காலா @ விமர்சனம்

வுண்டர் பார் பிலிம்ஸ்  சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், 

ரஜினிகாந்த், நானா படேகர் , ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ் , அஞ்சலி பட்டேல் மற்றும் பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் நடிப்பில் , 

 அட்டகத்தி,  மெட்ராஸ் , கபாலி படங்களின் இயக்குனரும், சினிமா மற்றும் இலக்கியத்தில் தலித்திய அரசியலுக்கு ,
 
நேரடியாக முக்கியத்துவம் கொடுப்பவருமான  பா. ரஞ்சித் இயக்கி இருக்கும் படம் காலா . படம் விழாவா இல்லை காலியா ? பேசலாம்  . 
 
தமிழகத்தின் திருநெல்வேலி பகுதியில் இருந்து மும்பை தாராவிக்கு சென்று செட்டில் ஆகும் தமிழ் மக்களில் ,
 
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்த்த வேங்கையனும் ஒருவர்.
 
 அங்கு வந்து சேர்ந்து  நிலத்தைப் பண்படுத்தி,  காலகாலமாக வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை வேற்று மொழிகளின் ஏழை மக்களுக்கும் துணையாக இருக்கிறார் அவர் அதே நேரம் அந்த மக்கள் சீர் செய்து உருவாக்கிய நிலத்துக்கு  பெரிய சந்தை மதிப்பு வந்த உடன் , அந்த மக்களை விரட்டி விட்டு, நிலத்தை  தமதாக்கப் பார்க்கிற — 
 
பம்பாய்  எமதே என்ற கோஷத்தோடும்   மத வெறியோடும் போராடும் ஆதிக்க சாதி அமைப்பின் பிரதிநிதியாக  இருக்கும் ஒருவன், 
 
வேங்கையனை கொல்வதோடு அவர் மகன் கரிகாலனுக்கும் ( ரஜினிகாந்த்) , ஓர் இஸ்லாமியப் பெண்ணுக்கும் ( ஹீமா குரேஷி) நடக்க இருந்த திருமணத்தையும் சிதைக்கிறான் .
 
காதலியைப் பிரிந்த நிலையில்  திருநெல்வேலிப் பெண் செல்வியை (  ஈஸ்வரி ராவ்)  திருமணம் செய்து கொள்ளும் கரிகாலன்,
 
நான்கு  மகன்கள் , மருமகள்கள் , பேரப் பிள்ளைகள் என்று வாழும் காலா சேட் என்ற பட்டப் பெயரோடு தொடர்ந்து தாராவி மக்களுக்கு பாதுகாப்பாக  இருக்கிறார் . 
 
பம்பாய் போய் மும்பை வந்த நிலையில் இப்போது மும்பை எமதே என்ற கோஷத்தோடு,
 மத வெறியோடு போராடும் ஆதிக்க சாதி அமைப்பின் தலைவனாக இருக்கும் ஹரி தாதா (நானா படேகர்), 
 
மும்பை ஆளும் கட்சி யின் துணையோடு , இன்று மும்பையின் இதயமாக , மிக உயர்ந்த நில மதிப்பில் இருக்கும் தாராவியில் உள்ள மக்களை விரட்டி அடித்து ,
 
தூய்மை மும்பை என்ற வஞ்சகத் திட்டத்தின் மூலம் அங்கே புதிய குடி இருப்புகளைக் கட்டி அதை பணக்கார்ரகளுக்கும் தனது மொழி சாதி , மத , கட்சி நபர்களுக்கு மட்டும் திட்டமிடுகிறான் . 
 
இந்த சதி புரியாமல், காலாவின் இளையமகனும் , தாராவிக்கே மீண்டும் திரும்பி வரும் காதலியும் ஹரி தாதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் .
 
ஹரி தாதா தீவிரமாக இறங்க , காலா தீவிரமாக எதிர்க்க, கலவரம் வெடிக்க, காலா சில உறவுகளை இழக்க, கடைசியில் ஹரி தாதா காலாவையும்  சுற்றி வளைக்க,, 
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த காலா . 
 
