கூலி தமிழ் 2025 @ வி(மர்)சனம்

முன் குறிப்பு 1  
 
இது விமர்சனம் மட்டுமில்லை. அதுக்கும் மேலே . 
 
கொஞ்சமாச்சும் தன்மானம் , சுயமரியாதை , சுய சிந்தனை உள்ள (லைட்டாக ஒட்டிக் கொண்டு இருந்தால் கூடப் போதும்) – ‘நாம் இந்த உலகத்தில் நமது அடுத்த தலைமுறையை பாதுகாப்பாக விட்டுச் செல்லும் நிலையில் இங்கு அட்லீஸ்ட் கலை, சினிமா, ரசனை மட்டுமாவது இருக்கிறதா? அல்லது எப்படி இருக்க வேண்டும்? ‘  என்ற கேள்வியும் அக்கறையும் உள்ளவர்களுக்காக,  எழுதப்படுவது 
 
எந்த விஷயத்தை எல்லாம் சிறப்புஎன்று  எண்ணி ரஜினியைக் கொண்டாடினோமோ,  அது ஏதும் இல்லாத  நிலைக்கு அவரை ஆளாக்கி , அவர் என்னதான் மேட்டுக்குடி சாதி வெறி . இந்துத்வா வெறி வடக்கத்தி அடிமைத்தனம், வலது சாரி வெறியோடு இந்த வயதிலும் பணத்துக்காக அவர் அலைந்தாலும்,  அவரே சொல்கிறபடி,  அந்த 1950 மாடல் வண்டியை , தொடர்ந்து அம்பது  வருஷமா நிற்காமல் ஓடுதே என்ற மரியாதை கூட இன்றி,  அந்த வண்டியை ஓட்ட ஒரு வாய்ய்புக் கிடைக்கும்போது ஒரு கார் டிரைவருக்கு உள்ள மரியாதை கூட இல்லாமல்,  அந்த வண்டியில் சேறு சக்தி சாக்கடை, ரத்தம், நிணம். கத்தி கபடா ஏற்றிச் சென்று,  அந்த வண்டியைக் கேவலப்படுத்துகிறார்களே என்று உண்மையில் வருந்துகிற ,   நாற்பது ஆண்டு காலமாக அந்த வண்டியைக் காதலிப்பவர்களுக்காக இது எழுதப்படுகிறது.   
 
முன் குறிப்பு 2 
 
இது விமர்சனம் மட்டுமல்ல . கட்டுரை . நீண்ட கட்டுரை நெடிய கட்டுரை . 
 
எனவே ‘ இவ்வளவு பெருசா எழுதினா எப்படி? எனக்கு தலை சுத்துது ; கைகால் உதறுது . பத்து மணிக்கு கடை மூடிருவான்’ எனும்  ஆட்கள் இப்பவே கிளம்பிடுங்க. நடக்க சோம்பேறி சித்தப்பவன் வீட்டில் பெண் கட்டினானாம் என்பது பழமொழி. படிக்க சோம்பேறிக்கும் இது பொருந்தும். ஆகவே   எங்கே பெண் கட்டுவது என்பது உங்க விருப்பம்.   
 
முன் குறிப்பு 3
 
உங்க வீட்டு கேஸ் ஸ்டவ் பர்னரில் ஏறி உட்கார்ந்து விட்ட அவசரத்தில் , ‘ “அதெல்லாம் சரி. படம் நல்லா இருக்கா இல்லியா? போலாமா வேணாமா . அதை முதல்ல சொல்லுங்க ” என்பவர்களும் … JUST CLEAR OU ! 
 
எந்தப் படத்துக்கும் ”போகாதீங்க” என்று நேரடியாக நான் சொல்லமாட்டேன். டைமும் காசும் இருந்தா போய்ட்டு வாங்க என்றுதான் நன் சொல்வேன்.  ஏனெனில் நானும் சினிமாக்காரன்தான். தவிர ஒரு படத்துக்கு போகவேண்டாம் என்று சொல்வது  அது தர்மமும் இல்லை. எனவே அதை எதிர்பார்ப்பவர்களும் …   உங்க சிஸ்டம் உங்க விரல் . தள்ளி விட்டு போய்கிட்டே இருங்க .  ஏன்னா உங்களுக்கு எல்லாம் எழுத ஆயிரம் பேர் இருக்காங்க . 
 
நான் சொல்றத வச்சு போவது போகாமல் விடுவது போன்ற ,முடிவுகளை எடுப்பது உங்க தனி மனித உரிமை. அது உங்க ஏரியா. நான் உள்ள வரக் கூடாது .
 
எனவே,  உண்மையில் கூலி என்னவா இருக்கு என்ற உண்மையை தெர்ஞ்சிக்க நினைப்பவர்கள் மட்டும் படிங்க 
 
முன் நன்றி . இனி என் பார்வை . 
 
