ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்க, சமுத்திரக்கனி , மணிகண்டன் , மதுமதி, சனா, கைலாஷ், அகல்யா, நடிப்பில் ஹலீதா ஷமீம் இயக்கி இருக்கும் படம்.
வளர்ந்து பெரிய மனிதனாகி கல்யாணம் கட்டி வாழ்ந்து பிள்ளை பெற்று பொண்டாட்டி செத்து தாயில்லாப் பிள்ளைகளோடு வாழும்போதும்,
மாறாத குழந்தைத்தனம் இதயம் முழுக்க அன்பு, சக மனித நேசம் , கொஞ்சம் அயோக்கியத்தனம் என்று கலந்து கட்டிய குணாம்சங்களோடு வாழும் முத்துக்குட்டியால்( சமுத்திரக்கனி)
அவரது மகள் மீனாவும் (அகல்யா) மகன் பார்த்தியும்( கைலாஷ்) நிறைய அவமானங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகிறார்கள் .
வளர்ந்து பெரிய மனுஷியான மீனா (சனா உதயகுமார்) அங்கனயே வாக்கப்பட , இளைஞனான பார்த்தி( மணிகண்டன்) சென்னையில் வேலை செய்கிறான்.
இந்த நிலையில் முத்துக்குட்டி இறந்த தகவல் வர , சென்னையில் இருந்து பஸ்ஸில் வரும் பார்த்தி, இரவு முழுக்க பஸ்ஸில் படம் போட்டதால் தூங்க முடியாமல் போனதற்கு வருத்தப்படும் அளவுக்குக் கூட அப்பாவின் மரணத்துக்கு வருந்தாமல் ஊருக்கு வருகிறான்
வந்த இடத்தில் நடக்கும் சோக, நகைச்சுவை , அழகியல், களேபர , மற்றும் சில காதுல பூ நகைச்சுவைச் சம்பவங்களே..ஏ..ஏ..ஏ..
இந்த ஏலே. சபாஷ் டைரக்டர் ஹலீதா ஷமீம்.
தமிழ் சினிமா கிட்டத்தட்ட மறந்தே விட்ட குழந்தைகள் உலகம், பெரிய மனிதர்களின் குழந்தைமை , பழக்கத்தில் அறிமுகமாகும் மனிதர்களைக் கூட மாமா, அத்தை என்று உறவு சொல்லி அழைக்கும் இந்த மண்ணின் உயர் கலாச்சாரம்,
அழகியல் வண்ண மயம், கிராமிய மனிதர்களின் எளிய தொழில்கள், இவற்றை சிறப்பாக காட்சிப் படுத்தி இருப்பதற்காக ஆவாரம் பூங்கொத்தோடு மனப் பூர்வமான பாராட்டுகள். அள்ளிக்கோ அள்ளிக்கோ என்று அடுத்தடுத்து காட்சிகளையும் திருப்பங்களையும் கொடுக்கிற கிரியேட்டிவிட்டி, பெரிய பெரிய காட்சிகளைக் கூட இறுக்கப் பிழிந்து சுருக்கக் கொடுக்கிற ஆளுமை , தனித்துவம் வாய்ந்த இயக்கம், பெண்களின் மனக் கூறுகளை சரியாக வெளிப்படுத்தும் காட்சிகள், வசனங்கள் என்று அசத்துகிறார் ஹலீதா ஷமீம் . மிக சிறப்பு.
காதல் காட்சிகள், கனிந்து பொங்கி வழியும் கவிதைகள் !
தனக்கு வேண்டியவருக்கு சொல்ல வேண்டிய செய்திகளை, விசயங்களை, பொருள்களை , ‘ பாக்குறப்போ பாத்துக்கோ’ என்று எழுதியோ, ‘கிடைக்கிறப்போ எடுத்துக்கோ அல்லது எடுத்துக்கலாம்’ என்று ஆங்காங்கே வைக்கவோ செய்கிற அந்த மக்களின் குணாதிசயம் சொல்லும் காட்சிகள் அழகு.
பனை மரக் காட்சி பலே .
இதுவரை பார்க்காத – முற்றிலும் மாறுபட்ட சமுத்திரக் கனி.
கொஞ்சம் அசந்தாலும் அடுத்தவனை காசுக்கு ஏமாற்றுகிற, பணத்துக்காக பிள்ளையையே லீசுக்கு விடற ( ஹாஹா .. அசத்தல் வசனம் ஹலீதா) பய தானே என்று போய் விடுகிற வாய்ப்புள்ள கேரக்டரை,
தனது செறிவான பண்பட்ட நடிப்பால் அழகாக பேலன்ஸ் செய்து, அசத்துகிறார் கனி .
வேறுபட்ட நடிப்பிலும் சிறப்பு (பின்னணிக் குரல் சேர்ப்பில் செய்திருக்கும் அந்த சிறு மாற்றம்….. டைரக்டருக்கு ஒரு சபாஷ்)
இது அது என்று பிரித்துச் சொல்லவே முடியாத அளவுக்கு பண்பட்ட நடிப்பால் மனம் ஈர்க்கிறார் மணிகண்டன் . முழுமையான பங்களிப்பு . வாழ்த்துகள்.
சிறு வயது மீனா, மற்றும் பார்த்தியாக வரும் அகல்யாவும் கைலாஷும் படத்தின் ஒரு பெரும்பகுதியை தங்களது முற்றாத தோள்களில் அனாயாச ஹெர்குலிஸ் போலத் தாங்குகிறார்கள். கும்பிடறோம் சாமிகளா !
நாயகி நாச்சியாவாக வரும் மதுமதி இயல்பான அழகு எளிமையான நடிப்பில் பாந்தம்.
கிராமங்களின் வெறுமை , அழகு , சுகந்தம் இவற்றை சிறப்பாக பதிவு செய்து , முதல் காட்சியில் இருந்து முடிகிற காட்சி வரை கண்ணுக்குள் தேன் ஊற்றுகிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு .
இசை இன்னும் கொஞ்சம் இசைந்து இருக்கலாம் . படத் தொகுப்பும் இன்னும் ‘கட்டு செட்டாக’ இருந்திருக்க வேண்டும்.
கிராமத்து மரண வீடுகளில் நடக்கும் இரட்டை வேடங்களைப் பதிப்பது தப்பில்லை. ஆனால், ‘ என்னடா இது? நகைச்சுவை என்ற பெயரில் இழவு வீட்டுக்கு வரும் கிராம மக்கள் எல்லோரையுமே இயக்குனர் அசிங்கப்படுத்துகிறாரே?’ என்று பார்த்தால்,
பின்னால் வரும் அந்த எதிர்பாராத திருப்பத்துக்கான குறியீடாகவே இப்படி அமைத்து இருக்கிறார் என்று அப்புறம் புரிகிறது.
ஆனால் லாஜிக்கே இல்லாத அந்த திருப்பமும் அதற்குப் பிறகு வரும் கொண்டை ஊசி வளைவுகளும்தான் அதுவரை நாம் ஒரு யதார்த்த வாழ்வியலைப் பார்க்கிறோம் என்ற உணர்வில் இருந்து நம்மைப் பிடுங்கி எறிந்து ,
” ஏலே.. இது சும்மா பயாஸ்கோப்பு ப்பே…. ” என்ற சலிப்புக்குள் தள்ளி விடுகிறது. (அதற்கிடையிலும் சில நல்ல காட்சிகள் அழகியல் வெளிப்பாடுகள் வருவதை மறுப்பதற்கில்லை . )
மகனுக்கு நல்லது நினைக்கும் முத்துக்குட்டி, தங்கள் நாச்சியா வீட்டுக்கு வந்த போது அதைச் சொல்லாமல் பார்த்தியிடம் மறைப்பது கேரக்டர் அசாசினேஷன், கதாபாத்திரச் சீர்குலைப்பு .
”குடி போதையில் இருந்தேன் அவளுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியல” என்று பின்னால் முத்துக்குட்டி சொல்வது, போதையில் உளறுவதை விட போங்கு உளறல்.
கடைசி காட்சியில் மணிகண்டன் நாடகத்தனமாகப் பேசும்போதே அடுத்து நடக்க இருப்பதை சுலபமாக யூகிக்க முடிகிறது
இப்படி சில குறைகளும் இருந்தாலும்…
ஏலே …. பட்டுத் துணியில் பாதரசத்தைக் கொட்டி மயிலிறகால் கோலம் போடும் அனுபவம்