ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன் , நட்டி நட்ராஜ், , ஒய் ஜி மகேந்திரன், நடிப்பில் பத்மா சந்திரசேகரோடு சேர்ந்து எழுதி மோகன் ஜி இயக்கி இருக்கும் படம்.
இந்தியாவுக்குள் நுழைந்த துருக்கர்கள் இங்குள்ள மக்களை வாள் முனையில் இஸ்லாமியர்களாக கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள். இஸ்லாமிய அரசர்கள் கேட்கும் வரியை கட்ட வேண்டும் .இல்லை எனில் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் . இல்லை என்றால் கற்பழிக்கப்படுவார்கள்; கொல்லப்படுவார்கள்
டெல்லியில் முகமது பின் துக்ளக் (சிராக் ஜானி) மதுரையில் அலாவுதீன் கில்ஜியின் வழி வந்த கியாசுதீன் தும்கானி (தினேஷ் லம்பா) என்ற இரண்டு இஸ்லாமிய சுல்தான்களும் இடையில் உள்ள பகுதிகளில் இப்படி வன்முறை மதமாற்றம் செய்கிறார்கள்.
திருவண்ணாமலை பகுதியை ஆளும் ஹொய்சாள அரசன் வல்லாள மகாராஜா (நட்டி நடராஜ்) . போர்வீரர் மரபில் வந்த குறுநில தலைவன் வீர சிம்ஹ காடவராயனை (ரிச்சர்ட் ) …
‘மன்னர் உயிரைக் காப்பது மட்டுமே நோக்கம்; மன்னர் இறந்தால் உயிர் வாழக் கூடாது’ என்று நெறி கொண்ட கருடப் படையில் சேர்க்கிறார் வல்லாள மகாராஜா .
சுல்தான் ஆட்களால் கடத்தப்படும் பெண்களை மன்னர் ஆணைப்படி காடவராயன் மீட்க, அதில் இருந்த போர் மரபு குடும்பத்துப் பெண் திரௌபதியை (ரக்ஷனா இந்துசூடன் ) காடவராயனுக்கு மணமுடித்து வைக்கிறார் அரசர் . திரௌபதி கர்ப்பமாகிறாள்.
சுல்தானுக்கு எதிரான போர்க்களத்தில் இருக்கும்போது திரௌபதிக்கு குழந்தை பிறக்கிறது . தனது ராஜ சின்னத்தை காடவராயனிடம் கொடுத்து இதை நீ உன் மகனுக்கு அணிவிக்க வேண்டும் என்கிறார் அரசர்.
கருடப்படை நெறிப்படி கழுத்தை அறுத்துக் கொண்டு சாக வேண்டிய காடவராயன் அரசர் தந்த மாலையை மகனுக்கு அணிவிக்க ஊர் திரும்புகிறான் .
ஆனால் மன்னர் இறந்தும் கணவன் உயிரோடு வருவதால் அவனை துரோகி என்று தூற்றும் திரௌபதி அவனை நாட்டை விட்டு விரட்டுகிறாள் .
சொர்ண மகாலட்சுமி அம்மன் சிலையை திருட முடிவு செய்யும் மதுரை சுல்தான் திரௌபதியை பெண்டாள நினைக்கிறான்.
சுல்தானை தனி அறையில் சந்திக்கிறாள் திரௌபதி.
நடந்தது என்ன என்பதே இந்த திரௌபதி. 2
வரலாற்றுப் பின்னணியில் எளிமையாக ஒரு படம் எடுத்து இருக்கிறார் மோகன் ஜி . சிக்கனமான பின்புலங்கள் , குறைவான ஆட்களை வைத்து எடுத்தாலும் வரலாற்றுப் படம் என்ற உணர்வை ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது .அது ஒரு திறமைதான். பாராட்டுகள் மோகன் ஜி.
”பெண்கள் தங்கள் தாலியைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் எந்த ஆணும் வீர போருக்கு போக முடியாது ..” என்பது போன்ற சில இடங்களில் வசனமும் சிறப்பாக இருக்கிறது .
வாள் முனையில் பச்சை சங்கிகள் செய்த கட்டாய மதமாற்றத்தை காட்சிப்படுத்திய தீவிரம் சிறப்பு. (ஆனால் கருத்தியல் ரீதியாக அதை சொல்லும் விதம்தான் தவறு. )
திரௌபதி கதாபாத்திரத்தில் தோற்றப் பொலிவு , முக லட்சணம் , உயரம் , வாளிப்பு இவற்றின் மூலம் கம்பீரமாக நடித்துள்ளார் ரக்ஷனா இந்து சூடன் . நடிப்பில் இவர் கொளுத்தியவுடன் பற்றிக் கொள்ளும் சூடம் . ஏழைகளின் அனுஷ்கா என்று தாராளமாக சொல்லலாம் (ஆனால் நடக்கும்போதுதான் கம்பீரத்துக்கு பதில் கேட் வாக் ஒய்யாரம் வருகிறது)
பிலிப் சுந்தரின் ஒளிப்பதிவு மன்னர் காலப் படத்துக்கு நியாயம் செய்கிறது கமலநாதனின் கலை இயக்கமும் அப்படியே .
ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வல்லாளன்தான் படத்தில் வரும் அரசன் வீர வல்லாளன். அவனை தமிழன் அல்லது தமிழ் உணர்வு கொண்டவன் என்றும் இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்த்தவன் என்றும் அடையாளப் படுத்துகிறார் மோகன் ஜி . ஆனால் உண்மை நேர்மாறானது.
ஹொய்சாளர்களின் தாய்மொழி கன்னடம் .
உண்மையில் இந்த வீர வல்லாளன் பாண்டியர்கள், தேவகிரி யாதவர்கள் மற்றும் பல தென்னிந்திய அரசர்களுக்கு எதிராக பல போர்களை நடத்தியவன் .
மாலிக் காபூருடன் சமாதான ஒப்பந்தம் போட்டு 1311 ஆம் ஆண்டு போசள நாட்டின் துவார சமுத்திரம் அரசின் கருவூலத்தை மாலிக் கபூர் கொள்ளையடிக்க காரணமே இவன்தான். பாண்டிய நாட்டை சீரழிக்க மாலிக்கபூருக்கு உதவியதே இந்த வல்லாள அரசன்தான்.
பாண்டிய நாட்டை கொள்ளையடிக்க உதவியதற்காக, வல்லாளனுக்கு ஒரு கவுரவ அங்கி, ஒரு கிரீடம், ஒரு மில்லியன் டாங்கா நாணயங்கள் ஆகியவற்றை மாலிக்கபூர் கொடுத்தான் என்று சொல்வது…. ஆர் எஸ் எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என்று அறியப்பட்ட NCERT முன்னாள் தலைவர் K .S .LAL . அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் HISTORY OF KHILJIS ..
1312 முதல் 1330வரை பாண்டிய நாட்டில் ஹொய்சாளர்கள் நடத்திய [போரில் தமிழ் நிலப் பகுதியில் கொல்லப்பட்டவர்களும் கூட இன்றைய அடையாளப்படி இந்துக்கள் தான் .
தனக்கு தேவைப்படும் போது சுல்தான்களுடன் ஒப்பந்தம் செய்து பலன்கள் ஒரு நிலையில் அதை இந்த வல்லாளன் மீறிய காரணத்தால் , அதை துரோகம் என்று முடிவு செய்த சுல்தான்கள், வல்லாளனைக் கொன்று அவனது உடலுக்குள் வைக்கோல்களை திணித்து மதுரை சுவர்களில் காட்சியாக வைத்தார்கள்
என்ன ஒரு விஷயம் என்றால்…. இந்த ஹொய்சாளர்கள் ஆண்ட தமிழகப் பகுதிகளில் தமிழையும் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தினார்கள். பெங்களூரில் அவர்கள் செதுக்கிய கல்வெட்டுகள் எல்லாம் தமிழில் தான் இருக்கிறது (பெங்களூர் யாருடைய நிலம் என்று புரிகிறதா?)
படத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்த பெண்ணாகக் காட்டப்படும் திரௌபதி கூட சமஸ்கிருத மந்திரம் சொல்லித்தான் சாமி கும்பிடுகிறார் . பதிலுக்கு வல்லாள மகாராஜா தமிழில் சிவனை வணங்கி விட்டு அப்புறம் சம்ஸ்கிருத மந்திரம் சொல்கிறார் பேலன்ஸ் பண்றாங்களாமாம் .