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, மலையாள நடிகர் சவுபின்  , தெலுங்கு நடிகர்  நாகார்ஜுனா, தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்த்,,கன்னட நடிகர் உப்பி அண்ணா எனப்படும் உபேந்திரா, வட இந்திய நடிகர் மதிப்புக்குரிய ஷாருக் கான் ஆகியோர் நடிப்பில்…
 
 தமிழ் சினிமா என்ற  நதியில் போக்கில் விஷச் சாயக் கழிவுகளைக் கலந்து மண்ணையும் மக்களையும் மனநிலை உடல்நிலையையும்  கெடுத்துக் குட்டிச்சுவராக்கி கொண்டு இருக்கும்  மனித வடிவப் பார்த்தீனியம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் படம்  கூலி . 
 
கூலி படத்தை பான் இந்தியா படம் என்று சொல்வது தவறு அல்ல ; ஆம் அது சாதாரண தவறு அல்ல. அயோக்கியத்தனம். சரியாகச் சொல்வது என்றால்  எச்சைத்தனம். 
 
ஒரு மொழி திரைப்படத் துறையினர் உருவாக்கிய படத்தை அப்படியேவோ அல்லது மொழி மட்டும் மாற்றியோ  மற்ற மொழிக்காரர்களுக்கும் பார்த்து கொண்டாடினால்  அது பான் இந்தியத் திரைப்படம் (சந்திரலேகா , நாடோடி மன்னன் , ரோஜா, இதே ரஜினி நடித்த எந்திரன் , RRR   இவை பான் இந்தியத் தமிழ்ப்படங்கள் பான் உலகத் தமிழ்ப் படங்களும் உண்டு . தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை, இதே ரஜினியின் முத்து , விஜய் சேதுபதியின் மகாராஜா இவை பான் உலகத் தமிழ்ப் படங்கள்)
 
ஆனால் மேலே சொன்னது போல ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒரு நடிகனையோ ஒரு சூப்பர் ஸ்டாரையோ நடிக்க வைத்து ஒரு ஆகச்  சிறந்த படம் எடுத்தால் கூட அது பான் இந்தியா படம் இல்லை . (நல்ல வேளை வட இந்தியா முழுக்க இந்திப் படங்களைப் பார்ப்பதால் கூலி படத்தில் அமிர்கானோடு நிறுத்திக் கொண்டார்கள். இல்லை என்றால் வங்காளி, சிந்தி, அசாமிய, ஒரிய , மராத்திய , வங்காளிய, போஜ்பூரி நடிக நடிகையர் வரவில்லை) அதுவும் கூலி  ஒரு படம் பான் இந்தியா படமே இல்லை. அப்படி சொல்லும் தகுதி அற்ற காஜ். எல்லா ஊரு ஐட்டமும் வித விதமாய், ரக ரகமாய். கிடைக்கும் ஒரு காஜி காஜ்.
 
இதை ரசிகர்களும் மக்களும் அறிக 
 
படத்தின் கதை .
 
  மெக்சிகோவைத் தலைமை இடமாகக் கொண்டு உலகம் முழுக்க உள்ள கடத்தல் பொருட்களின் தலைவர்களில் ஒருவர்  சார்பில் விசாகப்பட்டினம் துறைமுகத்தை  99 ஆண்டுகள் லீசுக்கு எடுத்து அதன் மூலம் இல்லீகலாக தங்கம், எலெக்ட்ரானிக் பொருட்கள் , லட்சக்கணக்கில் விலை உள்ள வாட்ச்கள் ஆகியவற்றைக் கடத்துகிறார் ஒருவர் (நாகார்ஜுனா)  நாகார்ஜுனாவுக்கு ஒரு ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி தம்பி . பல வருடம் முன்பு நாகார்ஜுனாவோடு சேர்ந்து அவர் உயிரைக் காப்பாற்றி அவருக்கு மிக நெருக்கமான நபராகி, அப்புறம்  டெர்ரர் ஆகிறார் கொடூர மலையாளி சவுபின். படிப்படியாக அடுத்தடுத்து தொழிலி தேவைக்கு ஏற்பட அடியாட்கள்,  டெக்னீசியன்கள் . 
 
ஒரு நிலயில் இந்த விசாகப்பட்டினம் கோஷ்டி ஆட்கள் சுருதி காசன் உள்ளிட்ட மூன்று இளம்பெண்களை குறி வைக்கிறது . காரணம் அவர்களது அப்பாவான விஞ்ஞானி சத்யராஜ். 
 
சத்யராஜுக்கு ஒரு புதிய கண்டிபிடிப்புக்கான மக்கள் பயன்பாட்டு அனுமதி மற்றும்ம் காப்புரிமை மறுக்கப்படுகிறது . 
 
