New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் மைனா நந்தினி, விஜி சுப்பிரமணியம் , காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ்,பக்ஸ், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் நடிப்பில் வந்திருக்கும் படம்.
திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் ஓர் எளிய ஊழியனுக்கு ( பிரித்திவிராஜ் ராமலிங்கம்) . வருமானம் போதவில்லை. அறை எடுத்துத் தங்கி இருக்கும் இடத்தில் சக நண்பனின் உதவி கிடைக்கவில்லை தன் அம்மாவுக்கு பணம் அனுப்பினால் ஊரில் இருக்கும் பொண்டாட்டிக்குப் பிடிக்கவில்லை.
கம்பெனியில் ஏழைப் பெண்ணிடம் தப்பாக நடக்கும் மேனேஜரை எதிர்த்ததற்காக மேனேஜர் அவனை அடிக்கிறார். மாதம் முடிந்தும் இவனுக்கு மட்டும் சம்பளம் வரவில்லை. கம்பெனி ஓனரோ தன் உறவினரான மேனேஜர் பக்கம் நிற்கிறார். ஏழைப் பெண்ணுக்கு நியாயமாக ஆதரவாக நின்றதற்காக வர வேண்டிய சம்பளத்தையே கெஞ்சிக் கூத்தாடி வாங்க வேண்டி இருக்கிறது .
இதில் இருந்து எல்லாம் தற்காலிகமாக தப்பித்து அவனை ரிலாக்ஸ் ஆக்குவது அவனது குடிப்பழக்கம் .
ஒருமுறை தனது பிறந்த நாளில் குடித்து விட்டு கல்லூரிக் காலத்தில் காதலை சொல்லாமேலே போய் வேறு திருமணம் செய்து பிள்ளைகள் என்று செட்டில் ஆகிவிட்ட பெண்ணுக்கு (மைனா நந்தினி) போன் செய்கிறான். அவளுக்கும் அந்த ஏக்கம் இருப்பது தெரியவர , அவனுக்கு இரண்டு போதையும் தலைக்கேறி, பிறந்த நாள் கேக் ஒன்றை வாங்கிக் கொண்டு அந்த சொல்லாக் காதலியோடு சேர்ந்து கேக் வெட்டுவதற்காக நள்ளிரவில் அவள் வீட்டுக் கதவைத் தட்டுகிறான்.
அவளின் கணவன் ( ஆடுகளம் முருகதாஸ்) போலீசுக்குப் போக, போலீஸ் இவனை பிடிக்கிறது.
குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில் டென்ஷனோடு இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு (விஜய் முருகன்) இவன் மேல் கோபம் வந்து சட்டையைக் கிழித்தெறிந்து அடி வெளுக்கிறார் . ஒரு பெண் காவலருக்கு ( விஜி சுப்பிரமணியம்) இவன் மனநிலை புரிகிறது. அசந்த நேரத்தில் இன்ஸ்பெக்டரின் யூனிபார்மையும் வாக்கி டாக்கியையும் தூக்கிக் கொண்டு இவன் வெளியேறுகிறான்.
போலீஸ் இன்னும் வெறியோடு துரத்துகின்றனர் . இன்ஸ்டன்ட் நண்பர்கள் எக்ஸ்பிரஸ் பகைவர்கள் ஆவது உட்பட… இவனுக்கு பல அனுபவங்கள்.
மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தன்மையை தூண்டி விட்டு நினைப்பதை எல்லாம் செய்ய வைப்பது குடியின் வேலை என்றாலும் இயல்பாகவே ஒரு மனிதனுக்கு இருக்கும் சில ஆழ் மன இயல்புகள் எப்போதும் உறுதியாக இருப்பதும உண்டு .
அப்படி இவனது அடிப்படை நல்லியல்பு காரணமாக இவன் செய்த ஒரு செயல் எப்படி போலீசையே நெகிழ வைத்தது . அதன் மூலம் இவன் கற்றதும் பெற்றதும் உற்றதும் என்ன என்பதே படம்.
போர் அடிச்சா கூட பரவால்ல .. ஒரு குடிகாரனின் மன நிலையை, சூழல் அவனைக் கையாளும் விதத்தை, நிறுத்தி நிதானமாக சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இயக்குனர் அரவிந்தன் . ஒரு நிலைவரை பலமாக இருந்த அது ஒரு நிலைக்குப் பிறகு பலவீனமாக மாறுகிறது . எனினும் படம் முழுக்க இயக்குனரின் திரை மொழி சிறப்பாக இருக்கிறது பாராட்டுகள்.
