கே ஜே பி டாக்கீஸ் மற்றும் ANTS TO ELEPHANT CINEMAS நிறுவனம் (அதாவது யானை போன்ற படங்களின் காதில் நுழைந்து கதற விடும் எறும்பு போன்ற படங்களை எடுப்பார்களாம்) சார்பில் பாலாமணி மார்பன் மற்றும் அனில் கே ரெட்டி தயாரிப்பில் , பிரியா பவானி சங்கர் , எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா , பிரிகிடா, அஸ்வின், ரக்ஷன் ஆதித்யா பாஸ்கர், பாலாமணி மார்பன், பவானி ஸ்ரீ , சஞ்சனா திவாரி, விக்னேஷ் கார்த்திக் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஒரு திரைப்படத் தயாரிப்பாளரின் மகளை , திரைப்பட இயக்குனராக முயலும் ஒரு பையன் காதலிக்கி, அந்தக் காதலை தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவரிடம் கதை சொல்வது போலப் போய், இன்றைய உலகில் நவீன காதலில் என்னென்னவெல்லாம் நடக்கிறது என்பதை சொல்லி, ‘எங்கள் காதல் அந்த அளவுக்கு மோசம் இல்லை’ என்பதை புரிய வைப்பதுதான் இதற்கு முன்பு வெளியான ஹாட் ஸ்பாட் படத்தின் கதை .
அப்படி சொல்லப்பட்ட கதைகளின் மூலம் பரபரப்பு பெற்ற படம் அது .
இந்த ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தில், அந்த இயக்குனர் (விக்னேஷ் கார்த்திக்), தயாரிப்பாளரின் (பாலாமணி மார்பன் ) மகள் (பிரிகிடா சகா) ஆகியோரின் தாம்பத்ய வாழ்வில் இன்னொரு பெண் (பிரியா பவானி சங்கர்) நுழைகிறார். (என்ன உறவாக நுழைகிறார் என்பது அதில் உள்ள சென்ஸேஷன்)
அந்த நுழைவை தயாரிப்பாளரை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்பதால், இயக்குனர் வழிகாட்டல் படி தயாரிப்பாளரை சந்தித்து சில கதைகள் சொல்கிறார் அந்த இன்னொரு பெண். இதுதான் இந்தப் படத்தின் கதை.
அப்படி அவள் சொல்லும் முதல் கதையில்….. ”என் உள்ளத்தில் குடியிருக்கும்….” என்று ரசிகர்களை அழைக்கும் ராசா என்ற நடிகரின் ரசிகன் ஒருவன் (ஆதித்யா பாஸ்கர் ) , தனது ஹீரோவைப் பற்றி காதலியின் தந்தை தவறாகப் பேசியதால், அவரிடமே சண்டை போட்டு விட்டு வரும் அளவுக்கு ராசாவின் வெறியன் .
”கடவுளே……” என்று ரசிகர்களால் கதறி அழைக்கப்படும் தாதா என்ற நடிகரின் வெறி பிடித்த ரசிகன் ஒருவன் (ரக்ஷன்) தனது தாய் தந்தையைக் கூட கவனிக்காமல் தாதா படங்களை பார்த்து ரசிப்பவன் .
ஒரு நிலையில் தாதாவின் படமும் ராசாவின் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக, ரசிகர்களுக்குள் பெரிய மோதல் நடைபெறும் என்ற நிலையில் ஒரு மர்ப நபர் தாதா ரசிகனின் அப்பா அம்மா, ராசா ரசிகனின் மனைவி ஆகியோரை கடத்தி வைத்துக் கொண்டு . இரண்டு நடிகர்களும் தன்னிடம் கான்ஃபரன்ஸ் காலில் பேசவேண்டும்; பேசவில்லை என்றால் ரசிகர்களின் கூடுமா நபர்கள் மூவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான்.
இருவரையும் பேச வைக்க தாதா ரசிகன் தாதாவிடமும் ராசா ரசிகன் ராசாவிடமும் முயல , அவர்கள் ரசிகர்களுக்காக பேசினார்களா? ரசிகர்களின் குடும்பத்தார் தப்பித்தார்களா என்பது முதல் கதை .
இங்கே இருந்தவரை கண்ணியமாக நடந்து கொண்ட ஓர் இளம்பெண் (சஞ்சனா திவாரி) அயல்நாட்டுக்குப் போய் படித்து வந்தவுடன் கவர்ச்சியான உடை , வயதில் பெரியவர்களையும் தன லெவலுக்கு இறக்கி டீல் செய்யும் ஆணவம், தவிர செக்ஸ் பண்ணிப் பார்த்து பிடித்தால்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் அளவுக்கும் போக, அதிர்ந்து போன தந்தை (தம்பி ராமையா) மகளை எப்படி டீல் செய்தார் என்பது ஒரு கதை .
2025 ஆம் ஆண்டில் இளைஞனாக இருக்கும் ஒருவன் ( அஷ்வின்) 2050 ஆம் ஆண்டில் இளம் பெண்ணாக இருக்கும் ஒருத்தியை (பவானி ஸ்ரீ ) ஒரு போன் அலைவரிசை மூலம் மாற்று உலக (ALTERNATE WORLD ) தொடர்பு பெற்று காதலிக்கிறான் . அவர்களால் சந்திக்கவே முடியாது என்ற நிலையில் அந்தக் காதல் என்ன ஆனது ?என்று ஒரு கதை.
இயக்குனர் மணவாழ்வில் நுழைந்த மூன்றாவது பெண் விஷயத்தில் நடந்தது என்ன…? இவையே இந்தப் படம்.
சினிமா மோகத்தை தீமையை , வெறிபிடித்த ரசிக மனப்பான்மையில் கெடுதல்களை விமர்சிக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சிவாஜி , கமல் எல்லாம் நடித்த சினிமாப் பைத்தியம் , வி சேகர் இயக்கிய நீங்களும் ஹீரோதான் போல போன்ற படங்கள் உதாரணம்.
அதே பாணியில் அமைந்திருக்கிறது முதல் கதை. ஆனால் எந்தெந்த நடிகர்களைச் சொல்கிறார்கள் என்பதற்கான க்ளூ சுலபமாக புரியும்படி எழுதப்பட்டு இருக்கிறது ( மேலே கதை பற்றி படிக்கும் போது உங்களுக்கே புரிந்து இருக்கும் ) அது மட்டும் புதிது. ரசிகர்களின் டி வி விவாதம் கவனிக்க வைக்கிறது
எம் எஸ் பாஸ்கர் பேசும் காட்சி ஒன்றை அற்புதமாக எழுதி இருக்கிறார் விக்னேஷ் கார்த்திக் .
ஆனாலும் வித்தியாசமான முடிவு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சேம் சைடு கோல் போட்டு கதையை முடிக்கிறார் . அப்புறம் எதுக்கு அந்த கதை பந்தை அவ்வளவு நேரம் உருட்டி உருட்டி விளையாட வேண்டும். ?
”எப்படியாவது கவனம் கவரணும் என்பதற்காக எதையாவது குண்டக்க மண்டக்க சொல்பவன்தான் பெரிய ஆள் ஆகிறான். நிலைமை அவ்வளவு மோசமா போய்க்கிட்டு இருக்கு” என்ற வசனத்தை டிவி டிபேட்டில் ஒருவர் சொல்கிறார் .
ஆனால் படத்தில் வரும் மற்ற கதைகள் மூலம் விக்னேஷ் கார்த்திக் அதைத்தான் செய்திருக்கிறார். தன்னைத் தானே கழுவி ஊத்திக் கொள்ளும் அந்த நேர்மையைப் பாராட்டலாம் .
மேல்நாட்டு மோகத்தில் சிக்கிய மகளுக்கு சரியானதை உணர வைக்க, அப்பா என்ன செய்தார் என்ற அந்தக் கதையில் கொஞ்சம் அமெச்சூர்தனம் தெரிந்தாலும் அது முழுமையாக வந்திருக்கிறது. நல்ல எழுத்து. அதில் இளைய தலைமுறையை ஆதரிக்கும் விதமும் அதே நிறத்தில் அவர்களை கண்டிக்கும் விதமும் சிறப்பு
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இணை உலகம் (PARELLEL WORLD ) மாற்று உலகம் (ALTERNATE WORLD ) இவற்றின் அடிப்படையில் அடியே என்று ஒரு படம் எடுத்தார். மேக்கிங் சிறப்பாக இருந்தாலும் இணை உலகம், மாற்று உலகம் பற்றிய புரிதல் குறைவால் கன்னா பின்னா என்று காட்சிகள் வைத்ததோடு, அந்தக் கதையை வெகு ஜன ரசிகனுக்கும் புரியும்படி சொல்லாமல் விட்டதால் அந்தப் படம் ஓடவில்லை. ஆனால் அது ஒரு நல்ல முயற்சி.
ஆனால் இந்த ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தில் வரும் அந்த மாற்று உலகம் கதை உண்மையில் மிக சிறப்பு . சொல்லப் போனால் அடியே படத்தை விட இது சிறப்பு.
ஓர் இடத்தில் அடுத்த தலைமுறை மீது நம்பிக்கை கொள்ள வைக்கும் ஓர் அட்டகாசமான வாவ் ஃபேக்டர் வரும் . அதோடு முடித்து இருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும் . ஆனால் அதிலும் கடைசியில் அந்த கதையின் தலையில் மண்ணை அள்ளிப் போடுவது போல ஒரு ஜம்பலக்கடி ஜிம்பா முடிவை வைத்து இருக்கிறார் இயக்குனர்.
காரணம் எல்லாவற்றையும் வித்தியாசம் என்ற பெயரில் கன்னா பின்னா என்று முடிக்க வேண்டும் என்று…. ஒரு வித வித்தியாச மேனியாவுக்கு ஆளாகி இருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.
பொதுவாகவே வசனம் பாராட்டும்படியாக அல்லது பரபரப்பாக, ஏதோ ஒரு வகையில் கவனம் பெறுகிறது
கூட்டம் தேவைப்படம் காட்சிகளைக் கூட காம்பாக்ட்டாக எடுத்த்து இருக்கிறார்கள் .
ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால் இருவரின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது . முத்தையன் எடிட்டிங்கும் நன்றாக இருக்கிறது . சதீஷ் ரகுநாதனின் இசை, இருக்கிறது.
முதல் ஹாட்ஸ்பாட் படத்தின் நேர்த்தி இந்த ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தில் இல்லை
பொதுப் புத்தியில் தவறென்று சொல்லப் படும் விஷயங்களுக்கு பரிந்து பேசுவது போல கிளர்ச்சி ஊட்டுவது , சென்சேஷனல் மற்றும் கான்ட்ரவர்ஸி விசயங்கள் மூலம் கவனம் கவர்வது என்ற உத்தியில்தான் அந்த ஹாட் ஸ்பாட் கவனம் பெற்றது .
அது இந்த ஹாட் ஸ்பாட் 2 மச் படத்துக்கும் பலன் தர வாய்ப்பு உண்டு.
