மவுன குரு, மகாமுனி போன்ற குறிப்பிடத்தக்க படங்களை இயக்கிய சாந்தகுமாரின் எழுத்து, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அர்ஜுன்தாஸ் நாயகனாக நடிக்க, தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ் என்று இரண்டு கதாநாயகிகள் நடிக்க, உடன் ரம்யா , ஜி எம் சுந்தர், சுஜித் சங்கர் நடிப்பில் உருவாகி மே பத்து அன்று திரைக்கு வரும் படம் ரசவாதி . சுஜித் சங்கர் கேரள முன்னாள் முதல்வர் எம் எம் எஸ் நம்பூதிரிபாட் குடும்பத்தில் வந்தவர்
படம் பற்றிப் பேச பத்திரிகையாளர்களை சந்தித்தார் சாந்தகுமார்
ஒரு சித்த மருத்துவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே கதை. ஆனால் இது சித்த மருத்துவம் பற்றிய கதை அல்ல.
பொதுவாக நான் இதுதான் கதை என்று மடிவு செய்து விட்டு ஸ்கிரிப்ட் எழுத உட்காருபவன் அல்ல.

ஒரு கதாபாத்திரம் அல்லது சூழலைப் பிடித்துக் கொண்டு , எல்லா வகையிலும் யோசித்து அந்தக் கதை அதுவாகப் போகும் பாதையில் எழுதுவேன்.
அப்படி மகாமுனி படத்துக்காக ஐந்து மாதம் நான் கொடைக்கானலில் இருந்த போது உருவான கதைதான் இந்த ரசவாதி .
அதே போல நான் நடிகர்களுக்காக கதை எழுதுபவன் அல்ல. எழுதி முடித்த பிறகே நடிகர்களைப் பற்றி யோசிப்பேன் . இந்தக் கதையில் ஒரு மனிதனின் இரண்டு வயதுத் தோற்றங்கள் வருகிறது. அதற்கேற்ற உடல் தோற்றம் இருந்ததால் அர்ஜுன் தாசை கதாநாயனாக தேர்ந்தெடுத்தேன் . அவர் பிரம்மாதமாக நடித்துள்ளார் .

தான்யா ரவிச்சாந்திரனோடு, ரேஷ்மா வெங்கடேஷ் என்ற புதியவரை இன்னொரு கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறேன் . விஜய் டிவி ரம்யாவுக்கு இதில் மிக வித்தியாசமான கேரக்டர்.
படத்தின் பெரும்பகுதி கொடைக்கானலில் எடுக்கப்பட்டுள்ளது
எனது மவுன குரு மகாமுனி படங்களுக்கே உரிய தனித்தன்மை இதிலும் இருக்கும் .
மே பத்து அன்று படம் திரைக்கு வருகிறது . “என்றார்
”வீரம்னா என்ன தெரியுமா ? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது “- இது குருதிப் புனல் படத்துக்காக கமல் எழுதிப் பேசிய வசனம்.

“பயம் இல்லாம நடிக்கிறதுதான் உங்க வீட்ல வீரம்னு சொல்லிக் கொடுத்து இருக்காங்களா? எங்க வீட்ல சண்டைல சாவறதுதான் வீரம்னு சொல்லிக் கொடுத்திருக்காங்கடா. பாத்துக்கலாம் வாடா ” என்று இந்தப் பட டிரைலரில் வசனம் பேசுகிறார் அர்ஜுன் தாஸ் .
”கமல்ஹாசனை சீண்டும் வசனமா? இல்லை பழைய படங்களின் ரெஃபரன்ஸ் இருந்தால் படம் ஓடும் என்பதற்காகவா/” என்று கேட்டால்
“டிரைலரில் வரும் ஒரு பகுதியை வைத்துக் கொண்டு எந்த முடிவும் செய்ய வேண்டாம். படத்தில் முழு பதிலும் கிடைக்கும் “என்றார் சாந்தகுமார் .