ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி வெளியிட , அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர் சி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, சூரி, கோவை சரளா ஆகியோர் நடிக்க,
கதை திரைக்கதை எழுதி சுந்தர் சி இயக்கி இருக்கும் படம் அரண்மனை 2 . இது கம்பீரமானதா இல்லை சிதிலமானதா ? பார்க்கலாம் .
கோவிலூர் என்ற ஊரின் கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக , அம்மனை படியிறக்கம் செய்து பாலாட்டு என்ற சடங்கை செய்கிறார்கள் .
அந்த பத்து நாளும் தெய்வத்தின் சக்தி குறையும் என்ற வசதியைப் பயன்படுத்தி சில மந்திரவாதிகள் சில துர்சக்திகளுக்கு வலிமை கொடுக்கிறார்கள்.
ஆனால் அவர்களே எதிபாராத ஒரு பெரிய பெண் துர்சக்தி எழுந்து அவர்களையே நடுங்க வைத்த படி ஆவேசத்துடன் கிளம்பி , அந்த ஊரின் ராஜ குடும்பத்துக்கு சொந்தமான அரண்மனைக்குள் நுழைகிறது .
அந்த வீட்டின் குடும்பத் தலைவரை ( ராதாரவி ) அடித்து வீழ்த்தி கோமா நிலைக்குக் கொண்டு போகிறது .
அவரின் பிள்ளைளான முரளியும் (சித்தார்த் ) அவனது அண்ணனும் (சுப்பு பஞ்சு) அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு வருகிறார்கள் . அண்ணனோடு அவன் மனைவி (வினோதினி) மற்றும் மகன் வருகிறார்கள் .
முரளிக்கு நிச்சயிக்கப்பட்ட உறவுக்காரப் பெண் அனிதாவும் (த்ரிஷா) வருகிறாள்.
பெண் துர்சக்தி அடுத்து அண்ணன் மகனை கொள்ள முயல்கிறது . அந்த ஊரைச் சேர்ந்த ஒருவனை (ராஜ் கபூர்) கொடூரமாகக் கொல்கிறது.
இந்த நிலையில் அங்கு வரும் அனிதாவின் அண்ணனும் போட்டோகிரபாருமான ரவி (சுந்தர் சி ) நடப்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான் . அரண்மனை எங்கும் சக்தி வாய்ந்த நவீன கேமராக்களை பொருத்துகிறான் .
ஒரு நிலையில் முரளியின் அண்ணனையும் அந்த பெண் பேய் கொல்கிறது . அவனை பேய் அடித்து செல்வது கேமரா படம் பிடித்திருக்க ,
அதைப் பார்க்கும் முரளி ”அது செத்துப் போன தன் தங்கை மாயா (ஹன்சிகா) ”என்கிறான் .
அந்த குடும்பத்துப் பெண்ணான மாயா ஏன் தந்தை ,மற்றும் அண்ணனை கொல்ல வேண்டும் ? ஏன் அண்ணன் மகனான சிறுவனையே கொல்ல முயலவேண்டும் ? இன்னும் யார் யாரை அது கொல்லத் திட்டமிடுகிறது ?
மாயா வென்றதா ? மாயாவிடம் இருந்து அந்தக் குடும்பத்தை காப்பாற்ற முயலும் ரவி வென்றானா? என்பதே இந்த அரண்மனை 2.
ஆரம்பத்தில் நிறுத்தி நிதானமாக சில காட்சிகளில் வசனம் மூலம் அடிப்படைக் கதையை சொல்லி விட்டு , தாய்லாந்து கடற்கரையில் திரிஷா படு படு கிளாமராக ஆடிப்பாடும் பாட்டுக்குப் போய் விட்டு,
மீண்டும் பேய் இருக்கும் அரண்மனைக்கு வருகிறது படம் .
சுந்தர் சி யைக் காதலிக்கும் மலையாள பெண்குட்டி நர்சாக பூனம் பஜ்வாவும் கவர்ச்சிக்கு கை கொடுக்கிறார் .
ஸ்ட்ராங்கான கிளாமர் , மீடியம் நகைச்சுவை , மிரட்டும் திகில் என்ற முப்பிரிகைப் பின்னலின் பின்னலோடு போகிறது திரைக்கதை .
சூரியின் நகைச்சுவை ஆங்காங்கே காமெடி திரி கொளுத்துகிறது . பேயோடு உலவும் காட்சிகளில் கோவை சரளா , மனோபாலா ,ஆகியோர் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்
சாதாரணமாகப் போகும் முதல் பாதி இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கிறது . செண்டிமெண்ட் காட்சிகள் வருகின்றன . ரவி கதாபாத்திரம் மீது திரைக்கதை குவிகிறது .
கடைசியில் இறை சக்தியையும் பேய் சக்தியும் மோதுகிறது .நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வேப்பிலைப் பாட்டு . ஒரு இடைவேளைக்குப் பிறகு குஷ்பூவும் ஆடுகிறார் .
சுந்தர் சி தனக்கே உரிய பாணியில் நடிக்க, சித்தார்த்த யதார்த்தமாக வலம் வருகிறார் . பேயாக திரிஷாவும் ஹன்சிகாவும் மிரட்டுகிறார்கள் . கடைசியில் ஹன்சிகா கண் கசியவும் வைக்கிறார் .
அரண்மனை செட் பிரம்மாண்டமாக இருக்கிறது. யூ கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு அவ்வளவு அழகாக ஈர்ப்பாக பேய்த்தனமான சிறப்பொடு இருக்கிறது .
வித்தியாசமாக படத்தில் ஒன்றும் இல்லை. பலமுறை பார்த்த காட்சிகளின் புது வடிவம்தான் .
எனினும் ஜாதி வெறி எடுத்து கவுரவக் கொலை செய்யும் அயோக்கியர்களை பேய் பழிவாங்க வருகிறது என்பது நல்ல விசயம்தான் .
அட, பேய்க்குப் பயப்படுபவர்கள் கொஞ்சம் யோசிப்பாங்களே!