சிக்ஸர் என்டர்டைன்மென்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் தயாரிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், கோகுல் ஆனந்த் , பாவல் நவ கீதன், அனன்யா ராம பிரசாத், ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக்கின் எழுத்து இயக்கத்தில் உருவாகி சோனி லிவ் ஓ டி டி தளத்தில் காணக் கிடைக்கும் படம் திட்டம் இரண்டு – plan B.
ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்)பேருந்துப் பயணத்தில் – வளரும் நடிகன் ஒருவனோடு (கோகுல் ஆனந்த்) ஏற்படும் சந்திப்பு அப்படியே காதலை நோக்கிப் பயணிக்கிறது.
அதிகாரியின் சிறுவயதுத் தோழி சில நாட்களாகக் காணவில்லை என்று தோழியின் கணவன் சொல்ல, தோழியைக் கண்டு பிடிக்க பெண் போலீஸ் அதிகாரி எடுக்கும் முயற்சி எப்படி அவரையே எதிர்பாராத அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது ; அதன் விளைவும் முடிவும் என்ன என்பதே இந்த திட்டம் இரண்டு .
காணமல் போன தோழி, கண்டு பிடிக்கும் முயற்சிகள் , அதில் வரும் திருப்பங்கள் என்று போகும் கதை ஒரு நிலையில் யூகிக்க முடியாத ஒரு பிரச்னைக்குள் நுழைந்து அட என்று ஆச்சர்யப் பட வைக்கிறது . அது இந்தப் படத்தின் பெரும்பலம் என்றால் அந்த பிரச்னையின் தனித்தன்மை இன்னொரு பெரும்பலம் .
படமாக்கல் , விசாரணை குறித்த விவரணைகளின் நம்பகத்தன்மை , அது குறித்து விரியும் காட்சிகள், கடைசி நேரத் திருப்பம் ஆகியவற்றால் சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். பலரும் அறியாத – அறிந்தாலும் முக்கியத்துவம் தராத ஒரு பிரச்னையை பேசி இருக்கிறார் . பாராட்டுகள்
இந்தக் கதைக்குத் தேவையான பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்துகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் .
கோகுல் பினாயின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கான மர்மத் தன்மைக்கு மிகவும் உதவுகிறது . கூடவே அழகாகவும் இருக்கிறது .
மெதுவாக அழுத்தமாக நகரும் காட்சிகளை – போரடித்து விடாமல் – சிந்தாமல் சிதறாமல் அழகாகத் தொகுத்து படத்தோடு பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறார் படத் தொகுப்பாளர் சி எஸ் பிரேம் .
வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் அனன்யா.
மாற்ற வளர்ச்சியை அடுத்தடுத்து காட்டும் இடத்தில் தோற்ற அமைப்புகள் தோற்ற அமைப்புகளை அருமையாக கொண்டு வந்துள்ளது படக் குழு .
மிக இலகுவாக நடித்துக் கவர்கிறார் கோகுல் ஆனந்த் .
உரையாடல் , இசை இரண்டும் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் .
சில பல லாஜிக் மீறல்களும் உறுத்துகின்றன.
இயக்குனர் கடைசி நேரத்தில் சொல்லும் அந்த விசயத்துக்கான சில துளிகளை முன்பே திரைக்கதையில் – முடிவை யூகிக்க முடியாத அளவுக்கு – தெளித்திருக்க வேண்டும் .
எனினும் ஒரு முக்கியமான – தெரிந்து கொள்ள வேண்டிய- விஷயத்தை , ஒரு பரபரப்பான திரில்லர் படமாகச் சொன்ன வகையில் மனம் கவர்கிறது திட்டம் இரண்டு .