ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்க, கவின் , அபர்ணா தாஸ், வி டி வி கணேஷ், பாக்யராஜ், அவருக்கு ஜோடியாக முன்பு நடித்த நடித்த ஐஸ்வர்யா… ஆகியோர் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கி இருக்கும் படம் .
அப்பாவுக்கு ஆங்கிலத்தில் டாடி என்ற சொல் இருக்கு அல்லவா? ஆனால் தமிழில் ஆண்களைக் குறிக்கும் சொல் டா என்ற எழுத்தில்தானே முடியும்? (வாடா.. போடா. எதுடா. எவன் டா என்பது போல ) பெண்களைக் குறிக்கும் சொற்கள்தான் டி என்ற எழுத்தில் முடியும் . எனவே டாடி என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் இலக்கண முறைப்படி மேலும் ஆண் தன்மை ஏற்றினால் அதுவே டாடா. (தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தில் அவரது மகள் கதாபாத்திரம் அவரை டாடா என்றுதான் கூப்பிடும். )
இப்படி ஒரு பெயர் வைத்துவிட்டோமே என்றோ என்னவோ கலரிஸ்ட் என்பதை நிறத்தரத் தொகுப்பாளர் என்றெல்லாம் டைட்டிலில் போட்டு தமிழ்ப் பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் அதிலும் ஒரு திருஷ்டியாக துணைத் தலைப்பில் the appa என்று போட்டதை தமிழில் த அப்பா என்று போட்டு சொதப்பியும் இருக்கிறார்கள்.
ஆச்சா…
கதைக்கு வருவோம்

கல்லூரியில் படிக்கும் இளைஞனும் ( கவின்) இளம்பெண்ணும் (அபர்ணா தாஸ் ) காதலிக்கிறார்கள். அது போதாதென்று உடல் உறவும் வைத்துக் கொள்கிறார்கள். அது போதாதென்று அந்தப் பெண் கர்ப்பமும் ஆகிறாள். அது வேண்டாம் என்று அவன் கலைக்கச் சொல்கிறான் . ஆனால் உயிர்மை நேயத்தோடு அவள் மறுக்கிறாள் .
விஷயம் இருவர் வீட்டுக்கும் தெரிய வருகிறது. இது போன்ற சமயங்களில் யதார்த்தத்தில் என்ன பண்ணுவார்கள்?
ரெண்டு மிதி நாலு சாத்து சாத்திவிட்டு காதல் மூலம் வந்த கர்ப்பம் என்பதால் நல்ல பையனாகவும் இருப்பதால் ஏற்றுக் கொண்டு , மேலே ஆக வேண்டியதைப் பார்ப்பார்கள் . அல்லது சாதி அவமானம் என்றால் பெண்ணை அடித்தே ஆணவக் கொலை கொல்வார்கள். ஆனால் இந்தப் பெண்ணின் அப்பா அம்மா எப்படியோ போ என்று ஒதுக்கி விடுகிறார்கள். அது கூட ஒகே
அவர்கள்தான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள் என்றால் பாக்யராஜ் போன்ற ஒரு அப்பா , மற்றும் அம்மா , கல்யாணம் ஆகாத அண்ணன் மட்டும் இருக்கிற வீட்டில் மகனையும் கர்ப்பிணி மருமகளையும் ஏற்றுக் கொண்டு, அண்ணனுக்கு உடனடியாக பெண் பார்த்து ரெண்டு கல்யாணத்தையும் பண்ணி வைப்பார்கள். அதுதானே யதார்த்தம்? ஆனால் இவர்களும் பெண் வீட்டு ஆட்கள் போலவே செராக்ஸ் காப்பியாக ச்சீ போ என்று ஒதுக்கி விடுகிறார்கள்.

மேற்கொண்டு இருவருமே கல்லூரி செல்ல முடியாமல் போகிறது .
அவனுக்கு பத்தாயிரம் சம்பளத்துக்கு ஒரு வேலை கிடைக்க, ஒண்டுக் குடித்தனத்தில் வறுமை வாழ்க்கை துவங்குகிறது . கர்ப்பிணிப் பெண்ணின் ஆசை என்று எதையுமே நிறைவேற்ற முடியாதவன் குடிகாரனாக ஆக மட்டும் ஆகிறான் . மறுநாள் அவளது வயிற்றில் கை வைத்து ‘கர்ப்பத்தில் இருக்கும் பிள்ளை மீது சத்தியமாக ‘ இனி குடிக்க மாட்டேன்’ என்று சத்தியம் செய்பவன், அன்று இரவே குடிக்கிறான் .
அவள் கோபப்பட பதிலுக்கு கோபப்பட்டு அடிக்கப் போகிறான் . அப்புறம் வேலைக்குப் போய்விடுகிறான். பிரசவ வலி வந்து பனிக்குடம் உடைந்த நிலையில் அவள் போன் பண்ண , விஷயம் தெரியாமல் கோபத்தில் போனை கட் செய்து அணைத்தும் விடுகிறான் . ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தால் கவனிக்கப்பட்டு ,அவளது பெற்றோருக்கும் தகவல் போக, அவர்களும் வர, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் அவள்.