இறந்தவர் பிணங்களை எரிக்கும்போது ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுகளை தவிர்க்க , அவர் கண்டுபிடித்த நொடியில் பஸ்பமாக்கும் தகன நாற்காலிகான அனுமதி இப்படி மறுக்கப்பட்ட நிலையில். அதை  வைத்து,நல்லார்களைக் கொன்று, அந்தப் பிணங்களை சுலபமாக  எரித்துப் பஸ்பமாக்க சத்த்யராஜிடம் சொல்கிறது தொழில் அதிபர் குழு . ஒரு நிலையில் மறுக்கும் அவர் கொல்லப்பட, அவரது மகள்களை தொழில் அதிபர் குழு  துரத்துகிறது . சத்யராஜின் தங்கை புருஷன்தான் ரஜினிகாந்த் . எனவே தங்கை மகள்களையும் அதில் பொயட்டிக் சஸ்பென்ஸ் ஆக இருக்கும் தன் மகள் ஒருவரையும் காக்க,  தானும் டிஜிட்டல் வெட்டியான் ஆகிறார் ரஜினி . 
 
இதுக்கு மேல் கதை கேப்பீங்க.. கேப்பீங்க…? கேப்பீங்க?
 
தொழில் அதிபரின் முறைகேடுகளை விசாரிக்க,  கூலி போல ரகசியமாக உள்ள போன  போலீஸ் உளவாளி காளி வெங்கட்,  தொழிலதிபரின் அடியாட்கள் ஏணியை விளக்க, அடுத்த காட்சியில் அவரைக் கண்டு பிடித்து தூக்கு கயிற்றை  காலி வெங்கட் கழுத்தில்  மாட்டும் சவுபின்,  ஒரு மிகப் பெரிய கண்டைனர் மேல் ஏறி பிரம்மான்டமான ஏரியல் ஷாட்டில் ஒரு கோடி கூலிகளுக்கு முன்னால் மெகா போனை எடுத்து “இனியொரு கூலி இவிடே போலீஸ் போல் நடிக்கின்னது . ஆயாள் தானா வெளி வன்னு  ஆரென்று தானே பறஞ்சால் ஓகே . அல்லேல் ஈகாளி வெங்கட்இப்போல் தூக்கில் தொங்கி  சாகும் அறியோ ‘ என்கிறார். 
 
ஒரு கோடி கூலிகள் காட்டப்பட , கேமரா உள்ளே போக ஆட்கள் இருபுறமும பிரிய ஒரு சூப்பர் ஷாட்டில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் . “நான் தாண்டா அந்த கூலி அவரை விடுறா. அவர் பொண்டாட்டி புள்ளைங்க பாவம் “என்று சொல்லி வெளிப்பட்டு, கூட்டத்தை  பந்தாடுகிற ரஜினியைதான்  நாங்கள் சிறுவயதில் பார்த்து கிளர்ந்தோம். தலைவா என்று ரசிகர்கள் கத்தினார்கள் . ஆனால் இந்தப் படத்தில் காளி வெங்கட் கொல்லப்பட்டு தொங்குகிறார் . அவர் மகளை  அடியாட்கள் கழுத்தறுத்துப் போடுகிறார்கள்  அவர் பொண்டாட்டியை எவன் என்ன பன்னான்னோ தெரியல . ரஜினி வரவும் இல்லை. 
 
இப்படியாக பதினைந்து நிமிடம் படம் ஓடி விட,  தேவையே இல்லாமல் தனது மேன்ஷனில்  கசாப்புக்கடைக்காரனைப் போல ஆடு அறுத்து கறி வெட்டி எலும்பு நீக்கி,  எலும்பு இல்லாக் கறியை கூறு கூறாக பிரித்து தீபாவளிக்கு போனஸ் போடும் கசாப்புக்கடை ஆள் போல,  ரத்தமும் வியர்வையும் கை கால் முகம் எங்கும் தெறிக்க, ஒரு ரத்த வெறி பிடித்த மன நோயாளியின் கற்பனையில் ரஜினி வருவது போல அசிங்கமான கெட்டப்பில் ரஜினி அசிங்கமாக அறிமுகம் . 
 
அவ்வளவுதான் . 
 
ஆயிரம் கோடி கனவும் பத்து நூறு பாட்சாவுக்கு சமம் என்ற வாய்ச் சவடாலும் துப்புரவுப் பணியாளரை நடத்தும் விசயத்தில் திராவிட மாடல் அரசு எப்படி திராவிட டமால் அரசு ஆனதோ, அப்படி தலை குப்புற விழுந்து சில்லு சில்லாக அல்லு சில்லாக நொறுங்குகிறது கூலி படம். 
 
1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 4100 ரூபாய் (நாலு என்பது லக்கி நம்பர் இல்லையாம்) டிக்கட் வாங்கிய ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை அண்ணாத்த , லிங்கா, டர்பார் கியாரே செட்டைங்கா  எல்லாம்  பார்க்க ,  ஹார்பரின் மகா மெஹா கண்டைனர் மாதிரியான கனத்த இதயத்தோடு தயாராகிறார்கள். இ
 
தெல்லாம்  ஜென்மப் பாவம் .
 
ரஜினி பெங்களூரில் தினக் கூலியாக இருந்தவர் . அப்போது அங்கே உதவியாக இருந்த சரோஜாம்மா உட்பட அனைவரும் தமிழர்கள் . ரஜினி அளவுக்கு மீறிய மூட்டைகளைத் தூகிக் கொண்டு போகையில் டிராபிக் அதிகமாகி கீழே போட்டு சக கன்னடர்கள் எல்லாம் அவரை காறித் துப்பி திட்டி ரோட்டில் அசிங்கப்படுத்தி ரஜினி மயஙகி விழப் போனபோது ஓடி வந்து உதவி செய்து காப்பாற்றியது கன்னடன் அல்ல. ஒரு தமிழர். அதுவும் ஆண் கூட அல்ல. ஒரு வயசான பெண்மணி . அதுவும் தமிழச்சி . சரோஜாம்மா (கூலி ஆடியோ விழாவில் ரஜினி சொன்னது) 
 
ஆனாலும்  அதன் பிறகுதான்   பெங்களூரில் தமிழ்ப் படங்கள் போடக் கூடாது என்று காஞ்சிச் தலைவன்,  வசந்த மாளிகை பட போஸ்டர்களில் சாணி அடித்தார் ரஜினி காந்த் (பெங்களூர் கன்னட பூமியே இல்லை. அது முழுக்க தமிழர் நிலம் என்பதே வரலாற்று உண்மை. ) 
 
அவரது நெருங்கிய நண்பர் என்றால் அது கன்னடரான ராவ் பகதூர் தான் . அது இத்தனை ஆண்டுகளாக – ‘ ஒவ்வொரு   துளி வேர்வைக்கு  ஒவ்வொரு  பவுன் தங்கக் காசை’  தமிழர்கள் கொடுத்த பின்னும் மாறாத ரஜினியின் கன்னட மொழி இன பாசம் . தமிழன் போல திராவிடிய , தேஷ்விடிய , கம்யூனாட்டிய சாக்கடைக்குள் எல்லோரும் குடி இருக்க மாட்டார்கள். 
 
ஆனால் தொடர்ந்து ரஜினி என்ற தனி கன்னட மனிதன் தமிழ் நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் முதலிடத்தில் இ  (?)  இருப்பது என்பது  அவர் செய்த மேஜிக் சாதனை . இருக்கட்டும். 
 
ஆனால் . லோகேஷ் கனகராஜின் அப்பாவும் ஆரம்பத்தில் கூலியாக இருந்து அப்புறம் பஸ் கண்டக்டர் ஆகி அப்புறம் லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனரின் அப்பா ஆனாராம் . அவரது கூலி எண்ணை படத்தில் ரஜினிக்கு வைத்தாராம்.லோகேஷ். இந்த காட்சியால் படத்துக்கு என்ன லாபம்? எதுக்கு இந்த காட்சி ? எதற்காக ஆடியோ லாஞ்ச் நெஞ்சு ஈரப்படுத்தல்கள்?
 
கமல்ஹாசன் என்ற மகா கலைஞனுக்கும்  ரஜினி என்ற மகா மேஜிக் நடிகனுக்கும் ஐம்பது ஆண்டுகால நட்பு. அது அவர்கள் இருவரும் அனுமதித்த – உருவாக்கிக் கொண்ட – வளர்த்துக் கொண்ட விஷயம். அதில் கமல் மகளாக சுருதி பிறந்தது ஒரு சம்பவம் . நிகழ் தகவு,. probability. அதை தகுதியாக மாற்றிக் கொள்கிறார் சுருதி என்பது வேறு விஷயம் . பாராட்டுகள். 
 
ஆனால் கமலும் ரஜினியின் நிஜ வாழ்வில் உருவாக்கிய நட்பை வைத்து ஒரு படைப்பாளி இப்படி ஓப்பனாக கல்லா கட்டணுமா?   
 
 ” அவன் உனக்கு அப்பனாகறதுக்கு முன்னாடியே எனக்கு நண்பன் ” என்று கமல்ஹாசனை மறைமுகமாக ஞாபகப்படுத்த வேண்டியதற்காக சுருதியா? சுருதி மீது அவ்வளவுதானா மரியாதை? சுருதி அப்பாவாக கமல் நடித்து இருந்தால் சுருதி ஓகே. சத்யராஜ் எனும்போது அங்கே சுருதி எதுக்கு? இன்னொரு நடிகையை போட்டிருக்கலாமே? அதுதானே ஒரு படைப்பாளியின் ஆண்மையாக இருக்க முடியும் .   “அவன் உனக்கு அப்பனாகறதுக்கு முன்னாடியே எனக்கு நண்பன் ” என்று சுருதியிடம் ரஜினி சொன்ன உடனே படம் பார்க்கும் ரசிகன் கமலை எண்ணி கை தட்டி  காசு தருவான் என்று நீங்கள் நம்பினால் அப்போ நீங்கள் யார்?
 
