Third Eye Entertainment மற்றும் SP Cinemas தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய்குமார் , கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கும் படம் டீசல். இசை திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு எம் எஸ் பிரபு, மற்றும் ரிச்சர்ட் எம் நாதன். படத் தொகுப்பு சான் லோகேஷ்.
வரும் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 17 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ள நிலையில் (தெலுங்கு , இந்தியில் மொழி மாற்றும் உண்டு) பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர், சண்முகம் முத்து சாமியும் ஹரிஷ் கல்யாணும்.
மென்மையாகத் துவங்கி அழுத்தமாகப் பேசிய ஷ்ண்முகம் முத்துசாமி , ” நமக்கு டீசல் பெட்ரோல் என்றால் அதன் விலையேற்றம் பற்றி நன்றாகவே தெரியும் . கலப்பட பெட்ரோல் பற்றி ஓரளவுக்குதான் தெரியும் .
அதில் கப்பலில் வந்து இறங்கும் பெட்ரோல், பெட்ரோல் பங்கை அடைந்து , நமது வாகனங்களுக்கு வந்து சேர்வதற்குள் நடக்கும் அநியாயங்கள் அக்கிரமங்கள் அதிர்ச்சிகள் .. இவை பற்றிய படம்தான் இது .
இந்தப் படத்துக்காக ஏழு வருடம் ரிசர்ச் செய்து தகவல்கள் திரட்டினேன் . படம் எடுக்க ஆரம்பித்த பிறகும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. உண்மையில், சொல்ல வேண்டியதில் நாற்பது சதவீதம்தான் படத்தில் சொல்லி இருக்கிறேன் . மேலும் சில பாகங்கள் போகும் அளவுக்கு விஷயம் இருக்கிறது .
நூறு பேர் சம்பாதிக்க பத்து பேர் எப்படி கஷ்டப்படுகிறார்கள் . அது எப்படி லட்சக் கணக்கான மக்களை ஏமாற்றக் காரணமாக இருக்கிறது என்பதுதான் படம்
உண்மையில் இந்தப் படத்தின் கதை இன்றில் இருந்து பத்து வருடங்களுக்கு முன்பே முடிந்து விடும். அதன் பிறகு சில மாற்றங்கள் வந்தாலும் அதன் பாதிப்புகள் இன்னும் மக்களுக்கு தொடர்கின்றன . எனவே இது மக்களுக்கு தேவையான படம் . அதே நேரம், இதை கமர்ஷியலாக பொழுது போக்கு அம்சங்களுடன் எடுத்து உள்ளேன்.
படத்தில் வரும் பீர் சாங் அதற்கு ஒரு உதாரணம் . அந்தப் பாடலை இரண்டு வருடத்துக்கு முன்பே வெளியிட்டு விட்டோம் . ஆனால் அப்போது படத்தின் கால்வாசி வேலைகள்தான் முடிந்து இருந்தன. எனினும் அந்தப் பாட்டு இன்னும் ஃபிரஷ் ஆக, மக்களின் வரவேற்போடு இருக்கிறது. திபு நினன் தாமஸ் இசையில் மெலடி பாடல்களும் நன்றாக வந்துள்ளன .
படத்தின் காதல் காட்சிகளுக்கு எம் எஸ் பிரபுவும் ஆக்சன் காட்சிகளுக்கு ரிச்சர்ட் எம் நாதனும் ஒளிப்பதிவு செய்து உள்ளனர் . அந்த வித்தியாசம் படத்துக்கு பலம். அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார் .
இந்தப் படத்துக்கு பெட்ரோல் என்று கூட பெயர் வைத்து இருக்கலாம் . ஆனால் பெட்ரோல் விலை உயர்வை விட டீசல் விலை உயர்வு தான் விலைவாசி ஏற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் . காரணம் சரக்கு வாகனங்கள் எல்லாம் டீசலில் தான் இயங்குகின்றன . எனவே டீசல் என்ற பெயரே மிகப் பொருத்தமானது .
இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும்போது “நம்மளை இன்னும் கேனயன்னே நினைச்சுக்கிட்டு இருக்கானுங்கல்ல….?’ என்ற உணர்வு ஆடியன்சுக்கு ஏற்படும் . அது இந்தப் படத்தை வெற்றி பெற வைக்கும் ” என்றார் .
நாயகன் ஹரீஷ் கல்யாண பேசும்போது , “நான் இந்தப் படத்தில் ஒரு மீனவனாக நடிக்கிறேன் .
படத்ததில் கதாநாயகி இருந்தாலும் இதில் காதலை விட ஆக்ஷன்தான் அதிகம் இருக்கும் . அந்த வகையில் இது எனக்கு ஒரு புதிய பரிமாணமாக இருக்கும் .
இந்தப் படத்துக்காக கடலில் லாஞ்சர் படகு ஓட்டக் கற்றுக் கொண்டேன் . மீன் பிடிக்கக் கற்றுக் கொண்டேன் .
பழவேற்காடு முதல் நாகப்பட்டினம் வரை ஷூட்டிங் நடந்தது . பாண்டிச்சேரி கடலூரில் நடந்தது .
இந்தக் கதையைக் கேட்டு சென்னை பழவேற்காடு முதல் எல்லா கிராமங்களிலும் மக்கள் காட்டிய அன்பு உயரியது . இந்தக் கதை அவர்களுக்குப் பிடித்து இருந்ததே அதற்குக் காரணம்.
வினய் ராய் வில்லனாக நடித்துள்ளார் . சச்சின் கடேகர் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார் .
படத்தை தீபாவளிக்குக் கொண்டு வந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது . எனவே முன்னரே அதை முடிவு செய்து இருந்தோம். வரலாம் என்ற நம்பிக்கையைப் படம் கொடுத்து இருக்கிறது .
இனி உங்கள் கையில். மக்கள் கையில் ” என்றார் .
” பத்து வருடம் முன்பு இந்தக் கதை முடிந்து விட்டது . ஆனாலும் இப்போதும் அது தேவைப்படும்படி இருக்கிறது என்றீர்கள் . அந்த கனெக்ட் சரியாக இருந்தால் இது பெரிய படமாக ஆகும். இல்லை என்றாலும் நல்ல கதையுள்ள படமாக நிலைக்கும் ” என்று சண்முகம் முத்துசாமியையும் , ஹரிஷ் கல்யாணையும் வாழ்த்தி விட்டு வந்தேன் .