சாவாகாசமாக வீட்டுக்கு வரும் அவனுக்கு விஷயம் தெரிய , அதிர்ந்து மருத்துவமனைக்கு வர, குழந்தை மட்டும் இருக்கிறது . அவள் இல்லை . அவள் வீட்டுக்கு ஓடினால் அதற்குள் மொத்த வீட்டையும் காலி பண்ணிக் கொண்டு எங்கே போகிறார்கள் என்று யாருக்குமே தெரியாத அளவுக்கு எங்கோ போய்விடுகிறார்களாம்.

பிள்ளையை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வர, அவர்களும் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.
நண்பனின் உதவியோடு பையனை பள்ளிக்குப் போகும் அளவுக்கும் , வீட்டை கூட்டிப் பெருக்கிப் பார்த்துக் கொள்ளும் அளவுக்கும் ”கவர்மென்ட் ஸ்கூல் பிரைவேட் ஸ்கூல் ன்னு ரெண்டு எதுக்கு இருக்கு/” என்று கேட்கும் அளவுக்கும் வளர்த்து விடுகிறான்.
ஒரு நல்ல கம்பெனியில் நல்ல வேலை கிடைத்து அங்கே போனால் … எஸ் , அதேதான்… அங்கே இவனுக்கு உயர் பொறுப்பில் அவனுக்கு முன்னால் அவனது முன்னாள்!
அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் . அதுதான் நடக்கிறது .
ஆனால் திரைக்கதையில் சில காட்சிகள் , வசனங்கள் , மற்றும் சில தொழில்நுட்ப வேலைப்பாடுகள் ஆகிய எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் களில் அட என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.
படம் துவங்கிய போதே லட்டு லட்டான குளோசப்களில் அசர வைக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு.

சந்தைக் கடை அலுவலகம் போன்ற இடங்களில் முக்கியக் கதாபாத்திரங்கள் பேசும்போது மற்றவர் பேசுவது போன்ற சத்தம் வருமல்லவா? பெரும்பாலான படங்களில் அது புரியாது . புரிந்தாலும் உப்பு சப்பில்லாத வசனங்களாக இருக்கும் . ஆனால் இந்தப் படத்தில் சில ஆரம்பக் காட்சிகளில் காட்சியின் மூடுக்கேற்ப அர்த்தமுள்ள வசனங்களால் கலகலக்க வைக்கிறார்கள். ஆனால் அது ஆரம்ப ஜோர்தான் . அப்புறம் கூட ஆங்காங்கே அந்த உத்தியை பயன்படுத்தி படத்தரத்தை உயர்த்தி இருக்கலாம். ஆனால் அம்போ என்று விட்டு விட்டார்கள் .
தில்லானா மோகனாம்பாள் படத்தில் மேற்கத்திய இசைக் குழுவினர் மேற்கத்திய இசைக் கருவிகள் மூலம் வாசிக்கும் அவர்களது இசைக் குறிப்பை நாதஸ்வரம் மற்றும் தவில் மூலம் வாசிக்க முடியுமா என்ற சவாலை ஏற்று சிவாஜி – பாலையா கோஷ்டி வாசித்துக் காட்டுமே,….
அந்த இசைத் துணுக்கை நவீன ஆர்க்கெஸ்ட்ரேஷனில் ஒரு வில்லங்கமான காட்சியில் வித்தியாசமாக பயன்படுத்தி அசத்துகிறார் இசை அமைப்பளார் ஜென் மார்ட்டின். மொத்தத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பு . ஆனால் படத்தில் மகனை நாயகன் வளர்க்கும் சூழலில் ஒரு மலையாளப் பாட்டு வருகிறது . எதுக்கு என்றுதான் தெரியவில்லை . அவன் வளர்த்துக் கொண்டு இருக்கும் குழந்தை ஒரு கேரள அப்பாவுக்கு பிறந்தவன் என்று பகீர் டுவிஸ்ட் கொடுப்பார்களோ என விபரீதமாக எல்லாம் யோசிக்கிறது மனசு.
தலை , காது கழுத்து என்று அடர்ந்து சுருண்டு வளரும் முடியுடன் கல்லூரி இளைஞனாக திரையில் சிறப்பாகத் தோன்றுகிறார் கவின் . அந்தத் தோற்றத்தில் பார்க்கும் போது வரலாற்றுப் படங்களில் நடிக்க அவர் பொருத்தமாக இருப்பார் என்பது புரிகிறது . அடுத்தடுத்து மாறும் கெட்டப்புகளும் அருமை . முகபாவனைகள், உடல் மொழிகள், குரல் நடிப்பு இவையும் சிறப்பு .
இளவயது இந்திராகாந்தி மூக்கும் இறுமாப்பு நிறைந்த கண்களுமாக அபர்ணா தாஸ் . நல்ல நடிப்பு. குறிப்பாக ரியாக்ஷன்களில் பலே பலே .
மற்ற அனைவரும் கூட ஓகேதான்.
நாயகனுக்கு வேலை வாங்கித் தருவதாக உதவ வந்த ஒரு அக்கா, அவனுக்கு தன்னை விட பெரிய வேலையும் அதிக சம்பளமும் உறுதியான உடன் , பொறாமை காரணமாக அவனை வேலையில் சேர விடாமல் தடுத்து விட , அப்போது அந்தப் பெண்ணிடம் நாயகன் பேசும் வசனம் வாழ்வின் வார்ப்பு. அட்டகாசமான சீன்.
ஆங்காங்கே காமெடி வசனங்களும் தெறிப்பது ஆக்சிஜன்.
டைட்டானிக் படத்தில் கதாநாயகி கப்பலின் மேல் நின்று தற்கொலை செய்து கொள்ளப் போகையில் தற்கொலையின் மீது பயம் வரச் செய்து அவளை நாயகன் காப்பாற்றும் காட்சியை அப்படியே பாத்ரூமில் சக ஊழியனைக் காப்பாற்ற நாயகன் செய்வதாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் . என்ன.. அங்கே ஹீரோ ice fishing பற்றிப் பேசுவார். இங்கே ஹீரோ பாத்ரூமில் pissing செய்து கொண்டே பேசுகிறார் .
கணவனும் மனைவியும் கோபத்தால் பிரிந்து இருக்கும் நிலையில் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் படங்களில் ஒரு கேரக்டரும் ஒரு சீனும் கட்டாயம் வருமே… கதாநாயகி மீது கை வைக்கப் பார்க்கும் காமுக மேலதிகாரி கேரக்டர் ! அவனை கதாநாயகன் வெளுக்கும் சீன்!! அது இந்தப் படத்திலும் உண்டு . பாக்யராஜ் இயக்கிய மவுன கீதங்கள் படத்தில் அது மிக முக்கியமான சீன் . அந்த நன்றிக்காகவோ என்னவோ பாக்கியராஜையும் படத்தில் நடிக்க வைத்து இருக்கிறார்கள் .
இரண்டாம் பாகம் பெரும்பாலும் வழக்கமான காட்சிகளால் நிரம்பி வழிகிறது . பிள்ளையை விட்டுவிட்டு மனைவி போய் விட்ட நிலையில், இந்த ”நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது ” பாணி சமாச்சாரங்களை எல்லாம் விட்டு விட்டு, கைக் குழந்தையோடு நாயகன் கல்லூரிக்குப் படிக்க வருகிறான் என்று இறங்கி இருந்தால் ஒரு அட்டகாசமான தெறிக்க விடும் படம் கிடைத்து இருக்கும் . ஆனால் அய்யகோ… அதை சும்மா ஒரு ஷாட்டில் மட்டும் காட்டி விட்டு, அப்புறம் துவைச்ச துணியையே துவைத்து விட்டார்கள்.
கதாநாயகி சுதந்திரமாக உரிமையாக இருக்க முயன்ற பாவத்துக்காக, நாயகன் முயன்று போராடி, அவளை தன்னைத் தானே குற்றவாளியாக உணர வைத்து, கழிவிரக்கம் கொள்ள வைத்து “என்ன்ன்ன்ன மன்னிச்சுடுங்க அ அ அ அத்தான். … ” என்று கதாநாயகியை உடல் அதிர குரல் கதற அநியாய மன்னிப்பு கேட்க வைக்கும் அதே பழைய பட்டிக்காடா பட்டணமா கதைதான்.
அதிலாவது ஜெயலலிதா கேரக்டர் ஆணவம் மிக்க பெண்ணாகவும் சிவாஜி கேரக்டர் குற்றங்குறை இல்லாத நபராகவும் படைக்கப்பட்டு இருக்கும் .
ஆனால் இந்த டாடா படத்தில் இன்னும் அநியாயம்.
அயோக்கியத்தனம் பண்ணியது எல்லாம் இந்த கபோதிப் பய. அந்தப் பொண்ணு மேல் எந்த தவறுமே இல்லை என்று தெரியவரும். அப்போது கூட அவள்தான் ஊற ஊற அழுது மன்னிப்பு கேட்க வேண்டும் . இந்த தீவட்டி, போனாப் போகுது என்று மன்னிப்பானாம். தான் செய்த தவறுகளுக்கு ஒரு சாரி கூட சொல்ல மாட்டானாம். என்னமோ போடா டாடா .
எனினும், அந்த சிறுவனை வைத்து அமைக்கப்பட்ட சில காட்சிகளில் எதிர்பார்த்ததுதான் வருகிறது என்றாலும் வரும்போது நெகிழ வைப்பதால் படம் தப்பிக்கிறது .