ஒரு படைப்பாளி தன் உணர்வை , கருத்தை  , அனுபவத்தை படத்துக்குள் கொண்டு வருவது தவறு என்று நான் சொல்லவில்லை. உலகெங்கும் அப்படி எழுத்தாளர்கள், திரைக்கதையாளர்கள் , இயக்குனர்கள், நடிக நடிகையரின் வாழ்வியல் அனுபவங்கள் ஏகப்பட்ட காதல் , போர, சமூகப் படங்களுக்குள் இருக்கின்றன. 
 
ஆனால் அங்கே அந்தக் காட்சிகள் படத்தில் திரைக்கதைக்கு,  அதன் நேர்மைக்கு படத்தின் வெற்றிக்கு முக்கியம் என்பது முதன்மைக் காரணமா , சுய அரிப்பு முக்கியமா என்பதை பார்த்து படத்துக்கு முக்கியம் என்றால்தான் வைக்க வேண்டும். சுய அரிப்புக்கு டாக்டரைதான் பார்க்க வேண்டும் . 
 
என்னங்க இது ? ஓர் இயக்குனருக்கு இந்த உரிமை கிடையாதா என்று கேட்கக் தோன்றும் உங்களுக்கு. . உரிமை உண்டு ஆனால் படத்தில் வைத்து அது போன்ற காட்சிகளால் படம் உயர்ந்து மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றி விழா வரும்போது,  அப்போது சொல்ல வேண்டும். அதுதான் ஓர் படைப்பாளியின்  கெத்து. தொலைக்காட்சியின் டி ஆர் பி ரேட்டிங் கிற்காக படம் வருவதற்குப்  பதினைந்து நாள் முன்பே மேடையில் வாந்தி எடுப்பது அருவருப்பு. 
 
அப்படி மக்களின் பெரும் பாராட்டைப் பெற்ற பிறகும் கூட ‘அது என் சொந்த வாழ்வு அனுபவம் ; என்று சொல்லிக் கொள்ளாத  பெருந்தன்மை மிக்க மேதைகள் உண்டு . உதாரணம் …
 
பிரபல இந்தி நடிகர் , இயக்குனர், தயாரிப்பாளர் , தி கிரேட் ஷோ மேன் ராஜ்கபூர்,   தன் படங்களின் நாயகியாக கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நடித்து விட்டுப் போகும் நர்கீசை காதலித்தார் . (ஷூட்டிங் முடிஞ்சதும் ஏழு  மணிக்கு மேல கெஸ்ட் ஹவுஸ் வந்துரு என்று சொல்வாரா தெரியவில்லை) ஆனால் நர்கீஸ் அவரது காதலை ஏற்கவில்லை. 
 
தான் இயக்கி தயாரித்து நடிக்கும் படம் ஒன்றின்  ஷூட்டிங் முடிந்து பேக்கப் சொன்ன உடன் அந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நர்கீஸின் மேக்கப் ரூம் கதவைத் தட்டி அனுமதி பெற்று நர்கீசைப் பார்த்து ; தான் சில நாட்களாக யோசித்து எழுதி வைத்திருந்த காவியக்  காதல் கடிததத்தை நர்கீசிடம் கொடுத்து அவர் காதலை வேண்டி நின்றார் .கபூர்.  நர்கீசை குறை சொல்வது நம் நோக்கம் இல்லை. அவருக்கு ராஜ் கபூரை பிடிக்காததற்கு ஆயிரம் நியாயமான காரணம் இருக்கலாம்.  ராஜ் கபூர் என்ன பண்ணி வச்சிருந்தாரோ ..? 
 
நிதானமாக கடிதத்தை படித்து முடித்த நர்கீஸ் கடிததத்தை சுக்கு நூறாக கிழித்து ராஜ் கபூர் மூஞ்சில் அடித்து கெட் அவுட் என்றார் . அமைதியாக வெளியேறினார் ராஜ் கபூர் 
 
மறுநாள் காலை ஷூட்டிங் . உதவி இயக்குனர் வந்து சீன் சொல்ல ஆடிப் போனார் நர்கீஸ் . முதல் நாள் மேக்கப் ரூமில் என்ன நடந்ததோ அதுதான் சீன்.  நடிகை என்பதும் மேக்கப் ரூம் என்பதும் மாற்றப்பட்டு இருந்தது . அதே காதல் கடிதம் … அதே கிழிப்பு.. அதே மூஞ்சில் அடிப்பு .
 
நீ கிழித்தது காதலையா ? என்னையா? என்பது போல ராஜ்கபூர் உருக உருக  பேசும் வசனம் மட்டும் எக்ஸ்ட்ரா . 
 
ராஜ்கபூர் நடித்தார் . நர்கீசும் அசராமல் கேரக்டருக்கு உண்மையாக நடித்தார் . அப்புறம் சுனில்தத்தை கல்யாணம் செய்து கொண்டார் . ஆனால் படம் பார்ப்பவர்கள் ராஜ் கபூர் ரசிகர்கள் இன்று வரை அந்தக் காட்சியில் அழுகிறார்கள்.  
 
