ஸ்டார் ஸ்டுடியோ 18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் சார்பில் முராத் கெதானி , பிரியா அட்லீ, அலோக் ஜெயின் , அஜித் அந்தாரே தயாரிக்க, விஜய் சேதுபதி, லிஜோ மோள் ஜோஸ், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கி இருக்கும் படம்.
செல்போன் இல்லாத காலத்தில் நடக்கும் கதை. ஏன் என்பது உங்களுக்கே போகப் போக புரியும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவது , அடிதடி செய்வது என்று வாழும் முரட்டு ரவுடி பத்தா என்கிற பக்தவச்சலம் ( விஜயசேதுபதி). அவனுக்கு கன்னியம்மா என்ற காதல் மனைவி ( லிஜோ மோள் ஜோஸ் ) மற்றும் பதின்பருவ மகள் தேன்மொழி (சஹஸ்ரா) .
பத்தா ஒரு முறை நடு ரோட்டில் ஒருவனை கொடூரமாக அடித்து கைகளை உடைத்து அலற விடுவதை பார்த்து, சபரி என்ற பள்ளி மாணவன் (சாய் பிரித்வி ராஜ்) பயந்து நடுங்குகிறான். அதன் பின் பத்தாவைப் பார்க்கும்போது எல்லாம் சபரிக்கு பயமும் நடுக்கமும் வரும் . மற்ற சிறுவர்களுக்கும் அப்படியே
சபரியின் அப்பா – அம்மா ( ஹரி கிருஷ்ணன் – சாந்தி பாலச்சந்தர்) எளிய நபர்கள்.
அப்பா வாங்கிக் கொடுத்த மரத்தாலான விளையாட்டுப் பொம்மை ஒன்றை பள்ளிக்கு எடுத்துப் போகும் சபரி இறுதித் தேர்வு அன்றும் அதை வகுப்பில் வைத்து விளையாட , பள்ளி ஆசிரியை அதை பிடுங்கி பள்ளி அலுவலக அலமாரியில் வைத்து விடுகிறார்
அதோடு பள்ளி முழு ஆண்டு கோடை விடுமுறை விட்டு விட , பொம்மை இல்லாமல் ஏங்கும் சபரி , காவலாளி கூட இல்லாத அந்த கிராமத்துப் பள்ளிக்கு ரகசியமாக சென்று, பொம்மையை எடுத்து வர போகிறான் . அதை எடுப்பதற்கு முன்பு கழிவறை கூடத்தைத் திறந்து, சிறுநீர் கழித்து விட்டு அலுவலக அறைக்கு போய் பொம்மையை எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது, திறந்திருக்கும் கழிவறைத் தொகுப்பின் பிரதான கதவை சபரி மூடுகிறான் .
உள்ளே இருந்தது . “எவன்டா அது கதவை மூடுறது ? வெளியே வந்தேன் கொன்னுடுவேன் ” என்ற குரல் . பத்தா!
திறந்து விட்டால் பத்தா அடித்து விடுவான் என்ற பயத்தில் திறக்காமல் ஓடி வந்து விடுகிறான் சபரி. வேறாரும் ஆள் இல்லாத அந்த கழிவறைக் கூடத்தில் சிக்கிக் கொள்கிறான் பத்தா. வெளியே வர முடியவில்லை. கத்தி கதறியும் பலன் இல்லை . பட்டினியில் துவண்டு விடுகிறான் பத்தா . பத்தாவின் ஆட்கள், போலீஸ் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனினும் பத்தாவின் பசியை போக்க, தன் சக்திக்கு உட்பட்டு இரண்டு பொறை( வருக்கி) தினமும் கடையில் வாங்கி கொண்டு வந்து கொடுத்து விடுகிறான் சபரி.தினமும் இரண்டு பொறைகள் என ஒரு வாரம் கழிவறையில் கிடக்கிறான் பத்தா.
இந்த நிலையில் ஊருக்கு போக வேண்டும் என்று சபரியின் அம்மா அப்பா சொல்ல , பத்தாவுக்கு எதுவும் ஆக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில், தன் பள்ளி நோட்டில் தனது பெயர் எழுதப்பட்ட பக்கத்தில் இருந்து பேப்பர் கிழித்து ‘கதவ தொறந்துட்டேன்’ என்று எழுதி போட்டு விட்டு,
சபரி கதவை திறக்க, உள்ளே பத்தா பாம்பு கடித்து ஜடமாகக் கிடக்கிறான். சபரி வந்து ஊரில்சொல்ல , பத்தா காப்பாற்றப்படுகிறான்.