ஒரு சில ஆரம்பக் காட்சிகள் போன பின்பு, படம் முழுக்க ஒன்று விடாமல் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் கதாபாத்திரம் பிரித்திவி ராஜ் ராமலிங்கத்துக்கு. அதாவது அவர் எதிர்கொள்ளும் விசயங்கள்தான் மொத்தம் படமே .நடிப்பு , குரலின் தன்மை , குரல் நடிப்பு என்று சிறப்பாக செய்திருக்கிறார். தவிர படம் முழுக்கவே குடிகாரன் நடிப்பில் ஒரு ரிதம் மெயின்டைன் செய்திருக்கிறார் பாராட்டுகள்.
பிரம்மாதமாக நடித்து இருக்கிறார் மைனா நந்தினி . நகைச்சுவையைத் தூண்டும் முக பாவங்கள் , சீரியசான உணர்வுகள், எந்த நிலையிலும் நாயகன் மேல் இருக்கும் உள்ளார்ந்த அன்பு, அதே நேரம் இப்போ வந்து குடும்பத்தில் குழப்பம் பண்றானே என்ற கோபம் என்று… இரு துருவ விசயங்களை நடிப்பில் கொண்டு வரும் சவாலான வேலையை அழகாகச் செய்கிறார் மைனா நந்தினி . சபாஷ்
பெண் போலீஸ் அதிகாரியாக அசத்தி இருக்கிறார் ஜீவா சுப்ரமணியம். நடித்துக் குவிக்கக் கூடாது . அதுக்காக சும்மா நிற்கவும் கூடாது . ரொம்ப எக்ஸ்பிரஸ் பண்ணாமல் உள்ளுக்குள் பீல் பண்ண வேண்டும். பிஹேவ் பண்ண வேண்டும் . அது பிரேமில் தெரியவும் வேண்டும் . அதை அற்புதமாக சாதித்து இருக்கிறார் . மிகச் சிறப்பான நடிப்பு. வாழ்த்துகள் தங்கமே.
இந்த மூவருக்குமான பாராட்டுகளில் இயக்குனர் அரவிந்தனுக்கு உரிய அவிற்பாகம் வழங்கப்பட வேண்டும் .
இன்ஸ்பெக்டராக விஜய் முருகனும் ஷார்ப்.
கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகளும் கோவிந்த் வசந்தாவின் இசையும் கட்டிப் பிடித்து கானம் பாடி காதலித்து நம்மை உருக வைக்கின்றன. வரிகளில் எளிமையின் பலம் தெரிகிறது . பின்னணி இசையும் சிறப்பு.
இருவர் எழுதியும் உரையாடல்கள் திருப்தி இல்லை. ஒரு குடிகாரன் கேரக்டர் என்பது எப்பேர்ப்பட்ட லட்டு. ஆனால் வசனம் முழுக்க முழுக்க உதிர்த்துப் போட்ட பூந்தியாகவே இருக்கிறது . எனினும், சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் வந்தாலும் கூட, அந்த ‘ பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி…. ‘ இனிப்பில் ஊறிய உலர் திராட்சை. அருமை.
அப்படியே வெட்டி வெளியே கொட்ட வேண்டிய பகுதி .காளி வெங்கட்டின் எபிசோடுதான். போதை வாழ்வில் நிமிடத்துக்குள் உயிர் நண்பர்களும் நொடிக்குள் ஜென்ம எதிரிகளும் உருவாவார்கள் என்று, சொல்ல வந்த நோக்கம் சரிதான் . ஆனால் காளி வெங்கட் செட் ஆகவில்லை.
சபலிஸ்ட் மேனேஜரை அவர் பொண்டாட்டியிடம் மாட்டி விட வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக அவ்வளவு பெரிய ஜவ்வு தேவை இல்லை. ஓர் பல் குச்சி கேட்ட பாவத்துக்காக ஆல மரத்தை தூக்கியா தலையில் வைப்பது .
நெகிழ்வான அந்த கிளைமாக்ஸ் விசயத்தில் கூட மேக்கிங்கில் ஜாக்கி போட்டு தூக்கப் போராடுகிறார்களே தவிர ஸ்கிரிப்டில் அந்த வலு இல்லை.
நாயகனுக்கு இருக்கும் அடிப்படையான நல்ல குணம் காரணமாக உதவி பெறும் அந்த நபர்களுக்கு ஏற்படும் பாதிப்பு கூட, அந்த வீட்டில் இருந்த ஒரு குடிகாரனால்தான் ஏற்பட்டது என்று ஒரு விஷயம் வைத்து இருந்தால்,
கிளைமாக்ஸ் இன்னும் வலுவாக கனெக்ட் ஆகி இருக்கும் . படம் முடியும்போது ஒரு நிறைவு கிடைத்து இருக்கும் . அதிலும் சொதப்பி விட்டார்கள்.
படத்தில் நாயகனுக்கு வருவது போன்ற போன்ற பிரச்சினைகளை அல்லது அதைவிட அதிக பிரச்னைகளை சந்திப்பவர்களில் குடிக்காமலே இருப்பவர்கள் கூட எவ்வளவோ பேர் உண்டு ( குறிப்பாக நம் பெண்களே அப்படிதானே). அதைக் கடைசிக் காட்சியில் நாயகனும் புதிய நபரும் பேசிக் கொள்ளும் காட்சியிலாவது சொல்லி இருந்தால் படைப்பின் நேர்மை அதிகரித்து இருக்கும் .
”பாவம் அவன் என்ன வேணும்னா குடிக்கிறான்? அவன் சூழ்நிலை அப்படி சார் ” என்று, பிரச்னை காரணமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாவதை, நார்மலைஸ் செய்யும் தொனியில் பெரும்பகுதிப் படம் போகிறது
டூரிஸ்ட் பேமிலி, மெட்ராஸ் மேட்னி , டி என் ஏ இந்தப் படங்களுக்கும் இந்த குட் டே படத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு . இவை நாலுமே கிளைமாக்சில் முழு கனத்தையும் போட்ட படங்கள் .
ஆனால் டூரிஸ்ட் பேமிலி மாபெரும் வெற்றி பெற்றது .மெட்ராஸ் மேட்னி பலன் தரவில்லை. டி என் ஏ தடுமாறிக் கொண்டு இருக்கிறது .ஏன் இந்த வித்தியாசம்?
டூரிஸ்ட் பேமிலி ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப தொங்கி விடாமல், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஷார்ப்பான காட்சிகள், கொஞ்சம் வித்தியாசமான விஷயங்கள் கொஞ்சம் பரபரப்பு என்று.. கிரிப்பை விட்டு விடாமல் தொடர்ந்து பயணித்து கிளைமாக்சில் சிக்சர் அடித்தது .
மெட்ராஸ் மேட்னி கிளைமாக்சில் மட்டும் கனம் காட்டியபோது, ‘இட்ஸ் டூ லேட் மா..’ என்று ஆகி இருந்தது .
டி என் ஏ ஆரம்ப ஜோர் காட்டி அப்புறம் ஸ்லோ ஆகி அப்புறம் சொதப்பி எடுத்து கடைசியில் கிளைமாக்சில் மட்டும் வெயிட் காட்டியது .
ஆனால் இந்த குட் டே படம் திரைக்கதை விசயத்தில் மெட்ராஸ் மேட்னிக்கு மேல்….. ஆனால் டி என் ஏ வுக்கு கீழ் என்ற குறுகிய சந்தில் இருக்கிறது . .
படத்தில் சும்மா வரும் வெட்டியான மாண்டேஜ்களை தூக்கி எறிந்து விட்டு , மைனா நந்தினி எபிசோடை விடவும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான விசயங்களை (அது காமெடியாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை) சேர்த்து இருந்தால் , இந்த குட் டே படமும் டி என் ஏ படத்துக்கு இணையாகவாவது போயிருக்க முடியும். ஆனால் தவற விட்டுவிட்டார்கள் .
குடிப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை அல்லது அதை விடவேண்டும் என்று நினைப்பவர்களை இந்தப் படம் கனெக்ட் செய்யும் .ஆனால் அவர்கள் எல்லோரையும் படம் பார்க்க ஈர்க்கும் அளவுக்கு சுவாரஸ்யம் இல்லை. அதேபோல குடிப் பழக்கத்தின் ஆபத்தை எல்லோருக்கும் சொல்லும் வகையில் எல்லோரையும் கவரும்படியாக படம் இல்லை.
எனவே குட் டே (GOOD DAY) ….. ஜஸ்ட் அனதர் ஒன் டே.
படத்தின் ஆரம்பத்தில் வரும் ஜி நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ என்ற வார்த்தைகளை ப் போல, படமும் மற்றொரு படமே.