இஸலாமியப் படையெடுப்பின் போது இந்து மதத்துக்காக உயிர் கொடுக்கும் முக்கியஸ்தர்கள் எல்லாருமே படத்தில் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.
அதுவும் பனிரெண்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் ஒரு குழுவினர் (ஒய் ஜி மகேந்திரன் , பரணி மற்றும் சிலர்) முகம் எல்லாம் தேவநாகரி எழுத்துக்களை கேப் விடாமல் முகமூடி போல பச்சை குத்திக் கொண்டு பஜனை பாடுகிறார்கள். பாடலில் ஒரு வார்த்தை தமிழ் இல்லை.
வரலாற்றின்படி இஸ்லாமியர்களின் வன்முறையான மதமாற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர் அல்லாத தமிழர்களே. ஆனால் படத்தில் சுல்தான் படையினர் பிராமணர்களையும் பிராமணப் பெண்களையும் பிராமண சிறுவர்களையும்தான் சரக் சரக் என்று வெட்டிக் கொல்கிறார்கள். (பிராமணர் அல்லாதவர்களோடு பெண் கொடுத்து சம்மந்தம் செய்து கொண்டார்களா என்ன?)
படம் முழுக்க ராமர் சிலையும் கிருஷ்ணன் சிலைகளையும்தான் சுல்தான்கள் உடைக்கிறார்கள். எங்கும் ஒரு முருகன் சிலை உடைக்கப்பட்டதாக ஒரு காட்சி இல்லை. அது உடைக்கப்படுவதை எதிர்த்து ஒருவரும் போராடவில்லை
ஒருவேளை முருகன் இஸ்லாமியர்களின் நண்பன் என்று படத்தில் சொல்ல நினைக்கிறார்களோ என்னவோ (இப்படித்தான் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது.) ஆனால் போர்க்களத்தில் போடும் கோஷத்துக்கு மட்டும் இவர்களுக்கு ‘வெற்றி வேல்! வீர வேல்! வேண்டும்.
தென்னிந்தியாவில் இருந்த முஸ்லீம் சுல்தான்களை விரட்டவே விஜய நகரம் உருவாக்கப்பட்டது என்பது ஒரு தவறான கருத்து . காரணம் விஜயநகர எழுச்சியின் போது தென்னிந்தியாவை விட வட இந்தியாவில்தான் இஸ்லாமிய ஆதிக்கம் அதிகம் இருந்தது. எனவே இஸ்லாமியர்களை அழிப்பது நோக்கம் என்றால் அவர்கள் கர்நாடகாவில் இருந்து வடக்கே தான் போயிருக்க வேண்டும்.
விஜயநகரத்தின் நோக்கம் தமிழ் மண்ணை பிடித்து தமிழை அழிப்பதுதான் .
அதற்கு காரணம் உண்டு.
கிபி முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளிலேயே சேரன் செங்குட்டுவன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆகியோர் வடக்கே போய் ஆரியர்களை வென்ற வரலாறு இருக்கிறது.
அதன் பின்னர் போரினால் தமிழர்களை வெல்ல முடியாத ஆரியர்கள் வேறு வழிகளில் ஊடுருவினர் . தமிழோடு சமஸ்கிருத்தத்தைக் கலந்து பல தென்னிந்திய மொழிகளை உருவாக்கி அவற்றை தமிழுக்கு எதிரான நிலையில் நிறுத்தினர் . அந்த உணர்விலேயே அண்டை மொழி அரசுகள் எழுந்தன.
கிபி பதினொன்றாம் நூற்றாண்டில், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றிகளை பெற்ற ராஜேந்திர சோழனுக்கு ஆண் வாரிசு இல்லாத நிலையில் (மருத்துவத்தால் அப்படி ஒரு நிலைமை உருவாக்கப்பட்டது என்றும் சில குறிப்புகள் உள்ளன) , தமிழோடு சமஸ்கிருதம் கலந்து உருவான தெலுங்கு மொழியைச் சேர்ந்த அரசர்கள் திருமண உறவு மூலம் தஞ்சையை ஆள ஆரம்பித்தார்கள் .
மக்கள் எண்ணிக்கையில் தமிழர்கள் அதிகம் என்றாலும் அதிகாரம் தெலுங்கர்கள் கைக்கு போனது ( நீங்கள் நிகழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்தால் நிர்வாகம் பொறுப்பாகாது )
சோழருக்கும் பாண்டியருக்கு இயல்பாகவே பகை உள்ள நிலையில் சோழ அரசில் அதிகாரம் பெற்ற தெலுங்கர்கள் மதுரையையும் கைப்பற்றி அங்கும் தெலுங்கைப் புகுத்த வெகுண்டு எழுந்த சுந்தர பாண்டியன் சோழ வம்சத்தை அடியோடு வீழ்த்தினான் .அது பாண்டியர் சோழர் போர் என்பதை விட அன்றைய தமிழர் தெலுங்கர் போர் என்பதே சரி.
சோழ அரசை வீழ்த்திய சுந்தர பாண்டியன் அதோடு நிற்காமல் தெலுங்கு ஆதிக்கத்தின் ஆணி வேர் வரை பயணித்து துவம்சம் செய்தான் என்கிறார்கள் .
அந்த நிலையில் தமிழர்களை பதிலுக்கு அழிக்க ஹரிஹரர் புக்கர் என்று இரண்டு பிராமணர்களால் உருவாக்கப்பட்டதுதான் விஜயநகர அரசு .
சுல்தான்கள் போர் நெறிப்படி சண்டை போடவில்லை என்று இந்தப் படத்தில் மோகன் சொல்கிறார் அல்லவா? அதையேதான் தமிழ் மண்ணில் விஜயநகர அரசுகளும் செய்தன.
சுல்தான்கள் வாள் முனையில் மிரட்டி மக்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதை மோகன்ஜி காட்டினாரே அதே போல வாள் முனையில்தான் தமிழகக் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்திய ஓதுவார்களை எல்லாம் கொன்று விட்டு அல்லது விரட்டி விட்டு கோவில்களை பிராமணர்களுக்கு கொடுத்து சம்ஸ்கிருத வழிபாட்டை வன்முறையாக உருவாக்கினார்கள் விஜயநகர அரசினர்.
எனவே வாள் முனையில் வழிபாட்டு முறையை மாற்றியதில் சுல்தான்களும் விஜயநகர அரசர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.அப்படி இருக்க படத்தில் சுல்தான்களை மட்டும் கண்டித்து விஜய நகர அரசை தூக்கிப் பிடிப்பது ஓரவஞ்சனை.
முஸ்லிமாக மதம் மாறிய பிராமணர் ஒருவர் சுல்தானிடம் ‘நமது மார்க்கம் ஒன்று என்றாலும் நீயும் நானும் வேறு இனம் . நீ என் மண்ணுக்கு சொந்தக்காரன் இல்லை என்கிறார்.
அதாவது மதத்தை விட மொழியும் இனமும்தான் பெரியது என்று நிறுவுகிறார், முஸ்லிமாக மாறிய அந்த வைணவ பிராமணர். உண்மை. சரி. நியாயம்!
.அப்படி என்றால் தமிழனாக இருந்து மதம் மாறியவன் வேறு மதம் என்றாலும் அவன் தமிழ் இனம்தானே ? ஏனெனில் பிராமணர் கருத்துப்படி மொழியை விட இனம்தானே முக்கியம் ? அப்புறம் அவனை முஸ்லீம் என்று பிரிவினை வாதம் பேசுவது மட்டும் எப்படி சரியாகும் . இதிலும் கூட பிராமணர்களுக்கு ஒரு நீதி ; மற்றவர்களுக்கு அது அநீதி என்றால் எப்படி?
கருத்தியல் இப்படி இருக்க, படமாகப் பார்த்தாலும் மிகவும் சோதிக்கிறது படம்
எந்த காட்சியும் ஈர்ப்பாக சுவாரஸ்யமாக அமைக்கப்படவில்லை.
படத்திலேயே ரொம்ப லூசுத்தனமான கேரக்டர் என்றால் அது அந்த திரௌபதி கேரக்டர்தான் . தான் இறந்தால் காடவராயனும் இறக்கக் கூடாது என்பதால்தான் அவனை கருடப் படையில் இருந்து அரசர் நீக்குகிறார் . ஆனால் அதை பேசி சரி செய்து காடவராயனை கருடப்படையில் இருக்கச் செய்தவளே அவள்தான்.
அரசன் இறந்தும், சொன்ன சொல் தவறாத கணவன் தற்கொலை செய்து கொள்ளாமல் திரும்பி வந்திருக்கிறான் என்றால் அதற்கு அரசர் கட்டளை எதுவும் காரணமாக இருக்கும் என்ற அறிவு இல்லாமல், மசாலா பட கதாநாயகி மாதிரி அவனை நாட்டை விட்டே போக வைக்கிறாள் திரௌபதி. (இதில் மகேந்திர காடவராய பாஹு பலி பாணியில் ஒரு காட்சி வேறு.)
திரௌபதியின் நம்பிக்கையான அதிகாரி ஒருவன் முஸ்லிமாக மதம் மாறி சுல்தான் ஆளாக மாறி, திரௌபதிக்கு தவறான ஆலோசனைகளை தருகிறான் . அதை அவளும் நம்புகிறாளாம். ஓர் அரச கதையில் இப்படியா சொதப்புவது?
இது கூட பரவாயில்லை. ”நீ எனக்கு வேண்டும் ”என்று மதுரை சுல்தான் சொன்ன பிறகும் சொர்ண மகாலட்சுமி சிலையைக் காக்கவும் , சுல்தானிடம் இருக்கும் தன் கணவன் காடவராயனை கொல்ல வேண்டும் என்பதற்காகவும் சுல்தானை தனி அறையில் சந்திக்கிறாளாம் திரௌபதி . ( இத்தனைக்கும் காடவராயன் அப்போது சுல்தானிடம் இல்லை. அது கூட தெரியாமல்…!)
அது மட்டும் இல்லாமல், கிராமத்து மசாலா படத்தின் கற்பழிப்புக்கு காட்சி போல சுல்தான் திரௌபதியின் தாடைகளைத் தடவி கன்னத்தை வருடி சேலை மாராப்பை இழுக்க, திரௌபதி முந்தானையைக் காப்பாற்ற போராடுகிறாள். . கொடுமை
திரௌபதி அம்மன் பெயர் கொண்ட ஒரு பெண்… குறுநில அரசி.. அந்தக் கதாபாத்திரத்தை இப்படியா அசிங்கப்படுத்துவது?
வேலு நாச்சி இருந்த மண் அய்யா இது.
தன்னை மணந்து தன் அப்பனைக் கொன்று டு தன்னையும் சித்திரவதை செய்யும் டெல்லி சுல்தானை ‘கொல்ல வேண்டும்’ என்று காடவராயனிடம் சத்தியம் வாங்கும் சுல்தானின் மனைவி ஆயிஷா , இந்த திரௌபதியை விட புத்திசாலி.
அந்த வகையில் இந்தப் படத்துக்கு திரௌபதி என்ற பெயரை விட ஆயிஷா என்ற பெயரே ரொம்பப் பொருத்தம்.
இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடம் ஓடும் இந்தப் படம் கதை நுட்ப தொழில் நுட்ப ரீதியாகவும் எந்த வித ஈர்ப்பையும் தரவில்லை.
ஜிப்ரான் இசை, ஜஸ்ட் ஓகே தேவராஜின் படத் தொகுப்பு சோதிக்கிறது.
நட்டி நட்ராஜ் , ரிச்சர்டு ரிஷி இவர்கள் அரசர்களாக நடிக்கும் விதமும் வசனம் பேசும் விதமும் பொருந்தவே இல்லை.
தமிழ் உணர்வை விட இந்து என்ற உணர்வே முக்கியம் ; அதற்காக தமிழ் இன உணர்வை பலி கொடுக்கலாம் என்று சொல்கிறது இந்தப் படம் .
அதனால்தான் வழக்கமாக மோகன் ஜி படங்கள் எப்படி இருந்தாலும் தூக்கிப் பிடிக்கும் வன்னிய சமூகமே, இந்தப் படத்தை கண்டு கொள்ளவில்லை. வன்னியர்கள் அடிப்படையில் தமிழ் இன மொழி உணர்வு மிக்கவர்கள் .
முதல் திரௌபதி வந்த போது அந்தப் படம் பெரும் விமர்சனங்களை சந்தித்தது . ஆனால் அந்தப் படம் எவ்வளவோ நல்ல படம் என்று சொல்ல வைத்து விட்டார் மோகன் ஜி .
மொத்தத்தில் திரௌபதி 2 …. கூனி, மந்தரை