எஸ் பி என்டர்டைன்மென்ட் சார்பில் எஸ் பாலசுப்ரமணியன் தயாரிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து எழில்துரை என்பவர் இயக்க,
மது மிலா, அபிநயா, மைம் கோபி , அர்ஜுனன் ஆகியோர் நடித்திருக்கும் படம் செஞ்சிட்டாளே என் காதல. படம் ரசிகனை என்ன செய்யும் ? பார்க்கலாம் .
காதலில் தோல்வி அடைந்த இளைஞன் வீரா (எழில்துரை) சேலையை தூக்குக் கயிறு போல வீட்டில் மாட்டி வைத்து விட்டு காணாமல் போகிறான் .
அவனை அம்மா (ரமா) , தங்கை, நண்பர்கள் , ஒரு தலையாகக் காதலித்த சோனா (அபிநயா) ஆகியோர் தேடுகிறார்கள் . அந்த தேடலின் ஊடாக வீரா – அனுஷ்கா (மதுமிலா) காதல் விவரிக்கப்படுகிறது .
பள்ளிக் காலம் தொட்டே பரிட்சயமான அனுவை கல்லூரிக் காலத்தில் காதலிக்கத் துவங்குகிறான் வீரா . அனுவின் அப்பா தாமோதரன் (மைம் கோபி) ,
அனுவின் அக்காவின் காதலனை ரகசியமாகக் கொன்று விட்டு , பயந்து ஓடி விட்டதாக காதலித்தவளையே நம்ப வைத்தவர் .
வீரா – அனு காதலில் ஒரு நிலையில் அனு மற்ற நண்பர்களுக்கு தரும் முக்கியத்துவமும் அவளது அடுத்தடுத்து பெட்டர் தேடும் சலன மனோபாவமும் காதலர்களுக்குள் பிரச்னை ஏற்படுத்துகிறது .
வீராவை விடுத்து இன்னொருவனுடன் பழகிய அனு, ஒரு நிலையில் அவனையும் விடுத்து மூன்றாவதாக ஒருவனுடன் பழக , அதை அடுத்தே வீரா வீட்டில் இருந்து காணாமல் போயிருக்கிறான்.
வீரா எங்கே போனான்? அனு மீதான வீராவின் முடிவு என்ன ? வீரவை விரும்பும் சோனாவின் காதல் நிறைவேறியதா ” என்பதே செஞ்சிட்டாளே என் காதல
படத்தை ஜஸ்ட் லைக் தட் கேஷூவலாக அதோடு ஒரு எள்ளல் தொனியில் சொல்ல முயன்று இருக்கிறார் இயக்குனர் எழில் துரை.
ஆனால் வெகு ஜன ரசிகனையும் ஈர்க்க, அந்த எள்ளல் தொனியின் அளவை இன்னும் ஏற்றி இருக்க வேண்டும் .
ஒரு கதைப்போக்கு அல்லது சம்பவம் அல்லது காட்சியின் முடிவை முன்னரே சொல்லி விட்டு,
அப்புறம் நடந்ததை சொல்லும் அந்த தலைகீழ் விவரிப்பு (ரிவர்ஸ் நேரேஷன் அல்லது ரிவர்ஸ் கட்டிங் ) உத்தி ,
தமிழ் சினிமாவில் மிக மிகக் குறைவாக பயன்படுததப்பட்டுள்ளது .
அதை படம் முழுக்க பயன்படுத்திய வகையில் கவனம் கவர்கிறார் இயக்குனர் எழில் துரை
ஒரு நிலையில் காணாமல் போன வீரா திரும்பி வந்து எல்லோரும் ” எங்கடா போன? என்று மாற்றி மாற்றிக் கேட்கும் போது இடைவேளை விட்டு மீண்டும் படம் ஆரம்பிக்கும்போது ,
எங்கே போனேன் சென்று சொல்லாமல் மீண்டும் தலைகீழ் விவரிப்பு உத்திக்கே போய் இரண்டாம் பாதியை நகர்த்துவது தில்லுதான் .
வீராவுக்கும் அனுவுக்கும் விரிசல் பெரிதாகும் அந்த நீண்ட சுழல் நகர்வுக் (ரவுண்ட் ட்ராலி ) ஒரெடுப்பு (ஒரே ஷாட்) காட்சியில் வசனம் நடிப்பு படமாக்கல் அந்த பாணி எல்லாமே அருமை . பாராட்டுக்கள்
இன்னும் சிறப்பான ஆள் கிடைத்து விட்ட நிலையில் பழைய காதலனை கழட்டி விட விதம் விதமான யோசனை சொல்லும் அந்தப் பெண் தோழிகள் மிரட்டுகிறார்கள்.
ஒரு நல்ல நியாயமான பக்குவமில்லாத அப்பாவி இளைஞன் தனது உண்மைக் காதலில் அடிவாங்கும்போது எப்படி துடிப்பான் என்பதை,
நடிப்பு, மொழி, என்று எல்லாவகையிலும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் வீராவாக நடித்துள்ள எழில் துரை . அலட்டல் நடிப்பில் கவர்கிறார் மதுமிலா . பேச்சில் உள்ள மலையாள நாற்றத்தை தவிர்த்து இருக்கலாம் .
அபிநயா பாந்தம் .
இப்படியெல்லாம் பாராட்ட மேக்கிங்கில் பல விஷயங்கள் இருந்தாலும் அடிப்படைக் கதை திரைக்கதை ஒரு கமர்ஷியல் வெற்றிப் படத்துக்குப் போதுமானதாக இல்லை
அபிநயா காதலின் முடிவு வித்தியாசம்தான் . அனால் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறதா ?
படத்தின் முடிவு வித்தியாசமாக இருக்க வேண்டும்தான். ஆனால் ஏற்றுக் கொள்ளும்படி இருப்பது அதை விட முக்கியம் அல்லவா எழில்துரை ?
கதையில் இன்னும் அழுத்தம் , உத்திக்கும் அப்பாற்பட்டு திரைக்கதையில் இன்னும் நிறைய விஷயங்கள் வைத்து சில காட்சிகளில் மட்டும் இருக்கும் வசன நேர்த்தியை,
படம் முழுக்க கொண்டுவந்து அதற்கேற்ற மேக்கிங் கொடுத்து இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில்..
செஞ்சிட்டாளே என் காதல … சேதாரம் அதிகம் என்பதால் செய்கூலி நஷ்டக் கணக்கில் !