ஆனால் அதில் பியூட்டி என்ன தெரியுமா?  ”இது என் சொந்தக் கண்ணீர் . சொந்த ரத்தம் , சொந்த வியர்வை. சொந்த கூலி வேலை .. இந்தா பாரு இங்க பூசு .. இங்க பூசு..இங்கயும் பூசு என்று கவுண்டமணி மற்றும் லோகேஷ் கனகராஜ் மாதிரி ராஜ்கபூர் கடைசி வரை  பேட்டிகள் , பட நிகழ்ச்சிகள் . பட ரிலீசுக்கு முன்பு பின்பு என்று எப்போதும் சொல்லவே இல்லை . 
 
ஒருமுறை நர்கீஸ் தத் ராஜ் கபூர் பற்றி நெகிழ்ந்து கொடுத்த பேட்டி வழியே நர்கீஸ் வாயாலாயாலேயே விஷயம் வெளிப்பட பாலிவுட்டே உருகி நின்றது . 
 
அட நாம அவ்வளவு எல்லாம் எதிர்பார்க்கவில்லை. நல்ல படத்தை எடுத்துட்டு அப்புறம் இந்த உதார் எல்லாம் விட்டு இருக்கலாமே ஜென்டில் மேன்?
 
இளையராஜா இன்னும் இருக்கும்  பூமியில் இருந்து கொண்டு அனிருத்தை தென் கிழக்கு ஆசியாவின் ராக ஸ்டார் என்கிறார் ரஜினி , அடர்த்தியான பிராமண பாஷத்தொடு. 
 
 காரணம் மோனிகா பெலுச்சி பாட்டு. அதில் எலும்புருக்கி நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நோயாளி போல இருக்கிறார் பூஜா ஹெக்கடே. அந்தப் பாட்டும் எந்த பாதிப்பும் அழுத்தமும் தராமல் நொடியில் கடக்கிறது . இதுக்கு ஜெயிலர் படத்தில் தமன்னா பாடலில் ரஜினியயை  தூரமாக நிற்க வைத்த நெல்சனே மேல். 
 
ஆக படத்துக்கு அந்தப் பாட்டால் படத்துக்கு ஓர் ஒட்டைக்காசு பிரயோஜனம கூட இல்லை. ஆனாலும் ஏன் ‘என் அனி தென்கிழக்கு …….ஆசியாவின்….. ……. ஸ்…..டா… ர் … ஹூ … ஹூ… ஹூ “என்கிறார் ரஜினி?
 
காரணம் அந்த ஐட்டம் சாங்  (பேரே கேவலமா இருக்கு) லண்டன் வரை ஹிட்டாம். சொல்றாங்க. 
 
படத்துக்கு பலன் தராத .. லண்டன் வரை ஹிட்டான பாட்டை இன்டிபென்டென்ட் ஆல்பமா போடுங்க . புடிச்சு இருந்தா பாக்கறேன் இல்லன்னா கூப்பில போடறோம். என்ன மைசூர் பாக்கு, சூஸ்பரி, கடலை மிட்டாய் .. தேங்கா பர்பிக்கு படத்துல வச்சு ரெண்டாயிரம் மூவாயிரம் டிக்கட் பிடுங்கிகிட்டு  பாக்கறவன சாகடிக்கனும்? உறுத்தல?
 
ரஜினி என்றால் குழந்தைகள் . இன்று ரஜினியை ரசிக்கும் அம்பது வயசு பெருசுகள் எல்லாம் அன்றைய குழந்தைகள். சிறுவர்கள் . ஆனால் வரலாற்றில் ஒரு ரஜினி  படம் குழந்தைகளுக்கு அனுமதி இல்லாமல் வருகிறது . குழந்தைகள் ஏமாறுகிறார்கள். ஏங்குகிறார்கள் . 
 
அந்த விதை போட்டது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பழம் சாப்புடறது விண்வெளி நாயகன் … சரி, வேணாம். உலகநாயகன் கமல்ஹாசன். இந்த ரெண்டு பேரு பேரையும் அழிக்கவே முடியாது . 
 
ஆனா இந்த மரபணு மாற்றப்பட்ட ஆபத்தான் விதையைப் போட்டது யாரு ரஜினி ? நீங்களா லோகேஷ் கனகராஜா?  நாளைக்கு பழம் சாப்பிடறவன் கதி என்ன? அதில் உங்க பிள்ளைகள், பேரன்கள், கொள்ளுப் பேரன் பேத்திகள் இருக்க மாட்டாய்ங்களா பாஸுவளா?
 
காட்சியில் காட்டுவதை அப்படியே பின்னணி குரலிலும் வேறு சொல்கிறார்கள் . ஒன்னு போதாதா மவராசன்களா?
 
இந்தக் காட்சிக்கு. இது  இப்படி வந்து இப்படிதான் முடியும் என்றால் IDAIYILஇந்த பத்து நிமிஷம் எதுக்கு என்று பச்சைப் பிள்ளைக்குக் கூடத் தோணுமே. உங்க யூனிட்ல பச்சைப் பிள்ளைக கூட  யாரும் இல்லையா?
 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு திருக்குறள் தெரியும் . ஆனா அது என்னடா அப்பப்ப அகர முதல அகர முதலவேன்னு வருது ? அது என்ன அகர முதலவே? 
 
உலகமே வியக்கும் திருக்குறளை இப்படி கேவலப்படுத்தும் கொடுமை எங்கயாவது நடக்குமா?
 
இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு முந்தைய சிற்பங்களின் மேல் உங்கள் பெயரையும் நீங்கள் 350 ரூபாய் ஒரு சிக்கன் பிரியாணி க்கு அழைத்துப் போகும் பஜாரியின் பெயரையும் காதல் ஜோடி போல எழுதி வைத்து விட்டு வரும் பித்துகுளித்தனத்துக்கும்  என்ன வித்தியாசம்?
 
தலைவர் இறங்கட்டும் … அரங்கம் அதிரட்டும் … பூமியை விட்டு புகை மண்டலத்துக்கு வரட்டும்… திரேதா யுகத்தில் இருந்து துவாபர யுகத்துக்கு வரட்டும் என்று குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது . மூணு மணி நேரமும் நானும் முன்னால் பின்னால் , சைடுல மேல கீழ அப்பப்ப பாத்துகிட்டே இருக்கேன், ஒருத்தரும் வரல. ஒரு நல்ல மாஸ் சீன் கிளாஸ்…. கிளாஸ் சீன் வரவே இல்லை. கொடுமை 
 
காக்கி சட்டை ஞாபகம் இருக்கா LCU ICU லோகேஷ் ? வெகுநாட்கள் அனைத்து தகுதிகளோடும் போலீஸ் வேலைக்கு முயலும் கமலுக்கு சிபாரிசு இன்மையால் வேலை கிடைக்காது. ஒரு நிலையில் உயர் அதிகாரி கோபால கிருஷ்ணன் கமலோடு கண்ணாடி அறைக்குள் பேசுவார் . விரக்தியாக வெளியே வரும் கமல் ரோட்டில் ரவுடித்தனம் செய்து போலீசில் சிக்குவார் . அதன் மூலம் ரவுடி கோஷ்டிக்குள் போவார் . ஆனால் ஆரம்பத்தில் கண்ணாடி அறைக்குள் நடந்தது என்ன என்று பின்னால் ஒரு கதை சொல்லி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகனையும் பிரம்மிக்க வைத்தார் கமர்ஷியல்  சினிமா இயக்குனர் மேதை ராஜசேகர் . 
 
அந்த மேதை ராஜ சேகர்தான் படிக்காதவன் என்ற படத்தை ரஜினியின் முதல் வெள்ளி விழாப் படமாகக் கொடுத்து இன்று நீங்க பழம் சாப்புடும் பிப்பிட்டி இயர்ஸ் ஆப் ரஜினியிசத்துக்கு உரம் போட்டவர் . 
 
‘தக்காளி .. கம்மால…. அப்படி ஒரு சீன நாமளும் வைக்கணும்டா என்று ஒரு நிஜ மானஸ்தன் உப்புப் போட்டு சோறு தின்னுவிட்டு யோசிச்சதாலதான் பாட்ஷா படத்தில் கண்ணாடி அறைக்குள் தான் யார் என்று சொல்லி சேது வினாயகத்தை ரஜினி அலறவிடும் பாட்ஷா பட சீன் வந்தது . தமிழ் ரசிகன் மனசுக்குள் ஒரு எட்டு ரிக்டர் பூகம்பம் பார்த்தான். (சேது விநாயகம் செத்தே விட்டாலும் இன்னும் அந்த ஒரு சீனால் அவர் உயிரோடு இருக்கிறார் .) 
 
ஆனால் இப்ப என்னடான்னா பால் டப்பா நிப்பிளை கையில வச்சுகிட்டே அவனவன் பத்து பாஷா .. நூறு பாஷாங்கறான் .. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? கேக்கறவன் கேன….. சரி வேணாம் கெட்ட வார்த்த வருது 
 
எனவே இந்த அளவில் முடிச்சுக்குவோம்?
 
பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஒரு வேலைக்கார ரசிகை வந்து ” ஆமா நீங்க எடுக்கற படம் எப்படி இருக்குன்னு ரிலீஸ் முன்னாடி போட்டுப் பாக்க மாட்டீங்களா ?” என்று கேவலமான பார்வைகளோடு ஒரே கேள்வி கேட்குமே ?ஞாபகம் இருக்கா?
 
  ” ஆமா நீங்க எடுக்கற படம் எப்படி இருக்குன்னு ரிலீஸ் முன்னாடி போட்டுப் பாக்க மாட்டீங்களா ?” 
 
 ” ஆமா நீங்க எடுக்கற படம் எப்படி இருக்குன்னு ரிலீஸ் முன்னாடி போட்டுப் பாக்க மாட்டீங்களா ?”   
 
