பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா தயாரிக்க ரெஜித், ராதிகா பிரீத்தி , மவுலி , கல்யாணி நடராஜன் நடிப்பில் கிருஷ்ண பாண்டி எழுதி இயக்கி இருக்கும் படம் எம்பிரான் .
மருத்துவமனையில் நினைவுகள் அசைவுகள் இன்றி சிகிச்சையில் இருக்கும் பெண் ஒருத்தி (ராதிகா பிரீத்தி), ஒரு மருத்துவரின் (ரெஜித்) கனவில் அடிக்கடி வருகிறாள் .
அது குறித்த சிந்தனையில் அவன் இருக்கும்போது பெண்ணின் கதை விவரிக்கப்படுகிறது.
கோவில் குருக்கள் ஒருவரின் ( மவுலி) பேத்தியான அந்தப் பெண் (தாய் தந்தையை இழந்தவள்) மேற்படி மருத்துவர் மீது காதல் கொள்கிறாள் . அவனிடம் பேசவும் முடியாமல் , அவனை சந்திக்கும் முயற்சிகளும் தள்ளிப் போக,

ஒரு நிலையில் தீர்மானித்து, தாத்தாவோடு மருத்துவரை சந்திக்க கிளம்பும்போது , விபத்து ஒன்றில் சிக்கி நினைவுகள் அசைவுகள் இல்லா நிலைக்குப் போய் விடுகிறாள் .
எனினும் அவளது காதல் எண்ணம் அவனது கனவில் அவளை அடிக்கடி கொண்டு வருகிறது .
அவளை அவன் கண்டு பிடித்தானா ? அவள் குணமானாளா? காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதே இந்த எம்பிரான் .
மிக மெல்லிய கதை . சின்னச் சின்ன காட்சிகளையும் மிக அழுத்தமாக இயக்கி இருக்கிறார் கிருஷ்ண பாண்டி . நல்ல படமாக்கல் .

ரெஜித் ஜஸ்ட் லைக் தட் நடிக்கிறார் . ராதிகா பிரீத்தி அழகாக இருக்கிறார் . நடிப்பும் ஒகே . மவுலி வழக்கம் போல் சிறப்பான நடிப்பு .
கல்யாணி நடராஜன் செஞ்சு வச்ச பொம்மை .
புகழேந்தியின் ஒளிப்பதிவு துவக்கம் முதல் முடிவு வரை அசத்துகிறது . ரம்மியம் .
பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ஒகே . ஆனால் பின்னணி இசையில்தான் ஆன் பண்ணி விட்டு தூங்கி விட்டவர் போல ஒரு இசைக் குறிப்பையே திரும்பத் திரும்ப வாசிக்கிறார், இடை வெளியே இல்லாமல் .
கலை இயக்கமும் அழகு .

திரைக்கதையில்தான் ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் விட்டேத்தித்தனம் .
டாக்டரை சந்திக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகி கத்தி எடுத்துக் குத்திக் கொள்ளவும் , காலில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொள்ளவும் கொதிக்கிற நீரில் காலை வைக்கவும் முயல்வது எல்லாம் வெட்டி எறிய வேண்டிய விபரீதக் காட்சிகள் .
இதில்” பசங்க எல்லாம் காதலுக்காக உயிரையே கொடுக்கறாங்க. ஆனா நாம ஒரு காயம் கூட ஏற்படுத்திக்க முடியல” என்று சோகத்தோடு சொல்வது போல வசனம் வேறு.
தலை வலி என்று சொல்லி விட்டு டாக்டரை பார்க்கப் போகக் கூடாதா ?

ஒரே நேரத்தில் சில்லென்ற கோக் , மேங்கோ ஜூஸ், ஐஸ் கிரீம் , தயிர் எல்லாம் குடித்து காய்ச்சலை வரவழைத்துக் கொள்வாராம் நாயகி .
சரி காய்ச்சல் வந்தது அல்லவா ? டாக்டரை பார்க்க அப்பாயின்ட்மென்ட் வாங்குவாராம். ஆனால் போகாமல தூங்கி விடுவாராம் .
தாத்தா வந்து ஜெயா என்று மெல்லிய குரலில் அழைத்தாலே விழித்துக் கொள்வாராம் . ஆனால் மருத்துவமனையில் இருந்து மாறி மாறி போன் அடித்ததாலும் விழிக்க மாட்டாராம்.

நாயகனை பின் தொடர்ந்து போய்க் கொண்டே இருப்பாராம் . ஆனால் அவனை சந்திக்க இவ்வளவு களேபரங்கள் செய்வாராம் .
திரைக்கதையில் அநியாயத்துக்கு அலட்சியம் .
மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் பெண் எப்படி ஒருவரின் கனவில் அடிக்கடி வர முடியும் என்பதற்கு விளக்கமே இல்லை . டெலிபதி என்றாவது சொல்லி இருக்கலாம் .
சரி போகட்டும் என்றால் இடைவேளைக்கு பிறகு வரும் பகுதியில் பலமுறை பார்த்து சலித்த காட்சிகள் .
நல்ல கதை திரைகதை கைவரப் பெற்றால் சிறந்த இயக்குனராக ஜொலிக்கலாம் கிருஷ்ண பாண்டி .
