ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி வி எஸ் என் பிரசாத் தயாரிக்க, வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ் மேனன், முரளிதரன் , உதயாதீப் நடிப்பில் தருண் தேஜா எழுதி இயக்கி இருக்கும் படம் .
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவனின் பிள்ளைகளான இரண்டு சிறுவர்கள் இறந்து போக, அந்த விவசாயிக்கு இரண்டு குதிரை முக தங்கச் சிலைகள் தரும் அஸ்வினி குமாரர்கள் என்ற கடவுள்கள் , ”இருவரில் ஒருவனைத்தான் பிழைக்க வைக்க முடியும்” என்று கூறி ஒருவனை பிழைக்க வைத்ததோடு, அந்த ”இரண்டு சிலைகளையும் எப்போதும் சேர்த்தே வைத்திருக்க வேண்டும் . பிரித்தால் ஒரு சிலை பாதாள அரக்கனின் கைக்குள் போய் விடும் . உலகம் ராட்சஷ மனிதர்களால் சூழப்படும்” என்று சொல்லி விட்டுப் போகின்றனர்.
தன் சகோதரன் பிழைக்காத வருத்தத்தில் இருக்கும் சிறுவன் அந்த இரண்டு சிலைகளோடும் விளையாடிக் கொண்டு இருக்க, பாதாள அரக்கன் வந்து ”ஒரு சிலையைக் கொடுத்தால் சகோதரனைப் பிழைக்க வைக்கிறேன்” என்று சொல்ல அதை நம்பி கொடுக்கிறான் . சிலைகள் பிரிந்த காரணத்தால் ராட்சஷ மனிதர்கள் வெளியே வருகிறார்கள்.
லண்டனில் ஒரு பெரிய மாளிகையில் ஆராய்ச்சிக்குப் போன- ஆர்க்கியாலாஜி துறையில் உள்ள – ஒரு பெண் அதிகாரி பாதாள அரக்கனால் பாதிக்கப்பட்டு தன உதவியாளர்களைக் கொல்வதோடு தானும் தற்கொலை செய்து கொள்கிறார் .
இந்தியாவில் அமானுஷ்யங்கள் பற்றி யூ டியூப் போடும் ஒரு குழு, ( வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ் மேனன், முரளிதரன் , உதயாதீப் ) அந்த லண்டன் மாளிகைக்குப் போகிறது . அப்புறம் நடப்பது என்ன என்பதே படம்.
படத்தின் மிகப் பெரிய பலம் ஒலி வடிவமைப்பு . இதுவரை எந்த திரில்லர் படத்திலும் கேட்காத ஒலிகளை எல்லாம் கேட்க முடிகிறது இந்தப் படத்தில் . அந்த அளவுக்கு அசத்தி இருக்கிறார்கள் சின்க் சினிமா சச்சினும் ஹரியும் . அற்புதம்.
அதற்கு இணையாகப் பாய்கிறது விஜய் சித்தார்த்தின் பின்னணி இசை.
தினசரி பனிரெண்டு மணி நேரம் கடல் நீரில் மூழ்கி பனிரெண்டு மணி நேரம் மட்டுமே உபயோகப் படுத்தப்படும் வாய்ப்புள்ள அந்த கடல் பாதை லொக்கேஷனும் அந்த பங்களாவும் அபாரம்.எட்வின் சகாயின் ஒளிப்பதிவு அசத்துகிறது.
டான் பாலாவின் கலை இயக்கமும் சிறப்பு.
திரைக்கதைதான் பின்னடைவாகப் போய்விட்டது. காட்சி மற்றும் வசன ரிப்பீட்டுகள் பல இடங்களில்.
அந்த கடலுக்குள் தோன்றி மறையும் பாதையை வைத்து கடைசியிலாவது எதாவது காட்சி வைத்து அசத்துவார்கள் என்று பார்த்தால், ஏமாற்றம்.
எனினும் அஸ்வின்ஸ்… A SOUND MOVIE ON SOUNDS