பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் ‘சிட்டிசன்’ மணி இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப் படத்திற்கு ‘பெருநாளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சிட்டிசன் மணி, சுமார் 100 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.
அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருப்பவர், வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நடித்து தனது காமெடி நடிப்பால் பாராட்டு பெற்றிருக்கிறார்.
தற்போதும் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் சிட்டிசன் மணி, முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க, ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார்.
ஹீரோவின் நண்பராக கிரேன் மனோகர் முக்கிய வேடத்தில் நடிக்க, இவர்களுடன் சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏராளமான காமெடி நடிகர்களும் நடிக்கிறார்கள்.
படம் குறித்து சிட்டிசன் மணியிடம் கேட்டதற்கு, “மாமா – மருமகள் செண்டிமெண்ட் தான் கதை. தனது அக்கா இறந்த பிறகு அவரது மூன்று மகள்களை கஷ்ட்டப்பட்டு வளர்க்கும் தாய்மாமன், அவர்களுக்காக வாழ்வதோடு, அவர்களுக்கு வரும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பது தான் படத்தின் கதை.
தனது மருமகள்களுக்காக காதல், கல்யாணம் ஆகியவற்றை உதரித்தள்ளும் தாய்மாமனின் பாசப் போராட்டம் பெரிதும் ரசிக்கும்படி இருக்கும்.” என்றார்.
தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பவர் சிவா நடனம் அமைக்க, தீப்பொறி நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா பற்றிய பாடலாகும். படத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் இடத்தில் வரும் இப்பாடல், புரட்சித்தலைவியின் பிறந்தநாளை கொண்டாடுபவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும், அதிமுக-வின் பிரச்சார பாடலாகவும் ஒலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருப்பதாக கூறிய சிட்டிசன் மணி, விரைவில் இப்பாடலை பிரம்மாண்டமான முறையில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டு வரும் சிட்டிசன் மணியின் ‘பெருநாளி’ விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது.