கோதண்டம் மற்றும் லக்ஷு கணேஷ் தயாரிபில் , சோனியா அகர்வால், வர்ஷிட்டா, கோதண்டம் மற்றும் பலர் நடிப்பில் பாரதிராஜாவிடம் பணியாற்றிய குரு எழுதி இயக்கி இருக்கும் படம் .
சாதி வெறி புரையோடிய ஒரு கிராமம் . ஒரு பக்கம் ஆதிக்க சாதிக் குடும்பங்கள், இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சாதிக் குடும்பங்கள்.
தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள்.
அண்ணன் படிப்பை உதறி விட்டு வேலை செய்து கொண்டு தம்பியைப் படிக்க வைக்கிறான். இருவரையும் வளர்ப்பது அவர்களது பாட்டிதான். சிறுவர்களின் அப்பா இறந்த நிலையில் அம்மா(சோனியா அகர்வால் ) இன்னொருவரோடு வாழப் போய் விட்டாள் என்று பாட்டி சொல்ல, அதை சிறுவர்கள் நம்புகிறார்கள். பாட்டியின் சொற்படி பெரிய பையன் அம்மாவை வெறுக்க, சின்ன மகன் மனதிலும் அம்மா பற்றிய வெறுப்புணர்வை அண்ணனும் பாட்டியும் வளர்க்கிறார்கள்.
தனக்கு அடைக்கலம் கொடுத்து – இப்போது கை கால் விழுந்து கிடக்கும் நபரோடு (ஆதவன்) வசிக்கும் அந்த அம்மா, அதே ஊரில் வாழ்ந்தபடி மகன்கள் தம்மை புரிந்து கொள்வார்கள் என்று காத்திருக்கிறாள். மாமியார் உட்பட பலரும் அவளை அசிங்கப்படுத்துகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள்.ஆனால் அம்மா அவர்களை விட்டு விட்டுப் போனதற்கு பின்னால் ஒரு பாலியல் அத்துமீறல் காரணம் இருக்கிறது.
பள்ளி மாணவனோடு உடன் படிக்கும் ஆதிக்க சாதி சிறுமி ஒருத்தி (வர்ஷிட்டா)க்கு, அந்த தாழ்த்தப்பட்ட பையன் மேல் நேசம். காரணம் அவளது பெரியப்பா ஒரு முறை அவள் மீது கார் ஏற்றிக் கொல்ல முயல அவன்தான் அவளைக் காப்பாற்றுகிறான்.
அந்த பெரியப்பா சாதி வெறியில் ஊறியவர். ஆனால் அந்த சிறுமியின் அப்பா தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அனுசரணையாக இருப்பவர்.
அதனால் சாதிக்கு அவமானம் என்று, தம்பியின் குடும்பத்தையே வெறுப்பார் அந்தப் பெரியப்பா.
தனது நண்பனின் அம்மா நல்லவள் என்று உணரும் மாணவி, அவனை அவன் அம்மாவுடன் சேர்த்து வைக்க முயல்கிறாள். ஆனால் அவனுக்கு விருப்பம் இல்லை. ”இனி நீதான் என் தாய்” என்று அவளிடம் சொல்கிறான்
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மாணவனும் ஆதிக்க சாதிச் சிறுமியும் நட்புடன் இருப்பது ஆதிக்க சாதி ஆட்களுக்கும் அவளது பெரியப்பாவுக்கும் பிடிக்கவில்லை.
அந்த நட்பை உடைக்கப் பார்க்க,
மாணவனின் அம்மா பிள்ளைகளை விட்டு விட்டு, யார் கூடவோ வசிக்கப் போனது ஏன் ? மாணவன் மாணவி நேசம் என்ன ஆனது என்பதே பருத்தி
படத்தின் துவக்கத்தில் ”எனது உதவியாளர் குரு இயக்குனர் ஆவான் என்று நான் நினைக்கவே இல்லை. இப்படி ஒரு படம் எடுப்பான் என்றும் நினைக்கவே இல்லை. ஆனால் படம் பார்த்து அசந்து விட்டேன் …” என்று ஆரம்பித்து வியப்போடு நீண்ட நெடிய உரையைப் பேசிப் பாராட்டி இருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
பாரதிராஜாவே இவ்வளவு பாராட்டுகிறாரே என்ற ஆர்வத்தில் படம் பார்க்க ஆரம்பித்தால்… அந்த பாராட்டும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் படத்துக்கு எதிராக நின்று விடுகிறது.
உண்மையில் தேவையற்ற பில்டப் ஏதும் இன்றி இயற்கையாக துவங்குகிறது படம்.
அதுவும் முதல் காட்சியில் சோனியா அகர்வால், மண் வீட்டில் வழித்து சீவிய தலை, தழையக் கட்டிய சேலை என்று கிராமத்துப் பெண்ணாக உட்கார்ந்து, சாதாரண அடுப்பில் சோறு பொங்கி கொண்டு இருப்பதை பார்த்தபோது, ‘ஆகா, சோனியா அகர்வாலுக்கு இன்னொரு ரவுண்டு ஸ்டார்ட் ஆகி விட்டது’ என்றே தோன்றியது.
எனினும் படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது மாணவன் மாணவியின் நேசமிகு சினேகம்தான்
கூடப் படிக்கும் மாணவியின் வீட்டுக்குப் போய் குடிக்கத் தண்ணி கேட்டால், சொம்பை தராமல் கையில் தண்ணீரை தூக்கி ஊற்றி,கை விரல்களை குவித்துக் குடிக்க சொல்வதைப் பார்க்கும்போது இதயம் கனக்கிறது.
ஆனால் அப்படி நண்பன் தனது வீட்டில் தண்ணீர் குடிக்கும் போது, அந்த மாணவியின் முக பாவனைகளை சரியாக எடுக்கத் தவறி இருக்கிறார் இயக்குனர். எனவே அந்தக் காட்சிகள் பெரிதாக சோபிக்கவில்லை.
மாணவனை அவன் அம்மா பிரிந்ததற்கான காரணம் லாஜிக்காகவும் இல்லை. உணர்வுப்பூர்வமாகவும் இல்லை. தனக்கு விரிக்கப்படும் வலையை, வெளியே சொல்லி இருந்தாலே போதுமே.
அவரது தற்போதைய அவர் வாழ்க்கை என்று காட்டப்படும் காட்சிகள் படு செயற்கை. வாழும் இடத்தில் கை கொடுத்த நபராக வரும் ஆதவனின் கதாபாத்திரம், நடிப்பு எல்லாமே படு செயற்கை
ரஜினி, ராதா அம்பிகா நடிப்பில் எஸ் ;பி முத்துராமன் இயக்கிய எங்கேயோ கேட்ட குரல் படத்தில் இப்படி ஒரு கதை வரும். கணவனோடு வாழும் ஒரு பெண், எதனால் வேறொருவனோடு போனாள்? போனவுடன் அவளுக்குள் ஏற்பட்ட மன மாற்றம் என்ன? ஒரு நிமிட முடிவால் அவள் வாழ்க்கை எப்படி வீணாகிப் போனது என்று சிறப்பாக சொல்லும் படம் இது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு இந்தப் படத்தில் இப்படி ஒரு காட்சியை சோனியா அகர்வாலுக்கு வைத்து இருக்கிறார்கள்.
ஆனால் அதில் இருந்த ஆழமும் நியாயமும் இதில் இல்லை. அதற்கேற்ற காட்சிகள் இல்லை . எனவே இந்தப் படத்தில் அந்த கதை போக்கு காதில் விழாத குரலாகப் போய்விட்டது.
மாணவியின் அப்பா கேரக்டர் நல்ல கேரக்டர். ஆனால் அதில் நடித்தவர் அதை உணர்ந்து நடிக்கவில்லை.
ஆதிக்க சாதி மாணவியின் சாதி வெறி பிடித்த பாட்டி, அதே போல தாழ்த்தப்பட்ட மாணவனின் பாட்டி .. இந்த இரண்டு கேரக்டர்களிலும் நடித்திருக்கும் பாட்டிகள் இருவரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனால் இருவரிடமுமே கச்சிதமாக வேலை வாங்க படத்தின் இயக்குனருக்கு தெரியவில்லை. எனவே அவர்களும் சோபிக்கவில்லை
இப்படி திரைக்கதை இயக்கம் இரண்டும் சரியில்லாத காரணத்தால், ரஞ்சித் வாசுதேவனின் இசை பெரிதாக பலன் தரவில்லை.
அருமையான, வனாந்திரமான, ஆள் அரவம் இல்லாத, வறண்ட மண்ணும், ஓரளவு பசுமையும் உள்ளடங்கிய கிராம லொகேஷனும் நன்றாக இருக்கிறது . அதை முடிந்தவரை சரியாக காட்டுவதோடு கடமை முடித்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜேஷ்குமார்
மாணவியின் அப்பா தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு உதவியாக இருக்கிறார். எனில் மாணவி இவ்வளவு வேதனைக்கு ஆளாகி சில முடிவுகள் எடுப்பதன் அவசியம் என்ன ?
சாதி வெறியை எத்தனையோ விதங்களில் காட்டி இருக்கிறோம். ஆனால் சாதி என்றால் என்னவென்றே அறியாத பள்ளி மாணவர்கள் ஒரு நிலையில் தங்கள் பெற்றவர்களாலேயே சாதிய உணர்வுக்குள் தள்ளப்படுவதும், அப்போது தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு ஏற்படும் ஊழி அதிர்ச்சியும் அவமானமும்,
ஆதிக்க சாதிப் பிள்ளைகள் கூட அதிர்ந்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி , பின்னர் சாதி வெறியை ஏற்பது அல்லது விடுவது அல்லது இரண்டுக்கும் இடையில் அல்லாடுவது என்று மாறுவதும்,
அதற்குள் சில இதயங்கள் கிழிக்கப்படுவதும் உண்மையில் சொல்லப்பட வேண்டிய கதை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அது சொல்லப்படும் விதம் முக்கியம் இல்லையா?
மாணவியாக நடித்து இருக்கும் அறிமுகம் வர்ஷிட்டா நன்றாக நடித்திருக்கிறார். முகபாவனைகள் குரல் நடிப்பு, வசனம் பேசும் விதம் நன்றாக இருக்கிறது. காட்சிகளைப் புரிந்து நடிக்கிறார். நல்ல நடிகையாக வர வாய்ப்பு இருக்கிறது. வாழ்த்துகள்.
இவரது அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர். இவர் படத்தில் ஆதிக்க சாதி பெரியப்பாவாக நடித்தும் இருக்கிறார்.
மகளுக்காக அப்பாவால் எடுக்கப்பட்ட படம் இது என்றால், அவரது நோக்கம் நிறைவேறி விட்டது என்று சொல்லலாம். மகளுக்காக அப்பா எடுத்த இரண்டு மணி நேர மேக்கப் டெஸ்ட் , ஷோ ரீல் , என்று கூட இந்தப் படத்தைச் சொல்லலாம்.
பருத்தி… தரமான நூல்தான். ஆனால் நெசவுதான் வசவுக்கு ஆளாகி விட்டது.
