ஸ்டோன் பெஞ்ச் புரடக்ஷன்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் , ஸ்பிரிட் மீடியா சார்பில் நடிகர் ராணா டகுபதி ஆகியோர் தயாரிக்க, நவீன் சந்திரா, ரூபா கொடுவாயூர், சனத் ரெட்டி. கபில வேணு, சித்து குமரேசன் மற்றும் பலர் நடிக்க, சோமீதரன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
இரவு என்பதற்கு ராத்திரி என்றும் ஒரு பெயர் உண்டு அல்லவா? ரா என்ற ஒற்றை எழுத்து வார்த்தைக்கும் இரவு என்று பொருள். ராவு என்றும் சொல்லப்படுவதும் உண்டு . ரா என்பதை தமிழ் இலக்கண முறைப்படி இரா என்றே எழுதவேண்டும் . நீளிரா என்றால் நீள் +இரா அதாவது நீண்ட இரவு. இதுதான் படத்தின் பெயருக்கான பொருள்
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிங்க ராணுவத்துக்கு இடையேயான யுத்தத்தில், அமைதியை நிலைநாட்ட உதவுகிறோம் என்று இந்திய அமைதிப்படை என்ற ஒரு படையை ராஜீவ்காந்தி அனுப்பினார். அமைதிக்காக போன அந்த இந்தியப்படை
சிங்களர்கள் தமிழர்களுக்கு செய்த அநியாயங்களை தானும் செய்தது. தங்களுக்குப் பதிலாக இந்திய அமைதிப்படையை தமிழர்களுக்கும் புலிகளுக்கும் இடையில் நடக்கும் போராக மடை மாற்றி விட்டு, சிங்கள ராணுவம் கொஞ்ச நாள் சொகுசு ஓய்வு எடுத்துக் கொண்டு , பிறகு அமைதிப்படையோடு இணைந்து தமிழர்களைத் தாக்கியது.
அந்த சூழலில் விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பிக்க அமைதிப்படை ஆட்கள் ஈழத்தில் ஒரு கல்யாண வீட்டில் நுழைய, நுழைந்த இடத்தில் வரம்பு மீறி நடந்து கொள்ள, விஷயம் அறிந்த விடுதலைப் புலியினர் கோபத்தோடு வந்து அவர்களைத் தாக்க, கல்யாண வீட்டில் நடந்தது என்ன ? விளைவுகள் என்ன என்பதே இந்தப் படத்தின் அட்டகாசமான கதை.
மாப்பிள்ளை பிரான்சிலிருந்து தனது கல்யாணத்தை தானே பார்க்க, ஈழத்தில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளைக்குப் பதிலாக பையனின் அம்மா தாலி கட்டி அனுப்ப.. அப்படி ஒரு கல்யாணம் அங்கே நடக்கிறது.
அந்த ஊர் மக்கள் எம் ஜி ஆர் விஜயகாந்த் இவர்களின் ரசிகர்களாக இருக்கிறார்கள். சிறுவர்களுக்கு பரிசு தரும் நபரை சிறுவர்கள் அனைவரும் ‘எம் ஜி ஆர் மாமா’ என்று அழைக்கிறார்கள்.
எப்போது குண்டு விழும் எப்போது உயிர் போகும் என்ற அச்ச நேரத்திலும், வரையறுக்கப்பட்ட சந்தோஷங்கள் மற்றும் கொண்டாட்டங்களோடு அந்த கல்யாணம் நடக்கும் விதத்தை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பு.
விஷேஷங்களின் போது சாப்பாடு கேட்டு வரும் விடுதலைப்புலிகளுக்கு உதவும் அந்த மக்கள், மாறாக அதிகாரமாக அத்து மீறும் இந்திய அமைதிப்படை என்று காட்சிகள் விரியும் விதம் பிரம்மிப்பு.
”அமைதிப் பணிக்கு வந்த நீங்கள் சண்டை செய்கிறீர்கள்; ஆனால் உங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் அமைதியை நான் உருவாக்குகிறேன்” என்று என்று இறங்கும் பெண்மணியின் கேரக்டர் அபாரம்.
இரண்டு பக்கமும் துப்பாக்கிகல் வெடிக்க தயாராக , புலிகள் தரப்பு ஒரு சிறு அசைவின் மூலம் ஒட்டுமொத்த அமைதிப்படை ஆட்களையும் ஸ்தம்பிக்க வைக்கும் காட்சி, நூறு கோடி முன்னூறு கோடி போட்டு எடுக்கப்படும் படத்தில் கூட காண முடியாத ஒன்று.
