ஜாக்கி @ விமர்சனம்

பி கே 7 ஸ்டுடியோஸ் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் , தேவதாஸ், ஜெயா தேவதாஸ்  தயாரிப்பில் அம்மு அபிராமி, சரண்யா ரவிச்சந்திரன், யுவன் கிருஷ்ணன், ரிதன் கிருஷ்ணதாஸ், மதுசூதன் ராவ்,  யோகி நடிப்பில்,  பிரபகல் என்பவர் இயக்கி வெளியாகி இருக்கும் படம்.

மதுரைப் பகுதியில்  கிடா சண்டையில் ஜெயிக்கும் கிடாவின் சொந்தக்காரனாக இருப்பது பெரிய கவுரவம் என்ற நிலையில் அந்த கவுரவத்தை பெற முழுமூச்சாகப் போராடும் நபர்களைப்  பற்றிய படம் இது. 
 
கிடாச் சண்டை நடத்தும் அமைப்பின் முக்கிய நபர் ஒருவரின் (மதுசூதன் ராவ்) உறவினர்  காப்ரா கார்த்தி (ரிதன் கிருஷ்ணதாஸ்). ஒவ்வொரு முறையும் கிடாச் சண்டையில் ஜெயிப்பவன். 
 
வேறு யாரும் ஜெயித்தால் அவனுக்கு பிடிக்காது . தவிர தன்னிடம் மோத வரும் கிடாயின் உரிமையாளருக்கு ஒரு கவுரவமும் அந்தஸ்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். 
 
கிடாச் சண்டையால் உருவான பகையில் அப்பாவும் அக்கா கணவனும் இறந்து விட்ட நிலையிலும் ஷேர் ஆட்டோ ஓட்டிக் கொண்டே கிடாச் சண்டையில்  தீவிரமாக ஈடுபடுபவன் ராமர்  பாவா. (யுவன் கிருஷ்ணன்). ஆனால் அவர் வழிவிட்டான் என்பவரின் மகன். ராமரின் அக்காவும் (சரண்யா ரவிச்சந்திரன்) அக்கா மகளும் ராமருடன்  இருக்கிறார்கள் . 
 
ஒரு முறை  கிடாச் சண்டையில்  காபரா கார்த்திக்கின் அணுகுண்டு என்ற பெயர் கொண்ட ஆட்டுக் கிடாவை  ஷேர் ஆட்டோ ராமரின்  காளி  என்ற கிடா அடித்து  முட்டி  கொம்பை உடைத்து விடுகிறது . 
 
அதை அவமானமாக எண்ணி அணுகுண்டை வெட்டிக் கொள்கிறான் கார்த்தி. (எம் ஜி ஆர் நல்ல நேரம் படத்தில் ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன யானையை மேஜர் சுந்தர்ராஜன் சுட்டுக் கொல்வாரே அப்படி.! என்ன.. அதை டீசண்டாக எடுத்து இருப்பார்கள். இங்கே ரத்தம் தெறிக்கிறது).
 
 அடுத்த சண்டையில் கலந்து கொள்ள இன்னொரு ஆட்டை தயார் செய்கிறான் கார்த்தி. சண்டையில் தோற்கிற  ஆட்டை ஜெயித்தவனுக்கே கொடுத்து விட வேண்டும் என்று பந்தயமும் வைக்கிறான் .
 
கார்த்தி கொண்டு வந்த புதிய கிடா,  ராமரின்  கிடாவான காளியை வீழ்த்துகிறது.  உயிராபத்துக்குப் போகும் காளியை,  இழுத்துச் செல்கிறார்கள் கார்த்தியின் ஆட்கள். 
 
அதுவரை பாசம் காட்டி(?) வளர்த்த கிடா இல்லாமல் வீட்டுக்குப் போகும் ராமர்  உடைந்து போகிறான். 
 
ஒரு நிலையில்  தான் ஏமாற்றப்பட்டது ராமருக்குத்  தெரிய வருகிறது. என்ன ஏமாற்றம்? அதன் விளைவாக என்ன நடந்தது என்பதே படத்தின் இரண்டாம் பாதி . 
 
ஆட்டுக்கிடாச் சண்டையை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குனர் பிரபகல் மற்றும் படக் குழுவினரின் உழைப்பு பிரம்மிக்கத்தக்கது . கொண்டாடத் தக்கது . 
 
ஏனெனில் என்னதான் பயிற்சி கொடுத்தாலும் மூர்க்கமான ஆட்டுக் கிடாக்களை வைத்து ஒரு சாதாரண ஷாட் எடுப்பதே, சிரமமான,  கவனமாகச்  செய்ய வேண்டிய விஷயம் . 
 
