ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, ஜோதிகா, ஹரீஷ் பெராடி, பூர்ணிமா பாக்யராஜ், கவிதாபாரதி, அருள் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கி இருக்கும் படம் ராட்சசி . ரசிகனுக்கு தேவதையா ? இல்லை அவனுக்கும் ராட்சசியா ? பார்க்காலாம் .
தென் தமிழ்நாட்டில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக வரும் கீதா ராணி (ஜோதிகா) பொறுப்பில்லாத தலைமை ஆசிரியர் ( கவிதா பாரதி) ஆசிரியர்கள் ( முத்துராமன், சத்யன் மற்றும் சிலர் ) ஆகியோரது செய்கையால் , அந்தப் பள்ளிக் கூடம் எந்த வசதிகளும் இன்றி , ஏழைகளின் பிள்ளைகளை சமூக விரோதிகளாகவும் , கூலி ஆட்களாகவும் மாற்றும் இடமாக இருப்பதைப் பார்த்து அவற்றை மாற்ற முயல்கிறார் . ஒரு மூத்த ஆசிரியை (பூர்ணிமா பாக்யராஜ்) மட்டும் நேர்மையாக பாடம் நடத்துவதை பார்க்கிறார் .
எதிர்க்கட்சி அரசியல்வாதி ( அருள்தாஸ் ) மற்றும் இந்தப் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு இந்தப் பள்ளிக் கூடத்தை இப்படியே வைத்து இருப்பதன் மூலம் தனது தனியார் பள்ளியை கொழிக்க வைக்கிறார் அதன் தாளாளர் ( ஹரீஷ் பரோடி) .
இரு தரப்புக்கும் முட்டிக் கொள்ள தன் அப்பாவின் (நாகி நீடு) துணையோடு மட்டும் வாழும் கீதா ராணியால் நினைத்ததை முடிக்க முடிந்ததா இல்லையா என்பதே இந்த ராட்சசி .
தமிழ் சினிமாவில் ஆபாச வன்முறை சைக்கோ குப்பைகள் நிரம்பி வழியும் சூழலில் மலையளவு சமூக அக்கறையோடு ஒரு சிறப்பான விசயத்தை படமாக்கி , முதல் பாதச் சுவடியே முத்தாக பதித்து இருக்கிறார் இயக்குனர் கவுதம் ராஜ் . இது போன்ற படைப்பாளிகளே கூவமாகிக் கொண்டு இருக்கும் தமிழ் சினிமாவை சுத்தம் செய்ய முடியும் . இயக்குனராகவும் ஜொலிக்கிறார்.
எப்போதும் இது போன்ற நல்ல படங்களையே எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனத்தையும் இந்தப் பாராட்டில் சேர்த்துக் கொள்வதே நியாயம்
பிரச்னைகளை சூழலை ஒவ்வொரு பிரியாக சரியான வரிசையில் நிதானமாக அவிழ்த்துக் காட்டி சற்று தாழ்ந்து பின்னர் சரேலென உயர்ந்து பலம் காட்டும் கவுதம் ராஜின் திரைக்கதை படத்தின் முதல் பலம் .
பள்ளி என்ற விசயத்தை அலகாகக் கொண்டு சாதி வெறி, கட்சி அரசியல், தனியார் மயத்தின் வியாபார நோக்கம் இவற்றை எல்லாம் அளந்து அசத்துகிறது படம்
பாரதி தம்பியும் கவுதம் ராஜும் இணைந்து எழுதி இருக்கும் வசனங்கள் இந்தப் படத்தின் உயிர்காற்றாக உலவுகிறது .
ஆசிரியர்கள் மற்றும் ஜாதி வெறியர்களின் மனசாட்சியை உலுக்குவது ஒரு புறம்… “ஆசிரியர்கள் அவங்க வேலையை ஒழுங்கா பார்த்தா போலீசுக்கு வேலை குறையும் ” என்பது கோல்டன் ‘ட்வீட்’கள் இன்னொரு பக்கம் …. என்று நாயகி பேசும் வசனங்கள் மட்டுமல்ல …
” ஜெயிக்கறது வேற…. கொல்றது வேற .. ” என்று வில்லன் பேசும் வசனம் கூட, அடேயப்பா ரகம் !
ஜோதிகா … ஜோர்திகா !
முதன்மைக் கதாபாத்திரங்களை தாங்கி அவர் முன்பே வேறு சில படங்கள் நடித்து இருந்தாலும் இந்தப் படம் எல்லாவற்றிலும் பெஸ்ட் . கதாபாத்திரத்துக்குள் தன்னை புகுத்திக் கொண்ட விதம், கனமான கம்பீரம் , உடல் மொழிகள் , உடைந்து நொறுங்கும் சோகம் என்று எல்லா பந்துகளிலும் சிக்சர் அடிக்கிறார் .
கீதா ராணியை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படும் குட்டிப் பையன் நடிப்பில் அசத்தி இருக்கிறான். பூர்ணிமா நெகிழ்ச்சி
ஹரீஷ் பெராடி, கவிதா பாரதி, முத்து ராமன், சத்யன் , நாகி நீடு ஆகியோரும் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுனராக வரும் மூர்த்தி மிக இயல்பான நடிப்பு . மயானக் காட்சியில் விஷயம் தெரிந்து அவராக வந்தது போல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
சான் ரோல்டன் டைட்டில் இசையிலேயே , இது ஒரு முக்கியமான படம் என்று உணரவைத்து ரசிகர்களை தயார் செய்யும் விதம் அருமை . முடிவு வரை பின்னணி இசையில் ஒரு முழுமை .
கோகுல் பினாயின் ஒளிப்பதிவு பள்ளியின் கசகசப்பு கலகலப்பு இரண்டையும் அருமையான உணர வைக்கிறது . எமோஷனல் காட்சிகளில் நல்ல பிள்ளையாய் தேவையானதை மட்டும் செய்து இருக்கிறது .
பிலோமின் ராஜின் படத் தொகுப்பு முக்கியமான எதையும் சிந்தாமல் சிதறாமல் எடுத்து தொடுத்துக் கொடுத்து இருக்கிறது .
லோக்கல் ஆட்டோகாரருக்கு கீதா ராணி தலைமை ஆசிரியை என்று தெரியாமல் இருப்பது, அவ்வளவு அதப்பு அரசியல்வாதி தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்காமல் வசதி இல்லாத இந்தப் பள்ளியில் படிக்க வைப்பது … இப்படி ஓரிரு கேள்விகள் வரத்தான் செய்கிறது .
அதேபோல இப்போதே படத்தின் கிளைமாக்ஸ் நன்றாகவே இருந்தாலும் இதைவிட அட்டகாசமான ஒரு கிளைமாக்ஸ், திரைக்கதைக்குள்ளேயே இருக்கிறது . அதற்காக நியாயங்களும் திரைக்கதையில் முன்பே வந்து விட்டது. அதை செய்து இருக்கலாம் .
ஆனால் இவை எல்லாம் ஒரு தடையே இல்லை எனும் அளவுக்கு …
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு அவசர அவசிய சமூக அக்கறை விசயத்தோடு … அதற்காக கருத்து சொல்கிறோம் என்று போர் அடிக்காமல் சுவாரஸ்யமான விறுவிறுப்பான — உள்ளம், மூளை இரண்டுக்கும் பிடித்த — படமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது ராட்சசி .
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————————–
கவுதம் ராஜ், பாரதி தம்பி, ஜோதிகா , குட்டிப் பையன் , சான் ரோல்டன் , ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்