காந்தாரா -2 @ விமர்சனம்

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் மற்றும் சலுவே கவுடா தயாரிக்க, ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா, கல்மேஷ் நடிப்பில் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி இருக்கும் படம். 
 
முதல் கந்தாராவின் அதே சூழலில் காடு மலை வாழ் பழங்குடி மக்கள் பற்றிய இன்னொரு கதை . 

 
காந்தாராவில் வாழும் மலைவாழ் பழங்குடி இனச் சிறுமி ஒருத்தி,  ஆற்று நீரில் திரிசூல வடிவம் கீறப்பட்ட கருணீகக் கல் எனும் கல்லைப் பார்க்கிறாள். அதுபோல வேறு சில கற்களும் கிடைக்கின்றன. 
 
தாம் வாழும் பகுதி ஈஸ்வரனின் பூந்தோட்டம் என்ற புராணக் கதையை காலகாலமாக நம்பும் மக்கள் அவர்கள் . 
 
அந்த நேரம் பார்த்து கடப்பாவாசிகள் (தமிழ் மொழி மாற்றின்படி) என்ற  எதிரிப் பழங்குடி மக்கள் அவர்களைக் கொல்ல வர, அதில் வெற்றி பெறும் காந்தாரா மக்கள் அதற்கு கருணீகக் கற்களே என்று நம்பி, அவற்றை சிவனின் வடிவமாக எண்ணி  வணங்க ஆரம்பிக்கிறார்கள். அது அவர்களுக்கு மகிழ்வையும் செழிப்பையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது .
 
இன்னொரு பக்கம் அந்தக் கற்களைக் கவர்ந்து அவர்களின் அந்த தெய்வத்தை மந்திரக் கட்டு மூலம் தம்  வயப்படுத்தி,  தங்களுக்கு நல்லது செய்ய வைக்கவும் , காந்தாரா மக்களுக்கே எதிராகத் திருப்பவும் கடப்பாவாசிகள் திட்டமிடுகிறார்கள் . 
 
அதே போல நவீன கர்நாடகாவின் மிகப் பழைய அரச குடும்பமான கடம்பா அரசின் பிரிவான பாங்க்ரா தேச அரசன்   (ஹரிபிரஷாந்த் எம் ஜி ) ஒருவனும்,  காந்தாரா தேசத்தை அடிமைப்படுத்தி மக்களைக் கொன்று அல்லது அடிமைகளாக்கி , சிவ சக்தியைக் கவர்ந்து தங்கள் நாட்டுக் கொண்டு போவதோடு,  காந்தாராவின் இயற்கை வளங்களை தொடர்ந்து அனுபவிக்க எண்ணி பெரும்படையோடு வந்து,   காந்தாரா மக்களைக் கொன்று ரத்த ஆறு ஓட வைக்கிறான் . எனினும் மன்னன் நினைத்தது நடக்கவில்லை. அவனும் செத்து விட , 
 
 இனி காந்தாரவுக்குள் பாங்க்ரா அரசோ , பாங்க்ரா தேசத்துக்குள் ஆதிக்க நோக்கத்தோடு காந்தாரா ஆட்களோ நுழையக் கூடாது என்று ஒப்பந்தம் நிகழ்கிறது . 
 
மன்னனின் மகன் விஜயேந்திரன் – தமிழில் ராஜ சேகரனுக்கு – (ஜெயராம்)- இரண்டு பிள்ளைகள் . மூத்தவன்  குலசேகரன் (குல்ஷன் தேவய்யா), இளையவள் கனகவதி ( ருக்மிணி வசந்த்) . 
 
பிறந்த போது அந்தப் பெண் குழந்தை அசைவற்று இருக்க, ஒரு ராட்சஷக் குலப் பெண் தொட்ட உடன் அதற்கு உயிர்ப்பு வருகிறது. . தாய்ப்பால் கொடுத்ததும் அந்த ராட்சஷ(?)ப் பெண்தான் . 
 
சிவாஜி நடித்த மனோகரா படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் நடித்த வசந்தன் என்ற,  ஆளும் தகுதியற்ற,  பேராசை உள்ள,  கேவலமான அரசன் கதாபாத்திரத்தின் நவீன போதை வடிவமாக குலசேகரன் இருக்கிறான் . 
 