அப்படி இருக்க,  ஆட்டுக் கிடாக்களின் நிஜமான சண்டையை காட்சிப்படுத்துவது எளிதான  விஷயம் இல்லை. இதை விட முக்கியமான விஷயம்…  படத்தின் நடிகர்களை அந்த ஆட்டுக்கு கிடாக்களோடு பழக்குவதும் மற்ற நடிகர்களை அவற்றுடன்  நடிக்க வைப்பதும்  ரொம்ப கவனமாக கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய  விஷயம். 
 
மூன்று ஆண்டுகளில் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் இந்த படக்குழுவின் உழைப்பு அற்புதமானது. வாழ்த்துகள்; பாராட்டுகள், சபாஷ்; பலே; BRAVO !
 
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் கோழிச் சண்டை . இந்தப் படத்தில் ஆட்டுக் கிடாச் சண்டை .. அவ்வளவுதான் ரெண்டு படத்தின் முதல் பாதிக்கும்  இடையே உள்ள வித்தியாசம் .
 
கோழிக்குப் பதிலாக  கொழுத்து பருத்து கெட்டிப்பட்டு மிருக பலம் கொண்ட ஆட்டுக் கிடாக்களை கையாள்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை யோசித்தால் புரியும் . 
 
ஆனால் வெற்றிமாறன் படத்தில் இருந்த நேர்த்தி… மேக்கிங்.. .. இதில் இல்லை. சண்டைதான் என்றாலும் அந்த கோழிச்  சண்டையின் மூலம் ஒரு மண்ணின் கலாச்சாரத்தை சொல்கிறோம் என்று வரும்போது,  அதன் கண்ணியத்தை கெடுக்காத வில்லத்தனத்தைத்தான் வில்லன்கள் செய்வார்கள் .இதில்  அந்த தரம், கலாச்சார மரியாதை  இல்லை.  
 
அதனால் நாம் ஒரு கலாச்சாரப்  பின்னணியில்  நிகழும் படத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வு நழுவிப் போய் , ஒரு நிலையில் வழக்கமான , , லாஜிக் இல்லாத , போரடிக்கும் மசாலாப் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது. . ஜாக்கி என்ற பெயர் வைத்த படத்தில் திரைக்கதையை ஜாக்கி போட்டுத்  தூக்கி நிறுத்த வேண்டாமா சேட்டன்ஸ்? 
 
முதல் பாதியில் ராமரின்  கிடா காளி தோற்றுப் போனதற்குரிய காரணம் என்னவாக  இருக்கும் என்பதை எல்லோராலும் யூகிக்க முடியும் அளவுக்கு சாதாரணமாக இருக்கிறது . அதாவது முதல் பாதி ஆடுகளம் என்றால் இரண்டாம் பாதி தாய்க்குப் பின் தாரம் உள்ளிட்ட படங்களில் வந்த விஷயம்தான். 
 
அது  தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் ஏதாவது ரசிக்கும்படி இருக்கும் என்று பார்த்தால்,, அதுவும் இல்லை.
 
அம்மு அபிராமி, சரண்யா ரவிச்சந்திரன் , மதுசூதன ராவ் ஆகியோர் மட்டும் கொஞ்சம் சூதானமாக நடித்து இருக்கிறார்கள். 
 
படத்துக்கு எந்த பலனும் தராத ஒரு பத்து பைசா காதல் டிராக் வருகிறது . அதாவது சுவாரஸ்யமாக சுவையாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை . எனவே அந்த பத்து காசும் செல்லாக் காசு ஆகிறது. 
 
படத்தில்  நாயகனுக்கு சில அட்டகாசமான சிச்சுவேஷன்களை  எழுதி இருக்கிறார் இயக்குனர் பிரபாகல்.  ஆனால் ஹீரோவாக நடித்து இருக்கும் யுவன் கிருஷ்ணன்,  சுவர் மாதிரி நிற்கிறார். அட,  மற்றவர்கள் நடிப்பதை பார்க்கவாவது செய்யலாம். அதை பார்க்கக் கூட  மாட்டேன் என்கிறார்  அந்தக் காட்சியைப்  பார்க்கும் நம்ம முகத்தில் வரும் ரியாக்ஷன் கூட அவர்  முகத்தில் வர மாட்டேன் என்கிறது . பீரங்கி முன்னால் அவரை நிறுத்தி,  நடிக்கலன்னா  சுட்டுப் பொசுக்குவோம் என்று சொன்னால் கூட  நடிப்பாரா என்று தெரியவில்லை. 
 
அது கூடப் பரவாயில்லை. 
 
படத்தின் இயக்குனர் பிரபகல் ”நான் மலையாளியாக இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு பரிசாக இந்தப் படத்தைக் கொடுத்து இருக்கிறேன்” என்றார்  . மதுரை மண்ணில் நடக்கும் இந்தக் கதையில் ஹீரோ , வில்லன் எல்லோரும் மலையாளிகள் . அவர்கள் மலையாளியாக இருப்பது கூட ஓகே, ஆனால் மலையாளியாகவே தெரிகிறார்கள்.
 
 மற்ற கேரக்டர்கள் எல்லாம் மாநிறமாக அல்லது கருப்பாக மண்ணின் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக இருக்க, ஹீரோ வில்லன் இருவரும் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் இருக்கிறார்கள். 
 
”இவர்கள் இந்த குடும்பத்துப் பிள்ளைகளாக இவர்கள் இருக்க வாய்ப்பில்லையே; அவர்கள் இருவரையும் அனாதை இல்லத்தில் இருந்து தத்தெடுத்து  வந்தார்களோ” என்கிற மாதிரியே இருக்கிறார்  ஹீரோ. 
 
அட இது கூட போகட்டும் .. படத்தில் வில்லனாக நடித்திருக்கும்  ரிதன் கிருஷ்ணதாஸ் ஹீரோ கேரக்டருக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார். அவரை ஹீரோவாகப் போட்டு விட்டு இப்போது ஹீரோவாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணனை  வில்லனாகப் போட்டு இருந்தால் கூட, நன்றாக இருந்திருக்கும் .ஏனென்றால் ஒப்பீட்டு அளவில் ரிதன் கிருஷ்ணதாஸ் கொஞ்சம் நன்றாக நடிக்கிறார். 
 
அட இதுவும் போகட்டும் . ‘ஜல்லிக்கட்டு போல கிடாச் சண்டையும்   வீர விளையாட்டு” என்று படத்தில் சொல்கிறார் இயக்குனர் . 
 
ஜல்லிக்கட்டு என்பது கூர் தீட்டப்பட்ட கொம்புகளோடு பாய்ந்து வரும் மாட்டை மனிதன் வெறும் கையால் வீரத்தோடு எதிர் கொள்ளும் விளையாட்டு . எனவே அது வீர விளையாட்டு . 
 
ரெண்டு ஆடுகளை முட்டிக் கொள்ள வைத்து எது மண்டை பிளந்து சாகிறது என்பதை வைத்து அதை வளர்க்கும் மனிதரில் யார் வெற்றியாளர் என்று முடிவு செய்வது  எப்படி வீர விளையாட்டு ஆகும் ? அ பொழுதுபோக்கு, கேளிக்கை விளையாட்டு தான். 
 
இப்படியாக   வீர விளையாட்டு பற்றிய புரிதலே இல்லாமல் கிடாச் சண்டை படத்தை எடுத்து இருப்பவர்கள்  எப்படி எழுதி  இருப்பார்கள்  என்பதை புரிந்து கொள்ள முடியும் . எனவேதான் இரண்டாம் பகுதி ரொம்ப கவலைக்கிடமாகப் போய்விட்டது .
 
அட இது கூடப் போகவே போகட்டும் 
 
கிடாச் சண்டை மூலம் மதுரையின் கலாச்சாரத்தை நான் வெளியே சொல்கிறேன் என்று சுயமாக பேட்ச் குத்திக் கொண்டு இருக்கிறார்  இயக்குனர் பிரபகல். 
 
ஆனால் கிடாச் சண்டையில்  தோற்றவன் ஜெயித்தவன் வீட்டுக்குப் போய் அவனது அக்காவிடம் தப்பாக நடந்து கொள்வதும், வீட்டில் உள்ள சிறுமியின் காதில் உள்ள தங்கத்  தோட்டை பிய்த்து இழுத்து காதை ஊனமாக்குகிறான் என்று எல்லாம் காட்சி வைத்து விட்டு , ”இதுதான் மதுரை கல்ச்சர்” என்று சொல்லும் ஓர் இன்டெலக்சுவல் அரகன்ஸ்  இந்தப் படத்தில் ஸ்ட்ராங்காக இருக்கிறது.
 
படம் முடிந்த நிலையில் ஒரு பத்திரிகையாளர், ”  இப்படி காட்சி வைத்து விட்டு இது மதுரையின் கலாச்சாரம் என்று சொன்னால் நியாயமா?’  என்று கேட்டபோது, “அங்க இன்னும் மோசமா நிறைய இருக்கு. அடுத்தடுத்த படங்களில் சொல்வேன் ” என்றார் இயக்குனர் பந்தாவாக. 
 
வேறொரு எந்த மாநிலத்திலாவது மற்ற மாநிலத்தில் இருந்து போன ஒருவர், அந்த மாநிலத்தின் கலாச்சாரம் என்ற பெயரில் தவறான விஷயம் ஒன்றை சொல்லி விட்டு, அடுத்த படத்தில் இன்னும் சொல்வேன் என்று சொல்ல முடியுமா?
 
உடனே  இயக்குனரிடம், ” வெற்றி பெற்றவன் வீட்டுக்கு தோற்றவன் போய் அவன் வீட்டுப் பிள்ளையின் காதில் உள்ள நகையை அறுப்பதுதான் மதுரையின் கலாச்சாரம் என்று சொல்கிறீர்களா? ” என்று கேட்டேன். 
 
உடனே படம் சம்மந்தப்பட்ட நண்பர் ஒருவர் , ” அப்படி காட்டக் கூடாது என்று   G.O.  எதுவும் இருக்கா?’ என்றார் ( G.O. என்றால்  (GOVERNMENT ORDER – அரசு உத்தரவு) 
 
உடனே நான் “கலாச்சாரத்தைச் சொல்கிறேன் என்ற போர்வையில் யதார்த்தமாக நடக்கு விஷயங்களுக்கும் அப்பாற்பட்டு கேவலமாக காட்டலாம் என்று G.O. எதுவும் இருக்கா? படம்,  கதை என்று  என்ன வேண்டுமானாலும்  சொல்லுங்கள் . ஏன் கலாச்சாரத்தைக் காட்டினோம்  என்று சொல்கிறீர்கள்? கலாச்சாரம் என்று சொல்லாதீர்கள்  ”  என்றேன் . அதை ஏற்றுக் கொண்டார்கள். 
 
ஏனெனில் தப்பாக சொல்லக் கூடாது என்றுதானே  அரசு G.O. போடும்  இங்கே வந்து இந்த மண்ணின்  கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டு இந்த மண்ணையே கேவலப்படுத்த அனுமதி கெடுக்கும்படியாக எந்த அரசும் G.O.போடாது  அல்லவா? 
 
அட .. இதுவும் கூட ஏதோ பரவாயில்லை…
 
இல்ல…  இதற்கு மேல் வேண்டாம் . 
 
திரைக்கதையில் முதலில் ஹீரோவின் கிடா ஜெயிக்கிறது . அப்புறம் வில்லனின் கிடா  ஜெயிக்கிறது. எனவே   எப்படி ஹீரோவின்  ஆடு தோற்க முடியும் என்ற கேள்வி வரும்போதுதான் என்ன நடந்து இருக்கும் என்று சுலபமாக யூகிக்க முடிகிறது. 
 
அதையே முதலில் வில்லனின் கிடா ஜெயிக்கிறது அடுத்து ஹீரோவின் கிடா  ஜெயிக்கிறது என்று திரைக்கதை அமைத்து இருந்தால் அடுத்து நடப்பவற்றை யூகிக்க முடியாமல் போயிருக்கும். இரண்டாம் பாதி இவ்வளவு பலவீனமாக ஆகி இருக்காது. 
 
ஆனால் இவர்களுக்கு அந்த சிந்தனை எல்லாம் இல்லை. மதுரையின் கதையில் மதுரைக்காரன் என்ற தோற்றத்துக்கு பொருத்தமே இல்லாத ஆட்களை ஹீரோவாகப்  போடவேண்டும் ;  மதுரையின் கலாச்சாரத்தை சொல்கிறோம் என்ற பெயரில் சண்டைக் கிடாக்களை வளர்ப்பவர்கள், சின்னப் பிள்ளையின் காதை   அறுத்து தோடுகளைப் பறிக்கவும் தயங்க மாட்டர்கள் என்று சொல்வதில் மட்டுமே குறியாக இருந்திருக்கிறார்கள். 
 
என் எஸ் கே உதயகுமாரின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள். 
 
கிடாச் சண்டை ஷாட்களை தொகுத்த விதத்தில் எடிட்டர் என் பி ஸ்ரீகாந்த் பங்களிப்பும் சிறப்பு .
 
இதற்கு முன்பு இதே இயக்குனர் பிரபகல் , (பிற்பகல் ன்னு   படிக்காதீங்கப்பா,  பிளீஸ்!.)   MUDDY  என்ற பெயரில்,  சேறு சகதியில் நடக்கும் கார் பந்தயத்தை வைத்து,  அட்டகாசமான மேக்கிங்கில் ஒரு படம் எடுத்து இருந்தார் . MUDDY  என்றால் சகதி என்று பொருள்.
 
உண்மையில் வித்தியாசமான சினிமா முயற்சிகளை   தூக்கி நிறுத்தும் ஜாக்கி போல இருந்தது அந்த   MUDDY. 
 
ஆனால்  இந்த ஜாக்கி  …. வெறும்  MUDDY. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *