பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரிக்க, அஜிதேஷ், ஸ்ரீ ஸ்வேதா , பாக்யராஜ் , நமோ நாராயணன் , தலைவாசல் விஜய், சுபாஷினி கண்ணன் , செம்புலி ஜெகன் , வாசு சீனிவாசன் , சாய் கோபி , ராகவன் நடிப்பில் எம் சுந்தர் இயக்கத்தில் இருக்கும் படம் .
கே . பாக்யராஜ், அம்பிகா, ராஜேஷ், காஜா ஷெரீப் நடிப்பில் கே . பாக்யராஜ் இயக்கத்தில் 1981 இல் வந்த அந்த ஏழு நாட்கள் தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைக்கு ஏற்றவாறு ஏற்றுக்கொள்ள வைக்கும் பொருத்தமான திரைக்கதைக்கும் பெயர் பெற்ற கிளாசிக் படம்
என்னதான் காதலித்தாலும் வேறு ஒருவன் தாலி கட்டிய பிறகு அந்தத் தாலியை பெண் மதிக்க வேண்டும் ; கணவன் கூடத்தான் வாழ வேண்டும் என்று இந்தப் படத்தை முடித்த இதே பாக்யராஜ்தான்… , .
‘தாலி எல்லாம் முக்கியம் இல்லை . மனசும் மனுஷனும்தான் முக்கியம்’ என்று சொன்ன, கிளைமாக்சில் தாலியைக் கழட்டி எறியும் நாயகியைக் காட்டி படத்தை முடிக்கும் புதிய வார்ப்புகள் படத்தில் இதன் பொருள் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் (இன்னொருவர் பாரதிராஜா, கதை செல்வராஜ் )
கதை எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற சரியான திரைக்கதை அமைக்கத் தெரிந்தால் எதிர் எதிரான இரண்டு விசயங்களையும் கூட மக்களைக் கொண்டாட வைக்க முடியும் என்று நிரூபித்தவர் பாக்யராஜ்.
அந்த பாக்யராஜின் சிஷ்யர் என்பதாலும் (?) அந்த படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்துவதாலும் இதில் பாக்யராஜுக்கு ஒரே கேரக்டர் கொடுத்த இயக்குனர் .
இளைஞன் ஒருவனுக்கு (அஜிதேஷ்) , ஒருவரின் கண்ணைப் பார்த்தால் அவர் எப்போது சாவார் என்பது தெரிகிறது . நாய் முதல் மனிதர்கள் வரை அப்படியே நடக்கிறது .
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இதே சக்தியைக் கொண்டிருந்த ஒரு கிராமத்து நபர் ( தலைவாசல் விஜய்) தன் பேத்தி இறக்கப் போகிறாள் என்பதை அறிந்து அவளைக் காப்பாற்ற முயன்று முடியாமல் போக, தன் கண்களைத் தானே குத்திக் கொள்கிறார்.
இந்த இடத்தில் நாயகனின் பின்கதை சொல்லப்படுகிறது .
எப்படியாவது அமைச்சரை (பாக்யராஜ்) தாஜா செய்து எம் எல் ஏ சீட்டு வாங்கி விடும் கனவில் இருக்கும் அரசியல்வாதியின் (நமோ நாராயணன்) மகனான அந்த இளைஞன் ஒரு ஆஸ்ட்ரோ பிசிசிஸ்ட் (வான் இயற்பியம் நிபுணர்)
அப்பாவுக்காக பெண் வழக்கறிஞர் ஒருவரை (சுபாஷினி கண்ணன்) பார்க்க வரும் அவன் அங்கே உதவி வக்கீலாக இருக்கும் பெண் மீது (ஸ்ரீ ஸ்வேதா) காதலாகிறான் .
அந்தப் பெண்ணின் அப்பா ஒரு வில்லங்கமான போலீஸ் அதிகாரி . அவருக்கு அரசியல்வாதி என்றாலே ஆகாது . மகளையே அடிக்கடி செக் செய்து கொண்டு இருப்பவர் .
அமைச்சர் தனது மகள் நாயகனுக்குக் கொடுக்க விரும்ப, நாயகனின் அப்பாவுக்கு எம்.எல் ஏ கனவு சுலபமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை .
இந்த நிலையில்தான் நாயகனுக்கு இந்த சக்தி .
ஒருவேளை காதலியின் மரணமும் தெரிந்து விடுமோ என்று அவன் அவளைப் பார்க்காமலே தவிர்க்க, ஒரு நிலையில் ”என்னையும் சோதித்து விடு” என்கிறார் . சோதித்து விட்டு அவளுக்கு ஆபத்து இல்லை என்கிறான் . ஆனால் ஏழு நாட்களுக்குள் அவள் சாகப் போவது உறுதி என்பது அவனுக்குத் தெரிகிறது .
முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய கிராமத்து ஆள் போல , நாயகனும் தன் கண்ணைக் குத்திக் கொள்ளப் போக, அவனைக் காப்பாற்றும் நாயகிக்கு உண்மை சொல்லப்படுகிறது .
நாயகியின் வில்லங்கப் போலீஸ்கார அப்பாவுக்கு தன் மகளை அரசியல்வாதி மகன் காதலிப்பது தெரிந்து அவனையும் அவன் அப்பாவையும் ஒரு வழி செய்ய கிளம்புகிறார் .
இந்தக் காதல் நிறைவேறினால் தனது எம் ஏல் ஏ கனவு நிறைவேறாது என்பதால் இந்தக் காதலைப் பிரிக்க அரசியல்வாதியும் இருவரையும் தேடுகிறார் .
ஆனால் காதல் ஜோடி தப்பிக் கொடைக்கானல் வந்து தங்குகிறது . அவளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதால் தங்கும் வீட்டில் கனமான கூரான பொருள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறான் காதலன். .
ஆனால் அவளுக்கு காய்ச்சல் வந்து உடல்நலம் குன்றுகிறது . தண்ணீர் குடிக்க முடியவில்லை. தண்ணீரைப் பார்த்தால் பயம் வருகிறது .
காரணம் கொஞ்ச நாள் முன்பு அவளை ஒரு தெரு நாய் கடிக்க, ரேபிஸ் தடுப்பூசி போடப் போன இடத்தில் டாக்டர் காலாவதி ஆன மருந்தைப் போட்டு விடுகிறார் .
ரேபிஸ் தடுக்கப்படாமல் முற்றி விட்டது இப்போது தெரிகிறது . இனி அவளைக் காப்பாற்ற முடியாது என்று சொல்கிறார்கள்.
நாயகன் அவளைக் காப்பாற்றுகிறானா? இல்லையா? அவனுக்கு என்ன நடந்தது என்பதே படம்.
தமிழின் முதல் டெலஸ்கோப் பை அடிப்படையாகக் கொண்ட படம் இது என்று சொல்கிறார்கள் . இப்படியே தமிழ் சினிமாவின் முதல் அலுமினிய அண்டாவை அடிப்படையாகக் கொண்ட படம் , பித்தளை சொம்பை அடிப்படையாகக் கொண்ட படம் என்று எல்லாம் சொல்லலாம் . அதுவா விஷயம்?
டெலஸ்கோப் கொண்ட முதல் படமாகவே இருக்கட்டும். அந்த டெலஸ்கோப் வழியே என்ன கதை சொல்கிறார்கள் என்பது அல்லவா முக்கியம் ?
கிட்டத்தட்ட முக்கால்வாசி இதே கதையில் சென்ற வாரம் கிஸ் என்ற படம் வந்து கீழ் உதடு கிழிந்து தொங்கியது .
இருவரும் எந்த ஒரே இடத்தில் இருந்து ‘பர்ச்சேஸ் பண்ணினார்களோ’ தெரியல . ஆனால் ஒரே மாதத்தில் அடுத்தடுத்த நேரத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என்று அவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் போல
படத்தில் முதலில் கவர்வது கோபிநாத் துரையின் அட்டகாசமான ஒளிப்பதிவு . வானியல் காட்சிகள் , ஷாட்கள் பிரேம்கள் மட்டுமல்லாது கொடைக்கானல் காட்சிகள் இளம் ஒளிப் பகல்கள் , என்று யாவும் அருமை .
தெரியாது என்று சொல்லிக் கொண்டே தெரிந்த எல்லாமும் சொல்லும் அந்த வசன உத்தி அழகு . இப்படி ஒவ்வொரு படத்திலும் ஒரு காட்சியாவது வேண்டும்.
அஜிதேஷ் சிரத்தையாக முயன்று நடித்து இருக்கிறார்..ஆனால் ஒரு காட்சியில் எப்படி வெளிப்பட வேண்டும் என்பது குறித்த புரிதல் வேண்டும். டைரக்டர் சொல்வதை மட்டும் அப்படியே பிரதிபலிக்க வேண்டிய கேரக்டர் இல்லை இது .
காதல், சோகம், சிறு வயது முதல் அம்மாவை இழந்து சந்தேகப்படும் அப்பாவின் கொடுமை இவற்றை அனுபவிக்கும் பெண்ணின் மன உணர்வுகளை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார் ஸ்ரீ ஸ்வேதா. . ரேபிஸ் பாதிக்கப்பட்டு சீரியஸ் ஆகும் காட்சிகளில் நல்ல நடிப்பு .
ஜெயம் ரவியின் பூமி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார் இவர் . அப்போதே அவரைப் பார்த்தபோது, கொஞ்சம் முயன்றால் சீக்கிரமே பெரிய ஹீரோக்களின் படங்களில் இரண்டாம் கதாநாயகியாக ஜொலிக்கலாம் . அப்படியே ஹீரோயினாகக் கூட ஆகலாம் என்று நினைத்தேன் .
என்ன ஆனதோ, முகம் முற்றிலும் மாறிய நிலையில் இந்தப் படத்தின் கதாநாயகி ஆகி , கால் கிலோ மீட்டர் தடிமனில் முகம் முழுக்க மொத்தையாக மேக்கப் போட்டுக் கொண்டு – பிராஸ்தட்டிக் மேக்கப்பில் இருந்தால் முகத்தின் எக்ஸ்பிரஷன் அதிகம் வெளியே தெரியாது என்பார்களே .. அப்படி சாதாரண மேக்கப்பிலேயே உணர வைக்கிறார் .
அவர் கைக்கும் முகத்துக்கும் பொருத்தமில்லாத முக மேக்கப் , புதரில் இருந்து எட்டிப் பார்க்கும் முயல் போல், அவர் பவுடருக்குள் இருந்து எட்டிப் பார்த்து நடிப்பது புரிகிறது .
ஆனால் அதையும் மீறி சிறப்பாக நடித்துள்ளது உண்மையிலேயே பெரிய விஷயம் . பாராட்டுகள் .
முற்றிலும் பொருத்தம் இல்லாத கேரக்டரில் பாக்யராஜ். அவரது வழக்கமான பாணி நடிப்பும் பேச்சும் கோமாளித்தனமாகவே இருக்கிறது . அவரைப் பார்த்து நமோ நாராயணன் மட்டும்தான் பயப்படுகிறார் . பயப்பட வேண்டிய ரசிகர்கள் கொட்டாவி விட்டபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
அமைச்சரின் சம்மந்தியாக போகும் அரசியல்வாதியை ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி காரை மறித்து மிரட்டுவது எல்லாம் எந்த லாஜிக்கில் சேரும் என்றே தெரியவில்லை. எழுதியவர் எந்த கிரகத்தில் வாழ்கிறாரோ?
அரசியல்வாதி மகன் வேண்டாம் என்பதால் போலீசும் , அமைச்சருக்கு சம்மந்தியாக வேண்டும் என்று அரசியல்வாதியும் நினைத்து தான் இந்தக் காதலை எதிர்க்கிறார்கள்.
அவர்களிடம் போய் காதலி ஏழு நாளில் சாகப் போகிறாள் என்ற, உணர்ந்த உண்மையை சொன்னால் , போலீஸ் அப்பா உடைந்து போவார் .
அரசியல்வாதியும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அமைச்சர் கூட இட்ஸ் ஒகே ஏழு நாள்ல முடிச்சிட்டு வாங்க என்பதுதான் யதார்த்தம். அவள் ஏழு நாளில் சாக வேண்டும் என்று அவர்கள் நினைக்க, பெண்ணின் அப்பா மகளின் மகிழ்ச்சிக்காக அந்தக் காதலை ஏற்க, அவளை காப்பாற்ற நாயகன் என்ன செய்தான் என்பதுதான் இந்தக் கதை போக வேண்டிய சரியான ரூட்.
ஆனால் என்ன சூஸ்பரிக்கு இவர்கள் கொடைக்கானல் ஓடிப் போய் வெறிநாய் ஆகி ரசிகர்களை இப்படி கடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இப்போது உள்ள அனிமல் லவர் ஆண்டிகள் ஆடும் டான்ஸ்களைப் பார்த்தால், அது சமூக அக்கறை விசயம்தானே என்று சொல்லலாம். ஆனால் அந்த ரூட்டில் அவர்கள் ஒரு இன்ச் கூட கதையை நகர்த்தவில்லை.
சச்சின் சுந்தரின் இசை போதாமை.
முத்தமிழன் ராமுவின் வி எப் எக்ஸ் ஒகே . ஆனால் எடிட்டிங் சரி இல்லை.
எடுத்தவுடன் நாயகனின் சக்தியை சொல்ல நாயைக் கொன்றவர்கள் அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்தக் கதைக்கு வந்து விட வேண்டும்.
ஆனால் இருங்க வரேன் என்று சொல்லி விட்டு அரைமணி நேரம் நாயகன் காதலித்த கதையை அரைமணி நேரம் சாவகாசமாகச் சொல்கிறார்கள் அதில் நல்ல சில காட்சிகள் இருந்தாலும் ”ஆரம்பிச்ச கதை எங்கேப்பா/” என்று ஆடியன்ஸின் ஆன்மா கதறுவதால், அந்த நல்ல காட்சிகள் வசனங்கள் மூலம் பலன் ஏற்படவில்லை.
ரெண்டு மணி நேரம் படத்திற்கே ஒழுங்காக காட்சி எழுதாமல் ஆரம்பத்தில் காட்டிய நாய் சாகும் காட்சியின் முக்கால்வாசியை காதல் பிளாஷ்பேக் கதை முடிந்த உடன் மீண்டும் காட்டுகிறார்கள் . அப்படி ஒரு எடிட்டிங்.
முன்பெல்லாம் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன்பு இந்தியில் நியூஸ் ரீல் ஓடும் . ” ஆயிரத்து எண்ணூத்தி ஐம்பதாம் ஆண்டில்..” என்று தமிழில் ஆரம்பித்து விட்டு அப்புறம் திகாரிகே.. ஜாத்தாகே .. என்று இந்தியிலேயே பேசிக் கொண்டு இருப்பார்கள் .
எப்பவாவது தமிழில் பின்னணிக் குரல் வரும் . அப்புறம் மீண்டும இந்திதான். .அதுவும் அவற்றின் இசை வேறு விரக்தியை உண்டு பண்ணும் வகையில் இருக்கும்.