குடித்து விட்டு சிம்மாசனத்தில் இருந்து உருண்டு விழுவது , நகர்வலம் போகும்போது அரண்மனை அதிகாரியும் சக குடிகார நண்பனுமாக போகேந்திராவை (பிரமோத் ஷெட்டி) எல்லோர் முன்னிலையிலும் வாடா போடா சொல்ல அனுமதிப்பது, மென்மையான இசையை ராஜ போதையில் ரசித்தபடி கழுத்தை வெட்டுவது கை காலை அறுப்பது என்று  வாழ்கிறான் . 
 
எனினும் வேறு வழி இன்றி அவன் மிரட்டல்படி அவனை மன்னன் ஆக்கி விடுகிறார் ராஜசேகரன் . 
 
கனகவதி அப்பாவுக்கு பலமாக இருக்கிறாள் . 
 
இந்த நிலையில்  காந்தாரா இனக் குழுவின் தலைவனாக உருவாகி இருக்கிறான் பெர்மே (ரிஷப் ஷெட்டி).
 
குலசேகரனுக்கு தன் அப்பா விஜயேந்திரன் போல இல்லாமல்,  தாத்தா மாதிரி காந்தாரா இனக்குழுவை அடக்கி ஆள வேண்டும் . வளங்களைத் தனதாக்க வேண்டும் . அங்குள்ள ஈஸ்வர சக்தியை தன் நாட்டுக்குக் கொண்டு வர  வேண்டும் என்ற வெறி . 
 
பெர்மேவுக்கோ  அரேபியா, ஐரோப்பா  உட்பட உலகெங்கும் இருந்து வணிகர்கள் வந்து வியாபாரம் செய்யும் பாங்க்ரா நாட்டு துறைமுகத்தில்,  தங்கள் மண்ணின் பொருட்களை அங்கே பண்ட மாற்று முறையில்  விற்று , தம் காந்தாரா மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி,  அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆசை. 
 
அதற்காக அவர்கள் பாங்க்ரா நாட்டுக்குள் நுழைந்து விட , அவர்கள் காந்தாரா ஆட்கள் என்று உணர்ந்த பாங்க்ரா ஆட்கள் அவனைப் பிடிக்க முயல , அங்கே வரும் கனகவதிக்கு பெர்மே காந்தாரா நபர் என்று தெரியவருகிறது . 
 
பெர்மேவுக்கு கனகவதியின் ஆதரவும் கிடைக்கிறது . அவள் மூலம்  ராஜசேகரனின் அனுமதியோடு  பாங்க்ரா துறை முகத்தில் பண்ட மாற்று வியாபாரம் செய்யும உரிமையையும் பெறுகிறார்கள் பெர்மே உள்ளிட்ட காந்தாரா ஆட்கள். 
 
கனகவதி தன்னையே பெர்மேவுக்குத் தர விரும்பி அணைத்தும்,  ஏதோ ஒன்று தடுக்க,  மறுத்து வந்து விடுகிறான் பெர்மே.
 
பெர்மேவுக்கு கொடுக்கப்பட்ட வியாபார உரிமையை  விரும்பாத குடிகார மன்னன் குலசேகரன்,  பெர்மேவும் சக இளைஞர்களும் பாங்க்ரா துறை முகத்தில் இருக்கும்போது,  
 
காந்தாரா சென்று பேயாட்டம் பே ஆட்டம் ஆடி தீயாட்டம் செய்து பெர்மேவின் அம்மா உட்பட ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளைக் கொன்று பேரழிவை ஏற்படுத்துகிறான் . 
 
விஷயம் தெரிந்து அங்கே போகும் பெர்மே உடம்புக்குள்,  முதல் பாக காந்தாராவின் கடைசியில் படம் பார்த்த எல்லாரையும் வியக்க வைத்து குளிகா தெய்வம் இறங்குகிறது . ஒரு குளிகா இல்லை . பலவேறு செயல்வடிவமும் பெயரும் கொண்ட குளிகா . 
 
அந்த ஆவேசத்தில் மன்னன் குல சேகரனை கண்ட துண்டமாக வெட்டிப் போடுகிறான் பெர்மே.. 
 
விஷயம் அறிந்த  ராஜ சேகரனும் கனகவதியும் அதிர்கின்றனர். 
 
மன்னன் இறந்த இழப்பைப் போக்கவும்  நாட்டுக்கு நல்லது நடக்கவும்  காந்தாரவில் உள்ள கருணீகக் கற்கள் வடிவ சிவ சக்தியை தங்கள் நாட்டில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்ய உதவும்படி காலில் விழுந்து கெஞ்சுகிறாள் கனகவதி. . 
 
‘ எங்கு இருந்தாலும் நம் தெய்வம்தானே , நம் மக்கள் எல்லோருமே  பாங்கரா நாட்டுக்குள் போக வரவும்  வியாபாரம் செய்யவும் முன்னேறவும் வாய்ப்புக் கிடைக்கும்”   என்று உள்ளுக்குள் உணர்ந்தபடி கருணீகக் கற்களை தருகிறான் பாங்க்ரா கோவிலில் சிவா சக்தியை பிரதிஷ்டை செய்ய ஒத்துக் கொண்டு , வந்து தருகிறான் பெர்மே… 
 
ஆனால் அதன் பின்னர் நடப்பது பெர்மே, காந்தாரா மக்கள் யாருமே எதிர்பாராத ஒன்று .  சக பழங்குடி எதிரிகளான கடப்பாவாசிகள்  காந்தாரா மக்களுக்கு எதிராக களம் இறங்க . 
 
நடந்தது என்ன ? அதன் விளைவுகள் என்ன என்பதே இந்த காந்தாரா 2 
 
காந்தாரா முதல் பாகத்துக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படுகிற கதையே காந்தாரா -2. 
 
காந்தாரா முதல் பாகத்தின் கதை அயோக்கியத்தனமானது . உண்மையான கடவுள் பக்திக்கு எதிரானது . 
 
பழங்குடி மக்கள் காலகாலமாக காத்து வாழும் மலைக் காட்டு நிலத்தை – இயற்கை வளங்களை அழிக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசும் உள்ளூர் பண முதலைகளும் கடம்ப வமிசத்தின் பூர்ஷ்வா மிச்ச சொச்சங்களும் விரும்பினால்…
 
  அதைக் கொடுத்து விட்டு அந்த மண்ணின் மைந்தர்கள் அனாதை போல வெளியேற வேண்டும் அல்லது அவர்களின் அடிமையாக வாழ வேண்டும் . அதுதான் நியாயம் என்ற கொடுமையை 
 
–  குளிகா பஞ்சுருளி தெய்வங்களை வைத்து மயக்கி நியாயப்படுத்தி சொன்ன,  சாதிக்க ஆதிக்க ஆணவத்தை உயர்த்திப் பிடித்த கேடுகெட்ட கேப்மாரி  படம் அது . 
 
வீரப்பன் மாதிரி ஒரு கேரக்டரை ஹீரோவாகக் காட்டி விட்டு ஒரு வசனத்தில் வீரப்பனையே கிண்டல் செய்யும் கன்னட வன்ம வெறி பிடித்த  ரொம்ப தப்பான படம்  இது. 
 
(குளிகா இறங்கும் அந்த கிளைமாக்ஸ் ஏரியாவும் அப்போது ரிஷப் ஷெட்டியின் நடிப்பும் இல்லாவிட்டால் அந்தப் படம் பலன் தந்திருக்காது )
 
அது பெரிதாக விமர்சிக்கப் பட ( தமிழ் நாட்டில் அதை கிழித்துக் கீரை விதைத்த முதல் ஆள் நான்தான்), 
 
 அவற்றாலேயோ அல்லது அந்த குளிகா பஞ்சுருளி தெய்வங்களும் துளு மக்களின் புத்த கோலா வழிபாடுகளும் கொடுத்த புத்தியோ என்னவோ , இந்தப் படத்தில் சரியான ஒரு கதையை  எடுத்து இருக்கிறார்; பழங்குடி மக்கள் பக்கன் நின்று இருக்கிறார் . ரிஷப் ஷெட்டி .
 
அதே போல கர்நாடகத்தின் பெருமையான கடம்ப வம்சத்தின்   வரலாற்றில் எப்படி வஞ்சகமும் துரோகமும் கொட்டிக் கிடந்தது அதன் ஆட்சி  ஒரு நிலையில் எப்படி இருந்தது என்பதை எளிய மக்கள் பக்கம் நின்று சொல்லி இருக்கிறார் . சக எழுத்தாளர்கள் அனிருத் மகேஷ், சனில் கவுதம் ஆகியோருக்கும் பாராட்டுகள். சனில் கவுதம் எழுத்தாளருக்கு உள்ள  அடக்கத்தோடு ஒரு கேரக்டரில்  நடித்தும் இருக்கிறார் . 
 
படத்தை விரிவாக எழுதி பிரம்மாண்டமாக இயக்கி இருக்கிறார்  ரிஷப் ஷெட்டி . அருமை . 
 