இப்படி ஒரு கதையில் யுத்த பூமியின் காதல் , விடுதலைப் போர் காரணமாக அதில் ஏற்படும் இழப்பு, தியாகம், வெறுமை மனநிலை , எல்லாம் உடைந்த நிலையில் நிகழும் ஒரு எதிர்பாராத சந்திப்பு ஏற்படுத்தும் வலி , மருத்துவராக ஸ்டெதாஸ்கோப் பிடிக்க ஆசைப்படுவார்கள் எல்லாம் விடுதலைக்காக துப்பாக்கி தூக்கிய அவலம், மக்களை நோயில் இருந்து காப்பாற்றும் பணியை செய்ய விரும்பியவர்கள் போரில் சாகும் கொடுமை…. என்று படம் படம் பேசும் விசயங்கள் ஒவ்வொன்றும் மனசுக்குள் ஏற்படுத்தும் கனம் அசாதாரணமானது. ‘துப்பாக்கிகளுக்கு எதிராக எந்த ஸ்டெதஸ்க்கோப்பும் வெற்றி பெற்றதில்லை’ என்ற வசனம் உலக அளவில் பொருந்தும் சிந்தனை
இலங்கையில் பிறந்து பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி , இலங்கை பிரிந்த பின் வேற்று நாட்டவர் ஆகி, இன்று வயதான காலத்தில் இந்திய அமைதிப்படையின் முன் குறுகி ஒரு சீனியர் ராணுவவீரர் நிற்கும் காட்சி, அதை அறியும் அமைதிப்படை அதிகாரியின் உணர்வு போன்ற காட்சிகள்….. இயக்குனரின் சிந்தனை உயரம் மற்றும் ஆழத்தை காட்டுகிறது . அற்புதமான எழுத்து.
இயக்குனர் சோமீதரனின் படமாக்கல், கே அமைத்திருக்கும் இசை , பிரதீபன் செல்வ ரத்தினத்தின் ஒளிப்பதிவு மூன்றும் ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க முடியாதபடி நுட்பப் புரிதலோடு இணைந்து இழைந்து இயைந்து செயல்பட்டிருக்கின்றன. தபஸ் நாயக்கின் ஒலியும் அதே தரத்தில் ! ராதா ஸ்ரீதரின் படத் தொகுப்பும் சிறப்பு.
அமைதிப்படை அதிகாரியாக நவீன் சந்திரா மிக சிறப்பாக நடித்துள்ளார். விடுதலைப்புலியாக வரும் சனத் ரெட்டி உடைந்து உருகும் இடத்தில் அசத்தி இருக்கிறார். அடித்து நொறுக்கப்பட்ட சிற்பம் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ரூபா கொடுவாயூர்.
அமைதி படையின் தவறுகளை கேள்வி கேட்கும் குடும்பத்தலைவி கதாபாத்திரத்தில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் கபில வேணு. மணப்பெண்ணாக வரும் சித்து குமரேசன் படம் முழுக்க முத்திரை பதிக்கிறார்.
நோபல் பரிசு பெறத்தக்க ஒற்றைக் கவிதை போல நிரம்பி நிற்கிறது , அந்த நெகிழ்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்.
இவ்வளவு பரபரப்பான கதையை பதட்டம் இன்றி அழுத்தமான நகர்வோடு சோமீதரன் சொல்லி இருக்கும் விதம் கொண்டாடத்தக்கது.
ஈழத்தில் இருந்தாலும் ஜவஹர்லால் நேருவை தலைவராகக் கொண்டாடிய மக்களை, அதே நேருவின் பேரன் ராஜிவ் காந்தி, தனது முட்டாள்தனமான வஞ்சகமான சிங்கள ஆதரவு கொள்கையால் , எப்படிப்பட்ட கொடுமையான இழப்புகளுக்கு துன்பங்களுக்கு அழிவுகளுக்கு ஆளாக்கினார் (எனினும் உதவி செய்த சிங்களர்களாலேயே மண்டையில் அடி வாங்கினார் ) என்பது போகிற போக்கில் சொல்லப்படும் விதம் கவனிக்க வைக்கிறது .
இந்தத் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் இப்படி முழுமையாக வெளிவருவதால் பின்னால் ஓர் அரசியலும் காரணமாக இருக்கிறது என்றாலும் ஓர் உண்மையை சொல்வதற்கு அரசியல் சூழலை பயன்படுத்துவது தவறில்லை. அதுதான் சாத்தியமான வழியும் கூட.
பெண்கள் இருக்கும் அறைக்குள் அந்த வீட்டு ஆண்களே சட்டென்று நுழைய மாட்டார்கள் என்ற கலாச்சாரம் கொண்ட ஓர் இன மக்களின் வீடுகளில், எவனோ ஒருவன் சட்டென்று நுழைந்து ஒவ்வொரு அறையையும் பெண்களையும் அங்குலம் அங்குலமாக சோதனை போடும் பெயரில் வன்மம் காட்டும் அநியாயம் வயது முதிர்ந்த பெண்கள் காலைக்கடன் கழிக்கக் கூட அனுமதிக்கப்படாத கொடுமை…. இனி யாருக்கும் நிகழ வேண்டாம் . ஆனால் அது ஈழத்தில் நடந்த போது அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் ?
அதில் நூறில் ஒரு பங்கையேனும் .பார்த்து உணர , நீளிரா பாருங்கள் .
இன உணர்வு உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
நீளிரா…. மீளாத் துயரின் துளி