ஃபிளக்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஷாலினி வில்சன் தயாரிக்க, துருவா, இந்துஜா, சிவ ஷாரா, ஆதித்யா நடிப்பில் ஏ கே இயக்கி இருக்கும் படம் சூப்பர் டூப்பர் .
பணக்காரப் பெண் யாரையாவது கடத்தி அந்தப் பெண்ணின் அப்பாவை மிரட்டி பணம் பறிக்க திட்டமிடும் சத்யா என்பவனும் ( துருவா) அவன் மாமாவும் ( ஷிவஷாரா) மாறுதலாக வேறொரு பெண்ணை ( இந்துஜா) கடத்தி விடுகின்றனர்
அவளும் பணக்காரப் பெண்தான் . அவள் அப்பாவை மிரட்டி பணம் பறிக்க முயலும் வேளையில் அவர் கொல்லப் படுகிறார் . அவர் போலீஸ் அதிகாரி வேறு.
இந்த நிலையில் கடத்தியவனின் நட்புக்கு பாத்திரமாகும் அந்தப் பெண், தன் அப்பாவைக் கொன்றவர்கள் பற்றி அறிய இன்னொரு அதிகாரியை சந்தித்து விசாரிக்க , அவரும் கொல்லப்படுகிறார் .
மைக்கேல் என்ற போதைப் பொருள் மாஃபியாதான் மரணங்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
தவிர கடத்தப்பட்ட பெண் வந்த காரில் முப்பது லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் இருப்பதை அவள் சொல்ல ,அந்தக் காரை கடத்தியவர்களில் ஒருவன் அதை ஒரு தாதாவின் அடியாளுக்கு விற்க , காரை தேடிப் போய் தாதாவை சந்திக்க, அது அவர்களை போதை மாஃபியா மைக்கேலிடம் கொண்டு போகிறது .
அங்கே போனால் மைக்கேல் யார் என்பதில் ஒரு டு டு டு டு டுவிஸ்ட் .
அப்புறம் என்ன என்பதே இந்த சூப்பர் டூப்பர் .
அடிப்படையில் திரைக்கதையில் சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன . ஒரு வேளை வாங்கிப் படித்துப் பார்த்தால் ரசித்து இருக்கலாம்.
இரண்டாவது சீனில் இருந்தே சீரியஸ் தன்மை இல்லாமல் காமெடி என்ற பெயரில் கொஞ்சம் இரட்டை அர்த்தமும் சேர்த்து படத்தைக் கொண்டு போக முயன்று இருக்கிறார்கள் . விஜய் சேதுபதி போல ஒருவருக்கு தோற்றம் கொடுத்து வேதா என்ற பெயரை வைத்து விக்ரம் வேதா படத்தை கலாய்க்க, முயன்று இருக்கிறார்கள்.
இந்துஜாவை உரிச்ச கோழி ஆக்கி கவர்ச்சியைக் கொண்டுவர …. முயன்று இருக்கிறார்கள் .
எல்லாமே ஒரு முயற்சிதான் .
நடித்தவர்களும் கொஞ்சம் நடிக்க முயற்சித்து இருக்கலாம் .