குளிகா உள்ளே இறங்கும்போது நடித்த அற்புதமான நடிப்பால் நம்மை பிரம்மிக்க வைத்த திறமை மற்றும் உழைப்பை இந்த பாகத்தில் இன்னும் விரிவாக்கிக் காட்டுகிறார் .அதுவும் விதமான குளிகாக்களின் செயல்பாடு என்று அவர் நடிக்கும் நடிப்பு,  வியப்பு. 
 
அந்த அடர் காடுகள், மலைகள் முகடுகள் , மேகங்கள் , அருவிகள் பாறைகள் என்று அசத்தும் லொக்கேஷன்கள் . இழுத்து மூச்சு விடுகிறோம் . 
தென் கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ரிஷப் ஷெட்டியின் சொந்த ஊரான குந்தாபுரா ,அதோடு சக்லேஷ்பூர் , கர்நாடகாவின் காடு மலைகள்,எல்லாம் பிரம்மிப்பு என்றால், அங்கே ஆக்ஷன் காட்சிகளில் காட்டப்படும் நெருப்பாட்டம் அதன் வழியே தெரியும் வராக ரூபம் என்று அந்த சினிமாட்டிக்  மேஜிக்கும்  அற்புதம் . அதில் அரவிந்த் காஷ்யபின் ஒளிப்பதிவுக்கும் அட்டகாசமான ஷாட்களுக்கும்  பெரும்பங்கு உண்டு .
 
அஜ்நீஷ் லோகேஷின் சிறப்பான இசை முதல் பாகத்தில் வந்த வராக ரூபம் பாடலின் அதே தெய்வீகம் என்று ரசவாதம் செய்திருக்கிறது  
 
 சண்டை இயக்குனர் அர்ஜுன் ராஜின் அட்டகாசமான சண்டை இயக்கம் . 
 
பல்கேரிய சண்டை இயக்குனர் டோடோர் லாசரோவின் கிளைமாக்ஸ் ஃபைட் பிரம்மாண்டம் என்றால் அர்ஜுன் ராஜின் சண்டைக் காட்சிகள் கியூட் மற்றும் பிரம்மாதம். 
 
,தரணி கங்கே புத்ராவின் கலை இயக்கம் கண்ணில் ஒத்திக் கொள்ளும்படி இருக்கிறது. பிரகதி ஷெட்டியின் உடைகள் வடிவமைப்பில் கேள்விகள் இருந்தாலும் நல்ல செலக்க்ஷன். கலெக்ஷன். – (அப்படியே எங்க டார்லிங் சனம் ஷெட்டிக்கும் ஒரு கேரக்டர் கொடுத்து இருக்கலாமே ரிஷப் ஷெட்டி).  சஞ்சித்தின் விஷுவல் எபெக்ட்ஸ் மிக நேர்த்தி. 
 
அப்புறம் ருக்மிணி வசந்த். வேறு என்ன சொல்ல வேண்டும் . பெயர் சொன்னால் போதும். அழகு தானாய் வழியும் . 
 
அவரது கேரக்டர் எடுக்கும் விஸ்வரூபம் யூகிக்க முடிந்த ஒன்று .. ஏன் என்றால் அதற்கான் அறிகுறிகளை ரிஷப் செடி டைரக்ஷன் மொழியில் இடைவேளைக்கு முன்பே சங்கேதமாக சொல்லி விடுகிறார் என்றாலும் அது நடக்கும்போது அபாரமாக இருக்கிறது .  
 
பேங்லானின் தயாரிப்பு வடிவமைப்பு நேர்த்தியாக இல்லாவிட்டால் இவை எல்லாம் சாத்தியப்படாது 
 
இதை எல்லாம் ஒன்றிணைத்த தயாரிப்பாளர்கள் விஜய் கிரகந்தூர், சலுவே கவுடா இருவரும் பாராட்டுக்குரியவர்கள் . ஒரு ஊருக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை கூட்டுவதே பெரும் செலவு. ஒரு நாடு, இரண்டு பெரும் இனக் குழுக்கள் வெளிநாட்டு வியாபாரக் கூட்டம்  என்று..  ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கில் ஆட்கள், அதில் சிறியதும் பெரியதுமாய்  பல நூறு கேரக்டர்கள் என்று வியக்க வைத்து இருக்கிறர்கள் . 
 
இந்த கேரக்டருக்கு எதற்கு ஜெயராம் என்று இடைவேளைக்கு முன்பு வரும் கேள்விக்கு இடைவேளைக்குப் பிறகு பதில் இருக்கிறது. 
 