பெருநகர்களில் வாழும் ஏழை மக்களை சேரி என்று பெயரிட்டு  ஒதுக்கி அவர்களை அந்த மண்ணில் இருந்தே விரட்டி, 
 
அதை பணக்கார்களுக்கும் அந்நிய முதலாளிகளுக்கும் பட்டா போட்டுத்தரும் கார்ப்பரேட் அடி வருடி அரசியலை சாடுவதை அடிப்படையாகக் கொண்ட படம் . 
 
மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் முக மூடியை கிழிக்கும் கதை. ஓர் இடத்தில் டிஜிட்டல் இண்டியா என்று நேரடியாக குறை சொல்லவும் தவறவில்லை . 
 
அதே நேரம், படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் ஹரி தாதா கேரக்டரும் சிவ சேனா, ஆர் எஸ் எஸ் , பாஜக ஆகியோரையே குறியீடாக காட்டுகிறது . 
 
ஹரிதாதாவின்  வழிபாட்டு முறையும் உயர் ஆதிக்க சாதியின் அடையாளங்களுடனே இருக்கிறது . 
 
இப்படியாக ரஜினிகாந்தின் நிஜ அரசியல் கொள்கைக்கு எதிரான – அதே நேரம் நியாயமான கருத்துகளை அடிப்படையில் தூக்கிப் பிடிக்கிறது காலா . 
 
தமிழகத்தில் இருந்து மும்பைக்கு சென்று தாராவிப் பகுதியை கட்டி ஆண்ட வரதராஜ முதலியார் , திராவியம் நாடார் உட்பட பலரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே . 
 
ஆனால் இந்தப் படத்தில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு சென்று தாராவியைக் கட்டிக் காத்த தாழ்த்தப்பட்ட தமிழன் என்று காலாவை சித்தரிப்பதன் மூலம், 
 
சாதி சமத்துவ அரசியலாகக் காட்டுகிறார்  ரஞ்சித் . (கபாலி படத்தில் காட்டப்படும் மலேசியத் தமிழர்களின் போராட்டத்திலும், 
 
இப்படித்தான்  நாயகனை தாழ்த்தப்பட்ட தமிழனாக ரஞ்சித் சித்தரித்து இருந்தார்  என்று ஒரு கருத்தும் உண்டு  )
”நிலம் உங்களுக்கு அதிகாரம் ; எங்களுக்கு வாழ்க்கை” உள்ளிட்ட சில இடங்களில் வசனம் அருமை . 
 
கணவன் மனைவி, குடும்பம் , உறவுகள் விசயத்தில் ரஞ்சித் அமைத்து இருக்கும் காட்சிகளின் நேர்மை பாராட்ட வைக்கிறது . சிறப்பு 
 
”டிக்கட் போடு நானும் ஒரு எட்டு ஊருக்கு போய் என் முதல் காதலனை பார்த்துட்டு வர்றேன் ” என்று கரிகாலனிடம் செல்வி அதிர வைக்கும் காட்சி  கலகல லகலக !
 
வயதுக்கேற்ற கேரக்டரில் ரஜினி . 
 
ஒத்தையிலே நிக்கேன் . வாங்கலே .. என்கிறார் . அடுத்த நொடி ரஜினியின் டீம்தான்  வந்து எதிரிகளை அடிக்கிறது . அதையும் தாண்டி ஓர் அப்பாவியை பறி கொடுக்கிறது ரஜினி டீம் . 
போலீஸ் ரஜினியை தனி அறையில் போட்டு சுற்றி வளைத்து அடிக்கிறது . கீழே கிடக்கும் ரஜினியை எட்டி உதைக்க போகிறார் வில்லன்.
 
இப்படியாக வழக்கமான சூப்பர் ஹீரோ இமேஜில் இருந்து வெளியே வந்து இருக்கிறார் ரஜினி .  சிறப்பு . தமிழ் சினிமாவுக்கும் ஓர் அமிதாப் பச்சன் கிடைக்கட்டும் . 
 
குடித்து விட்டு சலம்புவது, மனைவியிடம் பம்முவது போன்ற காட்சிகளில் ,  ரஜினியின் பழைய  ரகளையை அப்படியே  பார்க்க முடிகிறது . சூப்பர் !
 
ஈஸ்வரி ராவ் உற்சாகமாக நடிக்கிறார் . ஆனால் பேச்சில் தெலுங்கு வாசனை .
 
ஏன் ரஞ்சித் சார், பக்காவான திருநெல்வேலித் தமிழ் பேசும் ஒருவரை நடிக்க வைக்கவோ அல்லது பின்னணி பேச வைக்கவோ செய்து இருக்கக் கூடாதா ? 
 
சமுத்திரக்கனி நடிப்பில் ஏகப்பட்ட செயற்கைத்தனம் எனினும் , தம்பி ராமைய்யா பாணியில் அவுட் பிளாக்கில் டப்பிங்கில் பேசி இருக்கும் கமெண்டுகளில் கலகலக்க வைக்கிறார் . அருமை 
 
ஹூமா குரேஷி ஒகே . 
 
காலாவின் கடைசி மகனை காதலிக்கும் மராத்தியப் பெண்ணாக வரும் அஞ்சலி பட்டீல் கவனிக்க வைக்கிறார் . 
 
சிறு சிறு அசைவுகள், அரைக்கால் புன்னகை என்று அசத்துகிறார் நானா படேகர் . 
 
படத்தில் நாயகனுக்கு கரிகாலன் என்று பெயர் வைத்த ரஞ்சித்  காலா சாமி, காக்கும் சாமி போன்று,  தலித்திய அரசியலை முன்னெடுக்கும் நிலையில், 
 
அதற்கும் அப்பாற்பட்டு ஒரு காட்சியிலாவது ,  மாமன்னன் கரிகால் சோழனைப் பற்றி பேசி இருக்கலாம் .ராமகாதை போற்றும் உயர் சாதி மேட்டுக்குடி மக்கள் நிஜ வாழ்வில் எவ்வளவு அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதையும், 
 
ராவணனாக சித்தரிக்கப்படும் கரிகாலன் எவ்வளவு நல்லவர் என்பதை காட்சிப் படுத்தும்  இடத்தில், 
 
வரலாற்றின் உண்மை சொல்லும் சிறந்த சமூக அக்கறை இயக்குனராக ஜொலிக்கிறார் பா. ரஞ்சித் 
 

மும்பை  வில்லன் தோற்கடிக்கப்பட்ட பிறகு சென்னையில் அப்படி சேரிகளை ஒழிக்க  கிளீன் சென்னை என்ற பெயரில் திட்டம் கொண்டு வருபவராக ,

ஒரு பேனரில் காட்டப்படுபவருக்கு H.JARA என்று பெயர் . விஷ்ஷ்ஷ்ஷ்ய்ய்யய்யய்ய்ய்….. !

ஆனால் பிரச்னை என்ன என்றால் … 
 
படத்தில் வரும் காலா ‘போராட்டம்தான் சிறந்த ஆயுதம் ‘என்கிறார் .
 
ஆனால் ஆன்மீக அரசியல் ரஜினியோ நிஜத்தில் ”நியாய தர்மம் பற்றி கவலைப்படாமல்   எதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ணினால் நாடு சுடுகாடு ஆகி விடும் ”என்கிறார் . 
 
படத்தில் வரும் காலா , “பாதிக்கப்பட்டவன் கொந்தளிக்கும் போது திருப்பி அடிக்கத்தான் செய்வான் “என்கிறார்.
 
ஆனால் ஆன்மீக அரசியல் ரஜினியோ ”தூத்துக்குடி போரட்டத்தில் (முதல் வரிசையில் வந்த பெண்கள்  மார்பு மீது போலீஸ் கை வைத்துத் தள்ளினாலும் ) சீருடை அணிந்த காவலர்களை  மற்றவர்கள் அடிப்பதை நான் மன்னிக்க மாட்டேன் “என்கிறார் .
படத்தில் வரும் காலா “அந்தக் காலத்துல அயோக்கியனை ரவுடின்னு சொல்வாங்க . இப்போ நியாயம் கேட்பவனை ரவுடின்னு சொல்றாங்க” என்று வருத்தப்படுகிறார் .
 
