JB ஃபிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் வழங்க, ரகு தயாரிப்பில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி, படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன் நடிப்பில் மஹாலக்ஷ்மி முருகன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
டூவீலரில் போகும் ஒருவரிடம் ( ஜாவா சுந்தரேசன் என்கிற சாம்ஸ் ) லிஃப்ட் கேட்கிறான் ஓர் இளைஞன்( ஆதவ் கிருஷ்ணா) .அவனை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு வந்த சிறிது நேரத்தில் டூவீலர்காரரை போலீஸ் கைது செய்கிறது, லிப்ட் கேட்டு பயணித்த இளைஞன் ஒரு பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் விட்டான் என்று.
ஸ்டேஷனுக்கு வரும் பையனின் தந்தை (படவா கோபி) ‘அந்தப் பெண்தான் தன் மகனை எங்கோ அழைத்துக் கொண்டு போய் விட்டாள்’ என்கிறார்.
விஷயம் இதுதான்.
சென்னை சவுகார்பேட்டையில் பணக்கார சேட் வீட்டுப் பெண் அவள் (சிம்ரன் அத்வானி). அம்மா சிறு வயதிலேயே அப்பாவை வெறுத்து தன்னையும் மறந்து வேறொருவருடன் போய்விட்ட நிலையில் பாட்டியுடன் தனியாக இருப்பவள் அவள். அப்பா ஒரு வியாபார காந்தம்.
கல்லூரியில் உடன் படிக்கும் மேற்படி இளைஞன், தன் தாய் (வினோதினி) தந்தை ஆகியோருடன் பாசமாக இருப்பதை அறிந்து அவனைக் காதலிக்கிறாள் அவள் . பையன் வீட்டில் காதலுக்கு சம்மதம். பெண்ணின் அப்பா ஸ்டேட்டஸ் குறைபாடு காரணமாக மறுக்கிறார்.
ஆனால் அவளுக்கு காதலனை பிரிய மனமில்லை. காசியில் இருக்கும் அம்மாவை போய் பார்த்து காதலை சொல்லி ஆசி வாங்கி வர, அப்பாவுக்கு தெரியாமல் கிளம்புகிறாள். கூடவே காதலனும்.
காசி வந்த நிலையில் அம்மா அவளை மட்டும் வரச் சொல்ல அவளும் போய் அம்மாவை சந்திக்கிறாள். பேசிவிட்டு வரும் வழியில் அவளுக்கு ஒரு விபத்து .
போன காதலியைத் தேடி காதலன் அலைய, ஊரில் இருந்து பணக்கார அப்பா அவரது வஞ்சக நண்பர் ஒருவர் ஆகியோர் வர, அவர்கள் காதலனை சந்தேகப்பட்டு, பண பலத்தால் போலீஸ் மூலம் பிளக்க,
காதலி என்ன ஆனாள். காதலன் என்ன ஆனான்? காதல் என்ன ஆனது என்பதே இந்த LSS (லைக் ஷேர் சப்ஸ்கிரைப் )படம்.
‘படம் நல்லா இருந்தா டிக்கெட் வாங்குங்க’ என்று சொல்லலாம். லைக் ஷேர் சப்ஸ்கிரைப் னு ஏன் பே ரு வச்சாங்கன்னு ஆரம்பத்தில் தெரியல.
ஆனா அப்புறம் தெரிஞ்சது . ஆரம்பக் காட்சிகள் அது எடுக்கப்பட்ட விதம் எல்லாம் யூ டியூப் காணொளி போலவே இருந்தது . அதனால் அந்தப் பெயர் வைத்து இருக்கலாம்.
நாயகியின் அப்பாவாக நடித்து இருப்பவர் அப்படியே அஜித் குமாரின் மலிவுப் பதிப்பு போலவே இருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக வினோதினி வைத்தியநாதன் சிறப்பு.
நாயகி சிம்ரன் அத்வானி இயல்பாக இருக்கிறார் . கவர்ச்சி, கண்ணீர் இரண்டும் காட்டுகிறார்.
நாயகன் ஆதவ் கிருஷ்ணா ஓகே .
சாம்ஸ் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.
காசி போன பின் காட்சிகள் ஒப்பீடு அளவில் வேகம் எடுக்கின்றன.
நாயகியின் அம்மா கேரக்டரை அரைவேக்காடாகவே அடுப்பில் இருந்து எடுத்து விட்டார்கள். மகளின் காதலன் மகள் கூட வந்திருக்கிறான் என்று தெரிந்தும் அந்த காதலை வாழ்த்த வந்த அம்மா, ஏன் மகளை மட்டும் தனியா வரச் சொல்லணும்? அவருக்கு அங்கே என்ன பிரச்னை.? ஒண்ணுமே புரியலே படத்தினிலே.
‘அம்மாவைப் பார்த்த காதலி அங்கிருந்து கிளம்பினாள்… ஆனா வந்து சேரல. என்ன ஆனாள் என்று தெரியல என்று சஸ்பென்ஸ் வைத்து இருக்க வேண்டும். அம்மாவின் இப்போதைய குடும்பம், அங்கிருந்து ஒரு டிராக் என்று எழுதி இருந்தால் படம் அசத்தல் படமாக வந்திருக்கும் . ஆனா எழுதல. அதனால வரல.
ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, படத் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் ,சண்டைப் பயிற்சியாளர் தளபதி தினேஷ் ஆகியோர் டைட்டிலில் இருக்கிறார்கள்.
காதலி எங்கே என்று தெரிந்தபிறகு வரும் காட்சிகள் எல்லாம் ஆயிரம் படம் வாங்கிய அலுப்பு சிந்தாமணி காட்சிகள்.
எனினும் அந்த கடைசி காட்சி எழுத்தாக ஓகே . ஆனால் எடுத்த விதத்தில் எடுப்பாக இல்லை.
மொத்தத்தில் லைக் ஷேர் சப்ஸ்கிரைப்… ONLY VIEWING