சென்னாவாக வரும் பிரகாஷ் துமிநாடாவின் காமெடி நூற்றுக்கு நாற்பது தேறுகிறது . நாற்பது நாறுகிறது .இருபது சுள்ளான் கொsu போல் உரசி விட்டுப் போகிறது .
 
குடிகாரக் குலசேகரன் வரும் குல்ஷன் தேவய்யா ரசித்து நடித்துள்ளார். எனவே அது நம்மையும் ஈர்க்கிறது.  ஆனால் அவர்  உட்கார்ந்தபடி முன்னால் குனிந்து பேசும் காட்சிகளில் மார்பில் எதாவது துணி போட்டு மறைத்து இருக்கலாம்.
 
அவர் நடித்துள்ள  கேடுகெட்ட குடிகார அரசனுக்கு ஒரு கேரக்டர் எஸ்டாப்ளிஷ் சீன் என்று ஒன்று வைத்திருகிறார்கள் . 
 
அவன் அரசனாகப் பதவி ஏற்றதும் ஒரு புரோகிதர் ஆசீர்வாதம் செய்து பொட்டு வைக்க வருவார் . உடனே அரசன் “ஏன்  எப்பவும் நீங்கதான்  பொட்டு வச்சு ஆசிர்வாதம் பண்ணனுமா? நாங்க உங்களுக்குப் பண்ணா ஒத்துக்க மாட்டீங்களா? ” என்று பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்வான். உடனே ‘ இவர்தான் அரசர் .. இவர் ரொம்பக் கெட்டவர்’ என்று சொல்கிறார் ரிஷப் ஷெட்டி . 
 
அடப்பாவிகளா ? இப்படி சமூக நீதி பேசுபவன்தான் 75 வருடங்களுக்கு முன் தமிழில் வந்த பராசக்தி படத்தின் ஹீரோ . 
 
68 வருடம் முன்பு எம் ஜி ஆர் எழுதி இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் படத்தில் , அப்பா என்று கூப்பிடும் பெண்ணையே அனுபவிக்க துடிக்கும் ராஜகுரு கேரக்டர் , இப்படி பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்கிற கேரக்டர் தான் . 
 
தமிழில் பல இந்திய மொழிகளில் இப்படி எத்தனை படங்கள் . 
 
ஆனால் இந்த காந்தாரவின் காட்சியைப் பாருங்கள் . 
 
கன்னட சினிமா இன்னும் கூட கண்ணுக்குப் பிரம்மாண்டமான படங்களை எடுக்கலாம் . ஆனால் கருத்து பிரம்மாண்டத்தில் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமாவை நெருங்க முடியாது என்பதற்கு காஸ்ட்லி உதாரணம் இந்த காந்தரா -2. 
 
கருத்து ரீதியாக இப்படி என்றால் .. 
 
படத்தின் முதல் பாதியில் பல விஷயங்கள்  நல்லா இருக்கு. ஆனால் அது நல்லா இருக்கு என்பதாலேயே ஓவர் நீளத்தில் ஓவர் கால நேரத்தில் இருக்கு . ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தால் ஒரு நிலையில் அலுப்பு வரும் வரை காட்டுகிறார்கள் . 
 
தங்கத்தில் செய்த , கண்ணுக்கு அழகான காஸ்ட்லி காசு மாலையாவே இருக்கட்டும் . ‘கழுத்துல போட்டமா? கல்யாணத்துக்கு போனோமா? கண்காட்சி வைத்தோமா? வந்து கழட்டி பீரோவில் வச்சுட்டு கழுத்தைத் தடவிக் கொடுத்துட்டு வேலையைப் பாத்தோமா’ என்று இருக்கணும். 
 
அதை விட்டு விட்டு  ” அந்தத் தங்க காசு மாலையை வைத்துதான் மூக்கு சொறிவேன். முதுகு அரிப்பு நீக்குவேன் . கொசு அடிப்பேன் ” என்றால் எப்படி?
 
பாங்க்ரா துறைமுகத்தில்  ரிஷப் ஷெட்டி போடும் சண்டை நல்லாதான் இருக்கு . ஆனால் எவ்வளவு நேரம் ? ” போதும்பா.. வாழ்த்துகள் பாராட்டுகள். முடிச்சிட்டு அடுத்த சீன் போங்க” என்று சொல்லும் அளவுக்கு நீள்கிறது . இப்படி பல விஷயங்கள் . .
 
விளைவாக இரண்டாம் பகுதி அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் முதல் பாதி கொடுத்த அலுப்பின் பாதிப்பு காரணமாக  இரண்டாம் பாதியையும் பாதிக்கிறது . படத் தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் சுரேஷ் மல்லையா, 
 
அப்புறம் முக்கியமாக , ருக்மிணி என்றால் அந்த அழகிய மொசைக் முகம் , உப்பரிகை மாதிரியான தாவாய், சொப்பு இதழ்கள், முந்திரி மூக்கு , 
 
”என்னை உன்னால அவாய்ட் பண்ண முடியுமா?” என்ற கேள்வியில் உள்ள கேள்விக்குறி போன்ற காதுகள்..
 
 பக்கவாட்டில் சற்றே இழுக்கப்பட்டது போல இடுங்கி மான்கி பாத் போல … அதான் மனசின் குரல் போல சிரிக்கும் கண்கள்
 
 இவைதான் அழகு . உடல் மூடிய முகம் தான் ருக்மிணி . 
 
ஆனால் அவருக்கு கச்சை கட்டி, இடுப்பின் வெண்ணெய் வழுக்கலைக் காட்டுவது என்பது அவ்வளவு நன்றாக இல்லை. லஸ்டுக்கு ஒகே . லவ்வுக்கு சரி இல்லை. அதுவும் சில காட்சிகளில் அவர் ஏதோ இடுப்பு சுளுக்கு விழுந்தவர் போல சற்றே குனிந்து நிற்கும்போது பரிதாபமாக இருக்கிறது . ஓர் இளவரசி மாதிரி இல்லை. 
 
பொதுவாக அந்தப்புற அழகிகளில் இளவரசருக்கு ரொம்பப் பிடித்த மென்மையான ஃபிகர் என்று ஒன்று இருக்குமாமே.. அந்த ஃபீல் தான் அவரைப் பார்த்தால் வருகிறது .  
 
படத்தின் கடைசி காட்சிகள் காட்சி ரீதியாக ஒகே என்றாலும் அதன் அதீத நீளமும்  ரொம்ப சேஃப்டியான பின்புலமும் ஒரு வீடியோ கேம் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது . 
 
எனினும் முதல் பகத்தைப் போலவே பஞ்சுருளி , குளிகா தெய்வங்களும் புத்த கோலா நடன வழிபாடும அதில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பும் ஒரிஜினல்  நடன வழிபாடு செய்யும் கலைஞர்களின் கம்பீரப் பெருமிதமுமே காந்தாரா -2 படத்தையும்  காப்பாற்றுகிறது . அலுமினியப் பாத்திரத்தில் குடித்த அதே பால் இப்போ தங்கக் கிண்ணத்தில் .! 
 
முதல் பாகத்தின் எதிர்பாராத தமிழ் நாட்டு வெற்றி காரணமாக இந்தப் படத்தை தமிழ்நாட்டையும் குறிவைத்து எடுப்பதால் வீரப்பன்களும் பிரபாகரன்களும்   அவமானம் சுமக்காமல் தப்பித்தார்கள் . அதற்கும் நன்றிகள் . 
 
காந்தாரா  முதல் படத்தில்  கதை தப்பாக இருந்தது . ஆனால் அதன் எளிமையும் இயல்பும் பெரும் பலமாக இருந்தது . 
இந்த காந்தாரா – 2 படத்தில்  பிரம்மாண்டமும் வியப்பும் பகட்டும் படாடோபமும் அதிகம் இருக்கிறது . ஆனால் கதை சொல்லும் சமூக நீதி அபாரமாக இருக்கிறது . 
 
இது மாதிரி பஞ்சுருளி, குளிகா, வராக ரூபம் இவற்றை வைத்து நிறைய புராணக் கதை இருக்கிறது . (ஒவ்வொண்ணா வரும்) என்று கடைசியில் சொல்கிறார் ரிஷப் ஷெட்டி 
 
எத்தனை வேண்டுமானாலும் எடுங்கள்  ரிஷப்  . உங்களிடம் திறமையும் உழைப்பும் இருக்கு.  காசு தரவும் இன மொழி உணர்வோடு ஆட்கள் இருக்கிறார்கள் . 
 
ஆனால் எல்லா படங்களிலும் சமூக நீதி நேர்மை பக்கம் நில்லுங்கள் . காந்தரா முதல் படம் போல தவறான பக்கம் போகாதீர்கள் . அது அசிங்கம் . 
 
காந்தாரா 2… இரண்டாவதாகவும் ஒரு  படம் பார்க்க வேண்டும் என்று விரும்புவோர்கள்  பார்க்கப் போகலாம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *