில் படத்தை முடிக்கிறார்கள் . 

சீரியஸ் படங்களைப் பார்த்து சிதிலமாகி இப்போது கமர்ஷியல் சினிமா பின்னால் கன்னாபின்னா என்று  ஓடிக் கொண்டு இருக்கும் மலையாளிகளுக்கு ஒருவேளை இந்தப் படம் பிடிக்கலாம். அல்லது பிடிக்காமலும் போகலாம். 

ஆனால் தமிழில் பைசா பெறாது . 

தமிழ் ரசிகன் முன்னால் பல்டி அடிக்கிறேன் என்று தலை குப்புற விழுந்து மண்டை உடைத்துக் கொண்டு மாள்கிறது  இந்த பல்டி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *