MISHRI ENTERPRISES சார்பில் பதம் சந்த் , அரியன் ராஜ் ஆகியோரோடு சேர்ந்து தயாரித்து இருப்பதோடு ரஜினி கிஷன் கதாநாயகனாகவும் நடிக்க, துவிவிகா, முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன்,கல்கி, கூல் சுரேஷ் நடிப்பில் இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கி வந்திருக்கும் படம்.
ரஜினி சவுண்ட் சர்வீஸ் என்ற பெயரில் மைக் செட் வைத்திருக்கும் நபர் ( ரஜினி கிஷன்) அந்த ஊர் பிரசிடென்ட் பெண்ணை (துவிவிகா )காதலிப்பது தெரிந்து ஊருக்கு தெரியாமல் ஓடிப் போக முடிவு செய்து கிளம்ப, ஊர்மக்கள் துரத்துகின்றனர். வழியில் கார் ஓட்டி வரும் ஒருவனிடம் (முனீஸ்காந்த்) லிஃப்ட் கேட்கிறார்கள் . அவனோடு இன்னொருவனும் (கல்கி) லிஃப்ட் கேட்க , அவனையும் சக பயணியாக ஏற்றிக் கொள்கிறான் கார் டிரைவர் .
உண்மையில் அது மந்திரி ஒருவரின் ராசியான கார். அதை மந்திரி தேட , அதே நேரம் காரோட்டியைப் பற்றி ஒரு தகவல் காதல் ஜோடிக்கு கிடைக்கிறது . அதாவது அவன் செத்துப் போய் புதைக்கப் போகும்போது பிழைத்தவன் என்றும் அதன் பின் அவனுக்கு இரவில் சில சக்திகள் வருவதாகவும் சொல்ல, காதல் ஜோடிக்கு பயம் .
பெண்ணின் தாய்மாமன் (கூல் சுரேஷ்) தான் கல்யாணம் செய்ய வேண்டிய பெண் எவன் கூடவோ போய் விட்டாள் என்று அறிந்து துரத்துகிறான்.
இந்த நிலையில் பிரசிடென்ட் ஆட்கள் கண்டு பிடிப்பதற்கு முன்பு உடனடியாக கல்யாணம் செய்து கொள்ள காதல் ஜோடி விரும்ப, காரில் கூட வந்த சக பயணி தன்னிடம் உள்ள தாலியை தருகிறான் .
தாலி கட்டியதும் அந்தப் பெண்ணின் மேல் பேய் வருகிறது.
காரணம் அது செத்துப் போன பெண் ஒருத்தியின் தாலி. அதை திருடி வந்தவன் தான் சக பயணி .
காதலி மீது ஏறிய பேய் எல்லோரையும் அடித்து விரட்ட , பேய் ஓட்ட வருகிறார் ஒரு சாமியார் (மொட்டை ராஜேந்திரன்)
அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் .
ரஜினி கேங் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அல்ல . ஹீரோ பெயர் ரஜினி கிஷன் . இந்தப் படம் எடுத்த ஆட்கள் அவரது கேங். அதான் ரஜினி கேங்.
மேடையில் இருக்கும் போது ரகசியமாக பேச வேண்டிய போனில் பேச , அது மைக் வழியே ஊருக்கே கேட்பது, ஆவியின் எதிர்ப்பாராத கதை இப்படி சில இடங்களில் படம் சுவாரஸ்யமாக இருக்கு.
சில இடங்களில் வசன காமெடியும் சிரிக்க வைக்கிறது . அதே நேரம் இரட்டை அர்த்த… தப்பு தப்பு ஒரே ஆபாச அர்த்த காமெடியும் வருகிறது. சென்சாருக்கு பெரிய வரும்படி இருந்திருக்கலாம்.
ரஜினி கிஷன் உற்சாகமாக நடிக்கிறார் . துவிவிகாவும் அப்படியே.
முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் கூல் சுரேஷ் ஆகியோர் மற்ற எல்லா படங்களிலும் நடிப்பது, துடிப்பது போலவே இந்தப் படத்திலும் .
ஜோன்ஸின் இசையில் பழைய பாணி குத்துப் பாட்டுகள் ஓகே ரகம் . ஏற்காட்டில் தெரிகிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ்.. வினோத் எடிட்டிங் ஒன்றும் பழுதில்லை .
“நம்ம கிட்ட சேலம் போறேன்னு சொன்ன டிரைவர் , இப்ப பெரம்பலூர்ல விடறேன்னு சொல்லி அவனை வேற கார்ல ஏத்திக்கிறான். பெரம்பலூர் தாண்டி இருநூறு கிலோ மேட்டர் போனாதான் சேலம் போறதுக்கான வழியே வரும் . பெரம்பலூர் போறவன் நம்மை எப்படி சேலத்துக்கு கொண்டு போவான்?” என்று கேட்கிறார் ஹீரோயின் துவிவிகா , ஒரு காட்சியில் . பெரம்பலூரில் இருந்து சேலமே நூற்றி இருபது கிலோமீட்டர்தான் துவி.
கடைசியில் வீட்டுக்குப் போகணும் அம்மா தேடும் என்று ரசிகர்கள் கதறினாலும் படத்தை முடிப்பேனா என்று அடம் பிடிக்கிறார்கள் .
காமெடி , பேய், ஆபாசம் , குத்துப் பாட்டு என்று, வழக்கொழிந்து போன கூட்டணியில் மிகப் பழமையான நாடக பாணி- வழவழ பேச்சுக் குவியலோடு ஒரு படம் எடுத்து இருக்கிறார்கள்.
ரஜினி கேங் .. ஆர்வம் மிக்க ஆனால் அரைகுறை முயற்சி