வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ள பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் தயாரிக்க,
வெள்ள பாண்டியனின் மகன் வெற்றி கதாநாயகனாக நடிக்க, மலையாளப் படமான ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ நாயகி அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக் நடிக்க,
நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க,
மிஸ்கினிடம் உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கி இருக்கும் படம் 8 தோட்டாக்கள் . வெடிப்பு எப்படி ? பார்க்கலாம் .
சிறு வயதில் செய்யாத கொலைக்காக தண்டிக்கப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் இருந்து, நன்னடத்தை காரணமாக ஒரு போலீஸ்காரரின் உதவியால் போலீஸ் வேலைக்கே வருகிறான் ஓர் இளைஞன் ( வெற்றி )
அவனது அதீத நேர்மை, லஞ்சம் வாங்காத குணம் காரணமாக் இன்ஸ்பெக்டர் (மைம் கோபி) உட்பட ஸ்டேஷனில் உள்ள பலருக்கும் அவனைப் பிடிப்பது இல்லை .
ஒரு காவல் அதிகாரி (அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா) மட்டும் அவனுக்கு ஆறுதல். அதோடு ஒரு தொலைக்காட்சிப் பெண் நிருபரோடு (அபர்ணா பாலமுரளி) அவனுக்கு பரிச்சயம் ஏற்படுகிறது .
ஒரு புகார் விசயத்தில் நாயகன் நடந்து கொள்ளும் நேரமையான விதம் பிடிக்காத இன்ஸ்பெக்டர் , அனுபவக் குறைவான அவனுக்கு,
ஒரு பெரியக் ரவுடியை பின்பற்றும் வேலையை , சிக்கல் வரட்டும் என்றே கொடுத்து எட்டு தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கி ஒன்றும் கொடுக்கிறார் .
ஒரு பேருந்துப் பயணத்தின் போது அந்தத் துப்பாக்கி களவாடப்படுகிறது .
அதைத் தேடும் முயற்சியில் நாயகன் நாயகி இடையே காதல் வருகிறது . ஆனால் துப்பாக்கி கைக்கு வரவில்லை
அந்தத் துப்பாக்கி சில கைகள் மாறி வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் ஒருவனின் ( எம் எஸ் பாஸ்கர் ) கைக்குப் போகிறது . அந்த கொள்ளையின் போது ஒரு குழந்தை சுட்டுக் கொல்லப்படுகிறது .
இதற்கிடையே நாயகன் நாயகிக்கு இடையே மன விரிசல் வருகிறது .
மேலும் துப்பாக்கி வெடித்து அடுத்து எந்த உயிர் போகுமோ என்ற நிலையில் துப்பாக்கியைக் கண்டு பிடிக்க கமிஷனரே (நாசர் ) களம் இறங்குகிறார் .
பணத்தை கொள்ளையடித்தவனுக்கும் அவனது உதவியாளர்களுக்கும் சண்டை வர,
போலீஸ் வேகமாக துப்பாக்கியை தேட,
அடுத்து அந்தத் துப்பாக்கி எங்கெங்கே வெடித்தது,? அதனால் விளைந்தது என்ன ? நாயகன் நாயகி காதல் என்ன ஆனது ? என்பதே இந்த எட்டு தோட்டாக்கள் .
ஸ்டேஷன் துப்பாக்கி பிக் பாக்கெட் அடிக்கப்பட்டு பல கை மாறுவது மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ற சுவாரஸ்யமாக ஏரியாவை சிறப்பாக அழுத்தமாகப் பயன்படுத்தி
படத்தைக் கொண்டு போகிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ் .
நுண்ணிய உணர்வுகளும் சிறப்பான வெளிப்படும் வகையில் காட்சி அமைத்து நடிக நடிகையரிடம் வேலை வாங்கி கவிதை போல படமாக்கி இருக்கிறார் .
சுந்தர மூர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பு . பின்னணி இசை மேலும் சிறப்பு .
தினேஷ் கே பாபுவின் ஒளிப்பதிவு அழகியலாக வெளிப்படுவதோடு காட்சியின் உணர்வுகளுக்கு பலம் கூட்டும் பணியை செய்கிறது .
நாகூரானின் படத் தொகுப்பு முதல் பாதியில் மிக மிக சிறப்பு .
சதீஷ் குமாரின் கலை இயக்கமும் சிறப்பு .
செய்யாத குற்றங்ககுக்காகவே தொடர்ந்து தண்டிக்கப்படும ஒரு நல்ல இளைஞனின் கதாபாத்திரத்தில் உணர்ந்து நடித்து உள்ளம் கவர்கிறார் வெற்றி .
அபர்ணா பால முரளி வெகு இயல்பு .
கமிஷனரின் கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் அட்டகாசமாக செய்துள்ளார் நாசர் .
இரண்டாம் பகுதியில் மிக நீண்ட ஷாட்களில் நுண்ணிய உணர்வுகளோடு கூடிய அருவி போன்ற நடிப்பை வழங்கி இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர் .
முன்னாள் ரவுடியின் மனைவி இந்நாள் கொள்ளைக்காரனின் கள்ளக் காதலி என்ற சிக்கலான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் மீரா மிதுன் .
அம்மா கிரியேஷன்ஸ் சிவா மிக யதார்த்தமாக நடித்துள்ளார் .
இரண்டே காட்சி என்றாலும் பரிதாபம் ஈட்டுகிறார் ஆர் எஸ் சிவாஜி .
அதே நேரம் ,
படத்தில் நியாய தர்மத்துக்கு எதிரான அநியாயத்துக்கு ஆதரவான வாதங்கள் அதிகம் இருப்பதுதான் பகீர் சமாச்சாரம் !
நம்மை பாதிக்கும் நூறு பேரைக் கூட தண்டிக்கவோ கண்டிக்கவோ மன்னிக்கவோ செய்வது நம்ம விருப்பம் . ஆனால் அவற்றுக்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத ஒருவரை தண்டிக்க நமக்கு என்ன நியாயம் உண்டு ?
வங்கியில் குழந்தை கொல்லப்படும் காட்சியை கடைசி வரை திரைக்கதையால் டேலி செய்ய முடியலியே . அப்புறம் எப்படி எம் எஸ் பாஸ்கரின் கேரக்டர் மீது பரிதாபம் வரும் ?
அவ்வளவு ஏன் ? கதாநாயகியே கூட , ஒரு நிலையில் தன் சுயநலத்துக்காக நாயகனை போட்டுக் கொடுத்து விட்டு , அதை நியாயப்படுத்திக் கொந்தளிக்கிறாள்
நேர்மையான இருந்து பயன் இல்லை என்பதை கடைசிவரை அழுத்தமாகச் சொல்கிற வசனங்கள் சில மனதைப் பிசைகிறது .
இப்படி சில தவிர்த்திருக்க வேண்டிய ஜீரணிக்க முடியாத குறைகள் படத்தில் இருந்தாலும் ,
ஒரு நல்லவன் கெட்டவனாக மாறுவதற்குப் பின்னால் சிக்கிக் கொள்ளாத பல கெட்டவர்கள் , சுயநலவாதிகள் இருக்கிறார்கள் என்பதையும்,
வாழ்வின் பெரும்பகுதியை நேர்மையாகக் கழித்தவர்கள் கூட , ஒரு நிலையில் மோசமான ஆளாக மாறுவதற்குப் பின்னால்,
சம்மந்தப்பட்ட மனிதரின் குடும்பம் , வாரிசுகள் , உடன் செயல்படுவோர் ஆகியோருக்கு பெரும்பங்கு உள்ளது என்பதையும்
அழுத்தமாகச் சொன்ன வகையில் , மனம் கவர்கிறது படம்
மொத்தத்தில்
8 தோட்டாக்கள்…. ரசனையான சீறல்