சபரிதான் பத்தாவை அடைத்து வைத்ததே என்பது தெரியாமல் , சபரிதான் பத்தாவை காப்பாற்றியதாக கன்னியம்மா நம்ப, பத்தாவும் சபரி மீது தன் மகன் போல அன்பு காட்ட, பத்தாவின் ஆட்கள் பொறை வாங்கிய சிறுவர்களை மோப்பம் பிடிப்பதன் மூலம் நெருங்க, பத்தாவை அடைத்ததே சபரிதான் என்ற உண்மை பத்தாவுக்கு தெரிந்ததா? ஆம் எனில் சபரிக்கு என்ன ஆனது என்பதே பத்தா.
முரட்டு ரவுடி, பயப்படும் சிறுவன், ஆளரவமற்ற பள்ளி, பயத்தால் செய்யும் கெடுதல்,சிறுவனின் மனநிலை, ரவுடியின் குணாதிசய மாற்றம் என்று — ஒப்பேத்தல்கள் இல்லாத – போங்கு ஆட்டம் ஆடாத- ஆர்கானிக்கான ஒரு கதை. அந்த சின்சியர் முயற்சி பாராட்டுக்குரியது.
ரவுடியின் முரட்டு அடிகள், , சிறுவனின் பயம், ரவுடி பற்றி சிறுவர்கள் உலகில் சொல்லப்படும் myth கதைகள் என்று அந்த ஏரியா ரகளை.
மெயின் கதையில் இருந்து சற்றும் விலகாத திரைக்கதை பாராட்டுக்குரியது
இயக்குனரின் நடிக- நடிகையர் தேர்வு, , பயன்படுத்தப்பட்டிருக்கும் எளிய மக்களின் மண்மொழி யாவும் அருமை.
எந்த இடத்திலும் தனித்துத் தெரியவில்லை எஸ் கே செல்வகுமாரின் ஒளிப்பதிவு. அதுவே சிறப்பு. சாய் அப்யங்கரின் பாடல் இசை ஓகே . பின்னணி இசை இன்னும் கொஞ்சம் ஓகே .
முரட்டு ரவுடி, பாசமுள்ள அப்பா, மனதுக்குள் போராட்டம் நடத்தும் மனிதன் என்று சிறப்பான நடிப்பு விஜய் சேதுபதியிடம் இருந்து. அவரது கெட்டப்தான் செயற்கை
தனது அற்புதமான நடிப்பால் விஸ்வரூபம் எடுத்துள்ளான் சபரியாக நடித்துள்ள சிறுவன் சாய் பிரித்வி ராஜ்.
லிஜா மோள் ஜோஸ் வழக்கம்போல சிறப்பான நடிப்பு மகளாக நடிக்கும் சஹஸ்ரா , சபரியின் அம்மாவாக நடிக்கும் சாந்தி பாலச் சந்திரன், அப்பாவாக நடிக்கும் ஹரி கிருஷ்ணன் , விஷ்ணு கோவிந்த் . பாலமுருகன் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்
படத்தின் பெரும் பிரச்னை அதீத நீளம். அடுத்து இப்படி ஒரு காட்சி வரும் என்று ஆடியன்ஸ் நினைப்பதற்கு முன்பு அந்தக் காட்சி வர வேண்டும். அல்லது நினைத்த உடன் வரவேண்டும். ஆனால் படம் பார்ப்பவர்கள் நினைத்து முடித்து அப்புறம்தான் வருகிறது . படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் முரட்டு ரவுடித்தனமாக, பத்தா மாதிரி இருந்திருக்க வேண்டும்.
பத்தா எதற்கு யாருமில்லாத பள்ளியின் பாத்ரூமுக்கு போனான் என்பது நல்ல கதைப்பகுதி . ஆனால் அதை இன்னும் சிறப்பாக கொடுத்து இருக்கலாம்.
‘உனக்கு கெடுதல் செய்ய ஒருவன் பயப்படலாம்..ஆனால் அறியாமல் ஒரு தவறு செய்து விட்டால் , அதை சரி செய்யக் கூட உனக்கு நல்லது செய்ய ஒருவருக்கு தைரியம் வராது
– என்னும் அளவுக்கு கொடூரனாக நீ வாழ்வாய் என்றால்.. உன்னை காப்பாற்றுவது கடினம் ‘
இதுவே படம் சொல்ல வரும் விசயம். ஆனால் அதை கொஞ்சம் நீர்த்துப் போக வைத்து சொல்கிறார்கள் .ஒரு நாவல் படிக்கும் உணர்வு வருகிறதே தவிர ஒரு படம் பார்க்கும் உணர்வு குறைவாக இருக்கிறது என்பதும் படத்தின் பலவீனம்.
இது போன்ற விஷயங்களால் வெகு ஜன மக்களை ஈர்ப்பது பாதிக்கப்படாது என்றால் பத்தா ஒரு வெற்றிப் படமாகும் . இல்லை என்றாலும் பத்தா நல்ல படம்தான்.
பத்தா… சென்சேஷனல் கொஞ்சம் பத்தா….. து .