கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்க, சிபி ராஜ், நாசர், நந்திதா மற்றும் பலர் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கும் படம் கபடதாரி .
கன்னடத்தில் வந்து பெரும் பெயர் பெயர் பெற்ற கவுலுதாரி படத்தை மறு ஆக்க உரிமை ஆக்கி திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார் தனஞ்செயன்.
சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றவியல் காவல் ஆய்வாளராக இருப்பதுதான் கவுரவம் என்று எண்ணும் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் ( சிபிராஜ்),
தனது பணிப் பகுதியில் பாலம் கட்ட தோண்டப் பட்ட குழியில் கிடைத்த எலும்புக் கூடு மற்றும் மண்டையோடுகள் தொடர்பான ஒரு வழக்கில் மூக்கை நுழைத்து விசாரிக்க ஆரம்பிக்க….
அது இந்திரா காந்தி ஆட்சியின் எமர்ஜென்சி காலம், அப்போது கிடைத்த ஒரு மன்னர் காலப் புதையல் , அதை பாதுகாத்த கருவூல அதிகாரி,
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் , அதற்காக நடந்த கொலைகள் , நடைப்பிணமாக வாழும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி (நாசர்) என்று பயணிக்கிறது.
கடைசியில் காவல் ஆய்வாளர் என்ன ஆனார் என்பதே படம்.
ஆரம்பக் காட்சிகளே அளவுக்கு மீறிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது .
தொடர்ந்து ஷூ போட்டுக் கொள்பவர்கள் பின் காலில் ஏற்படும் புண்ணைத் தவிர்க்க பிளாஸ்திரி ஒட்டிக் கொள்வதை காட்டுவது ( அதுவும் கிளைமாக்சில் கால் மாற்றி ஒட்டி இருப்பது சிறப்பு ),
நாயகன் ஒவ்வொரு கேஸ் ஃபைலாக படிக்கப் படிக்க, ஃபைலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் எதிரே உருவமாக அமர்ந்து இருப்பது, (அதிலும் நாயகன் தவற விடும் இன்னொரு வழக்கின் மாந்தர்கள் ‘இப்போதும் நமக்கு நீதி கிடைக்கலியே’ என்று சோகமாக வெளியேறுவது அபாரம் )
–போன்ற விசயங்களில் ஜொலிக்கிறார் இயக்குனர் பிரதீப்.
கேரக்டருக்கு மிகப் பொருத்தமாக நடை உடை பாவனைகள் நடிப்பு என்று நாயகன் கதாபாத்திரத்துக்கு மிகப் பெரிய நம்பகத் தன்மையை உருவாக்குகிறார் சிபி.
தனது அட்டகாசமான அற்புதமான நடிப்பால் இன்னொரு ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் நாசர் .
சிறிய கதாபாத்திரம் என்றாலும் நந்திதா சிறப்பு .
பாதிக்கப்படும் பணக்காரர் கதாபாத்திரத்தில் ஜே எஸ் கே சதீஷ் குமார் பொருத்தம்
பத்திரிகையாளராக ஜெயப்பிரகாஷ் சற்றே பிரகாசம் .
ராசாமதியின் ஒளிப்பதிவானது காட்சி மற்றும் சூழலுக்கான உணர்வை தரக்கூட்டல் செய்து தருகிறது.
சைமன் கே கிங்கின் இசையில் கபடதாரி பாடலும் சுமன் ரங்கநாத் ஆடும் பாடலும் கவனம் கவர்கிறது என்றால் பின்னணி இசையால் முன்னணிக்கு வருகிறார் கிங். பல இடங்களில் ஸ்லோ மோஷன் காட்சிகள் அர்த்தமுள்ளதாக வெளிப்பட பின்னணி இசை முக்கியக் காரணம். சபாஷ் .
இரண்டாம் பகுதியில் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் நீள நீள ரவுண்ட் ட்ராலி வசனங்கள், அதீத சினிமாத்தனம் இவற்றைக் குறைத்து இருக்கலாம். கடைசி திருப்பம் எல்லாம் ஓவர் லோடு.
கபடதாரி…. வித்தியாசமான அனுபவம்
