விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ள படம் ஹைக்கூ. அருளானந்துவின் மகன் ஏகன்தான் கதாநாயகன் . இந்த நிறுவனம் முதலில் தயாரித்த படம் ஜோ. அதில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் ஏகன்
வெற்றி பெற்ற அந்தப் படத்தை அடுத்து ஏகன் நாயகனாக நடிக்க, இவர்கள் எடுத்த படம் கோழிப்பண்ணை செல்லத்துரை.
இப்போது இவர்கள் உருவாக்கி இருக்கும் படம் ஹைக்கூ . ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார்.அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார்.
ஹைக்கூ என்பது எப்படி மூன்று வரிக் கவிதையோ அது போல இது மூன்று முக்கியக் கதாபாத்திரங்களை பின் தொடரும் படமாம்
”பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவனாக படிக்கும் சூழல் ஒருவனுக்கு ஏற்படுகிறது. அது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு ரியலிஸ்டிக் ஃபேண்டஸி பாணியில் காரணம் சொல்கிறோம். ஆனால் கதை அது மட்டுமே அல்ல. . அங்கே அவனுக்கு ஏற்படும் காதல் , பின்னால் இன்னொரு காதல் அதன் விளைவுகள் என்று படம் போகிறது.
இது ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம். ஆனால், இதற்குள் ஒரு ஆழமான கருத்தும் இருக்கிறது. ‘டோரதி’ படம் பார்த்த பிறகு மற்றவர்களின் தேர்வுகளையும் தனிப்பட்ட உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்கள் பலரது மத்தியில் உருவானது. அதேபோல், ‘ஹைக்கூ’ திரைப்படமும் பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும் என்பதையும், பெண்களை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறது.
ஆனால், இந்தப் படம் எந்தக் கருத்தையும் போதிக்கும் வகையில் இருக்காது. கதைக்குள் கருத்தை இயல்பாக இணைத்து, ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறோம். திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் இந்தப் படம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்”” என்கிறார் ஏகன்.
தயாரிப்பாளர் அருளானந்து பேசும்போது, ” ஜோ படம் எனக்கு மிகவும் பிடித்த காரணத்தால் தயாரித்தேன். அடுத்து கோழிப்பண்ணை செல்லத்துரை . ஒரு இடைவெளி விட்டேன். இந்தக் கதை பிடித்த காரணத்தால் தயாரிக்கிறேன்.
எனக்கு பல தொழில்கள் உண்டு. அவற்றில் நான் தோற்றால் வெளியே தெரியாது. ஆனால் சினிமாவில் தோற்றால் வெளியே தெரிந்து விடுகிறது. எனவே மிகவும் கவனமாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தை ஆறுகோடியில் எடுத்தால் போதும். ஆனால் நான் பதினோரு கோடி செலவு செய்து எடுத்து இருக்கிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை. எனக்கு பணம் சம்பாதிக்க ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்கள் இருக்கிறது. நான் நல்ல படம் எடுக்க வேண்டும்.
படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வருகிறது.
இப்போதே படத்தின் தயாரிப்பு செலவில் என்பது சதவீதம் ஓ டி டி வியாபாரம் மூலம் நடந்து விட்டது. ஜெயிலர் படம் வந்த ஒரே வாரத்தில் என் படம் வந்தாலும் எனக்கு 700 திரையரங்குகள் இப்போதே கன்பார்ம் ஆகி விட்டது” என்கிறார் , தைரியமாக.
‘ஹைக்கூ’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