ஆயிரத்து எண்ணூத்தி ஐம்பதில் ஆரம்பித்தவர்கள் எப்படா 1947 க்கு வருவார்கள் என்று ஏங்கிக் காத்துக் கிடக்க வேண்டி வரும்.
ஏனென்றால் இந்தியா சுதந்திரம் வாங்கிய உடன் அந்த செய்திப் படங்கள் முடிந்து விடும். ரசிகர்கள் கைதட்டி படம் போடுவதைக் கொண்டாடுவார்கள் .
அப்படி இந்தப் படத்தில் அந்த ஏழு நாட்களையும் நாள் ஒன்று , இரண்டு நாள் என்று படிப்படியாகக் காட்டும்போது ”எப்படி ஏழாம் நாள் வரும் . படம் பார்க்க வந்த நாம் சுதந்திரம் அடைவோம்/” என்று காத்திருக்க ஆரம்பிக்கிறது மனசு.
சாவைச் சொல்லும் அபூர்வ சக்தி கொண்டவர்கள் என்ன முயன்றாலும் சாகப் போகிறவர்களைக் காப்பாற்ற முடியாது என்பதே முன்னூறு ஆண்டுகால முன்கதை சொல்லும் சாராம்சம். அதுதான் இந்த கதையின் அழுத்தமான முடிச்சு . ஆனால் இந்தப் படத்தில் கடைசிக் காட்சி எப்படி மாறும் ?
‘
‘ இல்ல இல்ல அவன் காப்பாற்றினான்..” என்பதுதான் கதை என்றால், அது முன்னூறு ஆண்டுகால முந்தைய நிகழ்வில் நடக்க வாய்ப்பில்லாத ஒன்றாக இருந்தது. வேண்டும் . அந்த கால நபரை மீறிய ஒரு விஷயம் இவனுக்கு என்ன இருக்கிறது? அதனால் எது நடந்தது” என்று ஸ்பெஷலாக ஒன்று எழுத வேண்டும் .
ஆனால் மூலிகை மருந்து கொண்டு வருவது எல்லாம், சீரியஸ் காமெடி .
சரி அதுதான் இருக்கட்டும் அடியாள்கள் காதலன் காதலி இருவரையும் பிடிக்கத்தான் வருகிறார்கள். அவர்களில் ஒருவன் ஏன் மூலிகைக் குடுவையைக் குறி பார்த்து உடைத்து உடைத்து காதலியின் முகத்திலேயே ஊற்றி அவளை மரணப் படுக்கையில் தள்ள வேண்டும் ?
அப்படி மூலிகை மேலே ஊற்றப்படும்போது நாக்கைச் சுழற்றி ஒரு சில துளிகளை நக்கிக் குடித்து விட்டாள் எனவே பிழைத்துக் கொண்டால் என்று டுவிஸ்ட் வைத்து இருந்தால் கூட அட என்று இருந்திருக்கும் . அந்தக் காட்சி லாஜிக் படி ஓகே ஆகி இருக்கும். அதுவும் இல்லை. (எனினும் அந்தக் காட்சியில் ஸ்வேதாவின் எக்ஸ்பிரஷன் நிஜமாலுமே ஸ்வீட்டா என்று சொல்லும் அளவுக்கு இருந்தது )
அரசியல்வாதி கேரக்டர் .. அட்லீஸ்ட் அமைச்சர் கேரக்டராவது செய்ய வேண்டிய விஷயத்தை, ஓர் அடியாள் செய்வது எல்லாம் .. அய்யா சாமி ஆளை விடுங்கப்பா.
திரைக்கதையில் தமிழ் சினிமா எங்கே இருந்தது . இப்போது எவ்வளவு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு அந்த ஏழு நாட்களுக்கும் இந்த ஏழு நாட்களுக்கும் இடையே உள்ள வித்தியாசமே சான்று .
மொத்தத்தில் இந்த புதிய ‘அந்த ஏழு நாட்கள்.’……. ஒவ்வொரு நாளும் ஒரு மாமாங்கம்.