டார்க் ஆர்ட்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் ஹரிஹர சுதன் தயாரித்து இயக்க, பாவல் நவகீதன், சாய் ஸ்ரீ பிரபாகரன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்
தீவிரமான கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து கன்னியாஸ்திரி ஆகிவிட்ட இளம்பெண் (சாய் ஸ்ரீ பிரபாகரன்) சென்னையில் உள்ள தனது ஒன்று விட்ட சகோதரியைப் (சித்து குமரேசன்) பார்க்க வருகிறாள் அந்த சகோதரி ஒரு இளைஞனுடன், லிவின் இன் உறவில் வாழ்கிறாள் . அவளது தோழியும் ஒருவனுடன் (அப்படி இல்ல.. அப்படி இல்ல… வேறோருவன்தான்) லிவின் உறவில் வாழ்கிறாள் . தினசரி செக்ஸ் ,அடிக்கடி கூடி மது குடிப்பது என்று அவர்கள் வாழ்க்கை இருக்கிறது .
அவர்களது செயல்கள் கன்னியாஸ்திரியின் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டுகிறது . ஒன்றுவிட்ட சகோதரியின் காதலன் கையை தன் உடம்பில் எடுத்து வைத்துக் கொள்கிறாள்.
‘இனி கன்னியாஸ்திரியாக இருக்க வேண்டாம்’ என்று ஊருக்குப் போய் அம்மாவிடம் (சுதா புஷ்பா) நடந்ததைச் சொல்ல, அவள் மகளை வீட்டை விட்டு துரத்துகிறாள் .
மீண்டும் ஒன்றுவிட்ட சகோதரியின் சென்னை குடியிருப்புக்கு வரும் கன்னியாஸ்திரி, மீண்டும் அங்கே தங்கி தொட்டவன் வருவான் என்று காத்திருக்கிறாள். வந்தவன் ஐ லவ் யூ சொல்ல, ” ஒன்லி செக்ஸ் . நோ லவ்…” என்கிறாள். அவன் மறுத்து விட்டுப் போய் விடுகிறான்.
மீண்டும் காத்திருக்கும் நிலையில் ..
கிறிஸ்தவ மதத்தில் பிறந்து, கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி, கிறிஸ்துவுக்கு எதிராகவே சிலர் நடத்தும் ஆன்ட்டி கிறிஸ்டியானிட்டி அமைப்பான சாத்தான் குழுவில் சேர்கிறாள் . கிறிஸ்தவ அடையாளங்களைத் துறந்து கன்னியாஸ்திரி வேலையை விட்டு விட்டு, அந்த அமைப்பில் ஈடுபடுகிறாள் .
அந்த அமைப்பின் தலைவன் (பாவல் நவகீதன்) சொல்லும் “கிறிஸ்துவை கடவுள் என்றவர்கள் கிறிஸ்துவர்கள் . இல்லையில்லை அவரும் ஒரு மனிதர்தான் என்று சொல்லி , பின்னர் வலுவிழந்து போன ஆட்களின் அமைப்புதான் நம்முடையது .
ஒருவேளை இயேசு நாதர் நம்மைப் போல கருப்பாக இருந்திருந்தால் இன்றைய வெள்ளை நிற கிறிஸ்தவ உலகம் அவரை ஏற்றுக் கொண்டு இருக்குமா?’ என்று கேள்வி கேட்கிறான் ..
”பிடிக்காத வாழ்க்கை வேண்டாம். செக்ஸ் உட்பட அனைத்தையும் நினைத்த நேரத்தில் அனுபவித்து வாழலாம்” என்கிறான் .
தான் விரும்பியபடி வாழ விரும்பும் அவளும் குழப்பம் தீர்ந்து , தைரியம் பெற்று, மீண்டும் சகோதரியின் பாய் ஃபிரண்டுக்காக காத்திருக்க, நடந்தது என்ன என்பதே படம்.
இத்தாலி , மலேசியா, லண்டன் , நேபாளம் , டெல்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசம் , கல்கத்தா , கேரளாவில் நடந்த உலகப்பட விழாக்களில் கலந்து கொண்டு சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை , சிறந்த நடிகை, சிறந்த இசை என்று பல விருதுகளையும் பெற்றதாக படக்குழு ‘ புரமோட்’ செய்கிறது . .
இயக்குனர் ஹரிஹரசுதனின் இயக்கம் ஒரு நல்ல கலைப்படத்துக்கு உரிய டைரக்ஷன் தன்மையோடு இருக்கிறது . ஷாட்கள் அழுத்தமாக இருப்பது சிறப்பு வித்தியாசமாக சொல்வதும் பாராட்டும்படியான ஃபிலிம் மேக்கிங் .
கிறிஸ்தவ மத வரலாற்றின் வழியிலேயே ஆன்ட்டி கிறிஸ்டியானிட்டி , சாத்தானிக் பைபிள் , லூசிபர் உள்ளிட்ட சக சாத்தான்கள், . அவைகள் பற்றிய புத்தகங்கள் , சில யோசிக்க வைக்கும் கேள்விகள் என்று பலரும் அறியாத தகவல்களை பாவல் நவகீதன் கேரக்டர் மூலம் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள் .
கதையின் அடிப்படையிலேயே ஒரு கான்ட்ரவர்சியும் சென்சேஷனும் இருப்பதால் திரைக்கதையின் மெதுவான நகர்வு தாங்குகிறது. . வக்கிரம் இல்லாத பாலியல் காட்சிகள் வேறு சூடேற்றுகின்றன. ஆண்களும் பெண்களும் பச்சையான கெட்ட வார்த்தைகளை நாக்கைச் சுழற்றி சுழற்றி பேசுகிறார்கள் .
எனவே ஏதாவது பிட்டு வந்தாலும் வரும் என்று காத்திருந்த பழைய பரங்கிமலை ஜோதியின் ரசிகர்கள் போன்ற மனநிலையில் எல்லோரும் படம் பார்க்கிறார்கள் .
மணி சங்கரின் ஒளிப்பதிவும் வித்தியாசமான கோணங்கள், லைட்டிங், கிரேடிங் என்று கவர்கிறது
கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷனின் இசையும் கவனிக்க வைக்கிறது .
கன்னியாஸ்திரியாக நடிக்கும் (சாய் ஸ்ரீ பிரபாகரன்) சிறப்பாக நடித்துள்ளார் . மிக இயல்பான முகம் , குள்ளமான தோற்றம் இவற்றின் மூலமே கிளர்ச்சியூட்டவும் கேரக்டருக்கு ஏற்ற வகையில் நடிக்கவும் அவரால் முடிகிறது . நேரில் பார்க்கும்போது இவரா அவர் என்று ஒரு மேஜிக் உணர்வு வருகிறது .
கொஞ்சம் சின்சியாரிட்டியோடு நடுநிலையாக யோசித்து இருந்தால், DAVINCI CODE படம் போல இந்தப் படத்தை தெறிக்க விட்டு இருக்கலாம்.
சம்சாரா என்ற திபெத்திய படத்தை இவர்கள் பார்த்து இருந்தால் இந்தப் படத்தை எப்படி எடுத்து இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு புரிந்து இருக்கும். ”சித்தார்த்தன் புத்தன் ஆனான் . எல்லாரும் கொண்டாடறீங்க. ஆனால் அவனை விட தவ வாழ்வு , தியாக வாழ்வு வாழ்ந்த அவன் மனைவி யசோதா பற்றி ஏன்டா யாரும் பேசல ” என்று கேட்கும் மேதமை மிக்க படம் அது . திபெத்தில் இருக்கும் புத்த்சமியார்களுக்கு நாய்க்குட்டி போல சேவகம் நிஜப் புலிகளுக்கு கூட அந்தப் படக் குழு மீது கோபம் வராது . அப்படி ஒரு அறிவார்ந்த விமர்சனம் புத்த மதத்தின் மீது அந்தப் படத்தில் இருக்கும்.
ஆனால் இந்தப் படம் சம்மந்தப்பட்ட வர்கள் சனாதனத் தும்பிகள் என்பதால்…
கிறிஸ்தவ மதத்தில் உள்ள கண்மூடித்தனங்கள் , மடமைகள் இவற்றை கேள்வி கேட்பதற்குப் பதில் கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தை கடைசியில் ஒரு மாதிரியாகக் காட்டி முகம் சுளிக்க வைத்து விட்டார்கள் .
நேபாளம், டில்லி, ஹரியானா , உத்திரப்பிரதேசம் போன்ற ஊர்களில் எல்லாம் இந்தப் படத்துக்கு விருது கொடுத்து இருக்கிறார்கள் என்ற அவர்கள் கொடுத்த தகவல்களிலேயே விஷயம் இருக்கிறது . பின்னாடி இருக்கும் மத பலம் என்ன என்பதும் புரிகிறது. (காசி , வாரணாசி , கயா, ஹரித்துவார் பட விழாக்களுக்கு எல்லாம் அனுப்பலைங்களா?) .
பச்சையான கெட்ட வார்த்தைகள் எல்லாம் சென்சார் அப்படியே விட்டு இருக்கிறார்கள். கேட்டால் ஜானர், சர்டிபிகேட் என்று கவைக்குதவாத பேச்சு பேசுவார்கள் அவர்களைப் பொறுத்தவரை ஆபாச வார்த்தைகளை விட , கிறிஸ்தவன், இஸ்லாம் என்பதுதான் பெரிய கெட்ட வார்த்தைகள் .
‘ அதுதான் இவ்வளவு அவார்டு வாங்கியாச்சு. அதுல காசு வந்திருக்கும் . படத்தில் பெரிய செலவும் இல்லை.’ அப்படியே போயிருக்கலாம் . தியேட்டருக்கு கொண்டு வருவது எல்லாம் வேண்டாத வேலை.
கான்ட்ரவர்சி ஏற்படுத்தி விளம்பரம் தேடவும் இப்போது உள்ள அரசியல் சமூக சூழலில் வாய்ப்பு இல்லை. இது தியேட்டர் படம் இல்லை.
மொத்தத்தில் மரியா…. டிக்கட் தருவாங்களா ஃபிரீயா?