ஆடியோ லாஞ்சில் படமே பாக்காம பேசின ஆட்களை வேண்ணா மன்னிக்கலாம். ஆனா இதுதான் படம்னு தெரிஞ்சிகிட்டு அந்தப் பேச்சு பெசுநீங்களே….உங்களைத்தான் என்ன பண்றதுனே தெரியல. 
 
நேற்று இரவு என்னிடம் பேசிய ஒருவர் , “நீங்க என்ன எழுதப் போறீங்கன்னு தெரிஞ்சிருச்சி. ஆனா உங்க எழுத்து அவங்கள என்ன பண்ணும் . லோகேஷ் கனகராஜின் சம்பளம் அம்பது கோடி . அதில் படம் தயாரிப்பு நிர்வாகி ஒருவருக்கு போக வேண்டிய பதினஞ்சு கோடி போக, முப்பத்து அஞ்சு கோடி லோக்செஷ்க்கு  போயாச்சு . 
 
தியேட்டர் ல எல்லாப் பயல்களும் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கும்போது லோகேஷ் கனகராஜும் அவரது அசிஸ்டன்ட் களும் பாண்டிச் சேரியின் ஒரு பிரபல ரெஸ்டாரன்ட்டில் புகழ் பெற்ற காஸ்ட்லி பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள் . 
 
அடுத்து அஜித், விஜய் சேதுபதி, சூர்யா , ஒருவேளை விஜய் கூட மீண்டும் சிக்குவார்கள்.அப்போது அவருக்கு கமிஷனே இல்லாமல் கூட அம்பது கோடி சம்பளம் முழுசாக கிடைக்கும், அது நூறு கோடியாகக் கூட மாறும். எனக்கு தரும் சம்பளத்தை அப்படியே லோகிக்கும் கொடுங்க என்று சூப்பர் ஸ்டாரும் இன்னும் கூட திக்கித் திணறும் தன்  தமிழில் சொல்லலாம். புரிஞ்சுதா?” என்றார். 
 
பாயின்ட் நம்பர் 1. நான் அந்த பிரியாணியை முன்பே சாப்பிட்டு விட்டேன் . 
 
பாயின்ட் நம்பர் 2. லோகேஷ் ராஜ் என்ற கூலிக்காரர் மகனின் தனிப்பட்ட உயர்வின் மேல் எனக்கு துளியும் பொறாமை இல்லை . இது சத்தியம்  அவர் சம்பளம் இருநூறு கோடி ஆனால் கூட எனக்கு  வருத்தம் இல்ல. அது குடுப்பவன் வாங்குபவன் பாடு . அதில் எமோஷன் காட்ட நான் யார் ? தவிர அப்போது அவர் எடுக்கும் அப்படம் இரு நூறு கோடி சம்பளத்துக்கு ஒரத் என்றால் எனக்கே அது  பெரிய சந்தோசம் .
 
ஆனால் கூலி ?
 
ஒரு கூலிக் கரனின் மகன் இந்த 2025ல்,  லட்சக்கணக்கான கூலிக்கார  ரசிகர்களை ஒரு சீனியர் கூலியின் முகத்தைக் காட்டி ஏமாற்றினார் என்பது அந்த கூலிக்கார அப்பாவுக்கு பெருமையா? இதுதான் என் கேள்வி. 
 
சன் பிக்சர்சையும் ரெட் ஜெயன்டையும் விட்டு விடுவோம். இன்று என்னதான் கொம்பன் என்றாலும் ஒரு மெகா பட்ஜெட்  படத்தின் கதை திரைக்கதையை தீர்மானிக்கும் சக்தி எந்த ஒரு தயாரிப்பாளருக்கும்  விநியோகஸ்தருக்கும் இல்லை .
 
கடைசியாக ஒரு கேள்வி 
 
கூலி படத்தில் சத்யராஜ் கண்டு பிடிக்கும் அந்த தகன நாற்காலியில் படம் சம்மந்தப்பட்ட இரண்டு பேரை உட்கார வைக்கலாம் என்றால் (சும்மா ஒரு ஜாலிக்குத்தான் . நோ நிஜம் மற்றும் வன்முறை . அது என் எண்ணம் இல்லை) 
 
வன்ம குடோனாக முட்டாள்நபராக மாறி என்னையும் உட்கார வைக்க விரும்பக் கூடாது . எனக்கு படம் பார்த்ததே அந்த நாற்காலியில் உட்கார்ந்து விடடு வந்த  மாதிரிதான் 
 
மனம் வெறுத்துப் போய் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி நீங்களும் உட்காரக் கூடாது . எனக்கு நீங்க ரொம்ப முக்கியம் 
 
 சும்மா மியூசிகல் சேர் அல்லது ராட்டன் டோமேடோஸ் விருது மாதிரி வைத்துக் கொள்ளுங்கள் . நீங்கள் யார் யாரை எந்த ஆர்டரில் உட்கார வைப்பார்கள்?
 
இஸ்டார்ட்  மியூஜிக் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *