ஃபுல் ஹவுஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லிங்கா, சம்பிகா, கனிகா, குமாரவேல் நடிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கி ஷார்ட் பிலிக்ஸ் ஓ டி டி தளத்தில் வந்திருக்கும் வலைத் தொடர்.
சிறுவயதிலேயே அம்மாவும் அப்பாவும் விவாகரத்தாகி பிரிந்து விட்ட நிலையில் அப்பாவால் (குமாரவேல்) வளர்க்கப்படும் இளம்பெண் ஒருத்திக்கும் ( சம்பிகா) , அண்ணன் , அண்ணி ( கனிகா) மற்றும் உறவுகளோடு வளர்ந்த ஒரு இளைஞனுக்கும் ( லிங்கா ) காதல்.
பெண்ணின் தோழி ஒருத்தி ஒருவனை பத்து வருடம் காதலித்து மணம் முடித்த நிலையில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க, தன் காதலும் கல்யாணத்துக்கு பிறகு இப்படி ஆகுமோ என்ற பயம் இவளுக்கு. எனவே ”இப்பவே பிரேக்கப் பண்ணிக்கலாம்” என்று இவள் சொல்ல, துடித்துப் போகிறான் காதலன் .
காதலியின் அப்பாவை சந்தித்துப் பேச, அவருக்கு இவனைப் பிடித்துப் போகிறது. அவரே சம்மதம் சொல்லியும் தோழியின் தூபத்தால் இவள் மறுக்க, அப்பா ஒரு ஐடியா கொடுக்கிறார் . ஒருவாரம் ஒரு வீடு எடுத்து இருவரும் தங்குங்கள்.ஒருவாரம் ஒன்றாகவே இருந்தால் இந்தக் காதல் நிலைக்குமா என்பது புரியும் என்கிறார் .
நோ செக்ஸ் என்ற அவளது நிபந்தனையோடு அப்படியே இருவரும் தங்க, ஒரு வார முடிவில் புரிதல் வந்ததா பிரிதல் வந்ததா என்பதே இந்த வலைத்தொடர்.
வெப் சீரிஸ் அதுவும் இளைஞர்களுக்கான வெப் சீரிஸ் என்றாலே நீலப் படத்தில் நடிப்பவர்களே பேசக் கூச்சப்படும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் இந்த பொல்லாத உலகில் , கதைப்படி அதற்கு வாய்ப்பு இருந்தும் துளியும் ஆபாசம் இரட்டை அர்த்த வசனம் இல்லாத வெப் சீரிசைக் கொடுத்த காரணத்துக்காகவே பாலாஜி வேணுகோபாலைப போற்றலாம் .
அதனாலேயே இது எல்லோரும் பார்க்கும் வெப் சீரிஸ் ஆகிறது . சொல்லப்போனால் இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய வெப் சீரிஸ் . அதுதான் இதன் பலம் .
நாயகன் நாயகியில் இருந்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை எல்லோருமே வசனகர்த்தாவின் பாணியிலேயே பேசுகிறார்கள் அந்த அளவுக்கு மனுஷன் எல்லா கேரக்டர்களையும் எழுத்து ஆவியாக பிடித்து ( பீடித்து என்றும் சொல்லலாம்) இருக்கிறார் என்றாலும் ஆங்காங்கே காமெடிகள் அர்த்தமுள்ள வசனங்கள் சீரிசை தாங்கிப் பிடிக்கின்றன .
ஒவ்வொரு காட்சிக்கும் அதிக பட்சம் மூன்றே பிளாக்குகள் ஒவ்வொரு பிளாக்கிலும் வண்டி வண்டியாய் வசனங்கள் (வண்டை வண்டையாய் இல்லை என்பதே சிறப்புதானே)….
பிராம்ப்பட்டிங்கில் வாங்கி பிரீத்திங் விட்டு பின்னி எடுக்கும் நடிகர்கள் என்று பதினைந்தே நாட்களில் இம்மாம்பெரிய சீரியலை.. மன்னிக்கவும் சீரிசை எடுத்து இருந்தாலும் (லோ பட்ஜெட் வெப் சீரிஸ் என்றால் பாவம் வேறு என்ன செய்ய முடியும்?) …..
அதை ரசிக்கும்படி எலைட்டாக கொடுத்து எல்லோரையும் பார்க்க வைக்கும் சீரிசாக படைத்து இருக்கும் விதத்தில் பானிபூரியைப் பாராட்டலாம் பாலாஜி வேணு கோபாலுக்குக் கை குலுக்கலாம்.