ஸிம்ஹ மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஆர் . எம் ஜெயராமச்சந்திரன் வழங்க, வி ஜே பப்பு, அனுபமா, KPY ராஜவேலு நடிப்பில் அரவிந்தராஜ் என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
கல்யாணத்துக்கு பெண் பார்க்கப் போன இடத்தில்மாப்பிள்ளையின் ( வி ஜே பப்பு) முன்னாள் மேலதிகாரியே (அனுபமா) மணப்பெண்ணாக இருக்கிறாள்.
வேலை பார்த்த காலத்தில் அவளிடம் அவன் திட்டு வாங்காத நாளே இல்லை. ஆனாலும் அவள் மீது அவனுக்கு ஒரு கிரஷ் அதே நேரம் அவள் அந்த நிறுவனத்தின் உரிமையாளரைக் காதலிப்பது அறிந்து மனம் உடைந்து வேலையை விட்டவன்தான் அவன்.
இந்த நிலையில் இப்போது அவனது அம்மா அப்பாவுக்கு பெண்ணைப் பிடித்து விட, அவனுக்குள் பழைய காதல் மேலெழும்ப அவனுக்கும் சம்மதம்தான்.
ஆனால் அவள் ”கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை. அதனால் பிடிக்கலைன்னு சொல்லிடுவோம்” என்கிறாள் அவள்.
ஆனால் அவனது நண்பன் கொடுத்த ஆலோசனைப்படி ”குடும்பத்தாரின் ஆசைக்காக ஆறு மாதம் திருமணம் செய்து கொண்டு வாழ்வோம் . அப்புறம் டைவர்ஸ் செய்து கொள்வோம்.
அதன் பிறகு உன்னை உன் குடும்பம் இன்னொரு கல்யாணத்துக்கு வற்புறுத்தாது ”என்கிறான். அவளும் சம்மதிக்கிறாள். இப்படியாக ஒரு FAKE MARRAIAGE நடக்கிறது. ஆறு மாதத்தில் அவள் மனதை மாற்றி தொடர்ந்து வாழ்ந்து விடலாம் என்பது அவனது பிளான்.
கல்யாண தம்பதி நண்பன் வீட்டுக்கு விருந்துக்குப் போக, சில ஆண்டுகளுக்கு முன்பு செத்துப் போன நண்பனின் மகள், அங்கு அச்சு அசலாக இருக்கிறாள். அது தத்ரூப வடிவ ஆடை அலங்கார பொம்மை. (Mannequin Doll ) அந்த பொம்மையை கொஞ்சி மகள் இறந்த சோகத்தை போக்கிக் கொள்வதாக நண்பன் கூறுகிறான் .
நாட்கள் செல்ல செல்ல நாயகனை அவளை மனைவியாக மாற்ற முடியவில்லை. ஒரு நிலையில் பிரச்னை பெரிதாகி அவள் பிரிந்து போய் விடுகிறாள்.
மனைவியின் பிரிவை தாங்காத அவன் , நண்பன் மகள் பொம்மையைப் போல , தனது மனைவியின் பொம்மையை செய்து வைத்து அதனுடன் பேசி பழகி வாழ ஆரம்பிக்கிறான்.
அதன் பின் நடக்கும் ஓர் அட்டகாசமான டுவிஸ்ட் தான் இந்தப் படம்.
வித்தியாசமான கதை. இதுவரை இந்த பாணியில் வந்த திரைக்கதைகளில் இருந்து இன்னொரு படி ஏறி இருக்கிறது திரைக்கதை
பப்பு சிறப்பாக நடிக்கிறார். பல காட்சிகளில் கதாநாயகி பொம்மையாக உட்கார்ந்து இருக்க, இவர் மட்டுமே நடிக்க வேண்டும். நன்றாக நடித்து இருக்கிறார்.
நாயகி அனுபமா , பாந்தமாக எளிமையாக இருக்கிறார். இயல்பாக நடிக்கிறார்.அவருக்கான பின்னணி குரல் அருமையாக இருக்கிறது. யாராக இருந்தாலும் வாழ்க. .
பாசில் கொடுத்திருக்கும் இசை ஆழம்.பாலாஜி சேகரின் ஒளிப்பதிவும் சித்தார்த்தின் படத்தொகுப்பும் ஜஸ்ட் பாஸ்.
பின்னால் வரும் டுவிஸ்ட்டில் பல காட்சிகள் நம்பகத்தன்மையோடு இல்லை . சில தேவையும் இல்லை. அதை அவ்வளவு நேரம் நீட்டிக்கவும் தேவை இல்லை.
ஆனாலும் அந்தக் கடைசி காட்சியில் நம்மை அறியாமல் நெகிழ்கிறோம் .. தவிர அதுதான் வரப்போகிறது என்பதும் புரிகிறது, ஆனாலும் அது வந்த போது மனம் இளகுகிறது.
வரப்போகும் காட்சி என்ன என்று தெரிந்தும் அந்தக் காட்சி வரும்போது மனம் நிறைந்தால் அதுதான் நல்ல கிளைமாக்ஸ் .
மொத்தத்தில் MY DEAR DOLLY….. CUTIE !