ஆனால் யாரை அநியாயமாக ரவுடின்னு சொல்றாங்க என்று காலா நியாயமாக வருத்தப்படுகிறாரோ , அவரைத்தான் ஆன்மீக அரசியல் நிஜ ரஜினி” சமூக விரோதிகள்” என்றார் .  
 
”அடங்க மறு ; அத்து மீறு” என்கிறார்  காலா.
 
ஆனால் அப்படி அடங்க மறுத்தால் சுடத்தான் செய்வாங்க . எதுனாலும் கோர்ட்டுக்குத்தான் போகணும் ” என்கிறார் ஆன்மீக அரசியல் பேசும் ரஜினி .  
 
ரஜினியின் நிஜ அரசியல்கருத்துப்படி இந்தப் படத்தை முடித்து இருந்தால் , காலாவின் பொண்டாட்டி மருமகள்கள் , பேத்தி .. அட அவ்வளவு ஏன், காலாவைக் கூட வாயில் சுட்டுதான் கொன்று இருக்க வேண்டும்.
“சினிமாவை சினிமாவா பார்க்கணும் . காலாவை கலையாதான் பார்க்கணும் .  இதுல அரசியல் பார்ப்பது முட்டாள்தனம் …..”
 
இந்த வெங்காயம், வெண்ணை தடவுன வீட் பிரட்  எல்லாம் எங்களுக்கும் தெரியும் . ஆனால் அது அரசியலுக்கு வராத சினிமா நடிகனுக்குத்தான் பொருந்தும் . 
 
ஒருவேளை   வடிவேலு போன்ற காமெடி நடிகருக்கோ பிரகாஷ் ராஜ் போன்ற  வில்லன் நடிகருக்கோ வேண்டுமானால் அரசியலுக்கு வந்த பிறகும் பொருந்தலாம் 
 
ஆனால்….
 
‘ஆண்டவனாலும் தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது’  என்று ஆரம்பித்து ”சிஸ்டம் சரி இல்ல ; போர் வரும்போது பார்க்கலாம்” என்றெல்லாம் தொடர்ந்து , ”விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்” என்று அறிவித்து, ரசிகர் மன்றங்களை பூத் கமிட்டி ஆரம்பிக்க சொல்லி இருக்கிற ….
 
நாற்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட….
 
லட்சக் கணக்கான ரசிகர்களை வைத்து இருக்கிற ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார்  விசயத்தில், 
 
அதுவும் மக்களுக்கான — அதிலும் ஒடுக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கான அரசியலை பேசும் ஒரு படம் பற்றிய விமர்சனத்தில் 
 
சினிமாவை சினிமாவாதான்  பார்க்கணும் . காலாவை கலையாதான் பார்க்கணும் , என்று பினாத்துவது எல்லாம் பித்துக்குளித்தனம் . 
 
விஷயம்  என்ன வென்றால் ….
 
பிரிச்சு மேஞ்சு பின்னிப் பெடல் எடுத்து அடித்து நொறுக்குகிறார் காலா என்கிற கரிகாலன். !
 
யாரை ? நேர்மாறான அரசியல் பேசும்  நிஜ ரஜினியை.!
 
அதுதான் இந்த படத்துக்கான பெரிய வில்லங்கம் 
 
தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட பட்டத்து யானை … சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது.. சேம் சைடு கோல்…..
 
இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் .
 
காலா படம் பேசும் அரசியலுக்கு ரஜினியின் நிஜ அரசியல் கொஞ்சமாவது சம்மந்தப்பட்டு இருந்தால் ,
 
எம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன் போல ரஜினிக்கு இந்தப் படம் அமைந்து இருக்கும் . 
அல்லது ரஞ்சித்தாவது இந்தப் படத்தை ரஜினியை வைத்து எடுக்காமல் வேறு யாரையாவது  வைத்து எடுத்திருந்தாலாவது கூட,
 
‘மெட்ராஸ்’ ரஞ்சித்தின் விஸ்வரூபமாக இந்தப் படம் இருந்து இருக்கும் . 
 
இரண்டும் இல்லாத காரணத்தால் …
 
காலா …. கால்வாசி கூட இல்லை . 
 
மகுடம் சூடும் கலைஞர் 
—————————————
பா. ரஞ்சித் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *