ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்க, அதர்வா , நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் படம்.
Divya aNd Anandhi என்று இரு மனிதர்கள் சம்மந்தப்பட்ட கதை . ஆனால் DNA எனப்படும் மரபணு சோதனையும் பங்கு வகிக்கும் படம்.
பூட்ட கேஸ் என்று முடிவு செய்யப்பட்ட இரண்டு பேர் ஊட்டியில் எஸ்டேட் வாங்கி ஓகோ என்று வாழ்ந்தால் எப்படி இருக்கும்?
அப்படிதான் காதல் தோல்வியை மறக்க முடியாமல் (?) குடித்துக் குடித்துக் குடும்பத்தையே அலறவிடும் ஆனந்துக்கும் (அதரவா), அதீத இயல்புப் பிரச்னையால் மனதின் எண்ணத்தை அப்படியே செயலாகவோ பேச்சாகவோ ஆக்குவதன் மூலம் சமூகம் கொண்டாடும் போலி நாகரீகங்கள் அறியாத திவ்யாவை (நிமிஷா சஜயன்) லூசு என்று முடிவு செய்து,
இவனுக்கு இவளும் இவளுக்கு இவனும் போதும் என்று திருமணம் செய்து வைத்தால் .. ..அவர்கள் இருவரும் அன்டர்ஸ்டேன்ட்டிங்கில் அப்பர் கிளாஸ் எடுத்து சந்தோஷமாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
‘அய்யய்யோ பதினஞ்சு நிமிஷத்திலேயே படம் முடிஞ்சிருச்சே . இன்னும் ஒரு மணி அம்பது நிமிடம் ஓடவோ ஒளியவோ முடியாத இடத்தில் உட்கார வைத்து அடிப்பார்களோ என்று பயம் வயிற்றைக் கவ்வியது நிஜம்
ஆனால் யார் செய்த தவப் பயனோ… படத்தின் ஆரம்பத்தில் சொன்ன ஒரு விபத்து , அப்போது ஓர் ஓரமாக அழுது கிடக்கும் பச்சைக் குழந்தை இவற்றை வைத்து நிஜக் கதைக்கு வருகிறது நெல்சன் வெங்கடேசன் – அதிஷா எழுத்துக் கூட்டணி .
அப்போ இதுவரை சொன்ன கதை எல்லாம் போங்கா கோபால்.?
அப்படியும் சொல்ல முடியாது . பட்சே சொல்லவும் சொல்லலாம். கொஞ்சம் சிரத்தையான அக்கறையான போங்கு(?!?) என்பதே பஞ்சாயத்தார் முடிவு .
மருத்துவமனையில் திவ்யாவுக்கு குழந்தை பிறக்கிறது . பிறந்த உடன் குழந்தையை திவ்யா பார்த்து மகிழ , அடுத்த கொஞ்ச நேரம் குழந்தைக்கு டேக்கிங், ஃபுட் பிரிண்ட்ஸ் எல்லாம் முடிந்து இன்க்குபேட்டரில் குழந்தையை வைத்திருந்து மீண்டும் குழந்தையை திவ்யாவிடம் கொடுக்க,
”இது என் குழந்தை இல்லை” என்கிறது திவ் செல்லம். .
பின் பிரசவ கால விளைவாக திவ்யாவுக்கு பைத்தியம் முத்திடுச்சு என்று குடும்பம் மட்டுமல்ல , குவலயமே எண்ணி அவளை அடக்கப் பார்க்கிறது
ஆனால் ஆனந்த் மட்டும் மனைவியின் கூற்றை நம்புகிறான், இரண்டு குடும்பங்களிலும் உள்ள எல்லோரையும் விட திவ்யாவை உணர்ந்தவன் என்ற வகையில். (ஆக்ஷன் ஹீரோக்களிடம் பிடித்த விசயமே . சட்டென்று சரியான ரூட்டுக்கு வருவார்கள் .அதுதான் அவர்களை நம்பி தமிழ்நாடு ஆந்திரா எல்லாம் கொடுத்தோம் … இல்ல, அமேரிக்கா இந்த லிஸ்ட்டில் வராது )
இந்த நம்பிக்கைக் காட்சிக்கு முன் சட்டென்று ஒரு வேறு ஒரு கதை சிலீர் என்று என் மனசுக்குள் ஓடியது
‘ஆனா அதெல்லாம் வேணாம் சார் . ஃபர்ஹானாவில் பட்டதே போதும் . இந்த தபா ஆக்ஷன், அம்மா , தாலி செண்டிமெண்ட்தான் . அங்கங்க கொஞ்சம் பக்திப் பரவசத்தையும் பட்டையா பூசிக்காட்டியும் குங்குமமா மட்டுமாவது வச்சுக்கறேன் . லாஜிக் கொஞ்சம் இடிக்கதான் செய்யும் . நீங்கதான் தள்ளி உட்காந்துக்கணும் ” என்று நெல்சன் வெங்கடேசன் முடிவு செய்து இருக்கக் கூடும்.
ஆக, திவ்யாவின் குழந்தை கடத்தப்பட்டதா? எனில் அவருக்கு ஒரு குழந்தை வைக்கப்பட்டது ஏன்? குழந்தை மாறியது எனில் DNA வின் குழந்தை எங்கே ? அதற்கு DNA பரிசோதனை மட்டும் பலன் தந்ததா என்பதே படம்.
ஒரு குழந்தை கடத்தப்பட என்னென்ன காரணம் இருக்கலாம் என்றால் என்ன என்ன சொல்வீர்கள்? அதை எல்லாம் சொன்னால் , ” அய்யய்ய.. என்ன இன்னும் ஓலைச் சுவடியிலையே இருக்கீங்க… இப்பல்லாம் நீங்க வாய்ஸ் கொடுத்தா அதுவா டைப் பண்ணித் தரும் ” என்ற அளவுக்கு புப்புதிய காரணங்களை அடுக்கிறது படம். அதுதான் பெரிய சபாஷ் போட வைக்கிறது.
ரொம்ப நாளைக்கு அப்புறம் அதர்வாவுக்கு ஒரு கேரக்டர் கிடைத்து இருக்கிறது . எனவே அவரால் முடிந்தவரை சிறப்பாக செய்கிறார் .
கிலோ மீட்டர் , மீட்டர் , மில்லி மீட்டர் , மைக்ரோ மில்லி மீட்டர் என்று எக்ஸ்பிரஷன்களில் எந்த அளவு வேண்டுமோ அந்த அளவுக்கு, ” வச்சுக்கோ வச்சுக்கோ” என்று நொடிக்கு நொடிக்கு மாற்றி அள்ளி அள்ளிக் கொடுக்கிறார் நிமிஷா சஜயன். இவர் தன் பெயரை நொடியா சஜயன் என்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒரு நம்பிக்கையுள்ள தீர்மானம் கொண்டு வரப்படுகிறது
ஆரம்பத்தில் கொந்தளிக்கும் சேத்தனைப் பார்த்து படத்தில் என்னவோ பண்ணப் போறார் என்று பார்த்தால் மிஷ்கின் படத்தில் சிக்கிய பாக்யராஜ் மாதிரி ஆகி விடுகிறார் .
அந்தப் பாட்டிக்கு லைஃப் டைம் கேரக்டர் பார்சல்டு. பாலாஜி சக்திவேல் ..வெகு இயல்பு
ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பெரும்பலம். பார்த்திபன் ஒளிப்பதிவு பக்க பலம் . டெக்னிக்கலாக பெரிதாக குறை சொல்ல ஒன்றும் இல்லை.
ஆரம்பத்தில் திவ்யாவின் கேரக்டருக்குக் கொடுத்த பில்டப் எல்லாம் பார்த்து ரொம்ப ஆவலாக உட்கார்ந்தால், அது ஆரம்ப ஜோர் மட்டும்தான் .
ஒரு நிலையில் ‘இந்தப் படத்துல திவ்யா என்ற கேரக்டரில் நிமிஷா சஜயன் நடிச்சாரே எங்க போனாரு?’ என்று யோசித்து முடிப்பதற்குள் ரொம்பக் கோபமாக காய்கறி வெட்ட ஆரம்பிக்கிறார் நிமிஷா சஜயன் . கிரியேட்டிவ் சமத்து!
படம் ஓடும்போது ரசிகர்கள் தம் அடிக்கப் போவது வேறு . ஆனால் கதை நிகழ்ந்து கொண்டிருக்கும்போது ஆனந்தின் குடும்பமே தம் அடிக்க வெளியே போய்விடுகிறது .அப்பப்ப போனில் மட்டும் பேசுகிறது .
குழந்தையை கடத்தும் பாட்டி , “தெரியுமா ? நான் பண்றது புண்ணியம் . எத்தனை அனாதைக் குழந்தைகளை பெரிய பெரிய வீடுகளில் வாழ வைக்கிறேன் தெரியுமா? அது பெரிய சேவை, தர்மம் , நியாயம் , சத்தியம், சாந்தம் , சுபம் , சிக்ஸ் டிகிரி .. ” என்று பேசிக் கொண்டே போகிறது . விட்டால் ‘குழந்தைக் கடத்தலை உச்ச நீதி மன்றம் அங்கீகரித்து எங்களுக்கு எல்லாம் சட்டப் பாதுகாப்பு தர வேண்டும் ” என்று கேட்கும் போல் இருக்கிறது .
வித்தியாசமா எழுதறோம் என்று இப்படி விபரீதமாக எழுதுவது என்பது விரால் மீனை தூக்கி பருப்பு சாம்பாரில் போடும் கதைதான் . போட்டதுதான் போட்டார்கள் . ”ஐ டிட் நாட் மீன் வாட் யு மீன் ” என்று விளக்கமாவது சொன்னார்களா? அதுவும் இல்லை.
“அனாதைக் குழந்தைகள் எல்லாம் நல்ல காரணத்துக்காக மட்டும் வாங்கப்படுவதில்லை. அப்படியே இருந்தாலும் ஆஸ்பத்திரியில் அம்மாக்கள் கண் முன்னே குழந்தை கடத்தப்படுவது என்ன தேவியா , எஸ்கேப்பா , பழஸ்சோவா, லுக்ஸ் மாலா ?” என்று
– பாலாஜி சக்திவேல் கேரக்டர் கேட்க வேண்டாம் . அப்படி எல்லாம் கேக்கிற போலீஸ் அவர் இல்லை என்பதுதான் அந்தக் கேரக்டர். ஆனால் அதர்வா கேரக்டர்? அட்லீஸ்ட் பொது நலன் கருதி யாரவது? எப்பவவாவது?
அதே போல சில கனமான காட்சிகள் மேக்கிங்கில் இன்னும் நல்லா கொண்டு வந்திருக்கலாமே என்ற எண்ணமும் வருகிறது
இடையில் கொஞ்ச நேரம் அதர்வாவும் பாலாஜி சக்திவேலும் என்ன என்னவோ பேசிக் கொள்கிறார்கள் . எந்திரன் ரெட் சிப் சிட்டி எடிட் செய்த மாதிரி சில காட்சிகள் ! ஒரு காட்சியில் வில்லன் ஆள் மட்டன் துண்டுகளை கசகசவென வெட்டுவானே, அது கிளியராகத் தெரியும் அளவுக்குக் கூட புரியாத காட்சிகள் அவை
அடப் போங்கய்யா என்று தோன்றும் போது, படக்குழு வந்து , ” ஒண்ணும் பிரச்னை இல்ல. ஒரு பத்து நிமிசம் கண்ணசர்றதுன்னா அசந்துகுங்க . நாங்க சரியான சமயத்தில் வந்து எழுப்பி விடறோம் ” என்று மானசீகமாக சொல்லி விட்டுப் போயிருக்கக் கூடும் .
வெரி பங்க்சுவல் பாய்ஸ் . !
“தப்பு பண்றவங்க சிக்கலன்னா தண்டனை தள்ளிப் போவுதுன்னு அர்த்தம் ” என்கிற அளவுக்கு ஆழ் உள் வெளி ஒளி ஆன்மீகத் தேடல் உள்ள நபர், அந்த விசயத்துக்கு கோவிலைத் தேர்ந்தேடுப்பானா என்ற லாஜிக் லக லக விசயத்தையும் மீறி, அந்த கிளைமாக்ஸ் ஏரியா சும்மா பட்டையைக் கிளப்புகிறது .
அதை சும்மா தாலி செண்டிமெண்ட் பக்திப் பரவசம் என்று ஜஸ்ட் லைக் தட் கடந்து விட முடியாது. ஏனெனில் பெற்ற தாய்க்கும் பிறந்த குழந்தைக்குமான உடல், மன, ஆன்ம நெருக்கம் என்பது ( சிசுவாக இருக்கும்போது ) அறிவியலே பாதார விந்தம் பணிந்து விழுந்து வணங்கி ஏற்றுக் கொண்ட ஒன்று . கடவுள் இருக்கான் கொமாரு என்ற வாதத்துக்கு பலம் சேர்க்கும் விசயம் அது .
‘இந்தப் பிறவியில் ஒரு பெண்ணுக்குப் பிறந்து மூணு மணி நேரத்த்தில் செத்துப் போன குட்டிக் குழந்தை ஒன்று மூணு ஜென்மம் கழித்து அந்த அம்மாவுக்கே அம்மாவாகப் பிறந்தது’ என்று ஒரு கதை எழுதி விட்டு (ரோஜர்… ரோஜர்.. காப்பிரைட் சு.செந்தில் குமரன்..Admission Reserved. Trespassers will be PROSTITUTED )…
அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தேடினால் , “yeah , in 1789 a girl in middle west florida .. ” என்று முகத்தில் செதில் படர்ந்த செம்மை நிற வெள்ளைக்காரி ஒருத்தி பேசும் வீடியோ கிடைக்க 99 % வாய்ப்பு உள்ளது . அதுதான் தாய் – சிசு இடையேயான பிணைப்பு. (வளர வளரத்தானே கரெப்ட் ஆகறோம் )
‘ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல் ; பரிதவிக்கும் தாய்’ என்ற ஒற்றை விசயத்தால், எப்படி இந்தப் படம் அவ்வப்போது கொடுக்கும் அடிகளையும் தாங்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறோமோ ,
அதற்குப் பரிசாக இந்த கிளைமாக்ஸ், தாய் – சிசு என்ற ஒற்றைப் பிணைப்பால் உயிர் பெறுகிறது .
இங்கேதான் ஜெயித்து இருக்கிறார் நெல்சன் வெங்கடேசன் .
எங்கே எப்போ எவ்வளவு ஆக்ஷன், எங்கே எப்போ எவ்வளவு என்ன காரணத்துக்கு செண்டிமெண்ட் என்ற விசயத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவு மட்டும் இருந்து இருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு .
ஒரு படத்துக்கு நல்ல ஒப்பனிங் , நல்ல இன்டர்வல் . நல்ல கிளைமாக்ஸ், முடிஞ்சா ஒரு நல்ல ஆன்ட்டி கிளைமாக்ஸ் இருந்தாலே அந்தப் படம் தோல்வி அடையாது
ஆனா இப்போ எல்லாம் அது கூடத் தேவை இல்லை . ” நல்லதா ஒரு நாலு வரிக் கதை . அதோட எங்களுக்கு புடிக்கிற மாதிரி ஒரு கிளைமாக்ஸ் … இதையாச்சும் சொல்லுங்கடா. நாங்க குடும்பம் குடும்பமா வந்து பாக்கறோம் ” என்று தமிழ் நாட்டு ரசிக மகா ஜனங்கள் தியேட்டர்கள் வாசலில் கையறு நிலையில் கதறிக் கொண்டு இருக்கிறார்களே
அது இந்தப் படத்தில் இருக்கிறது
மொத்தத்தில் DNA … இன்னும் நன்றாகத் திருத்தப்பட்டு இருக்கலாம் . எனினும் வலைப் பின்னல் அபாரம் (புரியாதவர்கள் DNA structure இமேஜ் பாருங்கள்)