ஜே பி ஆர் மற்றும் ஸ்டாலின் தயாரிப்பில் , பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், சதீஷ் , மது பாலா நடிப்பில் ஜே பி ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி இருக்கும் படம் அக்னி தேவ் . படம் தேவலாமா ? இல்லை அக்னியா ? பேசுவோம் .
நியாயமான போலீஸ் அதிகாரி அக்னி தேவும் ( பாபி சிம்ஹா) தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணி புரியும் அவர் மனைவியும் ( ரம்யா நம்பீசன்) கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்கள். அப்பாவுடன் ( லிவிங்ஸ்டன் ) இருக்கிறார் அக்னி தேவ்.
மேற்படி தொலைக்காட்சிக்காக மனைவியின் சிபாரிசுடன் அக்னி தேவை பேட்டி எடுக்க வரும் சூர்யா என்ற பெண், பஸ் நிலையத்தில் குத்திக் கொல்லப் படுகிறாள் .

அவளைப் பின் தொடர்ந்த ஓர் அப்பாவி நபரை குற்றவாளி என்று கை காட்டி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள் கமிஷனரும் (போஸ் வெங்கட்) அதிகார மையபுள்ளியான ஒரு நபரும் ( மதுபாலா).
சூர்யா கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தைச் சொல்வதாக சூர்யாவின் தோழி ஒருத்தி அக்னி தேவை சந்திக்கிறாள். அரியானா அரசியல்வாதி ஒருவர் சிறுவர்கள் இருவரால் திகிலூட்டும்படி கொல்லப் பட்டபடியே ,
சூர்யாவும் சிறுவன் ஒருவனால் கொல்லப் பட்டாள் என்கிறாள் . அதை சொல்லும்போதே, சொல்பவள் உடல் பாளம் பாளமாக வெடிக்க ஆரம்பித்து , மருத்துவமானியில் சேர்க்கப் பட்டு சிகிச்சையின்போது அவளும் ஒரு சிறுவனால் கொல்லப் படுகிறாள் .

கொலைகாரனாக குற்றம் சாட்டப்படும்அப்பாவி இளைஞனை காப்பாற்ற அகினி தேவ் முயல , கமிஷனர் அக்னிதேவுக்கு எதிராக செயல்படுகிறார்.
அடுத்த கட்டமாக நெற்றியில் சூரணம் போட்ட , வில் சேரில் நடமாடுகிற , உடல் ஊனம் உற்ற ஆக்ரோஷமான அந்த அதிகார மையப் புள்ளி அக்னிதேவோடு நேரடியாக மோத, நடந்த மோதலில் ஜெயித்தது யார் ? நடந்தது என்ன ? என்பது ஒரு பக்கம்.
இதற்கிடைய ஒரு பிரதமரின் மரணம் அதனால் உருவான கலவரம் அதில் சில பிரிவுகள் , பிரிந்த உறவுகள் என்ன ஆனது எப்படி சந்தித்துக் கொண்டது என்று ஒரு கதைப் போக்கு
இரண்டும் சேர்ந்தால் அதுவே அக்னிதேவ் .

ராஜீவ் காந்தி மரண காலக் கலவரம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொள்ளப் பட்ட சுவாதி , குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு கொல்லப் பட்ட ராம் குமார் , தப்பிய நிஜ குற்றவாளிகள் …
இந்த சம்பவங்களோடு கலைஞர் , ஜெயலலிதா, சசி கலா , ஆந்திராவின் லட்சுமி சிவ பார்வதி ( என் டி ராமராவை கடைசி காலத்தில் கல்யாணம் செய்து கொண்டு கட்சியைக் கைப்பற்றியவர் –அவரிடம் இருந்துதான் சந்திர பாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியை மீட்டார்) இவர்களை கலந்து ஒரு வில்லி கேரக்டர் …
சில கொலைகார சிறார்கள் , யுரேனியம் கெமிக்கல் தடவிய கத்தி என்று கொஞ்சம் வேதியியல் இதனுடன் ஒரு நேர்மையான காவல் அதிகாரி , அவருடன் காமெடி என்ற பெயரில் மொக்கை போடும் நண்பன் கேரக்டர் ( சதீஷ்)

–என்ற கலவையில் பயணிக்கிறது அக்னி தேவ்.
இப்படி சுவாரஸ்யமான பல விசயங்களில் இருந்து கதை செய்தவர்கள் அதை சுவையான திரைக்கதையாக்க தவறி இருக்கிறார்கள் .
சும்மா நாலு வசனம் பேசுவதற்காக நேர்மையான அரசியல்வாதி என்ற பெயரில் எம் எஸ் பாஸ்கர் .
சதீஷ் உட்பட பல கதாபாத்திரங்கள் நாட்டு நடப்பாக சொல்லும் வசனங்கள் அரதப் பழசு . ஸ்கூல் டிராமா வசனம் போல இருக்கு
இதையும் மீறி படத்தின் சில பகுதிகளை சுவாரஸ்யமாக சொல்லும் போது கவனிக்க வைக்கிறார்கள் இயக்குனர்களான ஜே பி ஆரும் ஷாம் சூர்யாவும்.

ஜனாவின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ்பிஜாயின் இசையும் ஜஸ்ட் ஒகே .
ஷார்ப் ஆக நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா . ஆனால் அவருக்கு வேறு யாரோ பின்னணி பேசி இருப்பது செட் ஆகவில்லை. ஒரு காட்சியில் அவர் முகத்தை சி ஜி யில் உருவாக்கி இருக்கிறார்கள் . இதெல்லாம் நடிகனுக்கு செய்யப்படும் அநியாயம் .
ரம்யா நம்பீசன் ஒப்புக்கு சப்பாணி . கொடூர வில்லி என்ற போர்வையில் மதுபாலா கொட்டும் நடிப்பு தாங்க முடியவில்லை .
அப்பாவிகளுக்கும் நியாயவாதிகளுக்கும் உலகில் இடம் இல்லை என்ற இடத்தில் படத்தை முடித்து இருந்தால் கூட யதார்த்தத்தை ஒப்பிடுகையில் ஒரு முழுமை கிடைத்து இருக்கும் . ஆனால் அதற்கு அப்புறம் சொல்லும் அம்மா மகன் கதை பக்கா சினிமாத்தனம் .

தவிர, இப்படி எல்லாம் பல அயோக்கியர்கள் உருவாக காரணம் அந்தக் கலவரம்தான் என்று ஒரு சப்பைக் கட்டு வேறு . விட்டால் அந்த பிரதமர் செத்துப் போனதே காரணம் என்று சொல்லி இருப்பார்கள் போல இருக்கு .
திரைக்கதை வசனத்தில் கனமும் நேர்த்தியும் இருந்திருந்தால் பற்றி எரிந்திருக்கும் அக்னி தேவ்
